மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?

''ஆஸ்பத்திரி இல்லாத அந்த காலத்துல வீட்டிலேயே ஏழெட்டு பிள்ளைகளை பெத்து போட்டார்களே, எப்படி?'' என்று கேள்வி கேட்போருக்கு ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலுக்கு நேர்ந்த துயரத்திலிருந்து பதிலளிக்கிறார், மருத்துவர் பரூக் அப்துல்லா.

ரு முக்கியமான வரலாற்று ஆவணம் – இண்ட்ரஸ்டிங் கேஸ் ஸ்டடி
வரலாற்றில் இருந்து பாடம் கற்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்..

இயற் பெயர் : அர்ஜூமந்த் பானு
பாலினம் : பெண்
பிறந்தது : 27 ஏப்ரல் 1593
இறந்தது : 17 ஜூன் 1631 தனது 38 வது வயதில்
14ஆவது குழந்தையை பிரசவிக்கும் போது பிரசவ உதிரப்போக்கு காரணமாக இறக்கிறார் இந்தப்பெண்.

இவரது இறப்பில் என்ன இருக்கிறது என்று தானே கேட்கிறீர்கள்?

இந்த பெண் வேறு யாரும் இல்லை. அப்போது இந்திய நாட்டை ஆட்சி செய்து வந்த முகலாய சக்கரவர்த்தி ஷாஜகானின் பட்டத்து ராணி – மும்தாஜ் மஹல்.

taj-mahal-birthsபட்டத்து ராணி என்றால் எத்தனை பவர்ஃபுல் என்பது, அடுத்த நூற்றாண்டில் இங்கிலாந்தின் குயின் எலிசபெத் எத்தனை பவர்ஃபுல்லாக இருந்தார் என்பதை அறிந்தால் தெரியும். இத்தனை சர்வ வல்லமை பொருந்திய சாம்ராஜ்யத்தின் பட்டத்து ராணி எப்படி இறந்தார்?

 • தனது 38வது வயதில் (High maternal age)
 • 14வது குழந்தையை ஈனும் போது (High order birth )
 • பிரசவத்திற்கு பின் நேரும் அபாயகரமான உதிரப்போக்கினால் (Post partum hemorrhage) வந்து இறந்தார்

தனது காதல் மனைவியின் இறப்பை தாங்க இயலாத ஷாஜகான் ஒரு வருடம் துக்கம் அனுஷ்டித்திருக்கிறார். அவர் துக்கம் முடிந்து மீண்டும் மக்களுக்கு காட்சி அளித்த போது நரை முடி கூனுடன் வெளியே வந்தததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரலாற்றை படியுங்கள்…

 • நாம் 17ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மகப்பேறு பிரசவங்கள் எப்படி இருந்திருக்கும்?
 • பெண்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் ? என்று எங்கும் போய் பார்க்க தேவையில்லை
 • மும்தாஜ் எனும் பட்டத்து ராணிக்கு எந்த மாதிரி வைத்தியம் அந்த காலத்தில் கிடைத்திருக்கும்?
 • சாதாரண மக்களை விடவும் சிறப்பான சிகிச்சை கண்டிப்பாக கிடைத்திருக்கும்?
 • பிறகு ஏன் மரணம் நடந்தது ?

இப்போது நவீன மருத்துவம், தாய்களின் இறப்பை கொண்டு கணித்து தாயின் வயது அதிகமாக அதிகமாக பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள் (complication) கூடும் என்கிறது.

மேலும், எத்தனை அதிகமான முறை ஒரு தாய் பிரசவக்கிறாளோ அதற்கு ஏற்றாற் போல் தாய்க்கோ குழந்தைக்கோ பிரச்சனை வரும் என்கிறது. அந்த பட்டத்து ராணிக்கு உணவில் அன்பில் எந்த குறையும் இருந்திருக்காது.

14-வது பிரசவம் வரை தாக்கு பிடித்திருக்கிறார். கண்டிப்பாக கர்ப்ப காலத்தில் நல்ல ரத்த சோகை (anemia) இருந்திருக்கும். அதை சரி செய்யும் மருத்துவம் அப்போது இல்லை. பிரசவித்து விட்டு ரத்த போக்கு அதிகமாக வர அதை சரி செய்யும் சிகிச்சையும் அப்போது இருந்திருக்கவில்லை. இறந்து விட்டாள்.

