.டி துறை என்றாலே 50 ஆயிரம், ஒரு லட்சம் சம்பளம், வெளிநாட்டு பயணம், மேட்டுக்குடி வாழ்க்கை என்றுதான் பொதுவாக நினைக்கிறோம். ஆனால், இந்திய ஐ.டி துறையில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பி.பி.ஓ/கால் சென்டர் எனப்படும் ஐ.டி சேவைத் துறையில் பணிபுரிகிறார்கள் என்பது தெரியுமா? அவர்களது வேலை நிலையும் வாழ்நிலையும் என்னவென்று தெரியுமா?

கால் சென்டர், மெடிக்கல் கோடிங், கஸ்டமர் சப்போர்ட் என்று ஆலைத் தொழிலாளரை போல கசக்கிப் பிழியப்பட்டு அற்ப கூலி கொடுக்கப்படும் படித்த இளைஞர்களின் கதை தெரியுமா?

கால் சென்டர் வேலையில் வெளிநாட்டு கால் சென்டர், உள்நாட்டு கால் சென்டர், அதிலும் தமிழ் கால் சென்டர், ஆங்கில கால்சென்டர் என்று பலவகை உண்டு. சர்வதேச பி.பி.ஓ வேலை செய்ய வேண்டுமெனில், அதற்கு ஆங்கில புலமை தேவை, டிகிரி வாங்கி இருக்க வேண்டும். ஆங்கில புலமை இல்லாதவர்களுக்கு உள்நாட்டு பி.பி.ஓ தான் கிடைக்கும்.

இந்த Domestic BPO வேலை செய்பவர்களுக்கு சம்பளம் குறைவு. அதிலும் முதல் மூன்று மாதம் பாதி சம்பளம்தான் கொடுப்பார்கள். மூன்று மாதம் பிறகு தான் முழு சம்பளமும் பழைய பாக்கியும் கிடைக்கும். முதல் மாதம் பயிற்சி, முதல் மாத இறுதிக்குள் அந்தப் பயிற்சியில் தேர்ச்சி பெற வேண்டும் இல்லை எனில் அனுப்பி விடுவார்கள்.

வேலை செய்யும் பெரும்பான்மையருக்கு, வரும் கால்களுக்கு தீர்வு முழுமையாக கொடுக்க முடியாது என்று தெரியும். ஏனெனில், பேசுவதற்கான வழிகாட்டல் படிவத்தில் இருக்கும் தீர்வுகள் பிரச்சனையை சரி செய்யும் விதமாக இருக்காது. கொஞ்சம் விபரம் தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு அந்தத் தீர்வு அபத்தமாக இருக்கும்.

ஃபோன் ஆப் செய்து ஆன் செய்யவும், manual Setting செய்யவும், பிறகு புதிய Sim வாங்கச் சொல்லுவது என்று அழைத்த வாடிக்கையாளரை சுற்றி விட வேண்டும். அதாவது, இவற்றில் 40% முதல் 60% வழிமுறைகள் வேலை செய்யாது. நிறுவனத்தின் Signal மற்றும் Tower பிரச்சனையை மறைக்க இதனை செய்ய சொல்லுவார்கள்.

மேற்கூறிய தீர்வுகளை சொன்னால், விபரம் தெரியாத மக்கள் ஏற்று கொள்ளுவார்கள், அனுபவம் உடையவர்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். எந்தத் தீர்வு பற்றி பேச வாய் எடுத்தாலும் அதனை செய்து முடித்தாகிவிட்டது என்று குறிப்பிடுவார்கள்; புகார் எடுக்கச் சொல்லுவார்கள், ஆனால் Team Lead தவிர்க்க இயலாத பட்சத்தில் மட்டும் புகார் எடு, பேசி மழுப்பி விடு என்று குறிப்பிடுவார்கள்.

