சென்னை பல்லாவரத்தில் வெள்ளி தோறும் நடைபெறும் வார சந்தை மிகவும் புகழ்பெற்றது. இங்கே கணினி முதல் கருவாடு வரை விற்கப்படாத பொருட்களே இல்லை! இந்த பழைய பொருட்கள் சந்தை ஏழைகளின் பிரம்மாண்டமான “சூப்பர் மார்கெட்டாக” உள்ளது. பழைய பொருட்களைத் தாண்டி புதிய பொருட்களும், காய்கறிகள், பூச்செடிகள், பனியன்கள் உட்பட பல பொருட்களை இங்கு  குறைந்த விலைக்கு வாங்கலாம்.

தமிழகத்தில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் பிழைப்பிற்காக சென்னை வந்துள்ள ஏழைகளுக்கும், தொழிலாளிகளுக்கும் இந்த சந்தை முக்கியமானது. அதி நவீன சூப்பர் மார்கெட்டுகளில் வாங்கும் பலருக்கும் இந்த பல்லாவரம் சந்தை தெரியாது.

பல்லாவரம் பழைய பொருட்கள் விற்கும் சந்தையில் மக்களும், வணிகர்களும்.

முகமது அலி, ஆடைகள் மற்றும் காலணி விற்பவர்.

வாரந்தோறும் ஏதாவது ஒரு சந்தையில தான் வியாபாரம் பண்ணுவோம். பாண்டிச்சேரி – சண்டே மார்க்கெட், வெள்ளிக்கிழமை சென்னை மின்ட் அப்புறம் பல்லாவரம் சந்தை, புதன் கிழமை ஈரோடு சந்தை என்று ஒவ்வொரு நாளும் சுத்திக்கிட்டே இருப்போம். பனியனை நாங்க திருப்பூர்ல இருந்து பர்ச்சேஸ் பண்ணிட்டு வரோம். இருபது நாளைக்கு ஒருமுறை ரெண்டு லட்சத்துக்கு பனியன் வாங்கிட்டு வந்துடுவேன். பிராண்டட்,  சாதா எல்லாம் கலந்து கட்டி விக்கிறேன். ஆனா எது எடுத்தாலும் நூறு ரூபாதான்.

டி சர்ட்டை ஆர்வமாகத் தேடும் வடமாநில இளைஞர்.

அதே போல ஷு நாங்க ஆக்ரா போயிட்டு வாங்கி வருவோம். அங்க ஒவ்வொரு வீட்டுலயும் குடிசை தொழில் மாதிரி செய்துட்டு இருக்காங்க. நாம சொன்னா கொரியர்ல போடுவாங்க. அதுல டேமாஜ் பீசு இருக்கும். நானே நேர்ல போயிட்டு பாத்துபாத்து வாங்கிட்டு வந்து குறைந்த விலைக்கு தருகிறோம். எங்க கிட்ட எல்லாரும் நம்பி வந்து வாங்குறாங்க. அதுல எங்களுக்கு திருப்தி தான். ஷோ ரூம்ல விக்கிறவங்களுக்கும் எங்களுக்குமான வித்தியாசம், அவன் ஏசி, கரண்ட் பில் எல்லாத்துக்கும் சேர்த்து பணம் வாங்குவான். நாங்க வாங்குறது பொருளுக்கு மட்டும் தான்.

லட்சுமி, திண்டுக்கல், குழந்தைகளுக்கான செய்முறை பொருட்கள் விற்பவர்.

எங்களால இந்த சந்தையில வாடகை கொடுத்து கடை போடகூட முடியல. ஒரு ஓரமா ஒதுங்கியிருக்கோம். எங்க சந்தை போட்டாலும் போயிடுவோம். நானும் எங்க வீட்டுக்காரரும் மாசம் ஒரு முறை தான் வீட்டுக்கே போவோம். அதுவரைக்கு எங்கயாவது தங்கி இதயெல்லாம் விப்போம். புள்ளங்க எல்லாம் என்னோட மாமனார் பார்த்துப்பார். நாங்க படிப்பு வாசனையே அறியாதவங்க. ஆனா நாங்க விக்குற பொருள் கொழந்தங்களோட அறிவ வளர்க்க இது உதவுது, பசங்க ஸ்கூல் புராஜெக்டுக்கு வாங்கிட்டு போவாங்க..