இந்தியாவில் இன்றும் பல பெண்கள் கர்ப்பகாலத்தின் போது இரத்த சோகைக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். (மாதிரிப் படம்)

அவளது மரணத்தை அக்காலத்தில் மன்னர்களுக்கும் பேரரசர்களுக்கும் கிடைத்த மருத்துவத்தின் அளவுகோலாக கொள்ளலாம். கண்டிப்பாக சாதாரண மனிதர்களுக்கு அதை விட மிகவும் குறைவான மகப்பேறு சிகிச்சையே கிடைத்திருக்கும்.

இப்போது யோசித்து பாருங்கள். இந்தியாவின் 18 ஆம் நூற்றாண்டு தாய் சேய் இறப்பு விகிதங்களை.

எப்படியும் ஒரு இலட்சம் பிரசவங்களில் 1000 முதல் 2000 தாய்மார்கள் நிச்சயம் இறந்திருப்பார்கள் என்பது எனது கணிப்பு.

சரி, இப்போது மும்தாஜ் பெற்ற அந்த 14 பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்று பார்ப்போம். அப்போது இருந்த குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant mortality rate மற்றும் under 5 mortality rate) கிடைத்து விடும்.

மும்தாஜின் முதல் குழந்தை – ஹூருன் நிசா பேகம் (30.3.1613 – 5.6.1616)
மூன்று வயதில் பெரியம்மை வந்து இறந்து விட்டாள் ( அந்த காலத்தில் ஏது தடுப்பூசி ? இப்போது இந்த பெரியம்மை உலகத்தை விட்டே ஒழிக்கப்பட்டுவிட்டது )

இரண்டாவது பெண் ஜஹனரா பேகம் (23.3.1614 – 16.9.1681) இவர் தான் தனது தாய் மரணத்திற்கு பிறகு ஷாஜகானுக்கு மிகவும் விருப்பமான மகள். மூன்றாவது மகன் தாராஹ் சுகோஹ் ( 20.3.1615 – 30.8.1659) அடுத்து நான்காவது மகன் ஷா ஷூஜா ( 23.6.1616-7.2.1661) அடுத்து ஐந்தாவது பெண் ரோஷனரா பேகம் (3.9.1617- 11.9.1671) தனது அக்கா ஜனஹராவுக்கு பிறகு பவர்ஃபுல் லேடியாக விளங்கியவர் இவர்.

அடுத்து ஆறாவதாக “தல” அவுரங்கசீப் பிறக்கிறார்
(3.11.1618- 3.3.1707) இவர் தன் தந்தை நோய்வாய்பட்டவுடன் அவரை ஓரம்கட்டிவிட்டு அரியணைக்கு ஏறினார்.

இதுக்கப்புறம் தான் கதை ஆரம்பிக்குது பாருங்க…

ஏழாவது குழந்தை – மகன் இசாத் பக்ஷ் – (18.12.1619- 1621) ஒரு வயது முடிந்திருக்கும் சூழ்நிலையில் நோய் வந்து இறக்கிறார் இந்த இளவரசர். எட்டாவது சுரய்யா பானு பேகம் என்ற பெண் சிசு பிறந்து ஏழு வருடங்கள் வாழ்ந்து பெரியம்மை வந்து இறக்கிறாள். ஒன்பதாவது – பெயரிடப்படாத ஆண் மகவு. பிறந்தவுடன் இறக்கிறது.

பத்தாவது பிறந்த முரத் பக்ஷ் – 1624 ஆம் ஆண்டு பிறக்கிறார். 1661 ஆம் ஆண்டு தனது அண்ணன் அரசர் அவுரங்கசிப் ஏதோ காரணத்தால் இவரை கொன்றுவிட ஆணையிடுகிறார். (என்ன காரணமோ தெரியல) 11-வது மகன் லுஃப்த் அல்லாஹ் – ஒன்றரை வயதில் நோய்வாய்பட்டு இறக்கிறான்.12-வது பெண் குழந்தை தவுலத் அஃப்சா தனது ஒரு வயதுக்குள் நோய் வந்து இறக்கிறாள்.

13-வது ஹுசன் அரா பேகம். இவளும் தனது ஒரு வயதை தாண்டாமல் நோய் வந்து சாகிறாள். 14-வதும் கடைசியுமான பிரசவத்தில்… கவுஹர் அரா பேகம் எனும் பெண் குழந்தையை பெற்று போட்டு விட்டு தாய் இறக்கிறாள்.

