கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை உயிர் ஆராய்ச்சியில் மிக முக்கியமான ஒரு கட்டத்தை எட்டியுள்ளனர். பேராசிரியை மகதலேனா ஸெர்னிகா கோயெட்ஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு எலிகளின் குருத்தணுக்களில் (Stem Cells) மூன்று வகையான குருத்தணுக்களை இணைத்து ஏறத்தாழ இயற்கையான முளையத்தை (Embryo) ஒத்த செயற்கை முளையம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இவ்வாறு செயற்கையாக உருவாக்கப்பட்ட முளையத்திற்கு ஈரடுக்குக் கருக்கோள (Gastrulation) முறையில் வளர்ச்சியடையும் சாத்தியம் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன்பே பேராசிரியை மகதலேனா தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவானது, இரண்டு வகையான குருத்தணுக்களைப் பயன்படுத்தி எலியின் முளையத்தை ஒத்த செயற்கை முளையம் ஒன்றை உருவாக்குவதிலும் அவ்வாறு உருவாக்கப்பட்ட செயற்கை முளையத்தை ஒரு முப்பரிமாணக் கருக்கூட்டினுள் (3D Scaffold) வைத்து வளர்த்தெடுப்பதிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியை மகதலேனாவின் ஆராய்ச்சியில் மூன்று குருத்தணுக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதோடு செயற்கையாக உருவாக்கப்பட்ட முளையமானது ஈரடுக்குக் கருக்கோள முறையில் சுயமாகவே வளர்ச்சியடையும் சாத்தியங்களைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இயற்கையான பாலூட்டியினங்களில் கருமுட்டையில் உயிரணு நுழைந்த பின் உயிர் உருவாக்கத்தின் துவக்க கட்டத்தில் என்ன நடக்கிறது? கருத்தரித்த 3-லிருந்து 4 நாட்களுக்குள், கருவின் பிளக்கும் அணுக்கள் ஒரு கோள வடிவத்தை அடைகின்றன. இந்நிலையில் உள்ள கரு, ’மோருலா‘ எனப்படுகிறது. 4-லிருந்து 5 நாட்களுக்குள், மோருலாவிற்குள் ஒரு வெற்றிடம் உருவாகிறது. இந்நிலையில் உள்ள கரு ’பிளாஸ்டோசிஸ்ட்’ எனப்படுகிறது. பிளாஸ்டோசிஸ்டிலுள்ள அணுக்கள் ’உள்ளடங்கிய அணுப் பிண்டம்‘ என்று அழைக்கப்படுகிறது. இது மனிதனுக்குத் தேவையான தலை, உடல் மற்றும் பிற அமைப்புகளை அளிக்கிறது. உள்ளடங்கிய அணுப் பிண்டத்திலுள்ள அணுக்கள் முளையக் குருத்தணுக்கள் (embriyonic stem cells) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் 200-க்கும் மேற்பட்ட செல் வகைகளை உருவாக்கும் திறமை படைத்தவை.
இதைத் தொடர்ந்து, பிளாஸ்டோசிஸ்டின் வெளிப்புறம் உள்ள அணுக்கள் நஞ்சுக்கொடியின் ஒரு பகுதியை உருவாக்குகின்றன. இது தாய் மற்றும் கருவின் குருதி ஓட்ட அமைப்புகளை இணைக்கிறது. நஞ்சுக்கொடி தாயிடமிருந்து பிராணவாயு, ஊட்டச்சத்துக்கள், ஹார்மோன்கள், மருந்துகள் ஆகியவற்றை வளரும் குழந்தைக்கு அளிக்கிறது; கழிவுப் பொருட்களை அகற்றுகிறது; தாயின் குருதி கருவின் மற்றும் சிசுவின் குருதியுடன் கலந்துவிடாமல் தடுக்கிறது. நஞ்சுக்கொடி உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் கருவின் மற்றும் சிசுவின் உடல் வெப்ப நிலையை தாயின் உடல் வெப்ப நிலையை விட சற்று அதிகமாக நிலைப்படுத்துகிறது.
