புதிய தலைமுறை கார்த்திகேயன் மீது இந்துத்துவ ட்ரோல்கள் தாக்குதல் :
தமிழக ஊடகவியலாளர்கள் ஏன் பயப்படுகிறார்கள் ?

புதிய தலைமுறை தொலைக்காட்சி இந்துத்துவ ‘கருத்தாளர்களை’ உருவாக்கியதில் ஒரு முன்னோடி ஊடகம். அவர்கள் அடியைப் பின்பற்றி, அயனாவரம் சிறுமி 17 பேரால் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை அலசுவதற்குக்கூட அர்ஜுன் சம்பத் என்கிற சங்கி மங்கியை அழைக்கும் (நியூஸ் 7) அளவுக்கு ஊடகங்கள் முனைப்பாக இருக்கின்றன. நியூஸ் 18 குணசேகரன் நெறியாள்கை செய்யும் கோயில் – கடவுள் தொடர்பான விவாதங்கள் அர்ஜுன் சம்பத் இல்லாமல் இல்லை.

நெறியாளர் கார்த்திகேயன்.

அனைவரின் கருத்தையும் மேடை ஏற்ற வேண்டும் என நடுநிலை நாயகர் வேடம் காட்ட விரும்பும் இவர்கள், பார்ப்பனியத்திற்கு எதிரான கருத்துக்களை தீவிரமாக பேசுவோரை பொதுவில் அழைப்பதில்லை அல்லது தயங்குவார்கள். தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி போல, தங்கள் முதலாளிகள் – நிர்வாகங்களுக்கு பயந்தே பணியாற்ற வேண்டியிருக்கும் இவர்களுடைய சூழல் மட்டுமே அனைத்துக்கும் காரணமாகிவிட முடியுமா?

புதிய தலைமுறை கடந்த இரண்டு நாட்களாக சங்கிகளின் ட்ரோலுக்கு ஆளாகியிருக்கிறது. அந்தத் தொலைக்காட்சியில் காலை நேரத்தில் ஒளிபரப்பாகும் ‘புதுப்புது அர்த்தங்கள்” நிகழ்ச்சியின் நெறியாளர் கார்த்திகேயன், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு வழிபடும் உரிமை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்து குறித்த விவாதத்தில் ஒரு கவிதையை மேற்கோள் காட்டுகிறார். கவிதை இதுதான்…

ஒரு கவிதை பகிர்தலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவலநிலை.

அந்த நாட்கள்

அந்த மூன்று நாட்களில்
கோயிலுக்குள் செல்வது
தீட்டாகவே இருக்கட்டும்…

எந்த மூன்று நாட்களில்
பெண் தெய்வங்கள்
கோயிலுக்குள் இருக்காதெனக்
கொஞ்சம் சொல்லுங்களேன்?

க.பொன்ராஜ் எழுதி ஆனந்த விகடன் இதழில் வெளியான கவிதை இது. நெறியாளர் கார்த்திகேயன் இந்த கவிதையில் யாருடைய மனது புண்படுவதற்கோ, ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராகவோ இருக்காதென்கிற வகையில் ஆராய்ந்தே மேற்கோள் காட்டியிருப்பார் என நம்பலாம். ஊடகங்களில் பணியாற்றும் சிலர் அரசுகளை விமர்சித்து தங்களுடைய  சமூக வலைத்தள பக்கங்களில் எழுதுகிறார்கள். பலர் எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை. கார்த்திகேயனின் முகநூல் பக்கத்தில் அப்படியான எதிர்வினைகளை பொதுவில் காண இயலாது. எனவே, அவர் தன்னுடைய தரப்பிலிருந்து பல முறை சிந்தித்தே இந்த கவிதையை பகிர்ந்திருப்பார். ஆனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ.க. நாராயணன் இந்து மதத்தின் ஒட்டுமொத்த குத்தகைதாரர் தாங்களே என்பதாக உடனடியாக இப்படி எழுதுகிறார்..

பா.ஜ.க. நாராயணன்.

“இஸ்லாம் குறித்தோ, கிறித்தவம் குறித்தோ இப்படி பேசிவிட்டு ரோட்டில் நடந்து போக முடியாது, வெட்டி போட்டு விடுவார்கள்” என சொல்லி ‘ஹிந்துமதத்தை அவமானப்படுத்தியதாக’ ஆவேசப்பட்டு காத்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்களை உசுப்பேற்றி விடுகிறார்.