இவ்வளவு தாங்க கதை…

யோசிச்சு பாருங்க..
14 ல அஞ்சு குழந்தை ஒரு வயச தாண்டல…
2 குழந்தை பத்து வயச தாண்டல..

பெரியம்மை தடுப்பு மருந்து கண்டறிந்த விஞ்ஞானி எட்வர்டு ஜென்னர்

இப்படி தான் நமது முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். பெண்களை குழந்தை பெற்றெடுக்கும் இயந்திரமாக மட்டுமே பாவித்து வந்தனர் ஒரு பெண்ணிற்கு அதற்கு மேல் என்ன வேலை என்று கேட்கிறீர்களா? ப்ளீஸ் டேக் டைவர்சன்.

அந்த காலத்தில் ஷாஜகானே நினைத்திருந்தாலும் தனது மனைவியை பிழைக்க வைப்பது சிரமம் தான். அத்தனை சிகிச்சை முறைகள் அப்போது கிடையாது.

மும்தாஜுக்கும் அவரது அரண்மனையில் வைத்து மரபு வழி பிரசவம் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அனீமியாவை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதிகள் கிடையாது. ரத்தம் ஏற்ற முடியாது. ரத்த போக்கை தடுக்க முடியாது. தடுப்பூசி கிடையாது. எந்த உயிர்கொல்லி நோயையும் தடுக்க முடியாது.

நோய் வந்தால் அரசன் ஆண்டி இருவரும் ஒன்று தான்.

இன்று ஏழை பணக்காரன் பாகுபாடின்றி அரசு அனைவருக்கும் இலவசமாக மகப்பேறு சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளை வழங்கிவருகிறது.

இந்த கேஸ் சினாரியோ வழி நாம் அறிவது ;

 • மருத்துவமனை பிரசவமே பாதுகாப்பானது.
 • தாயின் வயது கூடக்கூட பிரசவத்தின் போது தாய் சேய் மரணம் நிகழ வாய்ப்பு அதிகம்.
 • கர்ப்பத்தின் எண்ணிக்கை கூடக்கூட பிரசவத்தின் போது பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம்.
 • பிரசவத்தின் போது ஏற்படும் உடனடி பிரச்சனைகளை கண்டறிந்து உயிர் காக்கும் சிகிச்சைகளை மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய முடியும்.

இந்த பதிவை இதுவரை இந்த உலகை விட்டு; பிரசவத்தின் போதும் கர்ப்பத்தின் போதும் இறந்த மும்தாஜ் மஹல் போன்ற லட்சக்கணக்கான தாய்மார்களுக்கு காணிக்கையாக்குகிறேன். உங்களால் தான் நாங்கள் பாடம் கற்கிறோம். நன்றி தாய்மார்களே!

Dr.ஃபரூக் அப்துல்லா

நன்றி: ஃபேஸ்புக்கில் Dr.ஃபரூக் அப்துல்லாMBBS.,MD., சிவகங்கை.

 

17 மறுமொழிகள்

 1. எளிமையான விளக்கம்
  வரலாறு எப்போதும் பாடங்களை கற்ப்பித்துக்கொண்டேதான் உள்ளது.நாம்தான் கடந்துகொண்டே முன்னோர்கள் முட்டாள்களா என்று பிதற்றித்திரிகிறோம்.செல்லும்
  கணினியும் காரும் நவினதொழில்நுட்பமுமாக….
  ஆனால் உடல்நலம் என்றபோது கற்க்காலம் நோக்கி அதுவும் பெண்ணின் உடல் நலம் எனும்போது ‘அத்வைத மண்டூகமாக’ ஆன்மீக மௌடீகமாக மாறிவிடுகிறோம்.

  • நண்பர் முரளி , பதிவுக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் கேட்கிறேன் ,அத்வைத மண்டூகம் என்றால் என்ன? ரமணர் போலா? அத்வைதம் முட்டாள் தனமா? கொஞ்சம் விளக்குங்கள்.