அதிகம் புகார் எடுக்க ஆரம்பித்தால் மேலாளர் அழைத்து புகார் அதிகம், எடுக்காதே என்று ‘அன்பாக’ கூறுவார். முதல் மாதம் மட்டும் இப்படி, பிறகு கடுமையான வார்தைகளில் திட்டுவார்கள். வரும் கால்கள் 90% தீர்வு கிடைக்காத மாதிரிதான் வரும், அதனை 2½ நிமிடத்தில் முடிக்க வேண்டும். இல்லை எனில் திட்டு வாங்க வேண்டி இருக்கும். இவ்வாறு ஒரு நிமிடம் கூட வீணாகி விடாதபடி ஊழியர்களை இறுக்கிப் பிடிக்கிறார்கள்.

பெரும்பாலும் வாடிக்கையாளர் 2½ நிமிடத்தில் முடிக்க மாட்டார், அது எப்படி, இது எப்படி என்று குறைந்தது 4 நிமிடம் எடுக்கும். கால்கள் காலை 8 முதல் 11 மணியும் மாலை 5 முதல் இரவு 11 வரை அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் அதிகம் அழுத்தம் கொடுப்பார்கள். “அழைப்பை சீக்கிரம் முடி, அழைப்புகள் வந்து கொண்டு இருக்கின்றது”, என்று கத்துவார்கள். பெண்கள் என்றால் வாடிக்கையாளர் வசவு அதிகமாக இருக்கும், சில பெண்கள் அழுது விடுவார்கள்.

ஏனெனில் நிறுவனம் அதிக அழைப்புகளை எடுத்து பேசி முடிக்க வேண்டும். ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த முறையில் வேலையை நான்கு, ஐந்து நிறுவனங்களுக்கு பிரித்து கொடுப்பார்கள். குறிப்பிட்ட நிறுவனத்தின் லாபமே எத்தனை கால்கள் இந்த கால் சென்டருக்கு வந்தது என்பதை பொறுத்து தான் இருக்கின்றது.

கணினியில் தரவுகளை உள்ளிடும் ஒரு வேலையை எடுத்துக் கொள்வோம். ஒரு மெடிக்கல் கோடிங் (மருத்துவ தரவுகளை தொகுத்தல்) நிறுவனத்தில், ஒவ்வொரு ஊழியரும் அமெரிக்க மருத்துவமனைகளிலிருந்து வரும் 150 நோயாளி தரவுகளை இனம் பிரித்து தொகுக்க வேண்டும். ஆனால், தினமும் காலையில் முடிக்க வேண்டிய 150 தரவுகளை ஒதுக்கிக் கொடுக்க மாட்டார்கள். மொத்தமாக, சென்னை அலுவலகத்தில் 100 பேர், பிலிப்பைன்ஸ் அலுவலகத்தில் 100 பேர் என்று எல்லோருக்கும் சேர்த்து திறந்து விடுவார்கள். மொத்தமாக ஆயிரக்கணக்கில் திறந்து விட்டதும், அதிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து தொகுக்க வேண்டும். ஒவ்வொரு ஊழியரும் சக ஊழியருடன் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்ய வேண்டும். ரொட்டித் துண்டுகளை வீசி எறிந்ததும் ஓடும் நாய்கள் கூட்டம் போல ஓட வேண்டியிருக்கும், சில நேரம் இணைய சண்டை கூட போட வேண்டியிருக்கும். இது தோற்றுவிக்கும் பதட்டமும், மன அழுத்தமும் ஒவ்வொரு நாளையும் நரகமாக மாற்றி விடும்.

ஒரு நாளில் போதுமான தரவுகள் வாடிக்கையாளரிடமிருந்து வரா விட்டால் பாதியில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். அதற்கு பதிலாக, சனி/ஞாயிறு விடுமுறை நாளில் வந்து வேலை செய்ய வேண்டும். இதை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்டால் வேலையை விட்டு அனுப்பி விடுவார்கள்.

