த்திய விளையாட்டுத்துறை அமைச்சரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவருமான ரத்தோர் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோ வெளியிட்டு டுவீட் செய்தார். தற்போதைய டிரண்டிங்கின் படி டிவிட்டரில் இப்படி சில அக்கப் போர்களை வெளியிட்டு மற்றவர்களை டேக் செய்து கேட்பார்கள்! டேக் செய்யப்படுவர்களும் அந்த ‘சவாலை’ ஏற்று தானும் செய்து அடுத்த லிஸ்ட் நபர்களை டேக் செய்து சவாலுக்கு அழைப்பார்கள். இப்படியாக வேலை வெட்டி இல்லாத பா.ஜ.க அமைச்சரான ரத்தோர், விராட் கோலியை டேக் செய்தார். ராத்தோரின் சவாலை ஏற்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது “தண்டால்” வீடியோவை வெளியிட்டு மனைவி அனுஸ்கா சர்மா, பிரதமர் மோடி, தோனி ஆகியோருக்கு டேக் செய்தார்.

கோலியின் சவாலை ஏற்றுக்கொண்ட உலகம் சுற்றும் விளம்பரப் பிரியரான மோடி விரைவில் தன்னுடைய உடல் தகுதி குறித்த வீடியோவை வெளியிடுவதாக கூறி ஒரு மாதத்தில் வெளியிட்டும் விட்டார்.

பிரதமர் மோடி பிட்னஸ் வீடியோவை வெளியிட்டதும் அகில இந்திய மீம்ஸ் கிரியேட்டர்கள் மோடியின் டிராக் பேண்டை மேலும் ஈரமாக்கி விட்டனர். மீம்ஸ் கிரியேட்டர்கள் மட்டும் தான் இப்படியா? தமிழக மக்கள் பிரதமர் மோடியின் பிட்னஸை எந்த அளவிற்கு ரசிக்கிறார்கள் என்பதை அறிய சென்னையில் அதிகாலை முதல் ஒரு பயணம் சென்றோம்! மக்கள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் ஒரு குத்து! அதுவும் மரண பஞ்ச்! என்ஜாய்!

கண்ணன், பஞ்சர் கடை.
என்னோட உழைப்புதான் எனக்கு ஆரோக்கியம். சாதாரண மக்கள் ஆரோக்கியத்துக்கு இதெல்லாம் (எக்சைஸ்) செஞ்சா சோத்துக்கு என்னா பன்றது? வெளியூரு சுத்தி வரவருக்கு, வேலை இல்லனா இதெல்லாம் பன்னத்தான் தோனும்!

சங்கர், பெயிண்டர்.
அவரு பிட்னசை நமக்கு எதுக்கு ‘ஷோ’ காட்டுறார். ஒரு தலைவரு செய்யிற வேலையா இது. நாட்ல எவ்வளோ பிரச்சன. அத சரி பண்ண அவருக்கு நேரம் இல்ல. விவசாயிய பாக்க நேரம் இல்ல. எக்ஸைஸ் பண்றாராம். எல்லாம் நம்ம தலையெழுத்து!

பாண்டியன், கொத்தனார்.
நாட்டப்பத்தி மக்களைப் பத்தி அவருக்கு கவலை இருந்தா இதெல்லாம் பன்னி வீடியோவா எடுத்து விடுவாரா. சின்ன கொழந்தைய கூட நாம போட்டா எடுத்தா அது கூச்சப்படுது. அந்த கூச்சம் கூட அவருக்கு இல்லையே. சரியான சில்லறை.

முனுசாமி, தையற்கலைஞர்.
காலையில எழுந்தா சோத்துக்கு என்ன பன்றதுன்னு தான் தேடி ஓடனும். அவர மாதிரி எக்சைஸ் பன்னா குடும்பத்துக்கு சோரு யாரு போடுறது? மோடிதான் சோத்துக்கு வழி இல்லாம பன்னிட்டாரே!

சண்முகம், கொத்தனார்.
ஒரு பிரதமருக்கு இதெல்லாம் தேவையா? தண்ணி பிரச்சனை, ஸ்டெர்லைட்ல பதிமூணு பேர் செத்த பிரச்சனை. இதுக்கு எதுவும் சொல்லாதவரு யோகாவை பத்தி சொல்லுறாராமா? மக்களை பத்தி என்னதான் நெனைக்கிறாரு. எல்லாம் விதி!

