08.12.2024

பொட்டலூரணி கிராம மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகைக்கு கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தை சுற்றியுள்ள கழிவு மீன் ஆலைக்கு எதிரான போராட்டத்தையும் போராடும் ஊர் மக்களையும் கொச்சைப்படுத்தி பொய் செய்திகளை பரப்பிய குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையை நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்கு உட்பட்ட பொட்டலூரணி கிராம மக்கள் தங்களுடைய கிராமத்தைச் சுற்றி அமைந்துள்ள கழிவு மீன் நிறுவனங்களை நிரந்தரமாக அகற்றக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலைக்கூட புறக்கணித்து போராடியிருக்கிறார்கள். அடுத்தக் கட்டமாக எந்த வகையில் போராட்டத்தை எடுத்துச் செல்வது  உட்பட அனைத்து விவகாரங்களும் அந்த ஊர் மக்கள் கூடி போராட்டக் குழு ஒன்று அமைத்து முடிவெடுக்கின்றனர். சாதி, மதம் கடந்து ஊர் மக்கள் அனைவரும் ஒற்றைக் கருத்துடன் திரண்டு கழிவு மீன் ஆலைக்கு எதிராக போராடி வருகின்றனர்.

மீன் எண்ணெய் தயாரிப்பில் ஒரு தொழிற்சாலை பின்பற்ற வேண்டிய குறைந்தபட்ச விதிமுறைகளை கூட (ஆலை பெயர் பட்டியல்) கடைபிடிக்காத கழிவு மீன் ஆலைகள், ஊர் மக்கள் நடத்திவரும் தொடர் போராட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. இந்த கழிவு மீன் ஆலைக்கு ஆதரவாக அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் ஒருசேர நின்று போராட்டத்தை கடுமையாக ஒடுக்குகின்றனர்.

இந்நிலையில், உண்மையை வெளிஉலகிற்கு கொண்டுவர வேண்டிய பத்திரிகைகள் கழிவு மீன் ஆலைக்கு ஆதரவாக எழுதுவது பொட்டலூரணி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகும்.

இவ்வாறு கொச்சைப்படுத்தும் வேலையைத்தான் குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் செய்துள்ளது. “மீண்டும் போராட்டக் களமாகிறதா தூத்துக்குடி? மீன் எண்ணெய் ஆலைக்கு எதிராக போர் மேகங்கள்!” என்று தலைப்பிட்டு இம்மாத குமுதம்  இதழில் வெளிவந்துள்ள கட்டுரை பொட்டலூரணி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, கழிவு மின் ஆலைக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இது அம்மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆலைக்கு ஆதரவான நபர்களிடம் கருத்துக்கேட்டு “இந்த அலைகளால் எந்த பாதிப்பும் இல்லை. கழிவு மீன் ஆலைகள் போராட்டத்தை சில வன்முறையாளர்கள் தூண்டுகிறார்கள்” என போராடும் மக்களை இழிவுப்படுத்தி ஆலைக்கு ஆதரவான மனநிலையை ஏற்படுத்தும் விதமாக எழுதியுள்ளது. ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது கொலைகார வேதாந்தா எவ்வாறு அவதூறுகளை பரப்பி கொச்சைப்படுத்தியதோ, அதேபோன்று பொட்டலூரணி கிராம மக்கள் மீதும் பொய் அவதூறுகளை பரப்பும் ஆலை நிர்வாகத்திற்கு ஊதுகுழலாக குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் செயல்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் போராளிகளையும் இழிவுப்படுத்தியுள்ளது.

அதேசமயம், இந்த கட்டுரையில் ஆலைக்கு எதிராக போராடும் மக்களின் உண்மையான பிரச்சினைகளை பற்றியும், போராடும் முன்னணியாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் பற்றியும், தொடர்ச்சியாக அவர்களை அச்சுறுத்தும் மாவட்ட நிர்வாகம் பற்றியும் எந்த செய்தியும் இடம் பெறவில்லை. இந்த ஊர் மக்களின் நியாயமான போராட்டத்திற்கு எந்த ஆர்ப்பாட்ட அனுமதியும் அரசு வழங்காததை கண்டித்து ஒரு வரி கூட இல்லை.

உழைக்கும் மக்கள் தங்களுடைய உரிமைக்காக போராடினால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வக்கற்ற அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் போராடும் மக்களையும் அமைப்புகளையும் அவதூறு செய்வது என்பது ஸ்டெர்லைட் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இதற்கு ஆதரவாகவே ஊடகங்களும் செயல்படுகின்றன.

தமிழ்நாடு அரசே
பொட்டலூரணி ஊர் மக்களின் கோரிக்கைக்கு செவி மடு.!

காவல்துறையே
போராடும் மக்கள் மீது பொய் வழக்கு புனையாதே.!

மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்திய குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையை வன்மையாக கண்டிக்கிறோம்!


தகவல்
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்,
9385353605.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க