   • அத்வைதம் என்பது இந்த உலகம் பூமி இயற்கை நீங்கள் நான் பொருட்கள்…….. அனைத்தும் மாயை.அதாவது எதுவும் உண்மைகிடயாது. பரமாத்துமா என்பது மட்டுமே உண்மை.ஆனால் யதார்த்தம் அத்வைத தத்துவத்தை ஏற்க்கும் படியாக இல்லை.மண்டூகம் என்பது தவளையை குறிக்கும்.தவளை தான் வசிக்கும் கிணறு மட்டுமே உலகம் என்று நினைத்து கொண்டு வாழ்வது போல் அத்வைதிகளும் தங்களது தத்துவமே உண்மை என்கின்றனர்.
    ரமணர் பற்றி திராவிட கழகம் வெளியிட்ட நூலை வாங்கிப்படித்தால் உண்மை விளங்கும்.

    • உண்மையே , எல்லாம் தானா நடக்கும் என்னும் ‘குருக்கள்’ அடுத்த வேலை சோறு பற்றி கேட்டவுடன் நழுவும் பதில்களை சொல்வார்கள் எனினும் சுற்றி சுற்றி மீண்டும் ‘தான்’ இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்னும் ஒரு அதி நிச்சயமான புரிதல் ஒன்று ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை, உலகிலேயே ஒருவன் மாட்ட கூடிய உச்ச சிக்கல் இந்த அத்வைத பொறி. என்னால் எது உண்மை என முடிவெடுக்க முடியவில்லை. அதனால் தான் நண்பரை கேட்டேன்.
     ரமணர் பற்றிய புஸ்தகம் ஆன்லைனில் எங்காவது பிடிஎப் வடிவில் கிடைக்குமா?

     • ரமணர் பற்றிய புத்தகம் பெரியார் திடலில் கிடைக்கும் அல்லது தாங்கள் ஊரில் திராவிடர் கழகம் இருப்பின் அவர்களை கேட்க்கவும்.

      • அத்வைதம் பற்றி நண்பர் முரளியின் கூற்றை மற்றொரு கோணத்தில் பார்த்தால், இறைவன்/சக்தி என்பது எங்கும் நிறைந்திருப்பது, தூணிலும் இருப்பது, துரும்பிலும் இருப்பது. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் அந்த சக்தியின் வெளித்தோற்றம் பலவாறாக இருப்பதால் அதனை மாயை என்கிறார்கள். புழுவும் புத்தனும் ஒன்றே என்கிறது அத்வைதம். புழுவிற்கு மாயை அடர்த்தியாகவும் புத்தனுக்கு மெல்லியதாகவும் உள்ளது.
       இதன்படி பார்த்தால் பறையருக்கும் பார்ப்பனருக்கும் வேறுபாடு இல்லை.
       நடைமுறையில் அவ்வாறு இல்லாததால் இந்த தத்துவத்தில் முற்போக்கு இல்லை என புறம் தள்ளுவதா ? இல்லை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு ஒரு சிந்தனை முறை இருந்ததை கருத்தில் கொள்வதா ?
       நண்பர்கள் இது பற்றி படிக்க புத்தகங்கள் இருந்தால் பரிந்துரைக்கவும்.

       • தத்துவ நூல்களை முறையாக படிக்க வேண்டும்.அத்வைதம்,விஷிஷ்டாத்வைதம் …. இப்படி பற்பல நூல்கள் உள்ளன.
        1.மார்க்சிய மொய்ஞானம் /ஜார்ஜ் பொலிட்ஜர் எழுதிய நூல் NCBH வெளியீடு.
        2.இந்திய தத்துவத்தில் நிலைத்திருக்கும் அழிந்துவரும்./தேவி பிரசாத் சட்டேவுபாத்தியாயா-விடியல்பதிப்பகம்.

        இன்னும் பல தத்துவ நூல்களை கீழைக் காற்று பதிப்பகம்.NCBH,பாரதி புத்தகாலயம்…. போன்ற புத்தக கடைகளில் வாங்கி படிக்கலாம்.

 2. பேலியோ உணவு முறை குறித்த மருத்துவர் ஃபரூக் அப்துல்லா அவர்களின் பதிவுகளும் மிக நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள். அவற்றையும் வெளியிட முயற்சிக்கவும்.

