உத்திரப் பிரதேசம் நொய்டா – செக்டர் 81 பகுதியில் சாம்சங்கின் எலக்ட்ரானிக்ஸ் ஆலை 35 ஏக்கர் விரிவாக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை என்று சாம்சங் நிர்வாகிகள் புன்னகையுடன் கூறுகின்றனர். சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளை பின்தள்ளி விட்ட இந்த உலகின் முதல் இடம் பெருமையா, ஆபத்தா?
இந்தியப் பிரதமர் மோடியும், தென்கொரியாவின் அதிபர் மூன்-ஜாவும் இணைந்து 09.07.2018 திங்கட்கிழமை அன்று இந்த ஆலையை திறக்கிறார்கள். இதே இடத்தில்தான் சாம்சங்கின் தொலைக்காட்சி உற்பத்தி பிரிவு 1997-ம் ஆண்டு துவங்கப்பட்டது. செல்பேசி பிரிவு 2005-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. தற்போது அதை மிகப்பெரும் ஆலையாக விரிவு படுத்தியிருக்கிறார்கள்.

சென்ற 2017 ஜூனில் தென்கொரியாவின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான சாம்சங், தனது நொய்டா ஆலை விரிவாக்கத்திற்கு 4,915 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. தற்போது விரிவாக்கப்பணி முடிவடைந்து உற்பத்தியும் இருமடங்காக அதிகரிக்கும் நிலையில் இருக்கிறது. இந்த இரு மடங்கு அதிகரிப்பு செல்பேசிக்கு மட்டுமல்ல, இதர எலக்ட்ரானிக்ஸ் பொருள்களான குளிர்பதனப் பெட்டிகள், நவீன தொலைக்காட்சிகள் போன்றவைகளுக்கும் பொருந்தும்.
சந்தையில் எந்த நுகர்வுப் பொருளுக்கு அதிக கிராக்கி இருக்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் இந்த ஆலை ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவின் அதிக ஃபிரிட்ஜ், டி.வி, வாஷிங்மெஷின் போன்ற ‘சாதனைப் பெயர்களை’ சாம்சங் நினைத்தால் உடன் சூடிக் கொள்ள முடியும்.
இந்த அதிக உற்பத்தியால் இனி சந்தைக்கு அருகாமையிலேயே சாம்சங் பொருட்கள் உடன் கிடைக்குமெனவும், உள்ளூர் வசதிகள், தேவைகளுக்கேற்ப ஆராய்ச்சி பிரிவு சில வசதிகளை இப்பொருட்களில் செய்திருப்பதாகவும், சார்க் நாடுகள் மற்றும் இதர சந்தைகளுக்கும் இப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுமென இந்நிறுவனத்தின் நிர்வாகி தருண் பதக் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் நொய்டாவில் மட்டுமல்ல தமிழகத்தின் திருப்பெரும்புதூரிலும் ஆலைகள் சாம்சங்கிற்கு இருக்கின்றன. மேலும் ஒரு வடிமைப்பு பிரிவும், ஐந்து ஆராய்ச்சி மையங்களும் இருக்கின்றன. மொத்தம் 70,000 பேர் வேலை,பார்ப்பதாகவும், 1.5 இலட்சம் சில்லறை விற்பனைக்கு அனுப்பும் வகையில் வலைப்பின்னலை விரிவுபடுத்தப்படுவதையும் சாம்சங் பெருமையாகக் கூறுகிறது.
இந்திய சந்தையின் செல்பேசி பிரிவில் 10% பங்கை வைத்திருக்கும் சாம்சங் மூன்று ஆண்டுகளில் அதை 50%மாக உயர்த்தப் போகிறதாம். உலக அளவில் உள்ள ஐந்து முன்னணி சந்தைகளில் இந்தியாதான் முதன்மையானதென தீர்மானித்திருக்கும் சாம்சங் இந்த சந்தை அபகரிப்பிற்கு நியாயம் பேசுகிறது. செல்பேசி விற்பனையில் அமெரிக்க சந்தை தேங்கிப் போன நிலையில், கொரியா மற்றும் பிரேசிலின் சந்தை குறிப்பிடத்தக்க அளவில் வளராத நிலையில் இந்தியாதான் (இளித்தவாயத்தனமாக) நன்கு வளர்கிறது என்று கூறுகிறது சாம்சங்.
மற்றநாடுகளை விட குறைந்த விலை 2ஜி போன்களுக்கும் இந்தியாவில் பெரிய வாய்ப்பிருப்பதாக கூறுகிறது சாம்சங். சாம்சங்கின் இந்தியப் பிரிவு 2016-17-ம் ஆண்டில் செல்பேசி விற்பனையைப் பொறுத்த அளவில் 27% ஏற்றம் கண்டிருக்கிறதாம். அதன்படி 34,300 கோடி ரூபாயாக இருந்த விற்பனை இந்த ஆண்டில் 50,000 கோடியாக உயர்ந்திருக்கிறது.
இந்திய மக்கள் தொகை 130 கோடி என்றால் அதில் 42 கோடிப் பேர் மட்டும் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருப்பதாக கூறும் சாம்சங் மீதிபேரையும் ஸ்மார்ட் ஃபோன் சந்தைக்குள் கொண்டு வந்து தனது செல்பேசிகளை விற்றுவிடத் துடிக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்தியர்களில் சுமார் 70 சதவீதம் பேரிடம் இன்னும் சாதா ஃபோன்தான் இருக்கிறது. ஸ்மார்ட் ஃபோன் அவர்களுக்குத் தேவைப்படவில்லை. தேவையில்லாதவர்களிடம் தேவையை உருவாக்குவது, அதிலும் ஏழைகளிடம் உருவாக்கித்தான் சாம்சங் தனது நிறுவனத்தை இலாபகரமாக நடத்த வேண்டும் என்றால் அது எத்தனை பெரிய கொள்ளை?
