ஹெல்சிங்கி நகரின் ஊடி நூலக வடிவமைப்பின் புறத்தோற்றம்.

ரு நூலக அட்டை தான் எனக்கு எப்போதுமே சொந்தமாக இருந்தது என்கிறார் நசீமா ராஸ்மியர் (Nasima Razmyar). முன்னாள் ஆப்கன் தூதரின் மகளான நசீமா, தனது குடும்பத்துடன் 1992-ம் ஆண்டு ஒரு அகதியாக பின்லாந்துக்கு வந்து சேர்ந்தார். மொழியும் பேச முடியாமல் மிகக்குறைவான வசதிகளோடு அந்த அறிமுகமில்லாத புதிய நகரத்தைப் புரிந்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும் போதுதான் நூல்களை கடனாக பெறுவதற்கான நூலக அட்டையை பெற தனக்கு தகுதி இருப்பது கண்டு அவர் வியப்படைந்தார். அந்த வசதியை இன்றும் அவர் பாராட்டத் தவறுவதில்லை. “நான் என்னுடைய தோல்ப்பையில் இன்னும் அந்த நூலக அட்டையை வைத்திருகிறேன்” என்று பெருமையாக குறிப்பிடுகிறார்

இன்று, ஹெல்சிங்கி(Helsinki) நகரின் துணை நகரத் தலைவராக இருக்கும்  நசீமா ராஸ்மியர், டிசம்பரில் திறக்கவிருக்கும் நகரின் புதிய நூலகமான ஊடியை (Oodi) கட்டத் தொடங்கியதன் மூலம் தனக்கு ஏராளமாக தந்துதவிய நூலகங்களுக்கு கைம்மாறு செய்யத் தயாராகவே இருக்கிறார். நூலகங்கள் மீதான பேரார்வம் அவரோடு மட்டும் நிற்கவில்லை. “பின்லாந்து ஒரு நூல் வாசிப்பாளர்களின் நாடு” என்று சமீபத்தில் இங்கிலாந்துக்கான பின்லாந்து தூதர் பைவி லொஸ்டாரினென் (Päivi Luostarinen) அறிவித்தார். மேலும் அவர் தனது கருத்தில் உறுதியாக இருக்கிறார். உலகின் அதிக கல்வியறிவு மிக்க நாடு பின்லாந்து என்றும் உலகிலேயே பொது நூலகங்களை அதிகம் விரும்புபவர்கள் பின்லாந்து மக்கள் என்றும் 2016-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் 55 இலட்சம் மக்கள் ஏறக்குறைய 6.8 கோடி நூல்களைக் கடன் வாங்குகிறார்கள்.

பின்லாந்து கட்டிடக் கலை வல்லுனர் ஆல்வர் ஆல்டோ (Alvar Aalto) 1927-ம் ஆண்டு வடிவமைத்த வீபுரி (Viipuri) நூலகம். இந்த நூலகம் தற்போது இரசியாவின் வைபோர்கில்(Vyborg) அமைந்துள்ளது.

உலகெங்கும் நூலகங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டு, பயனாளிகள் குறைந்து, நூலகங்கள் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த போக்கிற்கு எதிராக பின்லாந்து உற்சாகமாக செயல்படுகிறது. அதிகாரப்பூர்வ உள்நாட்டுத் தகவலின் படி 2016-ம் ஆண்டில் இங்கிலாந்து ஒவ்வொரு நூலக பயனாளிக்கும்  இந்திய மதிப்பில் தலா ரூ. 1,298 செலவிட்டிருந்தது. மாறாக பின்லாந்தோ ரூ. 4,552 செலவிட்டிருந்தது. இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தின் நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் 478 நூலகங்களுக்கும் அதிகமாக மூடப்பட்ட நிலையில் மகத்தான ஒரு நூலகத்திற்காக 793  கோடி ரூபாயை பின்லாந்தின் ஹெல்சிங்கி நகரம் செலவிட்டு வருகிறது. வெறுமனே நூலகத்தைக் கட்டுவதில் அல்ல, மாறாக பொதுமக்கள் பேரார்வத்துடன் அங்கு செல்வதில் தான் அதன் பொருள் அடங்கியுள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வெனிஸ் நகரில் நடக்கும் கட்டிடக்கலை கண்காட்சியில்  ”மனதின் கட்டிடம்” என்ற பெயரில் பின்லாந்தின் நூலக கட்டுமான வளர்ச்சி குறித்த கட்டுமான மாதிரிகளோடு ஃபின்லாந்து அங்கு பங்கேற்றது, அந்நாடு கல்வியறிவின் மீது கொண்டிருக்கும் காதலை வெளிப்படுத்துகிறது .

