நீங்கள் அறியாத பெண் வலி – என்டொமெட்ரியோசிஸ் !

மாதவிடாய் முதல் மகப்பேறு வரை வலி என்பது பெண்களுக்கு சாதாரணமானதே என்ற கருத்து “சமூக எதார்த்தமாக” உள்ள சூழலில் கருப்பை அகப்படலம் (endometriosis) எனும் ஒரு நோய் பெண்களை வதைப்பதையும், அது குறித்த சமூகத்தின் பாராமுகம் பற்றியும் விளக்குகிறார் அன்னா.

3

பெண்வலி : என்டொமெட்ரியோசிஸ்

ற்பனை செய்து பாருங்கள் – “உங்கள் உடம்பில் ஒரு கண்ணாடிப் போத்தலை உடைத்துப் பின் அந்த உடைந்த கூரான துண்டுகளை எல்லாம் எடுத்து உங்கள் உள் உடம்பில் தேய்த்தால் எப்படியிருக்கும்?” பதின்ம வயதிலிருந்து நீங்கள் இவ்வாறு மிகுந்த வலியால் துன்புறுகிறீர்கள், ஆனால் மருத்துவர்கள் கூட, “பெண்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம், கொஞ்சமென்றாலும் நீதான் உணர்ச்சிவசப்படுகிறாய், எல்லாம் உன் கற்பனை” என்கிறார்கள். உங்களுக்கு எப்படியிருக்கும்?

இவ்வலி உங்களுக்கு endometriosis (என்டொமெட்ரியோசிஸ்) என்றொரு நோய் இருப்பதால் இருக்கலாம். இந்நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை யாருக்கும் தெரியாத மிகப் பொதுவான நோய் என்றும் சொல்வார்கள்.

இடமகல் கருப்பை அகப்படலம் (endometriosis) என்றால் என்ன?

பெயரே சொல்வது போல், கருப்பையை விட்டு அகன்று வேறிடங்களில் வளரும் கருப்பை அகவுறையையே endometriosis என்பர். சூலகங்கள், இடுப்பறையின் பக்கச் சுவர்கள், பலோப்பியன் குழாய்கள் என இந்தத் திசுவிற்கு இடுப்பறையில் எங்கெல்லாம் படிந்து வளர இடமிருக்கிறதோ அங்கெல்லாம் இவ்வளர்ச்சி இடம் பெறலாம்.

கருப்பையினுள்ளே இருக்கும் அகப்படலத்தில் மாதா மாதம் ஏற்படும் மாற்றங்களிற்கு ஒத்தவாறு வெளியில் வளரும் கருப்பை அகவுறையிலும் இடம் பெறும். மாதவிடாய் நேரங்களில் அடிவயிற்றில், அங்கங்களில் இரத்தப்போக்கு, அழற்சி (inflammation), இரத்தம் உள்ள கட்டிகள் இருப்பது மாதிரியான தோற்றம், வயிறு அங்கங்களில் வடுக்கள் போன்றவை இதன் விளைவுகளாகும்.

சரி ஏன் இதைப்பற்றி யாருக்கும் தெரியவில்லை? இது புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட நோயா?

இல்லை. கொஞ்சம் மருத்துவ வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தோமானால், பழைய மருத்துவப் பதிவுகளில் இந்நோயின் அறிகுறிகளுக்கு ஒத்த என்னவென்று குறிப்பாகச் சொல்ல முடியாத இடுப்பு அல்லது வயிற்று வலி போன்ற அறிகுறிகளுடன் துன்புற்ற பெண்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கும்.

இவர்களெல்லாம் வெறிபிடித்தவர்களாகவும் பேய்/பிசாசு ஆட்கொண்டிருப்பதாகவுமே பழையகால வரலாற்றில் கண்டறியப்பட்டார்கள். இந்த hysteria அல்லது கட்டுப்படுத்த இயலாத வன்முறை நடவடிக்கை என்பது முதலில் பெண்களுக்கு – பெண்களுக்கு மட்டுமே உரித்தானதாகக் கருதப்பட்ட மனநோய்.

கி.பி. 12, 13-ம் நூற்றாண்டுகளில் வந்த மருத்துவப் புத்தகங்கள், இந்த ‘ஹிஸ்டீரியா’-வுக்கு அலைந்து திரியும் கர்ப்பப்பையே காரணம் என்றன. கருப்பையை மற்ற அங்கங்கள் மாதிரி ஒரு அங்கமாகப் பார்க்காமல் ஒரு தாய்மை அடைய வெறிகொண்டலையும் மிருகமாகவே பார்த்தார்களாம்.

