ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் கவனிப்பு அறிவுறை, ஆலோசனைகள், மருத்துவருடன் கலந்தாய்வு, மருத்துவப் பரிந்துரைப்படி உணவு, மாத்திரை என்பது வெறுமனே ஆரோக்கியம் மட்டுமே சம்பந்தப்பட்டது அல்ல. கர்ப்ப கால பராமரிப்பில் உயரம், எடை, நோய்கள் கண்டறிதல், நோய்கள் தன்மையறிந்து குணப்படுத்துதல், குழந்தைகளின் ஆரோக்கியமான  வளர்ச்சியை உறுதி செய்தல், தாயின் தூய்மை சூழலை பராமரித்தல் என கர்ப்ப காலம் முழுக்க அதன் பிறகும் தாய் சேய் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் நவீன மருத்துவத்தின் பணி.

ஆனால், ஹீலர் பாஸ்கர் போன்றவர்களோ “அனாடமிக் தெரபி”, “செவி வழி தொடு சிகிச்சை” என்ற பெயரில் பேசுவதைக் கேட்டாலே இது பேறு காலத்தின் ஆலோசனையா? மரண கால ஆலோசனையா? என்ற சந்தேகம் எழுகிறது.

வீட்டிலேயே பிரசவம் எனும் ஹீலர் பாஸ்கர்களின் கருத்துக் குறித்து, சென்னையின் நூற்றாண்டு கால பழமை வாய்ந்த கோஷா பெண்கள் மருத்துவமனை மற்றும் எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மகளிர் நோயியல் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவனை-யில் பிரசவத்திற்கு வந்திருந்த பெண்கள் பேசுகிறார்கள்.

சல்மா.

ஆஸ்பித்திரிக்கு வரதுதான் சேஃப்டி. ஆயா காலம் என்பது வேற, இப்ப பசங்க காலம் வேற… எங்கம்மா, பாட்டி கை வைத்தியத்துல தான் எங்கள பெத்தாங்க. அந்த பாட்டி கிராமத்துக்கே பிரசவம் பார்த்தவங்க. அவங்க வயசுக்கு நூறுக்கும் மேல பிரசவத்த பார்த்தவங்க. ஏதோ திடீர்னு ஒரு பிரசவம் பார்த்த அனுபவம் இல்ல. பெரியவங்க, பிரசவங்கறது மறு ஜென்மம்னு சும்மா சொல்லல. பிரசவம் என்ன விளையாட்டா..? உயிர் சமாச்சாரம்.  அதே பாட்டிங்க, என்னால முடியாது தலை புரண்டு இருக்குது, குழந்தைக்கு பனிக்குடம் உடஞ்சிருச்சி.. டாக்டர்கிட்ட சீக்கிரம் போங்கன்னு சொல்லியிருக்காங்க. அதுக்கப்புறம் ஆஸ்பித்திரிக்கு போகும்போது வழியிலயே பல உயிர் போயிருக்கு. அந்த உயிர்ப்பலி இப்ப திரும்பவும் தேவையா? டாக்டர்கள் பாக்குற பிரசவமும் சில சாவுல தான் முடியுதுன்னு சில முட்டாளுங்க தான் சொல்லுவாங்க.

செல்வம், டிரைவர்.

என் பொண்டாட்டிய ஆஸ்பித்திரில சேர்த்திருக்கேன். இரண்டாவது பிரசவம். இங்க டாக்டருங்க ஒழுங்காதான் கவனிக்கிறாங்க. தேவைன்னாதான் சிசேரியன் செய்யனும்னு சொல்லுறாங்க. பணம் கட்டி பாக்குற தனியார் ஆஸ்பித்திரியில தான் பல கோல்மால் பன்னுறாங்க. அங்க ஏன் போறீங்க? உப்பு தின்றவன் தண்ணிய குடிக்கிறான். பணம் இருக்கவன் செலவு பன்றான். அதுக்காக ஆஸ்பித்திரிக்கே போக கூடாதுன்னு வீட்டுலயே பிரசவம் பார்க்கனும்னு முட்டாளுங்க தான் சொல்லுவங்க.