திண்டுக்கல்லை சேர்ந்த கருப்பட்டி விக்கும் பாட்டி.

பேர, ஊர கேட்டு நீங்க இன்னா பண்ண போறீங்க..எங்களுக்கு இதான் வயித்து பொழப்பு. இருபத்தி அஞ்சி வருசமா இந்த வேலைய செய்துகிட்டு இருக்கேன். எனக்கு படிக்க தெரியாது. ஆனா கணக்கு நல்லா போடுவேன். லட்ச ரூபா கொடுத்தாக் கூட எண்ணிடுவேன்.

சுரேஷ், பூச்செடிகள் மற்றும் வீட்டுத் தோட்டத்துகான செடிகள் விற்பவர்.

முப்பது ரூபாயில இருந்து முன்னூறு ரூபா வரைக்கும் செடிகள் இருக்கு. ரோஸ் அயிட்டம் தொட்டியோட விக்கிறதால விலை அதிகம். முன்பெல்லாம் சொந்த வீடு வச்சிருக்கவங்கதான் செடி வாங்க வருவாங்க. இப்ப வாடகை வீட்டில் இருக்குறவங்களும் வாங்கிட்டு போறாங்க.

வீட்டுத் தோட்டத்துக்கான பொருட்கள் விற்பவர்.

மாடித் தோட்டங்களுக்கு தேவையான பூவாளி மற்றும் பூச்சி மருந்து ஸ்பிரே அடிக்கும் உபகரணங்கள் விற்பவர். எங்களோட பெரும் பிரச்சனை போலீஸ் தான். பூவாளிய அய்யாவுக்கு வேணும், அம்மாவுக்கு வேணும்னு போலிஸ் அதிகாரிங்களுக்கு எடுத்திட்டு போயிடுறாங்க. ஆனா பொருள் வாங்க வரும் மக்கள் எங்களை கவுரவமா தான் பார்க்கிறாங்க.

கோழியை சந்தையில் விற்க வந்துள்ள நபர்.

சார் இது வீட்டுக்கோழிதான். ஊர்ல எல்லாக்கோழியையும் வம்புக்கிழுத்து சாவடிச்சிடுது. தெனமும் பக்கத்து வீட்டுக்காரங்களோட சண்டை. அதான் விக்க வந்திருக்கோம். இதுக்கு பேரே கொலைகாரக் கோழி. உங்களுக்கு வேணுமா?

தேவா, தூத்துக்குடி மாவட்டம், எலுமிச்சை சாறு விற்பவர்.

சென்னைக்கே இன்னைக்கு தான் வந்தேன். எங்க ஊர் பையன் கூட்டி வந்து இந்த வேலையில சேர்த்தான். மெட்ராச சுத்தி பாக்கனும்ன்ற ஆசை இருக்கு. முதல்ல வேலையில நல்லா பிக்கப் ஆக்கிட்டு அப்புறம் பாத்துக்கலாம்னு இருக்கேன்.

தாங்கள் விளைவித்த காய்கறிகளை சந்தையில் விற்க வந்துள்ள விவசாயிகள்.

அரக்கோணம் விவசாயிகள். எங்க ஊர்ல இருந்து இருபது பேர் ஆளுக்கு ரெண்டு மூட்டை காய் கொண்டு வந்திருக்கோம். தோட்டத்துல வியாபாரிங்க கிலோ 5 -லிருந்து 8 ரூபாக்குள்ள தான் எடுக்கிறாங்க. அது கட்டுபடியாகல. அதனாலதான் நாங்களே எடுத்திட்டு வந்து விற்பனை செய்யுறோம். சந்தையை நம்பிதான் விவசாயம் பண்றோம். பல்லாவரம், பாலூர், காஞ்சிபுரம், குருவிமலை என்று எல்லா சந்தைக்கும் போவோம். விவசாயிகள் வியாபாரியா அவதாரம் எடுத்திருக்கோம்…

அம்மிக்கல் விற்கும் பெரியவர்.

நடுத்தர வர்க்கம் மின்சாதனப் பொருட்களுக்கு மாறிவிட்ட நிலையில் இன்றும் ஏழைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் அம்மிக்கல்லை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யும் பெரியவர்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.