மத்தியப் பிரதேசம் சலாரியா கிராமத்தில் 472 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கும் பசு சரணாலயம்.

மோடி அரசு பதவியேற்ற பிறகு சங்கிகள் கையில் எடுத்த முதல் பிரச்சினை பசு! மத்திய அரசு மட்டுமல்ல பா.ஜ.க ஆளும் மாநிலங்களிலும் பல்வேறு திட்டங்களின் பெயரில் பசுக்களுக்கான கோசாலை, மூத்திரத் தொழிற்சாலை, மூத்திர ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று ஆர்ப்பாட்டமாக அனுமதித்தார்கள். இன்னொரு புறம் பசுக்களைக் கொல்கிறார்கள் என்று வட இந்தியாவில் மாடுகளை விற்பனை செய்யும் முசுலீம்களை ஆங்காங்கே பிடித்து கொடூரமாக கொலை செய்தார்கள்.

இராஜஸ்தான் மாநில அரசாங்கம் பசுக்களின் சரணாலயத்தை முதலில் அறிவித்த பிறகு, மத்தியப் பிரதேச அரசும் ஒரு பிரம்மாண்டமான பசு சரணாலயத்தை திறப்பதாக பெரும் ஆரவாரத்துடன் அறிவித்தது. ஆனாலும் இன்று வரை அந்த சரணாலயத்திற்கு நிதி திரட்ட முடியவில்லையாம். பசுக்களுக்காக முசுலீம்களையும், தலித் மக்களையும் கொன்ற கயவர்கள் இரக்கப்பட்டு திறந்த மத்தியப் பிரதேச காமதேனு பசு அபய நிலையம் (Kamdhenu Gau Abhayaranya) ஐந்து மாதங்களுக்கு பிறகு தனது கதவுகளை இரக்கமற்று மூடி விட்டது. பசுக்களுக்கு அபயமளித்து சரணாலயம் நடத்துவதற்கு போதிய பணமோ, ஆட் பலமோ அந்த நிலையத்தில் இல்லை என்பதே பிரச்சினை.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆகர் மாவட்டத்தில் சலாரியா கிராமத்தில் 472 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த சரணாலயம் செப்டம்பர் 2017-ல் திறக்கப்பட்டது. நாட்டிலேயே இதுதான் முதல் சரணாலயம் என்று தங்கள் வாழ்நாளில் பசுஞ்சாணியையோ, இல்லை செத்துப் போன பசுக்களை புதைப்பதையோ தொட்டிராத, பார்த்திராத ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் சமூக வலைத்தளத்தில் சீறி எழுந்தார்கள்.

இந்த சரணாலயத்தில் கைவிடப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட பசுக்களைக் காப்பாற்றுவதோடு மாட்டுச் சாணி மற்றும் மூத்திரத்தில் இருந்து மருந்துகளும், பூச்சிகொல்லிகளும் தயாரிக்கப்படுமென ஆரம்பத்தில் கூறப்பட்டது. இந்த சரணாலயம் சுமார் 6,000 பசுக்களை பராமரிக்கும் திறன் கொண்டிருந்தாலும்  தற்போது 4120 பசுக்கள் மட்டுமே இருக்கிறதாம். தற்போது மாநில அரசின் விலங்குகள்நல வாரியத்தில் இருந்து பெறப்படும் பணம், இந்தப் பசுக்களுக்கு தீனி அளிப்பதற்கு கூட போதுமானதில்லையாம்.

“இந்த சரணாலயத்தின் அனைத்து செலவுகளுக்கும் தேவைப்படும் பணம் பத்து கோடி என்றாலும் அதில் பாதிதான் தரப்படுகிறது. அந்தப் பாதியிலும் நான்கு கோடி தீனிக்கு செலவழிக்கப்படுகிறது. இதற்கே இந்த கதி என்றால் புதிய கோசாலை திட்டங்களை பேசுவதற்கு வழியே இல்லை” என்கிறார் விலங்குகள்நல வாரியத்தைச் சேர்ந்த ஒருவர். அரசால் துட்டுக் கொடுக்க முடியாது என்பதால் மத்தியப் பிரதேச நிதித்துறை அதிகாரி, பசுப் பாதுகாப்பிற்காக நன்கொடை திரட்டுமாறு பசுநல வாரியத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கார்ப்பரேட்டுகளிடமிருந்து ஆயிரம் கோடி நன்கொடை பெறும் பாஜகவுக்கு 6000 பசுக்களைப் பராமரிக்க ஒதுக்கப்படவேண்டிய ரூ.14 கோடி என்பது தம்மாத்துண்டு பணம்தான்