சிவசங்கரி, கோஷா மருத்துவமனை முன்னாள் ஊழியர்.

மருமகளை டெலிவரிக்காக ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கேன். எத்தன டெஸ்ட்? எப்படி எல்லாம் கவனிக்கிறாங்க.? தாயிக்கு ரத்தம் கம்மியா இருக்குது, பி.பி. அதிகமா இருக்குது, சக்கரை கூடிடுச்சி இதுக்கு இந்த மாத்திர, இந்த ஊசின்னி சொல்லி சொல்லிக் கொடுக்குறாங்க…. இதை வீட்ல யாரு கொடுப்பாங்க? யாரு பார்ப்பாங்க?

தேவி, கூடுவாஞ்சேரி.

என் ரெண்டாவது பொண்ண இடுப்பு வலின்னு கூட்டி வந்து சேர்த்திருக்கேன். நாலு பொண்ணுங்க எனக்கு. எல்லாரும் கவர்மெண்டு ஆஸ்பித்திரியில தான் குழந்தைகள பெத்தாங்க. அதுங்கள இங்க சேத்த பிறகு தான் நம்மளுக்கு உசுரே வருது. வலி வர நேரத்துல நம்மளுக்கு மடியில நெருப்பு கட்டினு இருக்க மாதிரி இருக்கு. வீட்டுலயே அதுங்க வலிய பார்த்துனு இருக்க முடியுமா? பைத்தியக்காரன் கூட அப்படி பார்த்துனு இருக்க மாட்டாங்க. பதறுவாங்க. எவனுங்க இப்படி வீட்டுலயே பிரசவம் பாக்கனும், வெளில பாக்க கூடாதுன்னு சொன்னானுங்க. அவனுங்கள இட்டுனு வாங்க. இப்ப என் பொண்ணு கதைய கேளுங்க…

”போன அவ உயிரை புடிச்சி என் கையில கொடுத்துட்டாங்க டாக்டருங்க. அவ கர்ப்பமாகி ஏழு மாசம் தான் ஆகுது. திடீர்னு தலை சுத்தி பாத்ரூம்ல விழுந்துட்டா. பதறி நாங்க போயி தூக்குனா, கண்ணு தெரியலமான்னு அழுவுறா. என்னா பன்றதுன்னு எங்களுக்கு மூச்சே நின்னு போச்சி. இங்க ஆஸ்பித்திரிக்கு தூக்கினு ஓடியாந்தேன். டாக்டருங்க எல்லாம் பார்த்துட்டு பி.பி. ஓவர்னு சொன்னாங்க. அதுக்கு மாத்திரை, மருந்து, டெஸ்டுன்னு எடுத்து எடுத்து பெரிய உசுர காப்பாத்திடாங்க. சின்ன உசுரு வயித்துலயே செத்துடுச்சி. பெட்ல சேர்த்து  அஞ்சி நாளாச்சி. இப்ப கண் பார்வையும் திரும்பிடுச்சி. இப்பதான் எங்களுக்கும் மூச்சி வந்தது. எவ்ளோ டெஸ்ட், எவ்ளோ கவனிப்பு. ஒரு நிமிஷம் கூட முக்கியம். உடனே கவனிக்கனும். அதுக்கு தானே ஆஸ்பித்திரி. ஒரு பக்கம் ரத்தம் ஏத்துறாங்க. ஒரு பக்கம் டெஸ்ட் பன்னுராங்க. வீட்டுல இதெல்லாம் நடக்குமா? வீட்ல எல்லாம் சேர்ந்து சாவரத வேடிக்கை தான் பார்க்கலாம். இது வரைக்கும் எனக்கு இரண்டாயிரபா தான் செலவு. அதுவும் எனக்கு பஸ்ஸு செலவு, சாப்பாடு செலவு தான். வெளில தனியாருகிட்ட போயிருந்தா தான் இரண்டு லட்சம் கொடுத்திருக்கனும். கடைசியில அவ உயிரும் வந்திருக்காது.

