பெரும் வெள்ளத்தால் நிலைகுலைந்த கேரள மக்களின் துன்பம் முடிவே இல்லாமல் நீள்கிறது! வரலாறு காணாத வெள்ளத்தால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5600-க்கும் மேற்பட்ட முகாம்களில் 7,00,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயமும் சுற்றுலாவும் 20 சதவீகிதத்திற்கும் அதிகமாக பங்களிக்கின்றன. எண்ணிப் பார்க்க முடியாத படி உடைமை இழப்பு, விவசாய நிலங்கள் மற்றும் உற்பத்தி இழப்பு அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் சின்னா பின்னாமாக்கியுள்ளது. அம் மக்களின் துன்பத்தை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் காது கொடுத்து கேட்கின்றனர். பிற மாநில அரசுளும் தோள் கொடுக்கின்றன. இருப்பினும் பா.ஜ.க செல்வாக்குள்ள மாநிலங்கள், நபர்கள் மட்டும் துவேசத்துடன் கேரளாவை பார்க்கின்றனர். பிழைப்புக்காக கேரளத்தைவிட்டு தமிழகம் வந்து சென்னையில் வசிக்கும் கேரள மக்களைச் சந்தித்தோம்.

#KeralaFloods #StandWithKerala

ரமேஷ், பாலக்காடு.

வெள்ளத்த பத்தி தொடர்ந்து டிவியில காட்டுனாங்க. ஆனா, இவ்ளோ தீவிரமா இருக்குமுனு சொல்லல. மழை வந்து வந்து போச்சு. ஒரே நாள்ல பத்துநாள் மழை கொட்டிச்சு. அதான், இவ்ளோ பெரிய பாதிப்பு. டேம் எல்லாம் ஒரே நேரத்துல தொறந்து வுட்டதும் பாதிப்புக்கு காரணம். வேற வழியில்லனு சொல்றாங்க. அது அப்படியில்லை. டேம் வீக்காயிருக்கிறதாலதான் தொறந்துவுட்டுட்டாங்க, ஒடஞ்சிரும்னு. அத சீரமைச்சிருந்தா ஸ்ட்ராங்கா இருந்திருக்கும், பயப்பட வேண்டியதில்லை. இருந்தாலும், இந்த வெள்ளத்தை தாத்தா காலத்துலயே பார்க்கலைங்கிறாரு.

உண்ணிகிருஷ்ணன், பழச்சேரி. (பாலக்காடு பக்கம்)

அண்ணன்தான் வந்தாரு மெட்ராசுக்கு முதல்ல. அப்புறம் நான் வந்தேன். இப்போ வந்து எங்க ஆளுங்க யாரும் அங்க இல்லை. இருந்தாலும் மோசமா பாதிச்சிருக்கு. தெரிஞ்சவங்க சொந்தகாரங்க ரொம்ப கஷ்டபட்றதா சொன்னாங்க. எங்க ஓணரு இப்ப போயிருக்காரு, பார்க்கிறதுக்கு. போக்குவரத்து இல்லைனு போன் பண்ணினாரு. வந்தாதான் தெரியும்.

ராஜன், பாலக்காடு, ஒட்டப்பாளையம்.அங்க எல்லாம் கண்டமாயி போயிருக்கு. ரோடு கண்டம். வீடு கண்டம். விவசாயம் கண்டம். எல்லாம் வெள்ளமாயிருக்கு. நேத்து நைட்டுதான் அங்கிருந்து வந்தேன். வண்டி இல்லை. பல வண்டி மாறி வந்தேன். ஒரு அண்ணன்தான் அங்க இருக்காரு. அவங்களுக்கு  எல்லாம் போச்சி. 45 வருஷ உழைப்பு. இப்ப எதும்இல்ல. ஆனா, கவர்மண்ட குறை சொல்ல முடியாது. நிவாரணம் எல்லாம் ஒத்துழைப்பா செய்றாங்க. நல்லா பன்றாங்க. மோடி வந்து பாத்தாரு. உதவி பன்றமுனு சொல்லியிருக்காரு. அவங்க கணக்கு வழக்கெல்லாம் பாக்கனுமில்லையா. எல்லாம் துண்டு துண்டாயிருக்கு ஒரு வண்டி கூட உள்ள போகமுடியாது. எவ்ளோ நஷ்டம்னு இப்போ தெரியாது. அதான் இப்ப பிரச்சினை அங்க.

