நிர்மலா தேவி ஒரு பார்ப்பனப் பெண் என்று யாரும் பேசவில்லை, நினைக்கவில்லை. அவர் உதவிப் பேராசிரியர் வேலையில் வேலை பார்த்த ஒரு புரோக்கர், அதன் வழியில் பின்னாளில் துணை வேந்தராக மாறிவிடலாம் என்று பிளான் போட்ட ஒரு ஜன்மம். ஆனால் பா.ஜ.க-வின் எச்.ராஜாவிற்கு ஒரு பார்ப்பனப் பெண் இப்படி ரவுண்டு கட்டி அடிக்கப்படுகிறாரே, அதை வைத்து ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவிற்கு கொள்ளுத் தாத்தா வயதிலும் தீயாய் வேலை பார்க்கும் கவர்னரை வெளுத்து வாங்குகிறார்களே என்று பார்ப்பனக் கோபம் வந்திருக்கும் போல.
இடையில் பத்திரிகையாளர் கன்னத்தை தட்டிய கொள்ளுத் தாத்தாவின் அநாகரிமான நடத்தையை ஊரே காறித் துப்பியது. போதாதா எச்ச ராஜாவுககு…. திரும்பவும் நரகலை மென்று வாயில் துப்ப ஆரம்பித்துவிட்டார்.
கனிமொழியை கீழ்த்தரமாக சித்தரித்து அவர் போட்ட டிவிட், நிர்மலா தேவியின் விவகாரத்திலிருந்து திசைதிருப்பிவிடும் என்றுதான் நினைத்திருப்பார். ஆனால் இப்போது பாஜக கும்பல் ஒட்டு மொத்தமாக தமிழக மக்களிடமிருந்து மட்டுமல்ல, தமிழக பத்திரிகையாளர்களிடமிருந்தும் வாங்கிக் கட்டிக் கொள்ளும் நிலை உருவாகி விட்டது!
கிளைமாக்சாக மைலாப்பூர் மாஃபியாவின் டார்க் காமடி பீசான எஸ்.வி.சேகர் ஒரு அசிங்கத்தை பகிர்ந்திருந்தார். அதில் பெண் பத்திரிகையாளர்களெல்லாம் படுக்கையை விரித்துத்தான் வேலை வாங்குகிறார்கள் என்று இடம் பெற்றிருந்தது. இது ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே மடக்கி கேள்வி கேட்ட செய்தியாளரை “ஆன்டி இன்டியன்” என்று சாபம் விட்டவர்தான் இந்த எச்.ராஜா. சேகரோ தன்னை சங்கர மடத்தின் அடியாளாக கருதிக் கொள்வதால் நரகலை மென்று துப்புவதில் ராஜாவை விட வேகம் காண்பிக்க இந்த இழிவான பதிவை பகிர்ந்திருந்தார்.
வெளியில் கவர்னரின் வண்டவாளங்களை நக்கீரன் எனும் சூத்திர ஏடு தோலுரித்துக் கொண்டிருந்தது. இதெல்லாம் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஏட்டில் வரவில்லை என்பதால் நக்கீரனின் அம்பலம் தாமதமாகவே வெளி உலகை தொட்டது. அதன் பிறகு கவர்னர் புரோகித் அவரது முன்னோடியான திவாரி, சண்முகநாதன் என ஆபாச அத்தியாங்கள் வரிசையாக செய்திகளில் வந்து குவிவதால் சங்க பரிவாரம் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றது.
கவர்னர் தொட்ட முகத்தை எத்தனை முறை கழுவினாலும் அந்த அருவெறுப்பு போகவில்லை என்று லஷ்மி சுப்ரமணியம் எனும் அந்த பத்திரிகையாளர் சொன்ன விதம் பா.ஜ.க பரிவாரங்களுக்கு கடும் எரிச்சலை தோற்றுவித்தது. ஆகவே என்ன செய்யலாம் என்று யோசித்து மத்திய அமைச்சர் பொன்னார் என்ன சொன்னார் என்றால், சமூக வலைத்தளங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி மோடி மற்றும் தலைவர்களை கேவலமாக பேசுகிறார்கள் என்று அறிக்கை விட்டார்.
ஆனால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதிலும், பதட்டத்தை தோற்றுவிப்பதிலும் எச்ச ராஜாவோடு யாரும் போட்டி போட முடியாது என்பதைத்தான் நேற்றைய ஊடக விவாதங்கள் அம்பலப்படுத்தின. தற்போது எஸ்.வி.சேகர் தான் பகிர்ந்த நண்பரின் பதிவை நீக்கிவிட்டதாகவும், அதை படிக்காமல் பகிர்ந்ததாகவும் தப்பிக்க பார்க்கிறார். நன்றாக கவனியுங்கள், நண்பரின கருத்தை அவர் மறுக்கவில்லை, கண்டிக்கவில்லை, படிக்கவில்லை என்றுதான் சமாளிக்கிறார்.