பின்லாந்து நூலகங்களின் அதீதமான பயன்பாடு பற்றி தெரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல: பின்லாந்தின் 84 விழுக்காடு மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள். கடுமையான பருவநிலைகள் காரணமாக பின்லாந்தின் நூலகங்கள் வெறுமனே மக்கள் நூல்களை படிப்பது, கடன் வாங்குவது என்பதோடு நில்லாமல் ஒருவருடன் ஒருவர் பழகுவதற்கான இன்றியமையாத களமாகவும் விளங்குகின்றன. உண்மையில் இந்த புதிய ’ஊடி’ நூலகத்தை ’உள் நகர சதுக்கம்’ என்றே அதன் வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஆந்தி நவ்ஸியோக்கி (Antti Nousjoki) அழைக்கிறார். ஒன்றுபோலவே கெட்டித்தட்டிய மௌனமான இடங்களாக அறியப்படும் நூலகங்களுக்கு மாறாக வெறுமனே பயனாளியாகவோ அல்லது பார்வையாளராகவோ அல்லாமல் பொதுமக்களும் பார்வையாளர்களும் அவர்கள் விருப்பபடி செயல்படுவதற்கேற்ப ’ஊடி’ கட்டமைக்கப்படுகிறது என்று ஆந்தி நவ்ஸியோக்கி விளக்குகிறார்.

’ஊடி’ என்ற பின்னிஷ் சொல்லின் ஆங்கில வார்த்தையான ’ஒடெ’ (Ode) என்பதன் பொருள், ஒரு எழுச்சியூட்டக்கூடிய பாடல் ஆகும். ’ஊடி’யை மக்கள் பெருமை கொள்ளத்தக்க ஓர் நினைவு சின்னத்தை விடவும் மேலானதாகப் பார்க்கின்றனர். பின்லாந்து விடுதலையடைந்த நூற்றாண்டு கொண்டாட்டத்திற்காக தொடங்கப்பட்டிருக்கும் ’ஊடி’ வெறுமனே நூல் களஞ்சியம் மட்டுமல்ல. “இதை விட சிறந்த பரிசை பின்லாந்து அதன் மக்களுக்கு வழங்க முடியாது என்று நான் எண்ணுகிறேன். இது பின்லாந்து நாட்டின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அடிப்படையான விசயங்களாக இருக்கும் கற்றலுக்கும் கல்விக்கும் சின்னமாக விளங்குகிறது” என்கிறார் நசீமா ராஸ்மியர்.