செல்லமுத்து, கொத்தனார்.
அடுப்பு எரியிற கேசை எட்டு நூறு ரூபாயா ஏத்தி விட்டு அதுல ஐநூறு ரூபா பேங்குல போடுரேன்னு சொன்னாரு. எந்த பேங்குல போட்டாருன்னு முதலில் சொல்ல சொல்லுங்க. அப்புறம் எக்சைஸு பண்ணட்டும்!

கல்யாணசுந்தரம், பெயிண்டர்.
நான் பெயிண்ட் தொழிலு செஞ்சிகிட்டு இருக்கேன். நாலு அடுக்கு மாடி. அதுல கயிறு போட்டு தொங்கி வேர்வை சிந்தி தான் வேலை பாக்குறேன். அப்புறம் சென்ட்ரிங் வேலை, இரும்பு தூக்குறோம், எல்லா வேலையும் செய்யுறோம். வீட்டுக்கு வரும்போது எல்லா குப்பையும் உடம்புல வாரி போட்டுனு வரோம். அசதியில தூங்கிட்டு காலையில எழுந்திருக்கும் போதே உடம்பு வலியா இருக்கும். அதையெல்லாம் பாக்காம இன்னிக்கு எங்க வேலை கெடக்கும், கூலி எவ்ளோ கிடைக்கும்னு தேடி அலையனும். அப்புறம் எக்ஸைஸ் பண்றதுக்கு எங்க நேரம் இருக்கு. பெயிண்ட் அடிக்கும்போது தவறி விழுந்து ஹாஸ்பத்திரிக்கு போயிட்டு படுக்கிறதுதான் எங்களுக்கு ரெஸ்ட். அப்ப மேஸ்திரி வந்து பார்த்துட்டு கையில ஒரு நூறு ரூபா கொடுப்பாரு. பத்தாத கொறைக்கு கடன் வாங்குவோம். அப்புறம் அந்த கடனை அடைக்க வேலைக்கு ஓடுவோம். ஒடம்பு சரியில்லாத மனைவி, பள்ளிக்கூடம் போற புள்ளைங்க எல்லாத்தையும் நான் ஒரு ஆளு தான் பாக்கணும். மாசம் சம்பளம் வாங்கிக்கினு ஏ.சி. கார்ல போறவன், பிரதமர், அவரோட சேர்ந்த ஆன்மிகவாதிகள் அல்லாரும் எக்சைஸ் பண்ணலாம். ஒரு உழைப்பாளிக்கு உழைக்கிறது தான் எக்ஸைஸ்.

சுப்பிரமணி, கட்டிடத் தொழிலாளி.
நான் சென்ட்ரிங் வேலைதான் செய்யுறேன். நாலாவது மாடி, அஞ்சாவது மாடில ஒன்பது அங்குல பலகையில் நிப்போம். தவறி உழுந்தா உயிரே போயிடும். நா….என்ன எக்ஸைஸ் பண்ணி, வாழுறது!……..சொல்லும்பொதே அவருக்கு கண்கள் கலங்கியது.

மதன்குமார், டி.வி.எஸ் தொழிலாளி.
எக்சைஸ் அவருடைய தனிப்பட்ட பிரச்சனை. அதேசமயம் அவரோட வேலை நாட்டு மக்கள் எல்லோரும் ஆரோக்கியமா இருக்காங்களா? அதை எப்படி கொடுக்கிறதுன்னு பாக்கிறது. அதை செய்ய சொல்லுங்க. இந்த மருத்துவமனைக்கு (இ.எஸ்.ஐ. மருத்துவமனை) காலையில வந்தேன். எட்டு மணிக்கு வேலைக்கு போகனும். வந்தா டாக்டர் இல்லன்னு சொல்றாங்க. இதுல எங்க ஆரோக்கியமா இருக்கிறது. தோ…காத்திட்டு இருக்கேன். இன்னிக்கு வேலையும் கட்டு, சம்பளமும் கட்டு!