மதுசூதணன், மார்த்தாண்டம்.கேரளாவிலிருந்து மார்த்தாண்டம் வந்தேன். மெட்ராசுக்கு வந்து 50 வருஷமாச்சு. நான் வந்து நாலு நாள்ல அண்ணாதுரை செத்தாரு. இங்க நாங்க தமிழ்நாட்டு நாயர் சர்வீஸ் சங்கம் வச்சிருக்கோம். சென்னையில மட்டும் 15 கிளைகள் இருக்கு. அதை நாங்க கரையோகம் சொல்வோம். அதுல வந்து சராசரியாக 500 பேரு, 400 பேருனு இருக்கோம். அதுல வந்து 4000 பேர் இருப்போம். இது மூலமா நாங்க 14 லட்சம் வசூல் பண்ணி, வெள்ள உதவியா கொடுத்திருக்கோம். இதே மாதிரி கேரளத்துக்காரங்க எஸ்.எல்.டி.பி.னு சங்கம் வச்சிருக்காங்க. அவங்கள ஈழத்துக்காரங்கனு சொல்வோம். அவங்களுக்கு கோகுல் கோபாலன் தான் தலைவர். அவுங்களும் வெள்ளத்துக்காக பல உதவிகள் செய்றாங்க.

அங்க வயநாடு, கொட்டநாடு, அடிவாரம் மொத்தமும் ஜனங்க நிர்க்கதியா நிக்கிறாங்க. மலை மேட்டு வாக்குல வசதியாயிருக்கவங்க வாழ்வாங்க. அடிவாரத்துல சாதாரண ஜனங்கதான் இருப்பாங்க. அவங்க வீடும் நிலமும்தான் மண்மூடி போச்சு. ரப்பர், தேக்கு, எல்லாம் மொத்தமா போச்சு. மோடி ஆயிரம் கோடி கேட்டா நூறு கோடி கொடுக்கிறாரு. இருபதாயிரும் கோடி நஷ்டம்னா 500 கோடி தராரு. நம்ம அழுதாலும் பொறண்டாலும், அவங்க பாத்து பாத்துதான் கொடுப்பாங்க. நாம  என்ன செய்யிறது.

பாபு, கண்ணனூர், கரசேரி அருகில்.நா இங்க வந்து நாலுமாசம்தான் ஆகுது. டீக்கடையில் வேலை செய்யிறேன். திரும்ப நைட் 12 மணிக்குதான் வருவேன். அங்க எதுவும் பேச முடியல. போனும் இல்லை. எங்குழந்தைங்கெல்லாம் அங்கதான் இருக்குது. எதுவும் தெரியல. அதான் பேப்பர் பார்த்துட்டு இருக்கேன்.

சுசீலா கோபாலன், மலப்புழா, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சங்க துணைத்தலைவர். கலாக் கைரளி அமைப்பின் உறுப்பினர்.

நாங்க இங்க 52  வருசமா இருக்கிறோம். இந்த மாதிரி வெள்ளத்த எங்க மண்ணுல நாங்க பாத்ததில்லை. பெரும் வெள்ளம், நிலச்சரிவுலதான் மக்கள் பெரிசா பாதிச்சிருக்காங்க. அங்க மலப்புழா இடுக்கி எல்லாம் மண்சார்ந்த மலை அமைப்பு உள்ளது. அதனால அங்க பாதிப்பு நெனச்சி பார்க்க முடியாத மாதிரி இருக்கிது. அதுக்கு மேல கோட்டயம், பத்தனம்திட்டா அந்த மண் அமைப்பு பெரும் பாறை அமைப்பு. அங்கு சரிவு. சேதாரம் கம்மி. இதுல வந்து அரச குறை சொல்ல முடியாது. எல்லா கட்சி காரங்களும் ஒண்ணா சேர்ந்து இப்போ நிவாரணம் பணி செய்றாங்க. மண்சரிவில வர்ற வெள்ளம் புது புது ஆத்துக் கிளைகள உருவாக்குது. புது புது நீர்ப்போக்கு எந்தப் பக்கம் வருதுன்னே தெரியாம எல்லாத்தையும் அரிச்சிகிட்டு போது. அங்கல்லாம், ஆதிவாசி பழங்குடிங்க பாதிக்கப்பட்டிருப்பாங்க. அவங்களுக்கல்லாம் முறையான குடியிருப்பல்லாம் இல்லை.

கோபாலகிருஷ்ணன்.

