தி இந்துவுக்கு கேள்வி : ஊடக நெறி என்பது மக்கள் நலனை முன்னிறுத்துவதா?அல்லது ரகசிய சந்திப்புகளை மூடி மறைப்பதா?

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி

மிழக முன்னணி ஊடகங்களின் முதலாளிகளும் தலைமை பத்திரிகையாளர்களும் பிரதமர் நரேந்திர மோடியை ‘இரகசியமாக’ சந்தித்த படங்கள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையானது. சமூக ஊடகங்களின் கேள்விகளை எதிர்கொண்டு எந்தவொரு தமிழ் ஊடகமும் பதிலளிக்கவில்லை. தி ஹிந்து பத்திரிகையின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ. எஸ். பன்னீர்செல்வன் இதுகுறித்து அந்தப் பத்திரிகையில் எழுதியிருந்தார். (இணைப்பு கீழே)

அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததும் பிரதமர் மோடி தமிழக பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததும் செய்தியாக்கப்படாததற்கு என்ன காரணம் என ஏ. எஸ். பன்னீர்செல்வம் விளக்கியிருந்தார். விளக்கத்தின் சாரம், (ஆஃப் த ரெக்கார்ட்) சந்திப்புகளை வெளியே சொல்வது சம்பந்தப்பட்டவர்களின் நம்பிக்கையை மீறுவதாகும் என்பதே.

ஏ. எஸ். பன்னீர்செல்வன்

லிபரலாகவும் ஜனநாயக தன்மையுடன் எழுதுவதாகக் காட்டிக்கொள்வது ஊடகங்களில் ஒருவகை. தி இந்து அப்படியாகத்தான் தன்னை முன்னிறுத்தி வருகிறது. இந்த முகத்திரையை பலரும் கிழித்தெறிந்துவிட்டார்கள். ரீடர்ஸ் எடிட்டரின் வழியாக மோடி சந்திப்பின் பின்னணி குறித்து ‘விளக்கம்’ அளித்து தனது நடுநிலையை தக்கவைக்க முயற்சிக்கிறது தி இந்து. ஆனால், உண்மை என்பது ஒருபோதும் நடுநிலையாக இருப்பதில்லை.

100 பெண் பத்திரிகையாளர்களை ராகுல் காந்தி சந்தித்த படங்கள், அவருடைய சமூக வலைத்தளத்திலேயே வெளியிடப்பட்டன. காங்கிரஸ் தலைவராக மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் ராகுல் காந்தி, ஊடகங்களுடனான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள சந்திக்கிறார் என்கிற விளக்கம் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டது. தேர்தலுக்கு முன் அனைத்து கட்சிகளும் இப்படியான ‘சந்திப்பு’களை நடத்துவதுண்டு. பொதுவாக ஆதரவான, எதிரான ஊடகங்களும் இந்த சந்திப்புகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

இது ஒருவகையில் ஊடகங்களை ‘வளைக்கும்’ செயல்பாடு என்றாலும் ராகுல் காந்தி சந்திப்பின் வெளிப்படைத்தன்மை, மோடி சந்திப்பில் இல்லை என்பதே சர்ச்சைகளையும் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் தனிப்பட்ட சந்திப்பு செய்தியாக்குவதில்லை அல்லது சில நேரங்களில் படங்களை மட்டும் வெளியிடுவார்கள். ராகுலின் சந்திப்பு இணைய ஊடகங்களில் செய்தியாக பதிவானது. ராகுலுடன் என்ன பேசினார்கள் என்கிற விவரமும்கூட வெளியாகியிருக்கிறது. பிரபல பத்திரிகையாளர் சேகர் குப்தா ஆசிரியராக இருக்கும் தி பிரிண்ட் இணையதளம் இதை பதிவாக்கியிருக்கிறது.

தி இந்துவின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ். பன்னீர்செல்வம், இணையதளங்களில் ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பு வெளியானதை குறிப்பிடுகிறார். ஆனால், மோடியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக ஊடகவியலாளர்களின் சந்திப்பு இரகசியமாக ஏன் வைக்கப்பட்டது என்கிற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. மோடி – ஊடகவியலாளர்கள் சந்திப்பு குறித்து பா.ஜ.க. தரப்பிலிருந்தும்கூட ஏன் விளக்கப்படவில்லை? நான்காண்டுகளில் பத்திரிகையாளர்களையே சந்திக்காத பிரதமர் என பெயர் பெற்ற மோடியை சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற தமிழக ஊடகவியலாளர்கள் ’பெருமை’யுடன் அதை பகிர்ந்திருக்கலாமே, அதை ஏன் செய்யவில்லை?  உள்நோக்கத்துடனான சந்திப்பு என சொல்ல அத்தனை வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்துவிட்டு, விளக்கமும் ஏன்? படங்களை வெளியிட்டு பிரதமரை சந்தித்தோம் என ஒற்றை வரி விளக்கத்தில் என்ன ’நம்பிக்கை இழப்பு’ ஏற்பட்டுவிடப்போகிறது?