சுரேந்தர், பிரேம்.
நாயி கடிச்சிடுச்சின்னு இங்க (இ.எஸ்.ஐ. மருத்துவமனை) வந்திருக்கோம். ஒரு சிலிப் இல்லன்னு எங்களுக்கு ஊசி இல்லனு சொல்லிட்டாங்க. அதுக்கு இவ்ளோ நேரம் நின்னு திரும்ப சிலிப்பு வாங்கி இப்பதான் ஊசி போட்டாங்க. நம்ப பொழப்பு இப்படி இருக்கிது. இவரு ஆரோக்கியத்தை பத்தி பேசுறாரு. இப்ப ரேசனையும் கட் பன்னிட்டாங்க. முதல்ல ரேசனை போட சொல்லுங்க. அப்புறம் எக்சைஸ் பன்னலாம்.

தெய்வானை, சித்தாள் தொழிலாளி.
அவரு எக்சைஸ் பன்றததான் டி.வி.யில காட்டுனாங்களே. நாங்க தினம் பில்டிங்க்ல ஏறுறோம், இறங்குறோம். கொத்தனாரு எங்கள பெண்டு நிமுத்துராங்க.. அதுக்கு மேல ஏன் எக்சைஸு? இப்ப தோள்பட்டை இறங்கி போச்சி. அதுக்காக மூணு மாசமா ஹாஸ்பித்திரிக்கு அலையுறேன். அப்பவும் உடம்பு சரியாகல. இருந்தாலும் பதினோரு மணிக்கு தான் படுக்குறோம். தினமும் எழுந்தா சமையல் செய்யனும், வீட்டு வேலை செய்யனும் அதுக்கும் மேல வேலைக்கு ஒடனும். திரும்ப வந்து சோத்த ஆக்கனும். படுக்க நிம்மதியா ஒரு இடம் இல்ல. குடிக்க நல்ல தண்ணி இல்ல. அதுக்கெல்லாம் அவரு வழி சொன்னா நல்லாயிருக்கும்!

செல்வி.
எனக்கு சுகரு ஓவரா இருக்கு, மூச்சு இழுப்பு நிக்கலை. வீட்டு வேலை செய்தாத்தான் சோறு. உடம்பு முடியாத கவலையே கூடி போச்சி. வேலை செய்யலன்னா நம்ம மனுசாளுங்களே மூஞ்ச தூக்கி மோட்டு மேல வச்சிக்கிராங்க. இதுல நீங்க வேற. பிரதமரு எக்சைசுன்னு ஏதோ சொல்றிங்க.

ஐய்யனார், பூசாரி, (புகைப்படம் தவிர்த்தார்).
மோடி ஒரு கேடி. எங்க ஆரோக்கியம் மூணு வேளை சோத்துலதான் இருக்கு. அதுக்கே வழி பன்ன முடியல. உடம்பு முடியலன்னு ஹாஸ்பித்திரிக்கு வந்தா டாக்டர் மருந்து சீட்டு எழுதி தராரு. அதுக்கு எக்ஸ்ட்ரா நூறு ரூபா சம்பாதிக்கனும். அதுக்கும் நாந்தான் ஒடனும். இவரு (பிரதமரு) மரத்த சுத்தி ஒடுறதும், படுக்கிறதும் பெரிசா? இனிமே எவனுக்கும் ஓட்டு போடக்கூடாதுன்னு முடிவு பன்னிட்டேன்.

அமர்னாத், சினிமா ஆர்ட் அசிஸ்டண்ட்.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் திரைப்பட படப்பிடிப்புக்காக பணிபுரிந்து கொண்டிருந்தார். தமிழ்நாட்டுக்காரங்களை ஒரு நாயாகூட மதிக்கிறது இல்ல. ஜல்லிக்கட்டுல இருந்து ஸ்டெர்லைட் போராட்டம் வரைக்கும் இப்படிதான் நம்மோட எதிர்ப்ப பார்க்குறாங்க. மோடிக்கு நன்றி காமிக்கிறதுக்குன்னு ஒரு கூட்டம் இருக்கு. அதுங்க வாங்கினதுக்கு கத்திக்கினு இருக்கும்.