என் வயசுக்கு இந்த வெள்ளம், இந்த இழப்பு பெரும் கவலையாயிருக்குது. எங்க வீடு எந்த பாதிப்பும் இல்லை. நாங்க பம்பை ஆத்து கரையிலதான் இருக்கிறோம். அது 150 அடி உயரத்துல எங்க வீடு இருக்கு. ஆனா, கீழ எல்லாம் பெரிய பாதிப்பு. ஒரு வாரமா மனசுக்கு கஷ்டமா இருக்கு. அங்க போக முடியல.

முகமது ஷெரீஃப், தலச்சேரி பக்கம் வென்காரா.

அங்க அஞ்சி நாளா கரண்ட் இல்ல. தண்ணி இல்ல. எதுவுமே இல்ல. ஒரே இடத்துல 22,000 பேருக்கு மேல வீடு எழந்திட்டாங்க. 350 கேம்ப்ல அவங்கள தங்க வச்சிருக்கிறதா நியூஸ் வருது. இருக்கிற எடத்துலயும், பாம்பு இருட்டுனு குழந்தைங்கள வச்சிட்டு ரொம்ப கஷ்டபடுறதா சொல்றாங்க. இவ்ளோக்கும் மலப்புரத்துல ஒரு டேம் கூட இல்லை. டேம் இல்லாத மாவட்டத்துலயே இவ்ளோ சேதாரம். அதுக்கு காரணம் பாரத்புழானு பெரிய ஆறு. அதுவந்து வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் புரளுது.

இவ்ளோ பெரிய இழப்புக்கு மோடி அரசு எதுவும் செய்யலை. 20,000 கோடி நட்ட ஈடு அது முடிவில்லை. இதுக்கே 500 கோடிதான் தாரேனு சொல்லிருக்காரு. மத்ததல்லாம் அவரு கொடுக்கும்போது, நிவாரணப் பணி எப்போ முடியும். இதுமாதிரி இருந்தா 15 வருசமாகும், இழந்தத மீட்கறதுக்கு. அவங்க பி.ஜே.பி.காரங்க வேகமா எங்களுக்கு உதவணும். அவங்க எங்களுக்கு உதவமாட்டாங்க. ஏன்னா., நாங்க பி.ஜே.பி.யை ஆதரிக்கல. இனி ஆதரிக்கவும் மாட்டோம். அது அவங்களுக்குத் தெரியும். அதான் காரணம்.

இவ்ளோ பெரிய வெள்ளத்துக்கு காரணம் இயற்கையின் சீற்றம்தான். கல்லுடைக்கிறது, மரம் வெட்டுறது, காட்ட அழிக்கிறது இதல்லாம் முக்கிய காரணுனு சொல்றாங்க. அப்படியில்லை. இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் இயற்கைதான்.ஆண்டோ, கொல்லம், புணலூர். (புகைப்படம் தவிர்த்தார்)

இந்த மண்சரிவுனு சொல்றீங்க. நாங்க உருள்பொட்டல்னு சொல்வோம். செங்கணூர்லதான் பாதிப்பு அதிகம். அங்க, அம்பது வீடு ஒரே எடத்துல மண்மேடாச்சு. இதுவந்து பி.ஜே.பி. காங்கிரசுனு காரணம் சொல்லிட்டு இருந்தா வேலைக்கு ஆவாது. மழைகாலம் வருசம் வருசம் வரும். இன்னும் எச்சரிக்கையாயிருந்திருந்தா இன்னும் கொஞ்சம் சேதாரம் கொறைஞ்சிருக்க வாய்ப்புண்டு. ஆனா, அப்படி நடந்திருக்க முடியுமானு சொல்ல முடியாது. ஒருநாள்ல பத்துநாள் மழை பேஞ்சதுனு சொல்றாங்க. இது எதிர்காலத்துல இப்படி நடக்காம பார்த்துக்கணும். இந்த வெள்ளத்துக்கு உயிர்ச்சேதாரம் கம்மிதான். அந்தளவுக்கு உள்ளூரிலே நிறைய உதவி செய்றாங்க. சோசியல் மீடியாதான் எங்களுக்கு பலமா இருக்கு. அதுலதான் நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிறோம். ஒதவி செஞ்சிக்கிறோம். தொடர்பு பண்ணிக்கிறோம்.

வாசு, திருச்சூர்.

எனக்கு சரியா காது கேக்காது. மக, மக்க, மருமக-ல்லாம் அங்கதான் இருக்காங்க. ரொம்ப கஷ்டம். என்ன சொல்றது, என்ன செய்றதுனு தெரில. ஒன்னும் புரியல.

பாபு, தலச்சேரி.

