நூல் அறிமுகம் : தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்

ஆரியப் பார்ப்பனர் தமிழ்க் கோயில்களுக்குள் தஞ்சம் புகுந்தனர். தமிழைப் போற்றிப் பாடி, தமிழர் வழிபாட்டிற்கு மாறிக்கொண்டனர். பிறகு நன்றியின்றி சமணரை விரட்டிய பின், எல்லாவற்றையும் சமஸ்கிருதமயமாக்கித் தமிழையே அழிக்க முயன்றனர்.

தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்

மிழர் சமயமும் சமஸ்கிருதமும் பற்றித் தொடர்புடைய இருமுறைகளையும் வடமொழி வேதங்கள் – விளக்கங்கள் பற்றிய நூல்களையும் படித்தேன். அதன் விளைவே இந்த நூலும், அடுத்து ‘’திருமுறைகள் உணர்த்தும் மறைபொருள் உண்மைகள்’ என்று நூலுமாகும். இவற்றை எழுதி முடித்த போது, எனக்குப் பல ஐயங்கள் எழுந்தன.

* சங்க காலக் கபிலர், பரணர், பாலைக் கவுதமனார், இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார், தாமப்பல் கண்ணனார் போலும் அந்தணப் புலவர்கள் தமிழக நிலச்சூழலறிவு, மக்களின் நடைமுறை வாழ்வு, தமிழ்ப்புலமை ஆகியவற்றில் முழுமையான தமிழர்களாகவே இங்கு | வாழ்ந்துள்ளனர்.

இன்று தமிழை வேறுபட நினைத்து நடக்கின்ற வேண்டாத பழக்கம் எப்படி வந்தது?

* பிராமணரல்லாதார் இயக்கம், ஆங்கிலம் கற்ற சிலரால் சமத்துவம் வேண்டித் தோற்றுவிக்கப்பட்டது. பின்னரே அது திராவிட இயக்கமாக மாறியது. இந்தியை எதிர்த்துத் தமிழை வளர்க்கப் போவதாகப் பறைசாற்றி, ஆட்சியைப் பிடித்த திராவிட இயக்கம், இன்று தாய்மொழியாம் தமிழைக் காப்பாற்ற வில்லை. ‘தமிழ் வாழ்க’ என்பதே ஒரு நாடகமாகிப் போனது. திராவிட இயக்கத்தவர்கள் தமிழைச் சொல்லித் தங்களையே வளர்த்துக் கொண்டனர். மற்றபடி தமிழ் பற்றிய தொலைநோக்கோ, திட்டமிடலோ, செயல்திட்டம் வரைந்து நாளும் ஓசைப்படாமல் வளர்ப்பதோ திராவிட இயக்கத்தைச் சார்ந்த முடிமுதல் அடி வரை காணப்படவில்லை . இன்றும் அவர்கள் அனைவரும் தாய்த் தமிழைத் தங்கள் சுயநலத்திற்கு, ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

* பார்ப்பன அந்தணர்களுக்கு தமிழை வளர்ப்பது பற்றிய அனைத்துத் திட்ப நுட்ப வழிகளும் தெரியும். அவர்கள் வழிவழியாகக் கல்விக்குரிய குடியினராகப் பல நூற்றாண்டுகள் வளர்ந்ததால், அவர்கள் நினைத்தால் மட்டுமே, நாம் தமிழ்பற்றி இன்று காண்கின்ற கனவுகள் அனைத்தும் நிறைவேறும் என்று தோற்றுகிறது.

* இன்றும் பார்ப்பனக் குடும்பங்களில் வழங்கும் வட்டார வழக்குச் சொற்கள் அவர்களைத் தூய தமிழர்களாக இனம் காட்டுகின்றன. உறவுப் பெயர்களில் அகமுடையான், அகமுடையாள், அத்தையன்பர், அம்மான் சேய், ஓரகத்தி, ஓர் பிடியாள் போல்பவை வியப்பளிக்கும் சொற்களாகும். பிறகு ஏன் தமிழினின்றும் வேறுபட எண்ணுகிறார்கள்? நாம் அவர்களைத் தமிழினின்றும் அயன்மைப்படுத்தி விட்டோமோ அல்லது அவர்களே தங்களை அயன்மைப்படுத்திக் கொள் வேண்டியதாயிற்றா?

* இன்றைய ஆங்கில மோகம் ஆங்கிலரால் விளைந்ததன்று. இன்று எதையும் ஆங்கிலத்தில் எழுதினால், அதில் பெருமையும் சிறப்பும் உண்டு என்பதைத்தான் தமிழர்கள் ஏற்கிறார்கள். ஆங்கிலம் படித்தால்தான் வருமானம் தேடி, வாழ முடியும் என்ற நிலை உளது.

இதே நிலை சங்க காலத்திற்குப் பிறகு – களப்பிர, பல்லவ நாயக்க அரசுகளின் காலத்திலும் அதற்குப் பிறகும் சமஸ்கிருதத்திற்கு இருந்தது. அதனால் தமிழரின் கலைகள், இசை, சமயம் என அனைத்தும் பெயர்கள், கலைச்சொற்கள் உட்பட சமஸ்கிருதமயமாக்கப்பட்டு விட்டன. இன்று கால மாறுதலுக்கேற்ப அவற்றைத் தமிழுக்கு மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். இதற்கு நல்ல தமிழறிஞரேயன்றி, வடமொழியறிந்த தமிழ் அந்தணர்களும் ஒத்துழைத்தால்தான் நடக்கும்.

* ஆகவே இந்நூலுள் காணப்படுவன இடைக்காலத்தே ஏற்பட்ட மாற்றங்களை உள்ளவாறு விளக்கி, அவற்றை இன்றைய நிலைக்கு ஏற்ப மாற்ற வேண்டும் என்பதாகவே குறிக்கப்படுகின்றன. பழைய வரலாறுகள் மீண்டும் நினைவுபடுத்தப்படுகின்றன. பார்ப்பனப் பகைமையோ, சமஸ்கிருத வெறுப்போ காரணமன்று.

– நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து…

நூல்: தமிழர் சமயமும் சமஸ்கிருதமும்
ஆசிரியர்: தமிழண்ணல்

பதிப்பகம்: மீனாட்சி புத்தக நிலையம்,
மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை – 625 001.
பேச: 0452 – 2345971; 0452 – 2560517

பக்கங்கள்: 248
விலை: ரூ.150.00

சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 9962390277

வினவு செய்திப் பிரிவு