ஜெயலட்சுமி, கண்ணகி நகர். வீட்டு நோயாளிகளை பராமரிப்பவர்.

நான் இங்க தான் பொறந்தேன். ஆஸ்பித்திரிதான், ஆங்கிலம் மருத்துவம்தான் நவீனமா? அப்பல்லாம் கிணத்து தண்ணிய அப்படியே மொண்டு குடிச்சோம். இப்ப கேன் தண்ணி வந்துடுச்சி. அது நவீனம் இல்லையா?  இதெல்லாம் பாட்டி காலத்துல இருந்ததா?

அப்ப பப்பாளி பழத்த கொடுத்து கர்ப்பத்த கலச்சாங்க. இப்ப ஊசி போட்டுக்குறாங்க. இப்ப குறை பிரசவத்துல பொறந்த சிசுவக் கூட அழகா உயிர் பொழக்க வச்சி டாக்டருங்க கையில கொடுக்கிறாங்க. அவ்ளோ ஏன். தாய் இறந்துபோனா கூட  வயித்துல இருக்க சிசுவ உயிரோட வெளிய எடுக்குறாங்க. இது ஆஸ்பித்திரியில தான் நடக்கும். வீட்ல நடக்குமா?

கற்பகம், தேனாம்பேட்டை.

வீட்டுலயே பிரசவம், நாட்டு வைத்தியம் இதெல்லாம் ஏமாத்து. நவீன் பாலாஜின்னு டி.நகர்ல ஒரு நாட்டு வைத்தியர் இருக்காரு. போஸ்டர் ஒட்டி இருந்ததை பார்த்துட்டு  மூட்டு வலி இருக்குதேன்னு  அவராண்ட போனேன். வந்தவங்க எல்லோரையும் ஒரு ரூம்ல உட்கார வச்சிட்டு நடுவுல டேபிளை போட்டு உட்கார்ந்துக்கினு மைக்குல பேச ஆரம்பிச்சிட்டாரு. உங்க எல்லோருக்கும் உடம்பு சரியாயிடும், குணமாயிடும்னு மொத்தாமா கிளாசு எடுத்தாரு. கொஞ்ச நேரத்துக்கு பிறகு யார், யாரு எல்லாம் மருந்து சாப்பிட்டாங்களோ அவங்க எல்லாம் வந்து பேசுறாங்க. “நான் மருந்து சாப்பிட்டேன். எனக்கு குணமாகிடுச்சி. ஓட்றேன், ஓடியாரேன். இளமையா இருக்கிறேன்”ன்னு பேசுனாங்க. எனக்கு அந்த நேர…ல்லாம் வலின்னா வலி… உயிர் போவுது எனக்கு. இருந்தாலும் எல்லாரும் நல்லாயிடுதேன்னு சொல்றாங்களே. நமக்கும் சரியாயிடும்னு நெனச்சேன். எனக்கு ப்ளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட். அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்டுன்னு மொத நாளு அஞ்சாயிரம் ஆயிடுச்சி. மறுநாள் வர சொன்னாருன்னு போனேன். கொஞ்சம் மாத்திரை எல்லாம் எழுதிக் கொடுத்து பத்தாயிரம் வாங்கினாரு. அந்த மருந்து ஒன்னொன்னும் ஆயிரம் ரூபா. தாலி செயினை அடகு வச்சி கொடுத்தேன். அந்த மருந்த சாப்பிட்ட கொஞ்ச நாள்ல வலி இன்னும் அதிகமாயிடுச்சி. நிக்க, கொள்ள முடியல. ஆளு கூட்டிட்டு போற மாதிரி ஆகிடுச்சி. அப்புறம் அவங்களுக்கு போன் பன்னி