மெயின்ரோடுனு இல்ல எந்த ரோடும் அங்க இல்லை, இப்போ. சின்னாபின்னமாயிருச்சி. கிரஷர் பாறை உடைக்கிறது. அப்புறம் காடு அழிக்கிறது அதுதான் காரணம்னு சொல்றாங்க. ஆனா, இந்த வெள்ளத்துக்கு அத காரணமா சொல்ல முடியாது. இந்த வெள்ளத்துக்கு உதவுறது எல்லாரும் ஒத்துமையா செய்றாங்க. குறிப்பா மந்திரிங்க கைலி கட்டிகிட்டு, முழங்கால் தண்ணியிலதான் நாளு பூரா நிவாரண வேலை செய்றாங்க. இங்க அதல்லாம் பார்க்க முடியாது. ஒரு கவுன்சிலர் போனா நூறு பேரு பின்னாடியே போவாங்க. வெள்ள நிவாரணத்துக்கு போனா கூட பத்து காரு பின்னால வரணும். மந்திரி போற கார்ல பத்து பேரு தொங்கிட்டு போவாங்க. இத்த மாதிரி அதிரிபுதிரி காமிக்கிறாங்க. அங்க அதுமாரி இல்ல. அங்க மக்களோட மக்களா வேலை செய்யிறாங்க. எந்த செக்யூரிட்டியும் இல்லை.

ஆலப்புழா மந்திரி நிதி அமைச்சர் ஐசக் நிதிமந்திரி மழையில நனைஞ்சிட்டுதான் கொடையோட அங்க அலையறாரு. நீங்க கூட டி.வியில பார்க்கலாம். இதுவே சனங்களுக்கு வந்து பெரும் உதவியா இருக்கிது. எல்லா கஷ்டமும், எல்லோரும் பகிர்ந்திகிராங்க. இந்த கஷ்டம் சரியாவறதுக்கு பதினைஞ்சு வருசம் ஆவும். ஏதோ வெள்ளம் வடிஞ்சா நிலைமை சரியாகும்னு நினைக்க முடியல. மண்சரிவுல வீடு பொதஞ்சி போச்சி. நிலம் எல்லாம் பாறாங்கல்லாகி போச்சு. ஒவ்வொரு பாறாங்கல்லும் ஒரு லாரி சைசுக்கு இருக்கிது. இந்த காலத்துக்கு அந்த விவசாய நிலத்தையும் சரி பண்ண முடியாது. திரும்பவும் வீடயும் கட்ட முடியாது. வீடும் விவசாயமும் நிரந்தரமா போச்சு. வீடுக்கு இப்போ ரெண்டு லட்சம் கொடுக்கிறதா சொல்றாங்க. அத 5 லட்சம் கொடுத்தாலும் பாதிக்கப்பட்டவுங்களுக்கு காணாது. இதுக்கு எல்லா கவர்மெண்டும் சேர்ந்து ஸ்டெப் எடுத்தாதான் முடியும்.

  • வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் உயிருக்கும் உடமைகளுக்கும் ஆன சேதங்கள் கவலை தரக்கூடியவைதான். அதற்காக நாமும் நமது அரசாங்கமும் முடிந்தவரை நிவாரண பொருட்கள் சேகரித்து அனுப்பலாம். அதற்குமேல் நாம் இவர்கள் மீது கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. ஈழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரம் தமிழ் மக்கள் சாகடிக்கப்பட்ட போது இவர்கள் எல்லாம் எக்காளம் இட்டவர்கள். தமிழகத்தில் இருக்கும் மலையாளிகள் கூட ஈழ மக்களுக்கான தமிழக போராட்டங்களை முடிந்தவரை கொச்சை படுத்தினார்கள். தமிழகத்தில் இருந்து கொண்டு இங்கு இருக்கும் மத்திய அரசு நிறுவனங்களில் பணி செய்துகொண்டு தமிழ்நாட்டிற்கு எதிராகவும் தமிழர்களுக்கு எதிராகவும் சிந்திப்பவர்கள் இவர்கள். உலக அளவில் தமிழ் மக்களை ஒழிப்பதற்கு எப்போதுமே மலையாளிகளின் பங்கு உண்டு.ன தென்னக ரயில்வேயில் இவர்கள் செய்யும் அநியாயங்களுக்கு அளவே இல்லை. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து பேசவே தேவையில்லை. இந்த உண்மைகளை சொல்வதால் இன வெறியன் என்னும் பட்டம் எனக்கு கொடுக்கப்படலாம் இருந்தாலும் மனதில் உள்ளதை சொல்லித்தான் ஆக வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க