ஹெல்சிங்கியில் உள்ள வள்ளிலா நூலகம்

கல்வி, சமத்துவம் மற்றும் நல்ல குடியுரிமை ஆகியவற்றின் மீதான பின்லாந்து குடிமக்களின் வெளித்தோற்றமாக நூலகங்கள் விளங்குகின்றன. “அனைவருக்குமான கல்வி குறித்த வலிமையான நம்பிக்கை இங்கே இருக்கிறது” என்கிறார், ’ஆர்ச் இன்போ பின்லாந்தின்’ (Archinfo Finland) இயக்குனரும் மனக் கட்டிடத்தின் (Mind-building) ஆணையருமான ஹன்னா ஹாரிஸ். மேலும் “செயலூக்கமுள்ள குடியுரிமை என்ற கருத்தாக்கத்தில் அதாவது அனைவருக்கும் உரிமை என்ற கருத்திற்கு இங்கே மதிப்புண்டு. நூலகங்கள் அதற்கு வலிமையான உருவம் கொடுக்கின்றன” என்று அவர் கூறுகிறார்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பை நல்கும் நகரின் புதிய நூலகத்தைப் பற்றிய பெருமை மிக்க உணர்வுகளை ’ஊடி’யை கட்டுவதற்கு தேர்ந்தெடுத்த இடமும் எதிரொலிக்கிறது. அதாவது பின்லாந்து பாராளுமன்றத்திற்கு நேரெதிராக இது அமைந்திருக்கிறது. “என்னைப் பொறுத்த வரையில் ஜனநாயகத்தின் அடித்தளங்களின் முன்னே நிற்பதற்கு நூலகத்தை போன்று தகுதி படைத்தது வேறு எதுவும் கிடையாது” என்கிறார் நசீமா ராஸ்மியர். “நூலகத்தின் திறந்த பால்கனியில் மக்கள் நின்று பாராளுமன்றத்தை அதே மட்டத்தில் அவர்கள் நேராக பார்ப்பது என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார்.

ஆனால் ஹெல்சிங்கில் உற்சாகமூட்டும் நூலகங்களில் ’ஊடி’ மட்டுமே இல்லை. “டூலொ (Töölö) நூலகம் எனக்கு பிடித்தவற்றில் ஒன்று” என்கிறார் ஹாரிஸ். இது ஒரு பூங்காவில் அமைக்கப்பட்டிருக்கிறது. கூரை மீதமைந்த பால்கனியும் அங்கு உண்டு. சமீபத்தில் நானும் உடன் வேலை செய்பவர்களும் வார நாளில் அங்கு சென்றிந்த போது நூலகத்திற்குள் நுழைய காலை 9 மணிக்கே ஒரு கூட்டம் கதவிற்கு வெளியே காத்திருந்தது” என்று ஹாரிஸ் கூறுகிறார்.

நூல்களையும் தாண்டிய பல்வேறு விசயங்களை வழங்குகின்றன என்ற எதார்த்தம் கூட நூலகங்கள் மீதான பின்லாந்து மக்களின் இந்த ஈர்ப்பிற்கு காரணமாக இருக்கலாம். உலகில் பல்வேறு நூலகங்கள் இணைய வசதியை செய்து கொடுத்தாலும் அதையும் தாண்டி மின்நூல்கள், விளையாட்டுச் சாதனங்கள், மின்சார கருவிகள் மற்றும் அவ்வப்போது பயன்படும் இன்னபிற பொருட்களையும் கொடுக்குமளவிற்கு நூலகத்தின் வசதியை பின்லாந்து விரித்திருக்கிறது. வாண்டாவில் (Vantaa) இருக்கும் ஒரு நூலகம் கரோக்கியை (karaoke) கூட வழங்குகிறது.

”மௌனுலா ஹவுஸ்” – நூலகம், பல்பொருள் அங்காடி, வயது வந்தோருக்கான கல்வி மையம் மற்றும் இளைஞர்களுக்கான சேவைகள் பகுதி என்று உள்ளூர் மக்களின் விருப்பத்தின் பேரில் அமைந்துள்ளது.

தூசி நிறைந்த வெறும் கல்விக்கோவில்களாக இந்த இடங்கள் வடிவமைக்கப் படவில்லை. மாறாக தீவிரமாக அவற்றை பயன்படுத்த முயற்சிக்கும் நகர்புற மக்களுக்காகவே துடிப்புடன் சிந்தித்து வடிவமைக்கப்பட்ட இடங்கள் அவை. வடக்கு ஹெல்சிங்கியின் புறநகர் பகுதியான மௌனுலாவில் (Maunula) இருக்கும் நூலகத்தின் வாயில் நேரடியாக பல்பொருள் அங்காடிக்கு செல்கிறது. மேலும் வயது வந்தோருக்கான கல்வி மையம் மற்றும் இளைஞர்களுக்கான சேவைகள் பகுதி என உள்ளூர் மக்களின் தேவைகள் குறித்த கருத்துக்களை உள்ளடக்கியே இந்த நூலகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

