தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவேந்தல் கூட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு 28/06/2018 அன்று கோவை மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் அண்ணாமலை அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தை மக்கள் அதிகாரம் கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமை ஏற்றி நடத்தினார். இதில், தோழர் கு.இராமகிருஷ்ணன் (பொது செயலர், த.பெ.தி.க.), தோழர் N.K.நடராஜன் (மாநிலக்குழு உறுப்பினர், CPI ML லிபேரசன்), தோழர் சுசி கலையரசன் (அமைப்பு செயலர், வி.சி.க., கோவை),தோழர் .பாலமுருகன் (PUCL), தோழர் துரைசாமி (CPI ML ரெட் ஸ்டார்), தோழர் சி. முருகேசன் (தமிழகம் காப்போம்), தோழர் மாணிக்கம் (தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை), தோழர் மு.கார்க்கி (சமத்துவ கழகம்), தோழர் ஜோதி குமார் (மாநிலகுழு உறுப்பினர் அ.இ.வ.சங்கம்), தோழர் சபாபதி (மாநில துணை பொதுச்செயலர் தமிழ்புலிகள் கட்சி), தோழர் பன்னீர்செல்வம் (சமூக நீதிக் கட்சி) ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

கூட்டத்தில் உரையாற்றிய அனைவரும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். குறிப்பாக அரசின் பாசிச அடக்குமுறையை ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டிய அவசியத்தை பதிவு செய்தார்கள். மேலும் கோவையில் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் தனியார் நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதால் ஏற்பட்டுள்ள அபாயத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்றனர்.

மேலும், மிசா காலகட்டங்களில் போராடும் கட்சிகள், இயக்கங்கள் எப்படி தங்களது சிவில் வீரத்தை காட்டினார்களோ அது போல இன்று இந்த அரசின் அடக்குமுறையை எதிர்த்து நாமும் நமது சிவில் வீரத்தை காட்ட வேண்டும். மேலும் மிசா காலகட்டங்களில் போராடுபவர்கள் வெளியில் இருந்தால் நாட்டிற்கு ஆபத்து என்று எங்களை சிறையில் அடைத்தார்கள். ஆனால் இன்று மக்கள் போராடுகிறார்கள். போராடும் மக்களை சமூக விரோதிகள் என்கிறார்கள் தூத்துக்குடிக்காக, சேலம் 8 வழிச்சாலைக்காக, மீத்தேன் திட்டங்களுக்காக. நாம் பேசுவது போல கோவையில் தனியார் நிறுவனத்தின் மூலமாக குடிநீர் விநியோகத்தால் ஏற்படவிருக்கும் பரிதாப நிலை குறித்து உலகமே பேசும் சூழல் வரலாம்.

எனவே நாம் அடங்க மறுக்க வேண்டும், அத்துமீற வேண்டும். கைதுக்கும்  சிறைக்கும் தோட்டாக்களுக்கும் அஞ்சாமல் உயிர்நீத்த தியாகிகள் வழியில் போராடுவோம் என்று சூளுரைத்தனர்.

மக்கள் அதிகாரம், கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா தொகுப்புரை வழங்கினார். கோவை மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை வழங்கினார்.

தகவல்:
மக்கள் அதிகாரம், கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க