இவ்வாறு ஏர்டெல், வோடஃபோன் என்று உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும், அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கும் குறைந்த கூலியில் உழைத்துக் கொட்டுவதற்காக அந்நிறுவனங்களின் காண்டிராக்டுகளை எடுக்கும் தரகு நிறுவனங்கள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிகின்றன.

ஐ.டி துறையிலேயே பி.பி.ஓ ஊழியர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். ஒரே நிறுவனம் மென்பொருள் பராமரிப்பு பிரிவையும், பி.பி.ஓ-வையும் நடத்தினால், பி.பி.ஓ அலுவலகத்தில் கழிப்பறை வசதி, உணவக வசதி கூட கேவலமாக பராமரிக்கப்படும். ஐ.டி அலுவலகத்தில் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை டாய்லெட் சுத்தம் செய்யப்பட்டால் அதே நிறுவனத்தின் பி.பி.ஓ அலுவலகத்தில் 12 மணி நேரத்துக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறது. பி.பி.ஓ-வில் வேலை செய்யும் நூற்றுக் கணக்கான ஊழியர்கள், மின்னஞ்சல் பார்க்க, லீவ் அப்ளை செய்ய பயன்படுத்துவதற்கு 4 லேப்டாப் மட்டும் வைத்திருப்பார்கள். அதற்கு வரிசையில் நின்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடக்கத்தில் மாதச் சம்பளம் ரூ 4,000 அதிலும் பாதியை பிடித்து வைத்துக் கொள்வது என்று சுரண்டுவார்கள். மாதச் சம்பளம் ரூ 7,000 ஆரம்பித்து அதிக பட்சமாக ரூ 30,000 வரை போகிறது. சம்பளத்தை 1-ம் தேதி கொடுக்காமல் 15-ம் தேதி கொடுப்பது, வெள்ளி விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறையும் விடுமுறை கணக்கில் சேர்ப்பது என்று பல கொடுமைகள் உள்ளன.

உண்மையில், இந்தத் துறையில் லே ஆஃப் என்பது இல்லை. குறைந்த சம்பளம், அதிக பணிச் சுமை என்று பல ஊழியர்கள் ஓரிரு ஆண்டுகளில் உடலும், மூளையும் தளர்ந்து போய் வேலையை விட்டு வெளியேறி விடுகிறார்கள். முதலாளிகள் புதிதாக வேலைச் சந்தைக்கு வரும் லட்சக்கணக்கான இளைஞர்களை வைத்து தமது உழைப்புச் சுரண்டலை தொடர்கிறார்கள்.

இவ்வாறு சைபர் கூலிகள் என்று அழைக்கப்படும் ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களில் அதற்கேற்ற ஊதியமும் இல்லாமல் கடுமையாக சுரண்டப்படுபவர்கள் இந்த பி.பி.ஓ/கால் சென்டர் துறை ஊழியர்கள். ஐ.டி ஊழியர்களிலேயே தனி வகைப்பட்ட ‘கீழ்ச்சாதி’யாக வைக்கப்பட்டிருக்கின்ற இந்த ஊழியர்களது அவலங்கள் வெளியில் வருவதில்லை. முதலாளிகளைப் பொறுத்தவரை வெள்ளை சட்டை போட்டாலும், நீல சட்டை போட்டாலும் அவர்களுக்கு வேண்டியது தொழிலாளர்களின் ரத்தம், அதை உறிஞ்சி பெருகிக் கொண்டே போவதுதான் முதலாளித்துவத்தின் சாராம்சம். தொழிலாளி வர்க்கம் அப்படி பிரித்துப் பார்க்க முடியுமா? நாம் எந்த சட்ட போட்டாலும், சிவப்புச் சட்டைக்காரர்கள்தானே, தோழர்களே?

– ஹரிகரன்
புதிய தொழிலாளி, ஜூன் 2018
நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க