ஆவணப்படத்திற்காக திவ்யபாரதியை மிரட்டும் போலீசு !

ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதியின் வீட்டிற்கு சென்று மிரட்டியதோடு, நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி தகராறு செய்துள்ளது போலீசு .

வணப்பட இயக்குனர் திவ்யபாரதி சமீபத்தில் ஒக்கிப்புயல் குறித்த ‘ஒருத்தரும் வரலே’ என்ற ஆவணப்படம் எடுத்தார். அதன் முன்னோட்டத்தை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். இதனையடுத்து கடந்த 03-07-2018 அன்று அதிகாலை 5 மணிக்கே திவ்யபாரதியின் வீட்டை சுமார் 15 போலீசு சுற்றிவளைத்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து திவ்யபாரதி எங்கே என அவரது கணவரை மிரட்டியுள்ளது. மேலும் ஆவணப்படத்தின் முழு படமும் எங்கே இருக்கிறது எனக் கேட்டு மிரட்டிவிட்டு சென்றிருக்கிறது.

திவ்யபாரதி மிரட்டும் போலீசு

அதே நாளில் மதியம் நீதிமன்ற வளாகத்திலேயே க்யூ பிரிவு போலீசு எனக் கூறிக் கொண்டு இரண்டு மூன்றுபேர், தனியாக விசாரிக்க வேண்டும் வா என அழைத்து அவரது வண்டிச்சாவியை பிடுங்கிக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எடப்பாடியின் ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கிறது போலீசு. மக்களின் பாதிப்புகள் குறித்து யார் பேசினாலும் பாய்ந்து மிரட்டுகிறது போலீசு. திவ்யபாரதியை மிரட்டிய போலீசை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். இவ்விவகாரம் குறித்து “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்” மாநிலக் குழு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின் வருமாறு..

*****

ழக்கறிஞரும் ஆவணப்பட இயக்குநரும் தமுஎகச மதுரை மாவட்டக்குழு உறுப்பினருமான தோழர் திவ்யபாரதியின் வீட்டை இன்று (03-07-2018) அதிகாலையில் போலீசார் சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ள அராஜகச் செயலை தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மதுரை மாவட்ட தமுஎகச-வில் மாவட்டக்குழு உறுப்பினராக இருப்பவர் திவ்யபாரதி. ஏற்கனவேகக்கூஸ்என்கிற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார், வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறார். இவர் தற்போது ஒக்கி புயல் பாதிப்புகள் குறித்துஒருத்தரும் வரலேஎன்கிற ஆவணப்படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில் அதன் முன்னோட்டக்காட்சி (டீஸர்) வெளியாகி பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (02.07.18) சேலம் க்யூ பிராஞ்ச் போலீசார் என்று சொல்லிக்கொண்ட சிலர் திவ்யபாரதியின் தந்தையிடம் சென்று இந்தப் படம் பற்றிய தகவல்களை கேட்டு மிரட்டியுள்ளனர். தனக்கு தெரியாது என அவர் தெரிவித்துவிட்ட நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதலே பெண் காவலர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்ட போலீசார் திவ்யபாரதியின் வீட்டை சுற்றிவளைத்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவரதுஒருத்தரும் வரலேபடத்தின் வீடியோ எங்கிருக்கிறது என வீடு முழுவதும் தேடியுள்ளனர். வீட்டில் இருந்த அவரது கணவர் கோபாலை திவ்யா எங்கே எனக் கேட்டு மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்தும் திவ்யபாரதியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த போலிசார், இன்று பிற்பகல் அவர் நீதிமன்றம் சென்றிருந்தபோது அங்கும் வந்து திவ்யபாரதியின் வண்டிச்சாவியை வலுக்கட்டாயமாக பிடுங்கிக்கொண்டு எங்களுடன் வா விசாரிக்கணும் என மிரட்டியுள்ளனர். அவருக்கு ஆதரவாக வந்த வழக்கறிஞர்களுடனும் போலீசார் வாக்குவாதம் செய்துள்ளனர்.

காவல்துறையினரின் இத்தகைய போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் படியாக இயங்கும் ஒருவரது கலைச்செயல்பாட்டு உரிமையில் இதுபோல அராஜகமான முறையில் போலீசார் தலையிடுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது. உரிய காரணங்கள் சொல்லாமலும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் வீட்டை சோதனையிடுவதும் விசாரணைக்கு ஒருவரை அழைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய சட்ட வழிகாட்டுதல்கள் எதையும் பின்பற்றாமல் விசாரணைக்கு அழைப்பதும், நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி நடப்பதும் சட்டமீறலாகும்.

கருத்துச்சுதந்திரத்தை கைக்கொள்ள விடாமல், அச்சுறுத்தி முடக்கும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம். கருத்துரிமை மீதும் கலைச்செயல்பாட்டின்மீதும் நம்பிக்கை கொண்டோர் அனைவரும் காவல்துறையின் இந்த அராஜகச்செயலை கண்டிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்