கடந்த 2017 மார்ச் மாதம் பேராசிரியை மகதலேனா வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின் படி, மரபணு மாற்றப்பட்ட எலியின் முளையக் குருத்தணுக்களை இணைவித்து முப்பரிமாணக் கருக்கூட்டினுள் வைத்து வளர்க்கப்படும் முளையமானது இயற்கையான முளையத்தின் பண்புகளைக் கொண்டிருப்பது விளக்கப்பட்டிருந்தது. செயற்கையான முளையத்தினுள் இருந்த இரண்டு குருத்தணுக்களும் தங்களை வளர்ந்து வரும் முளையத்தின் எந்தப் பகுதிக்குள் நிலை நிறுத்திக் கொள்வது என்கிற தகவல்களைப் பரிமாறிக் கொள்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
எனினும் சென்ற ஆண்டு நடந்த ஆராய்ச்சியில் கருவளர்ச்சிக்கு மிக அடிப்படையான ஈரடுக்குக் கருக்கோள முறையிலான வளர்ச்சியானது இல்லாதிருந்தது. ஈரடுக்குக் கருக்கோள முறையில்தான் முளையமானது ஓரடுக்கில் இருந்து உள்ளடுக்கு (endoderm), இடையடுக்கு (mesoderm), வெளியடுக்கு (ectoderm) ஆகிய அடுக்குகளைப் பெறுகிறது. இந்த வளர்ச்சிப் போக்குதான் எந்த முளையத்தின் அணுக்கள் பல்வேறு உடலுறுப்புகளுக்கான அடிப்படையாக அமைகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.
”மிகச் சரியான முறையில் நடக்கும் ஈரடுக்குக் கருக்கோள வளர்ச்சியானது மூன்று வகையான குருத்தணுக்களின் இணைவினால்தான் சாத்தியம். உயிரின் இந்த நுட்பமான நடனத்தை மறுகட்டமைப்பு செய்து பார்க்க நாங்கள் விடுபட்டுப் போன மூன்றாவது குருத்தணுவைச் சேர்த்துக் கொண்டோம்” என்கிறார் பேராசிரியை மகதலேனா. ”முந்தைய ஆராய்ச்சிகளில் முப்பரிமாண கருக்கூட்டினுள் நாங்கள் பயன்படுத்திய ஜெல்லிக்கு பதிலாக மூன்றாவது குருத்தணுவைப் பயன்படுத்தினோம். அதன் பின் நாங்கள் பார்த்த முளையத்தின் கட்டுமான வளர்ச்சியானது ஆச்சர்யமான முறையில் வெற்றிபெற்றது” என்கிறார் மகதலேனா.
”எங்களது செயற்கை முளையங்கள் இயற்கையான வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டத்தைக் கடந்துள்ளன. இப்போது அவை இயற்கையான முளையங்களுக்கு ஏறத்தாழ மிக நெருக்கமாக வந்து விட்டன. இந்த ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாக இந்த செயற்கை முளையங்களை ஒரு தாயின் உடலிலோ அல்லது செயற்கைக் கருப்பையிலோ வைத்து வளர்த்துப் பார்க்க வேண்டும். அதே போல் மனிதர்களின் குருத்தணுக்களைக் கொண்டும் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் பேராசிரியை மகதலேனா.