இந்துத்துவ ட்ரோல்கள் (கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் தமிழிசை ஒரு பேட்டியில் சமூக ஊடகங்களில் எழுதுவதற்கென்று நான்காயிரம் பேரை நியமித்துள்ளதாக பகிரங்கமாக பேட்டியளித்தார்) நெறியாளரின் குடும்பத்தினரை இணைத்து மிக  ‘மோசமான’ வசைகளை அவருடைய பக்கத்தில் எழுதினர். பலருக்கு நிகழ்ச்சியின் நெறியாளர் கார்த்திகேயனா,  நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வனா என்பதுகூட தெரியவில்லை. பகுத்தறிவில்லா மூடர்கூடம், இந்து மத பெண் கடவுளர்களை அவமதித்ததாக நினைத்து,  ஒரு ’இந்து’ நெறியாளரின் குடும்பத்து பெண்களை கேவலமாக எழுதியது.

பொதுவில் இங்குள்ள அரசியல் சூழலைப் பார்த்தால் தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு குழப்பம் இருப்பதாகத் தோன்றும். நாம் யார்? முற்போக்காளரா? பெரியாரிஸ்டா, பகுத்தறிவாளரா? இடதுசாரியா? வலதுசாரியா? லிபரலா? தமிழ்தேசியவாதியா? என்கிற குழப்பம். மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இத்தகைய அரசியல் விவாதங்கள் – உரையாடல்கள் அதிகரித்திருக்கின்றன. மோடி-அமித்ஷா வகையறாக்கள் திரும்பிப் போ எனும் ஹேஷ்டேக் டிரண்டிங் ஆனபோது மற்ற மாநிலங்களில் இருக்கும் பலர் தமிழச்சமூகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு மனநிலை குறித்து மகிழ்வுடன் பகிர்ந்திருக்கின்றனர்.

அதனால்தான் தமிழகத்தை பொதுவாக பகுத்தறிவு பூமி – பெரியார் பூமி என வெளிமாநிலத்தவரே அவ்வப்போது சொல்கிறார்கள். எனினும் இது பெரியார் பூமியா, பார்ப்பனியத்திற்கு பணிந்த மண்ணா என்று நாள்தோறும் கருத்துப் போர் நடந்துதான் வருகிறது. அதுபோல, ஊடகத்தில் இயங்குகிறவர்களுக்கும் இந்த அடையாளச் சிக்கல் உள்ளது. வெளியே முற்போக்கான அடையாளத்துடனும் உள்ளே வலதுசாரித்தனத்துடன் மோதிக்கொண்டு வெளிவர முடியாமல் இருப்பார்கள். போதாமைதான் காரணம்.  இவர்கள் முன் இருப்பது இரண்டு தேர்வுகள்தான். ஒன்று அடிப்படைவாதத்துக்கு ஜால்ரா அடிப்பது. இன்னொன்று அடக்குமுறையை கேள்வி கேட்பது. பெரும்பாலும் மூன்றாவதாக நடுநிலைமை என்ற ஒன்று இருப்பதாக கற்பனை செய்து கொண்டு அடிப்படைவாதத்தின் பக்கம் பெரும்பாலும் ஒதுங்கிவிடுகிறார்கள் பலர். இந்த நடுநிலை குழப்ப மனநிலையில் நெறியாளர் கார்த்திகேயன் யார் மனதும் புண்பட முடியாத ஒரு கவிதை பகிர்தலுக்காக மன்னிப்பு கேட்கிறார் – அதற்கு அப்படி ஒரு அவசியல் இல்லையென்றாலும்.

சங்கிகளுக்கு அதுவும் போதவில்லை. ‘ஹிந்து’ அமைப்புகள் வழக்கு தொடுத்திருக்கிறார்களாம். அதனால் ”கண்ணியம் காத்து, நெறியாளரின் குடும்பத்தை இழுக்க வேண்டாம் ” என ட்ரோல்களுக்கு அடுத்த கட்ட சிக்னல் தருகிறார் நாராயணன்.

‘சிறுநீர்’ பாசன புகழ் எச்.ராஜாவுக்கு இதுவெல்லாம் போதவில்லையாம். விஷயம் கிடைத்துவிட்டதென துள்ளி எழுந்து தாமரையை மலர வைத்துவிடலாம் என ட்விட்டரில் கருத்து போடுகிறார். மன்னிப்பு கேட்டது போதாதாம்; இந்து உணர்வாளர்கள் இன்னும் வேகமாக எதிர்வினையாற்ற வேண்டும் என ட்ரோல்களுக்கு தூபம் போடுகிறார். தொலைக்காட்சியை புறக்கணிக்கக் கோரும், திட்டமிட்டு ட்ரோல்கள் மூலம் வன்முறையைத் தூண்டும் இந்த கும்பல் தலைவனுக்கு எதிராக புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம் வழக்கு தொடருமா? இல்லை எச்.ராஜா கட்டப்பஞ்சாயத்து செய்வது போல கார்த்திகேயனை நீக்குமா?

