கஃபீல் கான்.

கோரக்பூர் என்றதும் நமக்கு உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், குழந்தைகள் மரணமும் நினைவுக்கு வரும். கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்தில் கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகள் பிராணவாயு இல்லாமல் இறந்து போனார்கள். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் உயரதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் மூளை அழற்சி நோய் சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக 37.99 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதே கடிதத்தை, மத்திய அரசின் தேசிய சுகாதாரத் துறைக்கும் அனுப்பியுள்ளார். எனினும், மத்திய மாநில அரசுகள் உயிர்காப்பதற்கு அத்தியாவசியத் தேவையான இந்த நிதியை ஒதுக்கீடு செய்யவே இல்லை.

இந்தப் படுகொலைக்கு காரணம்  பிராண வாயு அளிக்கும் நிறுவனங்களுக்கு  நிதி கொடுக்க தவறியதுதான். இதற்கு பொறுப்பேற்க  மறுத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய மகப்பேறு மருத்துவர் கஃபீல் கானை பணியிடை நீக்கம் செய்து சிறையில் அடைத்தார். கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் சிறையில் இருந்து  பிறகு பிணையில் வெளி வந்தார் அந்த மருத்துவர்.

படுகாயமுற்ற ஜமீலுக்கு உடனே சிகிச்சை அளிக்கப்படவில்லை.

அரசு பலிகடா ஆக்கிய  அந்த மருத்துவரது  இளைய சகோதரர்  35 வயது  கஷீப் ஜமீல் (kashif jameel ), சென்ற ஞாயிறு அன்று (10.06.2018) இருசக்கர வாகனத்தில்  வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது சுடப்பட்டிருக்கிறார்.  ஜமீல் வாக்குமூலத்தின்படி  ஞாயிறு இரவு  இரண்டு நபர்கள் ஒரு இருசக்கர வாகனத்தில்  துர்கா வாகினி அருகே  இவரை நோக்கி மூன்று முறை சுட்டிருக்கிறார்கள். சுட்டவுடன் அந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார்கள்.  உடனே அருகாமையில் இருந்த மக்கள்  படுகாயமுற்ற ஜமீலை தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் . தற்போது  அபாய கட்டத்தில் இருந்து ஜமீல் மீண்டு விட்டார் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த கதை இத்துடன் முடியவில்லை.  ஏனெனில் இவரது அண்ணான மருத்துவர் கபீஃல் கான் படுகாயமுற்ற ஜமீலுக்கு உடனே  சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதை டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உடனேயே தோட்டாக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினாலும் கூட இருந்த போலீசார் வழக்கு பதிவு செய்த பிறகே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என வற்புறுத்தியிருக்கின்றனர். இதற்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டது என கஃபீல் டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் தெரிவிக்கிறார்.

தற்போது படுகாயமுற்ற ஜமீலின் உடலில் இருந்து தோட்டாக்கள் அகற்றப்பட்டு அவர் அபாய கட்டத்தை கடந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த துப்பாக்கி சூடு நடந்த இடம் கோரக்நாத் கோவிலின் அருகே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் தான் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குடியிருப்பதோடு சம்பவம் நடக்கும் போது உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். யோகி ஆதித்யநாத்தின் இருப்பிடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில்தான் கொலைகாரர்கள் சுட்டிருக்கிறார்கள்.

முதலமைச்சர்  குடிகொண்டிருக்கும் கோவிலின் அருகிலேயே இந்த துப்பாக்கிச் சூடு நடைபெறுவதைப் பார்க்கும் போது இதுதான் உத்திரப் பிரதேச பா.ஜ.க. அரசின் காட்டு தர்பார் என்பது நிரூபிக்கப்படுகிறது.

மருத்துவர் கான் பிணையில் வெளிவந்து உ.பி. அரசின் மருத்துவமனைக் கொலைகள் அம்பலபட்ட நிலையில் அந்த மர்மநபர்கள், பா.ஜ.க.விற்காக அன்றி வேறு யாருக்காக சுட்டிருக்க முடியும்?

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இந்துமதவெறியர்கள் குறிவைத்திருக்கும் கொலைப்பட்டியலில் இன்னும் யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது!

இவர்களை முறியடிக்காமல் இந்தியாவில் அமைதியோ, சகஜ நிலையோ இல்லை என்பதில் ஐயம் ஏதும் உண்டா?

  • வினவு செய்திப் பிரிவு.