இந்த எண்ணங்கள் கிறிஸ்துவிற்கு முன்னிருந்து எகிப்திலே ஆரம்பித்திருந்தாலும் பின்னர் ஹிப்போகிரக்டிக் நூல்கள் (Hippocratic texts), பிளாட்டோ (Plato), மற்றும் ரோமர்களால் பிரபலமாக்கப்பட்டிருக்கலாம். பண்டைய கிரேக்கர்கள் இந்த மாதிரி வலியால் துன்புறுவதாக வரும் பெண்களை ஏணியில் தலை கீழாகக் கட்டி கடுமையாக உலுக்குவார்களாம். அவ்வாறு செய்வதால் கருப்பை அலைந்து திரியாமல் அதன் சரியான இடத்திற்கு வந்து விடுமென நம்பினார்களாம்.

சரி இதெல்லாம் பழைய காலத்தில் தானே, இப்போது நிச்சயமாக இப்படி யாருமே நம்புவதில்லையே என்கிறீர்களா?

முற்று முழுதாக இல்லை. ஆனால் இந்த மூட நம்பிக்கைகளின் எச்சங்கள் நிச்சயம் இப்பபோதும் சமுகத்தில் நிலைத்திருக்கின்றன. பண்டைய காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வருவோம். எத்தனை பெண்களை இந்நோய் பாதிக்கிறதென நினைக்கிறீர்கள்? அதிகாரபூர்வமான தரவுகளின் படி இனப்பெருக்க வயதிலிருக்கும் பெண்களில் 10 சதவீதமானோர். அது உலகளவில் கிட்டத்தட்ட 176 மில்லியன் பெண்கள். அதாவது 17.6 கோடிப் பெண்கள்.

இனப்பெருக்க வயதில் இந்த எண்ணிக்கை என்பது, புற்றுநோய், நீரிழிவு, எயிட்ஸ் ஆகிய நோய்களால் மொத்தமாகப் பாதிக்கப்படுவோரை விட அதிகமானது. ஆனால் இந்நோயைப் பற்றித் தெரிந்தளவுக்கு மக்களுக்கு endometriosis பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நீண்ட கால இடுப்பு வலி அல்லது கருத்தரிக்க முடியாமல் இருக்கும் பெண்களில் 50%-திற்க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்நோய் இருக்கச் சாத்தியக்கூறுள்ளது.

அயோட்டியரோஆ (Aotearoa – is the Māori name for New Zealand) நியூசிலாந்தில் மட்டும் இதற்கான மருத்துவ அறுவை சிகிச்சைச் செலவு ஒரு வருடத்திற்கு மொத்தமாக ஒரு பில்லியன் டாலருக்கு மேலாகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6,500 கோடி ரூபாய். சிகிச்சை அளிக்கப்படாத எண்டோமெட்ரியோசிஸ் நோய், உடல்நலம் சம்பந்தப்பட்ட வாழ்க்கை தரத்தை குறைப்பதோடு, மன அழுத்தம் மற்றும் பாலியல் செயலிழப்பு போன்ற விளைவுகளுக்கு பங்களிப்பு செய்கின்றது.

இந்நோயால் ஏற்படும் உற்பத்தித்திறன் இழப்பு நோயாளிகளுக்கு ஒரு வாரத்திற்கு சுமார் 11 மணி நேரம் ஆகும். வயது வந்த பெண்களை மட்டுமல்ல பதின்ம வயதுப் பெண்களையும் இது பாதிக்கிறது.

பெண்களுக்கு இந்நோய் இருக்கிறதா எனக் கண்டறிய சராசரியாக 8-10 வருடங்கள் ஆகிறது. இந்தத் தாமதமான கண்டறிதலால் நோயின் தீவிரம் கூடுகிறது. இவை மிகவும் கொடூரமான புள்ளிவிவரங்கள் என்பதை ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன்.

எனில் இந்த நோயைக் கண்டறிய ஏன் இவ்வளவு தாமதம், பலருக்கு இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போனது ஏன்?