ஆனால் ஊடகவியலாளர்கள் விடுவதாக இல்லை.
சில பத்திரிகையாளர்கள் தி.நகரில் இருக்கும் பா.ஜ.க அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுக்கப் போவதாகவும், பா.ஜ.க தலைமை எச் ராஜா மற்றும் சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறுகிறார்கள்.
ஐயா நெல்சன் சேவியர் அவர்களே, யாராவது கொலைகாரனிடம் போய் கருணை மனு போடுவார்களா? கவுரி லங்கேஷ், கல்பர்கி, தபோல்கர் போன்றோரை சுட்டுக் கொன்ற கூட்டம் பத்திரிகையாளர்களை எப்படி நடத்தும் என்பது உலகறியும். அர்னாப் கோஸ்வாமி, ரங்கராஜ் பாண்டே போன்று நேரடியாக பா.ஜ.கவிற்கு ஜால்ராவும், டோலக்கும் அடிப்போருக்குத்தான் ராஜ உபசாரம் என்பதையும் உலகறியும்.
இப்படி கருத்துரிமைக்கும், மத நல்லிணக்கத்திற்கும், ஜனநாயகத்திற்கும் வேட்டு வைக்கும் பா.ஜ.க கும்பல்தான் எச்.ராஜா, எஸ்.வி.சேகரின் பார்ப்பனக் கொழுப்பிற்கு பவரை சப்ளை செய்கிறது. கதுவா, உன்னாவாவில் சிறுமிகளை பாலியல் வன்முறை செய்து நாசமாக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.கவிடம் போய் அசீபாவிற்கு நீதி கேட்டு நெல்சன் சேவியரோ, கவிதா முரளிதரனோ கேட்க முடியுமா?
மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டிய நேரத்தில், சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டிய காலத்தில் இந்த குற்றவாளிகளை உற்பத்தி செய்யும் தலைமை குற்ற அலுவலகத்தில் போய் மனு கொடுத்தால் அந்த மனுவிற்கு என்ன கிடைக்கும்? ரேப்பை போய் அரசியலாக்காதீர்கள் என்று அமெரிக்காவில் போய்ஃ பேசுகிறாரே மோடி அவரது திமிரை அடக்குவது என்பது மக்கள் வெளியில் சங்க பரிவார கும்பலை முடக்குவதோடு தொடர்புடையது.
ஒரு டிப்ளமசி என்ற முறையில் இப்படியாவது ராஜா மீது நடவடிக்கை எடுக்க வைப்போம் என அவர்கள் அப்பாவித்தனமாக யோசித்திருக்கலாம். ஆனால் மக்கள் வெளியில் ஏற்பட்ட நெருக்குதால் காரணமாகவே சென்ற முறை ராஜா அட்மின் பெயரில் தப்பித்தார். அதை மனு கொடுத்து கேட்டால் ஏதோ கம்யூட்டரே தானாக செய்தி போட்டுக் கொண்டது என்று சொன்னாலும் சொல்வார்! தற்போது எஸ்.வி. சேகரும் அப்படித்தான் நண்பனது சேதி என்று சதித்தனமாக சமாளிக்கிறார்.
90க்கும் மேற்பட்ட முசுலீம் மக்களைக் கொன்று குவித்த நரோடா பாட்டியாவின் சதிகாரத் தலைவியும், முன்னாள் அமைச்சருமான பாஜகவின் மாயா கோட்னானி விடுதலை செய்யப்பட்ட நாள் இது. இனி இந்தியாவில் இந்துமதவெறியர்கள் எவரும் சட்டரீதியாக தண்டிக்கப்பட முடியாது என்று காட்டிவிட்ட நாளும் இதுதான்.
இந்நாளில் அந்த கொலைகாரர்களின் அலுவலகத்திற்கு போய் நியாயம் கேட்பதற்கு பதில் முற்றுகைப் போராட்டம் நடத்தி கமலாலயத்தை பூட்டுவதுதான் சரியான போராட்டமாக இருக்கும்.எனினும் இன்று பத்திரிகையாளர்கள் பலர் பா.ஜ.க. அலுவலகம் சென்று முழக்கமிட்டு சேகர் – ராஜா படங்களைக் கிழித்து காறித் துப்பியது காவிக் கும்பலுக்கு கடும் பதற்றத்தை தோற்றுவித்திருக்கும். பத்திரிகையாளர்கள் சிலர் தற்போது எஸ்.வி.சேகர் வீட்டிற்கும் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்துகிறார்கள். காவல் துறை ஆணையரிடமும் இந்த இரட்டையர்களை கைது செய்யமாறு மனு கொடுத்திருக்கிறார்கள். அதற்கும் வாழ்த்துக்கள்!