 3. மீண்டும் மீண்டும் மரபு வழி மருத்துவத்தை மட்டுமே குறிவைத்து
  தாக்கும் வினவு தளம் ஆங்கில மருத்துவம் மாசு மருவற்றது என்ற
  பிம்பத்தை கட்டி அமைக்க முயல்கிறது.
  தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளை மற்றும் அனைத்து
  ஏழைமக்களுக்கும் போதிய அளவு அரசாங்க இலவச மருத்துவமனைகள் இல்லாமல் இருப்பது இதை பற்றி ஏன் வினவு வாய் திறக்க மறுக்கிறது?
  ஹீலர் பாஸ்கர் அறிவியல் அடிப்டையிலேயே பேசுகிறார்.
  அவரின் காணொளிகளை கண்டாலே இது விளங்கும்.

  • மருத்துவ முறைகளில் எது நவீன விஞ்ஞான வகைப்பட்டது என்பதுதான் விவாதமே ஆனால் புரிந்து கொள்ளாமல் விவாதம் செய்கிறீர்கள்.மேலும் விஞ்ஞானமே முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் அடியாளாக பணிபுரிகிறது அதனால்தான் நவீன மருத்துவமும் வியாபாரமாக கொள்ளையாக சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
   இன்றைய சூழலில் ஆன்மீகம்கூட கார்ப்பரேட் மயமாக மாறறப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி, மருத்துவம்….தரமாக இலவசமாக கொடுக்க வேண்டுமென போராடத்தான் வினவு கற்ப்பிக்கிறது.
   தயவுசெய்து வினவின் பழயகட்டுரைகளையும் தேடி படியுங்கள்.

 4. சித்த மருத்துவம் , ஆயுர்வேதம் ,ஹோமியோபதி போன்றவையும்
  அல்லோபதி போன்று அரசாங்க அங்கீகாரம் பெற்றதே.
  அறிவியல் பூர்வமானதே.
  அரசாங்க மருத்துவமனைகளிலேயே தனி பிரிவு உண்டு.
  அல்லோபதி மட்டுமே நவீனமானது அறிவியல் பூர்வமானது மற்றும்
  சிறப்பானது
  என்று கூற என்ன காரணம் ?
  பதில் சொல்லுங்கள் முரளி

  • பல்வேறு மரபுவழி மருத்துவத்தின் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் உள்வாங்கி நவீன விஞ்ஞான முறையின் வளர்ச்சிதான் அலோபதி மருத்துவம்.
   உற்பத்தி முறையில் பல்வேறு வகைகள் உள்ளன, சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பட்டறை முறை வளர்ச்சி அடைந்து நவீன முதலாளித்துவ உற்பத்தி உருவானது என்பது வரலாறு.அத்துடன் சந்தைக்கான உற்பத்தி அவசியமானதில் போக்குவரத்து, குறைந்த நேரத்தில் அதிகமான உற்பத்தி, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்….. ஆராய்ச்சிகள்…
   போன்றவை வளர்ச்சி அடைந்துதது.தொடர்ந்து ஆய்வுகள் அதை மேலும் வளர்ச்சிக்கு தூண்டியது.குறிப்பாக முதலாளித்துவ முறையினூடாக வளர்த்துதான் அலோபதி மருத்துவம்.
   மரபுவழி மருத்துவம் மிகவும் ரகசியமாகவே இன்றுவரையிலும் உள்ளது.வெளிப்படைதன்மை,ஜனநாயகம் என்பது இல்லாமை.இன்னும் பல போதாமைகள் தொடர்கிறது.உண்மையான விஞ்ஞான ஆய்வுகள் எந்த ஒன்றின் வளர்ச்சிக்கும் அவசியம்.

 5. /“மரபுவழி மருத்துவம் மிகவும் ரகசியமாகவே இன்றுவரையிலும் உள்ளது.வெளிப்படைதன்மை,ஜனநாயகம் என்பது இல்லாமை.இன்னும் பல போதாமைகள் தொடர்கிறது.உண்மையான விஞ்ஞான ஆய்வுகள் எந்த ஒன்றின் வளர்ச்சிக்கும் அவசியம்.”/
  என்று கூறுகிறீர்கள்.