அண்மையில் அயோட்டியரோஆ நியூசிலாந்த்தில் ஒரு வானொலி ஒலிபரப்பாளர் இந்நோயால் கருப்பையைத் தான் அகற்றியதைப் பற்றிப் நேர்காணல் அளித்திருந்தார். அதில் தனது இருபதுகளிலும் அதற்குப் பின்னரும் மிகக்கடுமையான வலியை அனுபவித்ததாகாகவும் ஆனால் அந்த வலி சாதாரணமானதா, இல்லையா? எனத் தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றார்.

பின்னர் தனக்கு இரு குழந்தைகள் பிறந்த பின்புதான், பிரசவ வலியைப் போல் அத்தனை வருடங்களிலும் அவ்வலி இருந்தெனக் கூறினார். கற்பனை செய்து பாருங்கள்! ஒருவர் வருடக்கணக்காக பிரசவ வலியளவிற்குத் தொடர்ந்து வலியை அனுபவித்திருக்கிறார், ஆனால் அது சாதாரண வலியில்லை என அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. ஏன்?

சிகிச்சை தாமதமாவதற்கும் விழிப்புணர்வில்லாததற்கும் முக்கிய காரணம் சமூகத்தில் நிலவும் பாலினவாதமும், ஒருபடித்தான பார்வையுமே (stereotypes) . வலி என்பது பெண்களுக்கு சாதாரணமானதென்ற மூடநம்பிக்கை அநேகமானோரிடம் இருக்கிறது. “மாதவிடாய் மிகுந்த வலியுடன் தொடர்புடையதுதானே, இதற்கெல்லாம் தொண தொணத்துக் கொண்டிறாதே”, என்றே பலநேரம் பெண்கள் நினைக்கிறார்கள்.

அப்படியே வலியைச் சொன்னாலும் அநேகமாக அவர்களை மருத்துவர்கள் கூட நம்புவதில்லை. “அவளால் சாதாரண வலியைக்கூடத் தாங்க முடியவில்லை, சும்மா சொல்கிறாள், எல்லாம் அவளின் மண்டைக்குள் தான் உண்மையில் இல்லை” என்பதே பலருடைய எண்ணங்களாக இருப்பதை ஆய்வுகள் சொல்கின்றன.

இந்நோய் தொடர்பான வலி மட்டுமல்ல, பெண்கள் அநேகமாக என்னவகையான வலியென்றாலும் ஆண்களை விடத் தாமதமாகவே மருத்துவர்களை அணுகுவார்கள். அப்படியே மருத்துவர்களிடம் போனாலும் வலி என்று போகும் ஆண்களை நம்புமளவிற்குப் பெண்களை மருத்துவர்களே நம்புவதில்லை. பலநேரம் பெண்களுக்கு ஆண்களை விடத் தாமதமாகவே வலி நிவாரண சிகிச்சை ளிக்கப்படும். பொதுவில் “அவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்கள், hysterical”, என்று கூட விளிப்பார்கள்.

இதற்கும் அப்பால் இந்நோய் பல்வேறு அறிகுறிகளுடையது. சிலருக்கு மாதவிடாய் வருவதற்கு முன் தீவிர வலி வரலாம், சிலருக்கு சமிபாட்டுத்தொகுதியில்* பிரச்சனைகள் வரலாம். பாலினவாதத்துடன் இந்தமாதிரி வெவ்வேறு நோய் அறிகுறிகளும் சேர்ந்து நோயைக் கண்டறிதலைத் தாமதமாக்குகிறது.

இந்நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதத்திற்கு இன்னொரு காரணம். இந்நோய் இருக்கிறதென நிச்சயமாகக் கண்டறிவதற்கான ஒரே வழி ஊடறுவைச் சிகிச்சையான laproscopy செய்வது மட்டும்தான். இதன் படி வயிற்றில் சிறிய துளைகள் இட்டு, அதனூடாக சிறிய காமராவை இடுப்பறைக்குள் செலுத்தி, அங்கெங்காவது கருப்பை அகவுறை படிந்து வளர்கிறதா என்று பார்ப்பதன் மூலமே இந்நோயைக் கண்டறியலாம். இது மிகவும் இலகுவான செய்முறை ஆயினும் எதற்குச் சும்மா ஊடறுவைச் சிகிச்சை செய்வானென ஒதுக்கி ஒதுக்கியே அநேகர் இந்நோயைக் கண்டறிவதைப் தள்ளிப் போடுகின்றனர்.