(கடைசிச் செய்தி: எஸ்.வி.சேகர் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்த பத்திரிகையாளர்களை போலீஸ் கைது செய்து மண்டபத்தில் வைத்திருக்கிறது. அவர்கள் மீது வழக்கு போட பா.ஜ.க. உத்தரவிட்டிருக்கிறது.)
– வினவு
**
எஸ்.வி.சேகரைக் கைது செய்யுமாறு “குரல்” (பத்திரிகையாளர்கள் அமைப்பு) அறிக்கை வெளியிட்டிருக்கிறது:
Kural
எஸ்.வி.சேகரை கைது செய்!
வணக்கம்.
பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாகவும், இழிவாகவும் சித்தரித்து எழுதப்பட்ட அவதூறு பதிவு ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகர். ’ஊடகங்களில் பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதன் மூலமே அந்த வாய்ப்பைப் பெறுகின்றனர்’ என வக்கிரமாக எழுதப்பட்டுள்ள அந்த பதிவு பலத்த எதிர்ப்புகளை சந்தித்ததை அடுத்து, உடனே அதை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து அகற்றியிருக்கிறார்.
அத்துடன், ‘நான் படிக்காமல் அதை ஷேர் செய்துவிட்டேன். என் நண்பர் சுட்டிக்காட்டியதால் திருத்திவிட்டேன்’ என்று விளக்கமும் சொல்லியிருக்கிறார். படிக்காமல் பகிர்ந்தேன் என்பது பச்சைப் பொய் என்று, எஸ்.வி.சேகரின் அண்ணியும், தமிழகத் தலைமைச் செயலாளருமான கிரிஜா வைத்தியநாதனுக்குக் கூட தெரியும்.
நேற்று சொன்ன கருத்தை இன்று ஒப்புக்கொள்ளும் அளவுக்குக் கூட துணிச்சலோ, நேர்மையோ இல்லாத இந்த ஜந்துக்கள் தங்களை ஆகப்பெரிய அறிவுஜீவிகளாக கருதிக்கொள்கின்றன. இவர்கள் எழுதும் குப்பை ட்விட்டுகளையும், ஸ்டேட்டஸ்களையும் ஊடகங்கள் கண்டுகொள்ளாவிட்டால் மயிலாப்பூர் கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரன் கூட இவர்களை மதிக்கமாட்டான்.
எனினும், ’திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல தமிழ்நாட்டில் பெரியார் சிலை அகற்றப்படும்’ என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எழுதி, கடும் எதிர்ப்பு எழுந்தவுடன், ‘அதை நான் எழுதவில்லை. என்னுடைய அட்மின் எனக்குத் தெரியாமல் எழுதிவிட்டார்’ என்று சொன்னார் இதே பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஹெச்.ராஜா. அவருடன் ஒப்பிடும்போது ’அதை ஷேர் செய்தது நான் அல்ல’ என மறுக்கவில்லை என்பதால், எஸ்.வி.சேகர் துணிச்சல் மிக்கவர்தான் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்த துணிச்சல் எஸ்.வி.சேகரின் சொந்த மனநிலையில் இருந்து வரவில்லை. ’வேலைக்குச் செல்லும் பெண்கள் எல்லோரும் ஒழுக்கம் கெட்டவர்கள்’ என்று சொன்ன சங்கராச்சாரியின் மரபு அது. இப்படி எல்லாம் இவர்கள் பேசிவிட்டு; இன்னமும் பேசிக்கொண்டு, இங்கே உலவ முடிகிறது, உயிர்வாழ முடிகிறது என்பதுதான் தமிழ்மண்ணின் அவலம்; அவமானம்.