’ஊடி’, இன்னும் மேம்பட்ட முறையில் பயணிக்க இருக்கிறது. நூலகம் அதன் மையமான விசயமாக இருந்தாலும் சிற்றுண்டி சாலை, உணவு விடுதி, பொது பால்கனி, திரைப்பட விடுதி, கேட்பொலி காட்சிப் பதிவு அறைகள் மற்றும் முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் என அனைத்தையும் ’ஊடி’ உள்ளடக்கியிருக்கிறது. வெப்பக் குளியல் அறை ஒன்றிற்கும் திட்டமிடப்பட்டு, அதனை செயல்படுத்துவதற்கான கடைசி முடிவு மட்டும் எடுக்கப்படாமல் இருக்கிறது.

இந்த பன்முகத்தன்மைதான் இன்றியமையாதது என்று வாதிடுகிறார் நசீமா ராஸ்மியர். “நூலகங்கள் புதிய தலைமுறைகளுக்கு சேர வேண்டும். உலகம் மாறிக் கொண்டிருக்கிறது – எனவே நூலகங்களும் மாறிக்கொண்டிருக்கின்றன. சந்தித்துக் கொள்வதற்கும், வேலை செய்வதற்கும், இணைய அறிவை வளர்த்துக் கொள்ளவும் மக்களுக்கு இது போன்ற இடங்கள் தேவை” என்று அவர் கூறுகிறார்.

மேலும், முக்கியமான நகர கட்டிடங்களை போலவே நூலகங்களும் மக்கள் சொந்தம் கொண்டாடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. “தங்களுக்குத் தேவையான பகுதிகளை கண்டறிந்து மக்கள் அதைப் பயன்படுத்தவும் பின்னர் அதை அவர்கள் மாற்றத் தொடங்கவும் நாங்கள் விரும்புகிறோம்” என்கிறார் நவ்ஸியோக்கி. அனைவரையும் ஈர்ப்பது போல ஊடியை உருவாக்குவதே எங்களது இலக்கு. இதனால் அனைவரும் அதைப் பயன்படுத்துவார்கள் மேலும் அதை பராமரிப்பதிலும் பங்கு வகிப்பார்கள்” என்று அவர் கூறினார்.

ஹெல்சிங்கியின் புதிய நூலகத்திற்கான இடமும் வடிவமைப்பும் உண்மையில் மனதைத் தொடுகிறது. ஆனால் இது போன்ற செலவு பிடிக்கும் திட்டத்தை மக்கள் எதிர்க்காமல் இருப்பதுதான் அதை விட சிறப்பானதாகும். “ஊடிக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது சர்ச்சைக்குரிய ஒன்றல்ல. இதற்காக மக்கள் அனைவரும் உற்சாகமுடன் காத்திருக்கின்றனர்” என்கிறார் ”ஆர்ச் இன்போவின்” இயக்குனர் ஹாரிஸ். மேலும், “ஹெல்சிங்கியின் அன்றாட வாழ்க்கையில் இது இன்றியமையாததாய் இருக்கும்” என்று கூறுகிறார்.

(பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு புராண புளுகுகளே இந்தியாவின் அறிவுத் துறையாக முடைநாட்டம் எடுக்கிறது. தமிழகத்திலோ ’அம்மா’ ஆட்சிக்கு வந்த பிறகு நூலக ஆணையே ரத்து செய்யப்பட்டது. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் புறக்கணிக்கப்பட்டது. நூலகத் துறைக்கான நிதி ஒதுக்கீடே குறைக்கப்பட்டது.)

– வினவு செய்திப் பிரிவு

நன்றி: தி கார்டியன்,
The borrowers: why Finland’s cities are havens for library lovers

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க