சமூக நீதியின் காவலர்களாக தங்களை கருதிக்கொள்ளும் ஊடகவியலாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், சக ஊடகவியலாளர்கள் தாக்கப்படும்போது கள்ள மவுனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய எஸ்.வி.சேகரின் வீட்டின் கேட் மீது கல்லெறிந்த ‘குற்றத்தை’ காட்டிக் கொடுத்த சில பத்திரிகையாளர்கள், எஸ்.வி. சேகரிடம் வெட்கமே இல்லாமல் ‘மன்னிப்பு’ கேட்டதோடு சக பத்திரிகையாளர் சமூக வலைத்தளங்களில் தாக்குதலை சந்திக்கும்போது தங்களுடைய திருவாயை ஜிப்லாக் செய்துகொண்டிருக்கிறார்கள்.

முடிந்தவரை தன்னை நடுநிலைவாதியாக காட்டிக் கொள்ளும் கார்த்திகேயன் போன்ற ஊடகவியலாளர்கள் நடுநிலை என்கிற ஒன்றில்லை என்பதை உணர வேண்டும். பலவீனமானவர்களே முதலில் அடிபடுவார்கள். பலவீனம் என்பது உடல்ரீதியானது அல்ல, கொள்கை ரீதியான பலவீனம். இந்துமதத்தின் பெயரில் தூக்கிப் பிடிக்கப்படும் இந்த அடிப்படைவாதத்திற்காக ஏன் பயம் கொள்ள வேண்டும்?

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பதவி ஏற்றது முதல், இடதுசாரி பத்திரிகையாளர்களும் லிபரல் பத்திரிகையாளர்களும் கடுமையான ட்ரோல்களை சமூக வலைத்தளங்களில் சந்தித்து வருகிறார்கள். அன்றாடம் செய்தி அறை பணிகளினூடாக தங்களை ட்ரால் செய்யும் இந்துத்துவ வெறியர்களோடும் மல்லுக்கட்டி வருகிறார்கள்.  இடதுசாரிகளும் முற்போக்குகளும் லிபரல்களும் அடக்குமுறைக்கு எதிரான அணியில் திரள்கிறார்கள்.  ராஜ்தீப், பர்கா தத், சகரிக கோஷ், ராவிஷ் குமார், நிதி ரஸ்தான், ரானா அயூப் போன்ற பத்திரிகையாளர்கள்  ட்ரோல்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களை ‘பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன்’ என பகிரங்கமாக எச்சரிக்கிறார்கள் (இந்த ட்ரோல்களை இந்திய நாட்டின் பிரதமர் பின் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது) சுட்டுக்கொல்வேன் என்கிறார்கள்.

கடந்த மே மாதம் கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த செய்திகளை களத்திலிருந்து தந்து கொண்டிருந்தார் இந்தியா டுடே தொலைக்காட்சியில் பணியாற்றும் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய். பெங்களூருவில் உள்ள ரிச்மண்ட் சர்க்கிள் உணவகத்தில் ஒரு காலைப் பொழுதில் உணவருந்திக் கொண்டிருந்த ராஜ்தீப்பை ஒரு கும்பல் சூழ்ந்து கொள்கிறது. கும்பல் என்றவுடன் அழுக்குத் துணி அணிந்து, காவி தலைப்பாகை கட்டி, கைகளில் கம்புகளுடன் சுற்றித் திரியும் வேலையில்லா அடியாள் கூட்டம் என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். இது  ‘டீசண்டாக’ உடையணிந்த, ஆங்கிலத்தில் பேசக்கூடிய, ஐடி துறைகளில் வேலைப்பார்க்கும் ‘கும்பல்’! தனியாக உணவருந்திக்கொண்டிருந்த சர்தேசாயை சூழ்ந்துகொண்ட அந்த கும்பலில் ஒருவர் இப்படிச் சொல்கிறார்..

“நீ இந்தியாவில் பிறந்தவன்; இந்துக்களை வெறுக்காதே!”
உடன் இருப்பவர்கள், பின்னணியில்
“மோதி..மோதி..மோதி…” என்கிறார்கள்…

ராஜ்தீப் எதிர்வினையாக,
“உங்களுக்கு நாகரிகமே தெரியாதா?” என்கிறார்.
“உங்களுக்கு மட்டும் நாகரிகம் தெரியுமா, செய்தி என்ற பெயரில் கண்டதையும் சொல்கிறீர்கள்” என்கிறார் அந்த நபர்.