இப்போது எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா போன்றவர்கள் திடீரென மேலெழுந்து வந்து, தங்கள் இயல்புக்கு பொருந்தாத வகையில் சவுண்ட் விடுவதன் காரணம், தமிழகத்தில் எழுந்திருக்கும் மிக வலுவான பா.ஜ.க. எதிர்ப்பு; மத்திய அரசு எதிர்ப்பு. இன்னும் 20 ஆண்டுகளுக்கு நோட்டாவைக் கூட தாண்ட முடியாத அளவுக்கு இங்கே தாமரையின் தண்டு அழுகிப்போய்விட்டது. அந்த துர்நாற்றத்தில் இருந்து பிறக்கிறது இவர்களின் ஊளைச் சத்தம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகமே ஓரணியில் ஆர்ப்பரித்து எழுந்தது. தமிழகம் வந்த நரேந்திர மோடியை #Gobackmodi என ட்விட்டர் ஹேஸ்டேக்கில் உலக அளவில் அலறவிட்டார்கள் தமிழர்கள். ’எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஓட்டு கேட்டு உள்ளே வர வேண்டாம்’ என வாசலில் எழுதி தொங்கவிடுகிறார்கள் மக்கள். இந்த அவமானம் பொறுக்க முடியாத பார்ப்பன கும்பல் உண்மைகளை வெளியில் கொண்டுவரும் பத்திரிகையாளர்கள் மீது பாய்கிறது. எஸ்.வி.சேகரின் ஃபேஸ்புக் பதிவை நாம் இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று, ஊடகப் பணிக்கு வரும் பெண்கள் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். சவால் நிறைந்த செய்திக் களம், பணி நேரத்தை நீட்டிக்கும் பிரேக்கிங் செய்திகள், இரவு நேர ஷிப்ட் என பெண்களுக்கு என தனிப்பட்ட சலுகைகள் எதுவும் இங்கே இல்லை. தங்கள் அறிவை, உழைப்பை அளித்துதான் ஒவ்வொரு படியும் முன் செல்கிறார்கள். இந்த உண்மையின் சிறுதுளியும் தெரிந்துகொள்ளாத எஸ்.வி.சேகர் என்ற பார்ப்பன பொறுக்கி, தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண்களை character assassination செய்கிறார். இனியும் இதை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டுமா?
இது ஊடகத்தில் பணிபுரியும் பெண்களின் பிரச்னை அல்ல. எஸ்.வி.சேகர், அவர்களை மட்டும் கொச்சைப்படுத்தவில்லை. உடன்பணிபுரியும் ஆண்களையும் அவர் character assassination செய்திருக்கிறார். ஊடக முதலாளிகள் இந்த அடிப்படையில்தான் தங்கள் நிறுவனங்களை நடத்துகின்றனர் என அவர்களையும் இழிவுபடுத்தியிருக்கிறார். எனவே இது நாம் அனைவரும் இணைந்து கூட்டுக்குரலில் கண்டிக்க வேண்டிய பிரச்னை.
இணைந்து நிற்போம். இன்று ஏப்ரல் 20, மாலை 4 மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் எஸ்.சேகரை கைது செய்யக்கோரி புகார் கொடுக்க பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
– குரல்
Journo’s voices for the masses
________________________________________________
எஸ்.வி.சேகர் கோமாளி அல்ல. கவுரி லங்கேஷை கொலை செய்த கொலைகார கூட்டத்தின் பிரதிநிதி. அவரு வக்கிரமா எழுதுவாராம், பிறகு மன்னிப்பு கேட்பாராம். எஸ்.வி.சேகரின் மன்னிப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். தேவை, எஸ்.வி.சேகரின் கைது.
பா.ஜ.க. அலுவலகத்தில் புகார் கொடுத்து திரும்புவதும், பார்த்தசாரதி கோயிலில் உண்டகட்டி வாங்கி திண்றுவிட்டு வருவதும் ஒன்றுதான். வக்கிர கருத்துக்கு கைது செய். சட்டப்பூர்வமாக தண்டனை கொடு. இதுவே சரியான கோரிக்கை.
________________________________________________
Nelson XavierI strongly condemn the SVe Sekhar’s fb post on media. It is inappropriate and inhuman. The BJP headquarters have to take action against him.
________________________________________________
பத்திரிகையாளர்களை தரக்குறைவாக சித்தரித்து எழுதி வரும் எஸ்.வி.சேகர் மற்றும் ஹெச். ராஜாவுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். நமது கண்டனக் குரலை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிடம் பதிவு செய்வோம். பத்திரிகையாளர்களுக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளை பகிர்ந்துவரும் பாஜகவினர் மீது நடவடிக்கைக் எடுக்க வலியுறுத்துவோம்.
நேரம் – 3.00 மணி
நாள் – 20.04.18
இடம் – கமலாலயம்
________________________________________________
சரி அதெல்லாம் இருக்கட்டும் இந்த கருத்து சுந்தந்திரம் என்கிறார்களே அது எல்லாம் SV சேகர் போன்றவர்களுக்கு கிடையாதா ? நீங்கள் தானே கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஆண்டாளை பற்றி கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டபடி அவதூறாக அசிங்கமாக பேசினீர்கள்… அப்போது மட்டும் உங்களுக்கு கருத்து சுதந்திரம் வேண்டும், இப்போது மட்டும் SV சேகருக்கு கருத்து சுதந்திரம் கிடையாதா ?
வினவு கூட்டங்கள் பதில் சொல்வார்களா ?