மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?

''ஆஸ்பத்திரி இல்லாத அந்த காலத்துல வீட்டிலேயே ஏழெட்டு பிள்ளைகளை பெத்து போட்டார்களே, எப்படி?'' என்று கேள்வி கேட்போருக்கு ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலுக்கு நேர்ந்த துயரத்திலிருந்து பதிலளிக்கிறார், மருத்துவர் பரூக் அப்துல்லா.

ரு முக்கியமான வரலாற்று ஆவணம் – இண்ட்ரஸ்டிங் கேஸ் ஸ்டடி
வரலாற்றில் இருந்து பாடம் கற்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்..

இயற் பெயர் : அர்ஜூமந்த் பானு
பாலினம் : பெண்
பிறந்தது : 27 ஏப்ரல் 1593
இறந்தது : 17 ஜூன் 1631 தனது 38 வது வயதில்
14ஆவது குழந்தையை பிரசவிக்கும் போது பிரசவ உதிரப்போக்கு காரணமாக இறக்கிறார் இந்தப்பெண்.

இவரது இறப்பில் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள்?

இந்த பெண் வேறு யாரும் இல்லை. அப்போது இந்திய நாட்டை ஆட்சி செய்து வந்த முகலாய சக்கரவர்த்தி ஷாஜகானின் பட்டத்து ராணி – மும்தாஜ் மஹல்.

taj-mahal-birthsபட்டத்து ராணி என்றால் எத்தனை பவர்ஃபுல் என்பது, அடுத்த நூற்றாண்டில் இங்கிலாந்தின் குயின் எலிசபெத் எத்தனை பவர்ஃபுல்லாக இருந்தார் என்பதை அறிந்தால் தெரியும். இத்தனை சர்வ வல்லமை பொருந்திய சாம்ராஜ்யத்தின் பட்டத்து ராணி எப்படி இறந்தார்?

  • தனது 38வது வயதில் (High maternal age)
  • 14வது குழந்தையை ஈனும் போது (High order birth )
  • பிரசவத்திற்கு பின் நேரும் அபாயகரமான உதிரப்போக்கினால் (Post partum hemorrhage) வந்து இறந்தார்

தனது காதல் மனைவியின் இறப்பை தாங்க இயலாத ஷாஜகான் ஒரு வருடம் துக்கம் அனுஷ்டித்திருக்கிறார். அவர் துக்கம் முடிந்து மீண்டும் மக்களுக்கு காட்சி அளித்த போது நரை முடி கூனுடன் வெளியே வந்தததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றை படியுங்கள்…

  • நாம் 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மகப்பேறு பிரசவங்கள் எப்படி இருந்திருக்கும்?
  • பெண்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் ? என்று எங்கும் போய் பார்க்க தேவையில்லை
  • மும்தாஜ் எனும் பட்டத்து ராணிக்கு எந்த மாதிரி வைத்தியம் அந்த காலத்தில் கிடைத்திருக்கும்?
  • சாதாரண மக்களை விடவும் சிறப்பான சிகிச்சை கண்டிப்பாக கிடைத்திருக்கும்?
  • பிறகு ஏன் மரணம் நடந்தது ?

இப்போது நவீன மருத்துவம், தாய்களின் இறப்பை கொண்டு கணித்து தாயின் வயது அதிகமாக அதிகமாக பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் (complication) கூடும் என்கிறது.

மேலும், எத்தனை அதிகமான முறை ஒரு தாய் பிரசவக்கிறாளோ அதற்கு ஏற்றாற் போல் தாய்க்கோ குழந்தைக்கோ பிரச்சனை வரும் என்கிறது. அந்த பட்டத்து ராணிக்கு உணவில் அன்பில் எந்த குறையும் இருந்திருக்காது.

14-வது பிரசவம் வரை தாக்கு பிடித்திருக்கிறார். கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் நல்ல ரத்த சோகை (anemia) இருந்திருக்கும். அதை சரி செய்யும் மருத்துவம் அப்போது இல்லை. பிரசவித்து விட்டு ரத்த போக்கு அதிகமாக வர அதை சரி செய்யும் சிகிச்சையும் அப்போது இருந்திருக்கவில்லை. இறந்து விட்டாள்.

இந்தியாவில் இன்றும் பல பெண்கள் கர்ப்பகாலத்தின் போது இரத்த சோகைக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். (மாதிரிப் படம்)

அவளது மரணத்தை அக்காலத்தில் மன்னர்களுக்கும் பேரரசர்களுக்கும் கிடைத்த மருத்துவத்தின் அளவுகோலாக கொள்ளலாம். கண்டிப்பாக சாதாரண மனிதர்களுக்கு அதை விட மிகவும் குறைவான மகப்பேறு சிகிச்சையே கிடைத்திருக்கும்.

இப்போது யோசித்து பாருங்கள். இந்தியாவின் 18 ஆம் நூற்றாண்டு தாய் சேய் இறப்பு விகிதங்களை.

எப்படியும் ஒரு இலட்சம் பிரசவங்களில் 1000 முதல் 2000 தாய்மார்கள் நிச்சயம் இறந்திருப்பார்கள் என்பது எனது கணிப்பு.

சரி, இப்போது மும்தாஜ் பெற்ற அந்த 14 பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்று பார்ப்போம். அப்போது இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant mortality rate மற்றும் under 5 mortality rate) கிடைத்து விடும்.

