வளர்ச்சி உருவாக்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வு !
ஏகாதிபத்திய சார்பு அமைப்புகளால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியத் தரகு முதலாளிகளுள் ஒரு சிலர் தவறாது இடம் பிடித்துவிடுகிறார்கள். இதுபோக, உள்நாட்டில் மல்டி மில்லியனர்களும் காளான்களைப் போலக் கிளைத்து வருகிறார்கள். நாடே பெருமிதம் கொள்ள வேண்டிய சாதனை போல இது சித்தரிக்கப்படுகிறது.
ஆனால், இந்தப் “பெருமிதம்”, “சாதனை” ஒரு மாபெரும் சமூக அவலத்தின் தோள் மீதுதான் ஏறிநிற்கிறது. 99 சதவீத இந்திய மக்களின் வருமானத்தை உறிஞ்சித்தான் இவர்கள் உலக மகா கோடீசுவரர்களாகவும் மல்டி மில்லியனர்களாகவும் வலம் வருகிறார்கள். இந்த உண்மையை உலகமயத்தை ஆதரிக்கும் பொருளாதார வல்லுநர்களாலும் மறுக்க முடியவில்லை.
பிரான்சு நாட்டிலுள்ள பாரீஸ் பொருளாதாரப் பள்ளியின் ஒரு பிரிவான உலக ஏற்றத்தாழ்வு ஆய்வகத்தில் பணியாற்றும் பேராசிரியர் தாமஸ் பிக்கட்டியும் அவரோடு இணைந்து பணியாற்றிவரும் லூகாஸ் சான்ஸெலும் சேர்ந்து 1922 முதல் 2014 வரை இந்திய சமூகத்தில் ஏற்பட்டுள்ள வருமான ஏற்றத்தாழ்வுகளை ஆராய்ந்து, காலனிய காலத்தைவிட, இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு தீவிரமடைந்திருப்பதை நிறுவியுள்ளனர்.
தமது ஆய்வறிக்கைக்கு அவ்விணையர் இட்டிருக்கும் தலைப்பு, “பிரிட்டிஷ் ராஜ் தொடங்கி பில்லியனர் ராஜ் வரை”. இத்தலைப்பே இந்தியக் குடியரசின் யோக்கியதையை அம்பலப்படுத்திவிடுகிறது.
இந்திய மக்கட்தொகையில் பெரும் கோடீசுவரர்களாக உள்ள ஒரு சதவீத “மேன்மக்கள்”, நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 21.7 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொள்வதாகக் குறிப்பிடுகிறது, பெக்கட்டின் ஆய்வறிக்கை. இது 2013 – 14 ஆம் ஆண்டுக்கான கணக்கு. அதற்குப் பிறகுதான் மோடி பதவிக்கு வந்தார். இந்தியத் தரகு முதலாளிகளின் பெருத்த ஆதரவோடு பதவிக்கு வந்த அவரது ஆட்சியில் இந்த மேன்மக்களின் வருமானம் மேலும் வேகமாக கூடிக்கொண்டுதான் இருக்கிறது.
மீதமுள்ள 99 சதவீத மக்களின் வருவாயும் ஒருபடித்தானதாக இல்லை. சமூகத்தின் அடித்தட்டில் வாழுகின்ற 50 சதவீத உழைப்பாளிகளின் (இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள்) ஆண்டு வருமானம் கடந்த 34 ஆண்டுகளில் (1980 முதல் 2014 முடிய) 89 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. அதேசமயம், அவர்களுக்குச் சற்று மேலேயுள்ள 40 சதவீத நடுத்தர வர்க்கத்தினரின் (சராசரிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டக்கூடிய தனிநபர்களின்) ஆண்டு வருமானம் அதே 34 ஆண்டுகளில் 93 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
அதேபொழுதில் 10 சதவீத மேல்தட்டு வர்க்கத்தின் ஆண்டு வருமானம் 394 சதவீதமும்; இந்த 10 சதவீதத்திற்குள்ளேயே மேல்தட்டில் உள்ள 1 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 750 சதவீதமும்; இந்த 1 சதவீதத்திற்குள்ளேயே மேலேயுள்ள 0.1 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 1,138 சதவீதமும்; இந்த 0.1-க்குள்ளேயே மேலேயுள்ள 0.01 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 1,834 சதவீதமும்; இவர்களுக்கும் மேலேயுள்ள 0.001 சதவீதத்தினரின் ஆண்டு வருமானம் 2,726 சதவீதமும் அதிகரித்திருக்கிறது என வருமான வரித் தரவுகளைக் கொண்டு நிறுவுகிறது, பெக்கட்டின் ஆய்வு.
இந்தியாவில் வருமான வரிக் கணக்கிற்கும் பொய்க் கணக்கிற்கும் அதிக வேறுபாடு இருப்பதில்லை என்பதால், இந்த 10 சதவீதத்தினரின் ஆண்டு வருமான உயர்வு பெக்கட் குறிப்பிடுவதைவிட அதிகமாகவே இருக்கும்.