  அலோபதி மருத்துவம் படித்த மருத்துவர் பசு மற்றும் எருமையின் பால் மனிதர்களுக்கு மிக மிக சிறந்த சத்தான சரிவிகித உணவு என்கிறார்.
  மரபணுவியல் படித்த அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்ற விலங்குகளின் பாலை மனிதன் அருந்தக்கூடாது கெடுதல் பயக்க கூடியது என்கிறார்.
  பசுவின் பால் கன்றுக்கு மிக மிக நல்லது. அதை மனிதன் அருந்தக்கூடாது.
  அது மட்டுமல்ல.
  ஆட்டின் பாலையும் மனிதன் அருந்தக்கூடாது.
  (அண்ணல் காந்தியடிகள் அக்காலங்களில் ஆட்டின் பாலை அனைவருக்கும்
  பரிந்துரை செய்தார் )
  இதுவே மரபணுவியல் படித்த அறிவியல் ஆராய்ச்சியாளரின் திடமான முடிவு.
  இந்த இருவரின் வாக்குவாதம் “நீயா நானா” நிகழ்ச்சியில் அரங்கேறியது.
  இந்த இருவரின் கருத்தும் நவீன அறிவியலின் ஆராய்ச்சி முடிவுகள்தானே?
  ஏன் இந்த முரண்பாடு?
  மரபுவழி மருத்துவத்தின் குறைகள் என வெளிப்படைதன்மை,ஜனநாயகம் என்பது இல்லாமை மற்றும் ரகசியம் என் குற்றசாட்டுகளை அடுக்கும் இவ்வேளையில்
  நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் இரண்டின் முடிவுகள் வெளிப்படையாகவே குழப்புகின்றனவே ஏன் ?

 6. த.தினகரன் ஆய்வு மாணவர்(பிஎச்டி) பச்சையப்பன் கல்லூரி

  வணக்கம் தோழர்களே, தங்களின் கட்டுரையின் நோக்கம் என்பது வினவின் தனிப்பட்ட கருத்தா அல்லது பரந்துப்பட்ட மக்களின் கருத்தா என்பது எனது கேள்வி. சரி விசயத்திற்கு வருவோம் மரபு வழி மருத்துவத்தினால் ஏற்படும் ஆபத்தை உணர்த்த முகலாய மன்னன் ‘ஷாஜகான் மனைவி மும்தாஜ் பற்றிய ஒப்பீடு என்பது தவறானது. அதாவது மரபு வழி மருத்துவத்தில் சுகப்பிரசவம் என்பது மட்டுமே நடந்தேரியது. அதில் தாங்கள் குறிப்பிடுவது போல் சில உயிர் இழப்புகள் நடந்தேரின என்பது மறுக்க இயலாது தான் ஆனால் மருத்துவம் வளர்ச்சி அடைந்த காலத்தில் பெரும்பாலும் சுகப்பிரசவம் என்பது கிடையாது. மேலும் ஈமோகுளோபின் குறைபாட்டால் வரும் இழப்பு என்பது சரிகட்டப்படுவது கிடையாது. இங்கு வினவு திரும்ப திரும்ப சொல்ல வருவது உலகமயமாக்கலின் காரணமாக கார்பரேட் நிறுவனங்களின் கொள்ளை கூடமாக மாறிய மருத்துவத்தை தான் சரியான மருத்துவம் என்கின்றார்கள். மரபு வழியையும், நவீன மருத்துவத்தையும் இனணத்து இறப்புகளை குறைப்பதற்கு நவீன மருத்துவத்தில் இல்லை. மேலும் ஸ்கேன் என்ற பெயரில் கருவறையில் உள்ள நீரின் அளவு குறைகின்றது என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அதை எல்லாம் மறைத்து விட்டு மரபுவழியில் தான் உயிர் இழப்புகள் என்ற கார்பரேட் கொள்ளையர்கள் போல் உரையாற்றுகின்றார்கள் இந்த வினவுகாரர்கள். மருத்துவம் என்பது சுயசார்பானது. தற்சார்பு பற்றி பேசிய பாஸ்கர் முன்வைத்த மருத்துவம் என்பது தற்சார்பு அதாவது மரபுவழியில் மருத்துவம் பார்பது மட்டுமின்றி பெண்களை தற்காத்துக்கொள்வதும் ஆன மருத்துவம் அதில் ஏற்படும் சிறு சிறு குறைகளை களைந்தால் நாம் மருத்துவத்தில் கார்பரேட் கொள்ளையர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதாகும். எனவே தயவு செய்து கார்பரேட் கொள்ளைக்கு துணைபோகும் வினவுக்கு தற்சார்பு அவசியமில்லை போலும் அந்நியனிடம் மருந்துக்கு கையேந்த வழி சொல்கிறார்கள். இந்த வினவுகாரர்கள்.
  நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க