மும்தாஜின் முதல் குழந்தை – ஹூருன் நிசா பேகம் (30.3.1613 – 5.6.1616)
மூன்று வயதில் பெரியம்மை வந்து இறந்து விட்டாள் ( அந்த காலத்தில் ஏது தடுப்பூசி ? இப்போது இந்த பெரியம்மை உலகத்தை விட்டே ஒழிக்கப்பட்டுவிட்டது )

இரண்டாவது பெண் ஜஹனரா பேகம் (23.3.1614 – 16.9.1681) இவர் தான் தனது தாய் மரணத்திற்கு பிறகு ஷாஜகானுக்கு மிகவும் விருப்பமான மகள். மூன்றாவது மகன் தாராஹ் சுகோஹ் ( 20.3.1615 – 30.8.1659) அடுத்து நான்காவது மகன் ஷா ஷூஜா ( 23.6.1616-7.2.1661) அடுத்து ஐந்தாவது பெண் ரோஷனரா பேகம் (3.9.1617- 11.9.1671) தனது அக்கா ஜனஹராவுக்கு பிறகு பவர்ஃபுல் லேடியாக விளங்கியவர் இவர்.

அடுத்து ஆறாவதாக “தல” அவுரங்கசீப் பிறக்கிறார்
(3.11.1618- 3.3.1707) இவர் தன் தந்தை நோய்வாய்பட்டவுடன் அவரை ஓரம்கட்டிவிட்டு அரியணைக்கு ஏறினார்.

இதுக்கப்புறம் தான் கதை ஆரம்பிக்குது பாருங்க…

ஏழாவது குழந்தை – மகன் இசாத் பக்ஷ் – (18.12.1619- 1621) ஒரு வயது முடிந்திருக்கும் சூழ்நிலையில் நோய் வந்து இறக்கிறார் இந்த இளவரசர். எட்டாவது சுரய்யா பானு பேகம் என்ற பெண் சிசு பிறந்து ஏழு வருடங்கள் வாழ்ந்து பெரியம்மை வந்து இறக்கிறாள். ஒன்பதாவது – பெயரிடப்படாத ஆண் மகவு. பிறந்தவுடன் இறக்கிறது.

பத்தாவது பிறந்த முரத் பக்ஷ் – 1624 ஆம் ஆண்டு பிறக்கிறார். 1661 ஆம் ஆண்டு தனது அண்ணன் அரசர் அவுரங்கசிப் ஏதோ காரணத்தால் இவரை கொன்றுவிட ஆணையிடுகிறார். (என்ன காரணமோ தெரியல) 11-வது மகன் லுஃப்த் அல்லாஹ் – ஒன்றரை வயதில் நோய்வாய்பட்டு இறக்கிறான்.12-வது பெண் குழந்தை தவுலத் அஃப்சா தனது ஒரு வயதுக்குள் நோய் வந்து இறக்கிறாள்.

13-வது ஹுசன் அரா பேகம். இவளும் தனது ஒரு வயதை தாண்டாமல் நோய் வந்து சாகிறாள். 14-வதும் கடைசியுமான பிரசவத்தில்… கவுஹர் அரா பேகம் எனும் பெண் குழந்தையை பெற்று போட்டு விட்டு தாய் இறக்கிறாள்.

இவ்வளவு தாங்க கதை…

யோசிச்சு பாருங்க..
14 ல அஞ்சு குழந்தை ஒரு வயச தாண்டல…
2 குழந்தை பத்து வயச தாண்டல..

பெரியம்மை தடுப்பு மருந்து கண்டறிந்த விஞ்ஞானி எட்வர்டு ஜென்னர்

இப்படி தான் நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். பெண்களை குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரமாக மட்டுமே பாவித்து வந்தனர் ஒரு பெண்ணிற்கு அதற்கு மேல் என்ன வேலை என்று கேட்கிறீர்களா? ப்ளீஸ் டேக் டைவர்சன்.

அந்த காலத்தில் ஷாஜகானே நினைத்திருந்தாலும் தனது மனைவியை பிழைக்க வைப்பது சிரமம் தான். அத்தனை சிகிச்சை முறைகள் அப்போது கிடையாது.

மும்தாஜுக்கும் அவரது அரண்மனையில் வைத்து மரபு வழி பிரசவம் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அனீமியாவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதிகள் கிடையாது. ரத்தம் ஏற்ற முடியாது. ரத்த போக்கை தடுக்க முடியாது. தடுப்பூசி கிடையாது. எந்த உயிர்கொல்லி நோயையும் தடுக்க முடியாது.

நோய் வந்தால் அரசன் ஆண்டி இருவரும் ஒன்று தான்.

இன்று ஏழை பணக்காரன் பாகுபாடின்றி அரசு அனைவருக்கும் இலவசமாக மகப்பேறு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை வழங்கிவருகிறது.

இந்த கேஸ் சினாரியோ வழி நாம் அறிவது ;

  • மருத்துவமனை பிரசவமே பாதுகாப்பானது.
  • தாயின் வயது கூடக்கூட பிரசவத்தின் போது தாய் சேய் மரணம் நிகழ வாய்ப்பு அதிகம்.
  • கர்ப்பத்தின் எண்ணிக்கை கூடக்கூட பிரசவத்தின் போது பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம்.
  • பிரசவத்தின் போது ஏற்படும் உடனடி பிரச்சனைகளை கண்டறிந்து உயிர் காக்கும் சிகிச்சைகளை மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய முடியும்.

இந்த பதிவை இதுவரை இந்த உலகை விட்டு; பிரசவத்தின் போதும் கர்ப்பத்தின் போதும் இறந்த மும்தாஜ் மஹல் போன்ற லட்சக்கணக்கான தாய்மார்களுக்கு காணிக்கையாக்குகிறேன். உங்களால் தான் நாங்கள் பாடம் கற்கிறோம். நன்றி தாய்மார்களே!

Dr.ஃபரூக் அப்துல்லா

நன்றி: ஃபேஸ்புக்கில் Dr.ஃபரூக் அப்துல்லாMBBS.,MD., சிவகங்கை.