இந்நோயை குணப்படுத்தும் வழி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அறுவைச் சிகிச்சையினாலும் மருந்துகளாலும் ஒரளவுக்குக் கட்டுப்படுத்தப்படுகிறது. அறுவைச் சிகிச்சையின் மூலம் வேறிடங்களில் வளரும் கருப்பை அகவுறை நீக்கப்படுகிறது. நீக்க முடியாவிடில் எரிக்கப்படுகிறது. ஆனாலும் அநேகமானோருக்கு அறுவைச் சிகிச்சை பல தடவை செய்ய வேண்டி வரலாம்.

Endometriosis ஆல் ஏற்படும் வலியைக் (குறிப்பாக மாதவிடாயின் போது) கட்டுப்படுத்த அநேகமாக steroids (உதாரணம்: கருத்தடை மாத்திரைகள்) கொடுக்கப்படுகிறது. அதிலும் இம்மருந்துகள் கிட்டத்தட்ட அரைவாசிப் பெண்களுக்கே வேலை செய்கிறது. அத்தோடு ஒரே மருந்தை நீண்ட நாட்கள் எடுப்பதால் சில வேளை மருந்துகளுக்கு தடுப்பாற்றல் (resistance) கூட வர வாய்ப்பிருக்கிறது.

அதனால் இந்நோயைக் இலகுவாகக் கண்டறிவதற்கும் கண்டறிந்ததும் சிகிச்சையளிக்க பயனுள்ள முறைகளையும் கண்டறிதல் மிக முக்கியமாகும். ஆனால் இந்நோயைக் கண்டறிவதைத் துரிதப்படுத்த விரும்பினால் பெண்கள் தமது உடலில் எதோ சரியில்லை எனச் சொல்லும் போது அதை அசாதரணமாக எடுத்துக் கொண்டு நம்பவேண்டும். இந்த நம்பிக்கைதான் இந்நோயை கண்டுபிடிப்பதின் துவக்கமென நான் நம்புகிறேன். நீங்கள்?

– அன்னா
(கட்டுரையாளர் அறிமுகக் குறிப்பு :  மாதவிடாய், கருப்பை, கருத்தரித்தல் தொடர்பாக உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர் மற்றும் பெண்ணியவாதி. கருத்தாடல் பக்கத்தில் “அறிவியல்-பெண்ணியம்-சமூகம்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.)

* மனித இரையகக் குடற்பாதை (Gastrointestinal tract – GIT) என்பது, மனிதனின் வயிறும், குடலும் சேர்ந்த மனித சமிபாட்டு மண்டலத்தின் ஒரு பிரதானப் பகுதியாகும். [1] பொதுவாக மனித இரையகக் குடற்பாதை என்பது வாயில் தொடங்கி குதம் வரை நீண்டிருக்கும் குழாய் வடிவ அமைப்பிலுள்ள வாய், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், குதம் ஆகிய உறுப்புக்களைக் குறிக்கிறது.[1] இவற்றுடன் நாக்கு, உமிழ்நீர்ச் சுரப்பிகள், கணையம், கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புகளும் இணைந்து மனித சமிபாட்டு மண்டலத்தை உருவாக்குகிறது – விக்கிபீடியா

மேலும் :

3 மறுமொழிகள்

  1. அட போங்கம்மா! இருக்குற டசன் கணக்கான நோய்களோடு புதுசா ஒண்ண சொல்லி பீதிய கிளப்புறீங்க! சும்மா காமடி
    உண்மையா சொன்னா பெண்களோட ஒரு பெரிய வலியை காட்டிருக்கீங்க! ஒரு ஆணாவும் ஒரு ஆளாவும் நிறைய வெட்கப்படுறேன்! நல்ல எழுதியிருக்கீங்க, அன்னா, நன்றி!

    • உலகத்துல இப்படிக் கூட நோய் இருக்கான்னு ஆச்சர்யமா இருக்கு!

  2. சமீப காலத்தில் படித்ததில் சிறந்த கட்டுரை. வெறும் புள்ளி விவரமாக இல்லாமல் நோயின் வலியை நமக்குள் கடத்துகிறார். பொதுவில் அறிவியல் கட்டுரை எழுதுபவர்கள் புள்ளி விவரங்களாக எழுதுவார்கள். இக்கட்டுரை அவ்வாறில்லாமல் அறிவியல் அதன் பின் இருக்கும் சமூக விஷயங்களை உணர்வு பூர்வமாக முன்வைக்கிறது. அதுவும் தமிழில். அன்னாவின் அடுத்த கட்டுரைக்காக காத்து இருக்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க