ஸ்மார்ட் ஃபோன் வைத்திருக்கும் இந்தியரகள் கூட அதை குறைந்த விலையில்தான் வாங்குவதால் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் இங்கே கணிசமாக விற்க முடியவல்லையாம். ஆகவேதான் சாம்சங் போன்ற நிறுவனங்கள் குறைந்த விலை ஸ்மார்ட் ஃபோன்களை தயாரித்து நம் மக்கள் தலையில் கட்ட துடிக்கின்றன.
தென்கொரியாவிலேயே இந்த பாகாசுர சாம்சங் நிறுவனத்தை எதிர்த்து நிறைய போராட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கெல்லாம் தொழிலாளர்களை தொடர்ந்து ஒடுக்க முடியாத இந்த பன்னாட்டு நிறுவனம் இந்தியா போன்ற நாடுகளை குறிவைத்து உற்பத்தியை நகர்த்தியும் விரிவு படுத்தியும் வருகிறது.
அதே நேரம் இந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைப் பொருத்தவரை முதன்மையான பாகங்களை தென்கொரியாவில் உற்பத்தி செய்து விட்டு இங்கே ஒட்டுக் கோர்ப்பதையே பிரதானமாக வைத்திருக்கிறார்கள். அதைத் தாண்டிவரி ஏய்ப்பும், பெறும் சலுகைகளும் ஏராளம்.
இங்கே சாம்சங்கின் நிரந்தப் பணியாளர்கள் எத்தனை பேர், ஒப்பந்தப் பணியாளர்கள் எத்தனை பேர் என்ற கணக்கு தெரிந்தால் சாம்சங் இங்கே அளித்திருக்கும் வேலை வாய்ப்பின் இலட்சணம் புரியும். திருப்பெரும்புதூரில் நோக்கியா ஆலைக்கு அவர்களும் அரசாங்கங்களும் கொடுத்த பில்டப் என்ன?
தற்போது அந்த ஆலையை மூடிவிட்டு சில ஆயிரம் பேர் எந்த இழப்பீடுமின்றி தூக்கி எறியப்பட்ட கதை சமீபத்தில்தான் நடந்திருக்கிறது. தென்கொரியாவின் மற்றொரு நிறுவனமாக ஹுண்டாய் இங்கே கார் ஆலை ஆரம்பித்து அதை ஏற்றுமதி செய்கிறோம் என்று சொல்லி பெரும்பான்மையை இந்திய சந்தையிலேயே விற்கிறது. இந்த ஆலையிலும் தொழிற்சங்கத்திற்கு இன்றுவரை உரிமையோ அனுமதியோ இல்லை.
தென்கொரியாவை கட்டுப்படுத்தும் நான்கைந்து முதலாளிக் குடும்பங்களில் ஒன்றான சாம்சங், கொடூரமான ஒடுக்குமுறைக்கும் பெயர் பெற்றது. அதனால்தான் மே தினத்தில் தென்கொரிய தொழிலாளி வர்க்கம் நாட்டையே கிடுகிடுக்க வைக்கும் பேரணிகளை நடத்துகிறது.
இந்தியாவில் செல்பேசி சேவையை அத்திவாசியமாக்கிய பிறகு செல்பேசி சந்தையை கைப்பற்றும் கடும் போட்டி நடந்து வருகிறது. சாம்சங் கூறுவது போல சந்தையில் 50% கைப்பற்றப்பட்டால் மற்ற நிறுவனங்கள் – ஆலைகளில் வேலையிழக்கப்போவதும் யார் என்ற கேள்வி வருகிறது.
வாட்சப் வதந்திகள் அதிகரிப்பதும், உலகின் மிகப்பெரிய செல்பேசி ஆலை இங்கு வருவதும் வேறு வேறு அல்ல.
வாட்சப் வதந்திகளை வைத்து ஆட்சியைப் பிடித்த பாஜக, சாம்சங் ஆலையை மோடியைவைத்து துவக்குவதும் கூட வேறு வேறு இல்லை அல்லவா?
– வினவு செய்திப் பிரிவு
இந்தியா முதலாளிகள் (இந்திய கார்ப்பரேட்டுகள் அல்ல) எவனும் செல்போன் உற்பத்தி செய்ய முடியாதா? முடியும் ஆனால் இந்த பாசிச பயங்கரவாத அடிமைகள் அவ்வாறு செய்ய முடியாது.
உலகின் மிக பெரிய செல்பேசி தொழிச்சாலை இங்குதான் சாத்தியம் ஏனெனில் உலகின் மிக பெரிய ஏகாதிபத்திய அடிமைகள் இந்த பா.ஜா.கா,RSS கும்பல்.
innum factoryai thodangavae illai, adhukulla unions ellam naakka thonga pottaachu…
aamai pugundha aarum, union pugundha factoryum…govinda govinda
innum factoryai thodangavae illai, adhukulla unions ellam naakka thonga pottaachu…
aamai pugundha aarum, union pugundha factoryum…govinda govinda