பெக்கட்டின் ஆய்வின்படி, சமூக அடுக்கில் உச்சாணிக் கொம்பில் இருக்கும் ஒரு சதவீதக் கோடீசுவரர்கள், நாட்டின் ஆண்டு தேசிய வருமானத்தில் கைப்பற்றும் பங்கு 1982 – 83 ஆம் ஆண்டில் வெறும் 6.2 சதவீதமாக இருந்து, இன்று அதோடு ஒப்பிடும்போது 3.5 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது மட்டுமின்றி, இந்தியா ஆங்கிலேய காலனி நாடாக இருந்த 1939 – 40 ஆண்டுகளில், அப்பொழுது சமூக அடுக்கில் உச்சாணியில் இருந்த 1 சதவீதப் பணக்காரர்கள், நாட்டின் ஆண்டு வருமானத்தில் கைப்பற்றிய பங்கை (20.7%) விட, இன்று பெரும் பணக்காரர்கள் கைப்பற்றும் பங்கு அதிகரித்திருக்கிறது.
இந்திய உழைக்கும் மக்களைச் சுரண்டுவதில் வெள்ளைத் துரைமார்களை விஞ்சிவிட்டார்கள் பழுப்பு துரைமார்கள். மற்ற நாடுகளைப் போலின்றி, ஒருபுறம் சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வு இன்னொருபுறம் பொருளாதார (வர்க்க) ஏற்றத்தாழ்வு என்ற இரண்டு நுகத்தடிகளை இந்திய உழைக்கும் மக்கள் சுமக்க வேண்டியிருக்கிறது.
பெக்கட்டின் ஆய்வின்படி 1980 -களுக்குப் பிறகுதான் இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி, இன்று அருவருக்கத்தக்க நிலையை எட்டியிருக்கிறது. அந்த 1980 -களில்தான் ராஜீவ் காந்தி அரசு புதிய பொருளாதாரக் கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அதன் பின், நரசிம்ம ராவ் ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கையை, அதன் பிறகு வந்த ஒவ்வொரு அரசும் போட்டிபோட்டுக் கொண்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தின.
அக்கொள்கைக்கு வால்பிடித்த ஒவ்வொரு அரசும் நெல்லுக்குப் பாயும் நீர், புல்லுக்கும் புசிவது போல, தனியார் முதலாளிகள் பெறும் வளர்ச்சி, சிறிது சிறிதாகக் கசிந்து அடித்தட்டு மக்களையும் வந்தடையும் என்றன. குறிப்பாக, காங்கிரசு அரசில் நிதி மந்திரியாகவும் வர்த்தகத் துறை அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம், அதற்குக் கொஞ்ச காலம் ஆகும் என வக்கணை பேசினார்.
இதோ, தனியார்மயக் கொள்கைகள் அமலுக்கு வந்து இருபத்தைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கண்ட பலனோ, மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு – செல்வம் ஓரிடத்தில் குவிவதும் வறுமை மற்றோர் இடத்தில் தாண்டவமாடுவதுமான நிலைமை – மிக வக்கிரமாக வளர்ச்சி அடைந்துகொண்டே செல்வதைத்தான் காண்கிறோம்.
பார்ப்பனியம் அதன் இயல்பிலேயே சமூக ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தும் சித்தாந்தம் என்பதால், தற்போது ஆட்சியிலுள்ள பா.ஜ.க. அரசு மக்களைச் சுரண்டி முதலாளிகளைக் கொழுக்க வைப்பதில் எந்தவித தயவுதாட்சண்யமும் பார்ப்பதில்லை.
கூலி வெட்டு, சமூக நலத் திட்டங்களுக்கு வெட்டு, தொழிலாளர் நலச் சட்டங்களைக் கைவிடுவது, நிலம், நீர், தாது வளங்கள் உள்ளிட்ட இயற்கைச் செல்வங்களை, வங்கி தொடங்கி தொழிலாளர் சேமிப்பு முடியவுள்ள பொதுப் பணத்தைப் பன்னாட்டு மற்றும் இந்தியத் தரகு முதலாளிகள் ஏப்பம் விடுவதற்கு ஏற்பாடு செய்து கொடுப்பது என நாலுகால் பாய்ச்சலில் ஓடுகிறது, மோடி அரசு. முதலீடுகளுக்கு இலாபத்தை உத்தரவாதப்படுத்திய பிறகுதான் உழைப்பாளிகளின் பங்கு பற்றிப் பேச முடியும் எனப் பச்சையாகவே இந்தக் கொள்ளையை நியாயப்படுத்துகிறார்கள்.
தொழிலாளர்களை, விவசாயிகள் உள்ளிட்ட சிறுவீத உற்பத்தியாளர்களைக் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்வதன் வழியாகத்தான் முதலாளிகளின் இலாபம் உத்தரவாதப்படுத்தப்படுகிறது என்ற உண்மையை 19 -ஆம் நூற்றாண்டிலேயே எடுத்துக்காட்டிவிட்டது, மார்க்ஸின் மூலதனம் நூல். மார்க்சியம் கூறும் இந்த அடிப்படையான உண்மையை பிக்கெட்டியின் ஆய்வு மறுக்கவொண்ணாமல் நிரூபித்திருக்கிறது.
முதலாளித்துவ அமைப்பு இந்த ஏற்றத்தாழ்வை மேலும்மேலும் தீவிரப்படுத்தும் திசையில்தான் செல்லுமேயொழிய, தனியார்மய ஆதரவாளர்கள் கதைப்பது போல, எத்தனை ஆண்டுகள் காத்திருந்தாலும் புல்லுக்குப் புசிவது ஒருபோதும் நடவாது.
-செல்வம்
-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.