இந்த சரணாலயத்தின் உதவி இயக்குநர் டாக்டர் வி.எஸ். கோசர்வால் மேற்கண்ட நிதி தட்டுப்பாட்டை ஒத்துக் கொள்வதோடு, “கடந்த பிப்ரவரியில் இருந்து நாங்கள் புதிய பசுக்களை ஏற்பதில்லை. இந்த வட்டார உதவி கலெக்டர்களும் பசுக்களை வண்டிகளில் கொண்டு செல்வதற்கு அனுமதிப்பதில்லை” என்கிறார். இந்துத்துவ இரக்கத்தின் இலட்சணம் இதுதான்.

இந்த பசு சரணாலயத்தின் எதிர்காலத் தேவைகளை ஒரு திட்டமாக முன்வைத்த பசு பாதுகாப்பு வாரியம் ஆரம்பத்தில் 22 கோடி ரூபாய்க்கு வரவு செலவு திட்டம் போட்டது. ஆனால் அதை நிதித்துறை மறுத்து விட்டபடியால் பிறகு 14 கோடி ரூபாய்க்கு திட்டம் போட்டது. அதையும் நிதித்துறை மறுத்து விட்டது. கார்ப்பரேட்டுகளிடம் இருந்து பா.ஜ கட்சி பெற்றது ஆயிரம் கோடி ரூபாய் எனும் போது ஆறாயிரம் பசுக்களை பராமரிப்பதற்கு தேவையான 14 கோடி என்பது ஒரு தம்மாத்துண்டு பணம் மட்டுமே.

இந்த நிலையில் வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பசுக்களைப் பெறும் சரணாலயத்திற்கு வேறு வருமானம் இல்லை. இந்த பசுக்களிடம் இருந்து பாலை கறந்தும் விற்க முடியாது. அவை மடிவற்றியதால்தான் இங்கே கொண்டு வரப்படுகின்றன. இந்த வளாகத்தில் சுயதேவைக்கான மின்சாரத்தை தயாரிக்க மூன்று உயிரி-வாயு நிலையங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. பசு மூத்திரத்தை சேகரிக்கும் சில எந்திரங்களும் வந்திருக்கின்றன. ஜபல்பூரில் இருக்கும் நானாஜி தேஷ்முக் கால்நடை ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தில் இருந்து எப்போதாவது நிபுணர்கள் வருகை புரிவார்கள். அவ்வளவுதான், மற்றபடி இந்த பிரம்மாண்டமான கோசாலை சரணாலயத்திற்கு வேறு கதியோ போக்கிடமோ இல்லை.

“முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம், விரைவில் நிதி வரும் என்று சொல்லும் விலங்கு நலத்துறை அமைச்சர் அன்டார் சிங் ஆர்யா, இந்த சரணாலயத்தை ஏதாவது தனியார் என்.ஜி.வோ நிறுவனத்திற்கு கொடுத்துவிடலாமா என்று யோசிப்பதாகவும் கூறுகிறார். வெளிநாட்டு என்.ஜி.வோ சதியை மூச்சுக்கு முன்னூறு முறை ஜபிக்கும் வாயில் இருந்து என்னே ஒரு ’பன்ச் டயலாக்’! ’தாய்’க்கு நிகரான பசுக்களை பராமரிப்பதற்கு சுதேசிப் பணமோ, சுதேசி தொண்டர்களோ இல்லையாம். அம்பிகளின் ’தேசபக்தி – பசுபக்தி’ என்பது முசுலீம்களை கொல்வதும் கொலைகாரர்களுக்கு பாராட்டு கூட்டம் நடத்துவதுதான் போலும்!