இது வீடியோவாக ட்விட்டரில் வெளியாகி செய்தியாகிறது. சக பத்திரிகையாளர்கள் ராஜ்தீப்புக்கு ஆதரவாக நிற்கிறார்கள். சமீபத்தில் நடந்த சம்பவம் என்பதால் இதைக் குறிப்பிடுகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த நான்காண்டுகளாக நடந்தேறியபடியே உள்ளன.

கௌரி லங்கேஷ் போன்ற தீவிர எதிர்வினையாற்றிய பத்திரிகையாளர்கள், தங்களுடைய லிபரல் பார்வையிலிருந்து அடிப்படைவாதத்துக்கு எதிரான கருத்துக்களை உறுதியோடு வெளிப்படுத்துகிறார்கள். இந்த உறுதி, முற்போக்கு மாநிலமாக பெயர் எடுத்த தமிழக ஊடகவியலாளர்களிடம் ஏன் இல்லை? அரசின் தகவல்களை அப்படியே கிளிப்பிள்ளை போல சொல்வதற்கு எதற்கு ஊடகங்கள்?  ஊடகவியலாளராக அப்படி பணியாற்றுவதில் என்ன பெருமை இருக்கப்போகிறது?

ஊடக அறத்தோடு, விழுமியத்தோடு பணியாற்ற வேண்டும் அல்லது காவி கும்பல்களுக்கும் இந்த கும்பல் தலைவன்களுக்கும் பயந்து பணியாற்ற வேண்டுமா? இந்திய அளவில் ஊடகங்களில் அடிப்படைவாதத்தை முன்னெடுக்கும் காவிமயப்படுதல் வேகமாக நடந்துவரும் நிலையில், தமிழக ஊடகவியலாளர்கள் மக்களின் பக்கம் நிற்பார்களா? காவி பயங்கரவாதிகளை தைரியமாக அம்பலப்படுத்துவார்களா?

  • கலைமதி

செய்தி ஆதாரங்கள்:

3 மறுமொழிகள்

  1. ஊடகங்களில் பணிசெய்பவர்களில் பாதிக்குமேற்ப்பட்டவர்கள் பிழைப்புவாதிகள்தான்.சிலர் தைரியமாக பார்ப்பனீய கும்பலை எதிர்கொள்கின்றனர், அவர்களுக்கு முற்போக்கு இயக்கங்கள் அல்லது அந்த சித்தாந்த பின்புலம் இருக்கும் இது தார்மீகதைரியத்தை தரும்.குறைந்தபட்ச்சம் அறம் சார்ந்த உணர்வாவது இருந்தால் தைரியம் வரும்.ஊடகமும் பிழைப்பிற்க்கான வழியாகும்போது என்ன செய்ய முடியும்? முக்கியமாக ஊடகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சரியான ‘தொழில்சங்கம்’ மிக மிக அவசியம் இதை இந்த தருணத்திலாவது ஊடகவியலாளர்கள் உணர்ந்தேயாகவேண்டும்.

  2. ///தமிழிசை ஒரு பேட்டியில் சமூக ஊடகங்களில் எழுதுவதற்கென்று நான்காயிரம் பேரை நியமித்துள்ளதாக பகிரங்கமாக பேட்டியளித்தார்///

    இதன் மூலம் சொல்ல வருவது என்ன? அந்த நாலாயிரம் பேருதான் சமூக ஊடகத்துல கம்பு சுத்தறாங்கன்னா? சிறுபிள்ளைத்தனமான சிந்தனை. தமிழகத்தில் பாஜாகா வளரவில்லை மாறாக இந்துத்துவம் வளர்கிறது. அது ஏன் என்று உங்களுக்கு தெரியவில்லையா இல்லை தெரியாததுபோல் நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. முதலில் உண்மையை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். அப்பொழுதே தீர்வைத்தேடி போக முடியும். விமர்ச்சனத்துக்கும் இழிவுபடுத்துதலுக்கும் சிறிய இடைவெளிதான். அது தெரியாமல் போனதே இடது சாரியின் வீழ்ச்சிக்குக் காரணம். விமர்ச்சனத்தை கேட்பார்கள். இழிபடுத்துதலாக இருந்தால் அது எப்பேர்பட்ட விசயமாக இருந்தாலும் எதிர்க்கத்தான் பார்ப்பார்கள். இந்துத்துவத்தை தமிழ் நாட்டில் வளர்ப்பதே உங்களைப்போன்றவர்கள்தான்.

  3. கார்த்திகேயனின் பேச்சு கண்டிக்கத்தக்கது. பொதுவாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது

    இதை ‘பிற்போக்குத்தனம்’ என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் கொஞ்சம் யோசித்தால் உண்மை புரியும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க