மோடி – தமிழ் ஊடக பிரமுகர்களின் சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பு எனில், இது தொடர்பான புகைப்படங்கள் எப்படி வெளிவந்தன? மோடியின் அலுவலகத்தில் PMO (பிரதம அமைச்சரின் அலுவலகம்) புகைப்படக்காரர் மட்டும் எடுத்த படங்கள் தமிழக பா.ஜ.க பிரமுகர்கள் மூலம் கசிய விடவைத்தது ஏன்? ஆக அவர்கள் இவர்களை சந்திததார்கள். அதை அவர்களே ‘பெருந்தன்மையாக’ வெளியிடுகிறார்கள். பன்னீர் செல்வமோ இது தனிப்பட்ட சந்திப்பு என நமக்கு கிளாஸ் எடுக்கிறார்.

மோடி ஆட்சிக்கு வந்தபின், தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துப் போகாத பத்திரிகையாளர்களை நிறுவனங்களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்து பணிநீக்கம் செய்வது தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்திய உதாரணம் ஏ.பீ.பி. ஊடகவியலாளர்கள் இருவரின் நீக்கம். தன்னுடைய மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி எப்படிப்பட்ட புரட்டுகளை சொல்கிறார் என தோலூரித்த செயலுக்காக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விஷயம் இணைய ஊடகங்களில் பரபரப்பானபோது மோடியுடனான தமிழக ஊடகவியலாளர்களின் சந்திப்பு நிகழ்ந்தேறியது.

மோடியை சந்தித்த பெரும்பாலான ஊடகங்களின் சார்புதன்மை வெளிப்படையானது. சில ஊடகவியலாளர்கள் நடுநிலைமை பேண முயற்சிக்கலாம். அதை நடுநிலைமை என்பதைவிட சந்தர்ப்பவாதம் என சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்த நடுநிலையாளர்களின் ஊடக அறம் என்பது வலதுசாரித்தனத்துடன்  சமரசம் செய்துகொள்ள எப்போதும் தயாராகவே உள்ளது.

பி.ஜே.பி. கும்பலின் மிரட்டலுக்கு பயந்து ஏ.பி.பி. ஊடக முதலாளிகளால் பழிவாங்கப்பட்ட பத்திரிகையாளர்கள்: (இடமிருந்து) மிலிந்த் கொண்டேகர், புன்ய பிரசுன் பாஜ்பாய் மற்றும் அபிசார் சர்மா.

வலதுசாரி ட்ரால்களால் பாதிக்கப்படும் ஒரு செய்தியாளருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான நீதியைக்கூட இவர்களால் பெற்றுத்தர முடிவதில்லை. நடுங்கிக் கொண்டு பாதிக்கப்பட்ட செய்தியாளரை ”வீட்டிலேயே இருந்துகொள், பிரச்சினை முடிந்ததும் வெளியே வா” என்பார்கள். ”தாலி தேவையா” என்கிற விவாத சர்ச்சை முதல் சமீபத்திய எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த ஊடகவியலாளர்கள் விவகாரம், மிகச் சமீபத்திய பெண் கடவுள் கவிதை பகிர்வு சர்ச்சை வரை பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களை தொடர்புடைய ஊடக நிறுவனங்கள் திரையில் வரவேண்டாம் என தற்காலிக தடை விதித்தன. ட்ரால்கள் மட்டுமே இதற்கு காரணமென்றால், எந்தவொரு ஊடகவியலாளரும் பணியாற்ற முடியாது. முழுக்க முழுக்க இதன் பின்னால் இருப்பது ஊடகங்களை வெளிப்படையாக மிரட்டும் பா.ஜ.க.வினர் மீதான பயம். சார்புதன்மையுடனோ, சந்தர்ப்பவாத நடுநிலைமையுடனோ இயங்கும் ஊடகங்களால் எப்படி மக்கள் நலனை முன்னிறுத்த முடியும்?

மோடியுடனான தமிழக ஊடகவியலாளர் சந்திப்புக்கு சப்பையான விளக்கங்களை சொல்லும் ரீடர்ஸ் எடிட்டருக்கு கீழ்வரும் பத்தி எதிர் விளக்கம் தருமென நம்பலாம். “எட்வர்ட் ஸ்னோடனும் விக்கிலீக்ஸும் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆவணங்களை இணையத்தின் வழியாக மக்கள் பார்வைக்கு வைத்தார்கள். இந்த ஆவணங்களை வெளியிடக்கூடாதவை எனக் கருதி சர்வதேச ஊடகங்கள் ஒதுங்கிக் கொள்ளவில்லை. மாறாக, அந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிட்டன. ஒரு அரசாங்கத்தால் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை ஏன் ஊடகங்கள் செய்தியாக்கின? ஏனெனில் அதில், மக்களின் நலன் அடங்கியிருந்தது” சமகால ஊடகங்கள் குறித்த கட்டுரை ஒன்றில் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் எழுதியது இது. மக்கள் நலனை முன்னிறுத்துவதா? அல்லது இரகசிய சந்திப்புகளை மூடி மறைப்பதா? எது ஊடக நெறி?

  • மு. வி. நந்தினி.

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

1 மறுமொழி

Leave a Reply to Nath பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க