“இதுவரை வணிக நோக்கம் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களே எங்களை அணுகியிருக்கின்றனர். ஆனால் சுயநலமற்ற இலட்சியத்தால் வழி நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களே தேர்வு செய்யப்படுவர்”. என்கிறார் மத்தியப் பிரதேசத்தின் பசு சம்வர்தன் நிர்வாக கவுன்சிலின் துணை தலைவரான சந்தோஷ் ஜோஷி. ஆக இதுவரை எந்த தொண்டு நிறுவனமும் இங்கே அவர்கள் வரையறுத்திருக்கும் இலட்சியப்படி இல்லையாம். வெள்ளம் வந்தாலும், ரத யாத்திரை வந்தாலும் நிவாரணப் பணிகளுக்கு போகும் ஸ்வயம் சேவக உறுப்பினர்கள் யாரும் இங்கே பசுக்களை பராமரிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இரண்டாவது முறை முதலமைச்சராக சவுகான் பதவியேற்ற 2012-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தால் இந்த சரணாலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சரணாலய நிர்மாணப் பணிகள் நிறைவுற்றாலும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் வந்து திறப்பார் என செப்டம்பர் 2017 வரை முதலமைச்சர் சவுகான் காத்திருந்தார். ஒருவேளை சரணாலாயத்தின் அழிவு விதுரனது திருஷ்டி போல மோகன் பகவத்திற்கு தெரிந்திருக்கும் போல!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மட்டுமல்ல, முதலமைச்சர் சவுகான் கூட திறப்பு விழாவிற்கு வராமல் தவிர்த்து விட்டார். அதிகாரிகளும் இந்த சரணாலயத்தில் அதிக உற்சாகம் காட்டவில்லை. இவ்வளவிற்கும் அருகாமை பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலிருந்தும் ஏராளமான பசு உரிமையாளர்கள் பால்வற்றிய பசுக்களை விடுவதற்கு இங்கே குவிந்தனர். இந்த மாநிலங்களில் மடிவற்றிய பசுக்களை விற்பதற்கு அனுமதி இல்லை. பராமரிப்பதற்கு விவசாயிகளிடம் நிதி இல்லை. இந்நிலையில் இங்கே பசுக்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வரப்படுவதில் ஆச்சரியமில்லை.

இந்த சரணாலயத்திற்கான உதவி இயக்குநரைத் தாண்டி, இரண்டு கால்நடை மருத்துவர்கள், ஆறு கால்நடை உதவியாளர்கள் இங்கே பணி புரிகின்றனர். தேவையை ஒட்டி தினக்கூலி அடிப்படையில் தொழிலாளிகள் எடுக்கப்படுகின்றனர். ஆனாலும் நிறைய ஆட்பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் ஒத்துக் கொள்கின்றனர். பசுக்களை பராமரிப்பதற்கு சம்பளம் கொடுத்து ஆட்கள் எடுக்க முடியவில்லை என்றாலும் சேவையாக செய்வதற்கு கூட எந்த இந்துவும் தயாரில்லை போலும்.

“இங்கே நிறைய பசுக்கள் இறந்து போனாலும், பத்து சதவீத பசுக்கள் ஒரு கோசாலையில் இறப்பது சகஜம்தான். நல்ல நிலைமையில் உள்ள ஒரு பால் பண்ணையில் கூட மூன்று சதவீத பசுக்கள் இறந்து போகும்” என்று இறப்பை நியாயப்படுத்துகிறார், அரசு கால்நடைத்துறை அதிகாரி. இதை வைத்துப் பார்த்தால் தினமும் பல பத்து பசுக்கள் இந்த சரணாலய நரகத்திற்கு பதில் செத்துப் போவது மேல் என சாகின்றன என்பது உறுதி.

மாட்டுக்கறி உண்ணும் வழக்கத்தை சட்டப்பூர்வமாக உறுதிப் படுத்தியிருந்தால் இந்த அவலம் அங்கே நிகழ்ந்திருக்காது. விவசாயிகளும் நிறைய பசுக்களை வாங்கி விற்பார்கள். விவசாயப் பொருளாதாரம் நல்லதொரு சுழற்சியில் வளரும். மக்களுக்கும் புரதச் சத்து நிறைந்த மாட்டுக்கறி மலிவாக கிடைத்திருக்கும்.

சங்கி மங்கி பாவிகள் மக்களைக் கொல்வதோடு மாடுகளையும் பரிதாபமான முறையில் கொன்று விட்டு, நீலிக் கண்ணீர் விடுகிறார்கள்

– வினவு செய்திப் பிரிவு

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க