தற்போது வெளியாகி இருக்கும் ஆராய்ச்சி முடிவுகளின் படி, முளையத்தினுள் இருக்கும் குருத்தணுக்கள் தங்களுக்குள் எவ்வாறு தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன என்பதும் அதன் மூலம் முளையத்தின் வளர்ச்சி எவ்வாறு நடக்கின்றது என்பதும் தெரிய வந்துள்ளதாக இதே துறையில் உள்ள மற்ற விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எனினும் இங்கிலாந்தில் உள்ள சட்டங்கள் 14 நாட்களுக்கு உட்பட்ட வளர்ச்சியுடைய முளையங்களையே ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாக இருக்கிறது. இந்தத் தடை நீக்கப்பட வேண்டியது கரு வளர்ச்சியின் ஆரம்ப கட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சட்டங்கள் தவிர மதவாதிகளின் குறுக்கீடுகள் இன்னொரு சிக்கல். விஞ்ஞானத்தின் ஒளிக் கதிர்கள் எட்டாத பகுதிகளை எல்லாம் ‘கடவுளின் செயலாக’ சொந்தம் கொண்டாடி வரும் மதவாதிகளின் கையில் எஞ்சி நிற்கும் வாதங்கள் “உயிர்களின் மூலமும் – முடிவும்”தான். தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி இதுகாறும் நிழலாய்த் தோற்றமளித்துக் கொண்டிருந்த ‘மூலத்தையும் முடிவையும்’ விளக்கும் ஆற்றல் பெற்று வருவது மதங்களின் அடித்தளத்தையே அசைத்துப் பார்ப்பதாக உள்ளது.
பல்வேறு நாடுகளில் செயற்கை உயிர்கள் குறித்த ஆராய்சிகளுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பு தனது இனத்தின் பிறப்பு மற்றும் இறப்பின் இரகசியங்களை மனித குலம் அறிந்து கொள்வதோடு அவற்றை வெல்வதற்கும் உதவக் கூடும். மெய்யாகவே கடவுள் கல்லறைக்குள் பதுங்கப் போகும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் திண்ணம்.
– வினவு செய்திப் பிரிவு
செய்தி ஆதாரம்:
அப்போ கடவுள் களிமண்ணில் இருந்து மனிதனை படைச்சார் என்பது பொய்யா ?
கடவுளே கழிவுதான பாஸ்.
இயற்கை, உயிர் தொழில்நுட்பம் எவ்வாறு இந்த உலகில் உயிர்களை தோற்றிவித்து உலகில் எவ்வாறு வாழ்ந்து வருகின்றன என்பதை நாம் அறிவோம்.
ஆனால் மனிதன் கண்டுபிடிப்புகள் என்ற பெயரில் உலகை என்ன செய்து கொண்டு இருகிறான் என்று பார்த்தால், அவன் உயிர் வாழும் சூழலை மெல்ல மெல்ல அழிந்து வருகின்றான் என்பது புரியும்.
அறிவியல் அழிவியல்
இங்கிலாந்து மதவாதிகளும் மூடநம்பிக்கைகளின் மூட்டைகளாகத்தான் உள்ளனர்.RSS அம்பிகள் உலகுமுழதும் ஒரேமாதிரிதான் உள்ளனர்.
இப்படி தான் ‘குளோனிங்’ , ‘தலை மாற்று அறுவை சிகிச்சை’ என்று சொன்னார்கள். அப்படி எல்லோர் தலையையும் மாற்றி கொண்டு இருந்தால் அவன் வாழ்க்கை எப்படி இருக்கும்
உதாரணமாக ஒரு மெக்கானிக்கல் என்ஜினீயர் தலையை ‘படிப்பறிவற்ற’ வேறு ஒருவரின் உடலில் பொருத்தினால் அவர் operation முடிந்த உடன் படிக்காமலே ‘மெக்கானிக்கல் என்ஜினீயர்’ ஆகி விடுவாரா ?
தலை மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் ‘படிப்பறிபற்றவனின்’ வாழ்க்கை எப்படி இருக்கும் ? தெரிந்தவர்கள் சொல்லலாம்
அறிவியலுக்கும் ஒரு எல்லை வேண்டும். இயற்கையை மாற்றி அமைக்க நினைத்தால் அதற்கான விலையை மனிதர்கள் கொடுத்தே தீர வேண்டும்