ரங்கா, சண்டை நடிகர்.
மோடி பத்தியா கேக்குறிங்க. அந்தாளைப்பற்றி பேசாதிங்க. மோடி ஒரு ஜாதி வெறி புடிச்சவன். என்னுடைய மதம்தான் பெரிசுன்னு பேசுரவரு. ஒரு பதவியில இருந்தா எல்லா மக்களையும் மனிதனா தான் பாக்கனும். அந்தாளு மதமாவும், ஜாதியாவும் பாக்குறார். இதுல எங்கிருந்து நாடு செழிப்பாகும். எக்சைஸ் பன்னி அவரு செழிப்பானா போதுமா?

கார்த்திக், பொறியியல் பட்டதாரி.
சென்னை தி.நகர் ரெய்சிங் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்பவர். பல ஆண்டுகளாக இங்கு உடற்பயிற்சிக்கு வருகிறேன். நானும் மோடி பன்ற பிட்னஸ் வீடியோவ பார்த்தேன். அவுரு ஏதனா பன்னிக்கட்டும். பிரதமரா இருக்கிறவரு முதல்ல நாட்டு மக்கள் பிட்னஸ்ல கவனம் செலுத்தனும். இது ரெண்டுமே இங்க கோளாறா இருக்குது. அத கவனிக்காம, இப்படி வீடியோவல ஷோ காட்டனா போதுமா? இப்ப நடந்த ஸ்டெர்லைட் விவகாரத்துல 13 பேரு செத்தாங்க, உண்மையில அதுக்கும் மேல செத்து இருக்காங்க. அதப்பத்தி பிரதமரு ஏதாவது வாய திறந்தாரா?

தீவிரவாதி பூந்துட்டானு இங்க இருக்கிற ஆட்சியாளரும் போலீசும் சொல்றாங்க, அப்ப எத்தினி போலிசுக்காரங்களங்கள அவங்க கொன்னு இருக்கிறாங்க, இல்ல வெட்டியிருக்கிறாங்க? இல்ல ஜனங்கமேல குண்டு போட்டு இருக்கிறாங்க? இது எல்லாம் செஞ்சது போலிசுதான்னு எல்லாருக்கும் தெரியும். இது மோடிக்கு தெரியாதா? இதுல கருத்து சொல்லாம இருந்தா எப்படி? அதுக்கு நேரம் இல்ல இதுக்கு நேரம் இருக்குதா? கூகுள் மேப்புல கேட்டா அதுவே சொல்லுது காட்டுது. தூத்துக்குடி மண்ணு எந்த அளவுக்கு நஞ்சாயிருக்குதுனு! ஆனா பிரதமரு வாய்மூடி இருக்கிறாரு!

அவ்வளவு ஏன் இந்த ரஜினிய எடுத்துக்குங்க, 100 நாள் போராட்டம் முடிஞ்சி, துப்பாக்கி சூடு முடிஞ்சி 144 தடையுத்தரவு எல்லாம் எடுத்தப்பிறகு ஸ்சேஃபா நம்ம மேல ஒரு கல்லுக்கூட விழாதுனு தெரிஞ்ச பிறகு அங்க கைய ஆட்டிக்கினு வராரு. ஓப்பன் காருல 3 கிலோ மீட்டர் கைய ஆட்டகினு எழவு வீட்டுக்கு மாஸ் காட்ட வாராங்க. எங்க நடக்கும் இது? ஜெயலலிதா சாவுக்கு, ஶ்ரீ தேவி சாவுக்கு பாலசந்தர் சாவுக்கு இப்படி போனாரா? எல்லாம் நம்மள அவ்வளோ சீப்பா நினைக்கிறாங்க!

  • வினவு புகைப்படச் செய்தியாளர்.

2 மறுமொழிகள்

  1. இங்கே பேட்டி காெடுத்துள்ளவர்கள் அனைவரும் வயிற்றுப்பாட்டுக்கு உழைப்பதே இயற்கையான உடற்பயிற்சி என்பதை ஆணித்தரமா கூறியிருக்கிறார்கள் … இதை வைத்துப் பார்க்கும் பாேது … உண்டு காெழுத்து புளி ஏப்ப கேஸுகளுக்குதான் அவர் பிட்னெஸ் செய்துக் காட்டறார் பாேல தெரிகிறது … !

Leave a Reply to Nathan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க