கேட்டேன். இன்னாங்க, உங்ககிட்ட வரும்போது நல்லாதான் நடந்து வந்தேன். இப்ப வீல் சேர்ல வர மாதிரி ரொம்ப அதிகமாயிடுச்சே’ன்னேன். அதுக்கு அந்த டாக்டர், “இல்லம்மா….. அது வலி குடுத்துதான் அப்பறமா அடங்கும். திருப்பி மூணாயிரம் ரூபா குடு அந்த வலி கம்மியாவரதுக்கு”னு சொன்னாங்க. அப்புறம் மோதரத்த கொண்டுபோயி வச்சிட்டு மருந்து வாங்கிட்டு வந்தேன். அப்பவும் சரியாவல. அப்புறம் “உனக்கு மஜாஜ் பன்னனும்”னு சொன்னாங்க. ஒருறொரு முறையும் எதையாவது வச்சிட்டு போறதா இருக்கு அதனால நான் வர்லனு சொல்லிட்டேன். அவங்க ஒரு மாசத்துக்கு மருந்து கொடுத்தாங்க. அத பதினைந்து நாள்தான் சாப்டேன். அப்படியே வுட்டுட்டு இங்லீஸ் மருந்துக்கு மாறிட்டேன். அப்புறம்தான் சரியாச்சே. அதுல இருந்து எந்த நோய் நொடின்னாலும் ஆஸ்பித்திரிக்கு தான் வரதே. அந்த காலத்துல பாட்டி வைத்தியம் இருந்துச்சி. ஊருக்கு ஒருத்தவங்க இருந்தாங்க.  ஏதோ பச்சிலையை கொண்டு வந்து நோயிக்கு ஏத்த மாதிரி கொடுப்பாங்க. இப்ப எந்த பச்சிலை இருக்கு. பாட்டி இருக்கு. இப்ப இருக்க யாருக்கும் எதுவும் தெரியாது. இப்ப எதுனாலும் ஹாஸ்பிடலுக்கு தான் வரனும். என்னோட பொண்ணு நல்லாதான் படுத்து தூங்கிட்டு இருந்தா. திடீர்னு பனிக்குடம் உடஞ்சி தண்ணியா கொட்டுது. விடியகாத்தால நாளு மணிக்கு இங்க கூட்டிட்டி வந்தேன் பெட்ல சேர்த்திருக்காங்க. இதெல்லாம் அந்த காலத்துல முடியுமா? இல்ல வீட்லதான் முடியுமா?

ரகுமான் பீ, கணவர் காய்லாங்கடை வியாபரம்.

கையில காசு இருக்கவன் வைத்தியன் பாக்குறான், பாக்காத இருக்குறான்,  அது அவன் இஷ்டம். ஆனா எங்கள மாதிரி ஏழைங்க ஆஸ்பித்திரிக்கு போயிதான் உயிரை காப்பாத்திக்கனும். நாங்க உயிரோட இருந்தா தான் குழந்தைங்கள காப்பாத்த முடியும். இல்லனா எங்க குழந்தைங்க நடுத்தெருவுல தான் நிக்கும். அதுக்கு நாங்க சொத்து சுகம் எதுவும் சேர்த்து வக்கல. இதுங்க பேச்சு கேட்டு வீட்டுல பிரசவம் பார்த்தா நாங்க மொத்தமா மோசம் போகனும். ஆண்டவன் துணை இருந்தாலும் ஆஸ்பித்திரி தான் உயிர திருப்பி தரும். வீட்டுல இருந்தா எந்த ஆண்டவனும் வைத்தியம் பாக்க வராது. நா…னறிஞ்சி அஞ்சாரு தலைமுறையா கவர்ன்மெண்ட் ஆஸ்பித்திரி தான்  குழந்தைங்க உயிரை காப்பாத்துது. வீட்டுல யாரும் காப்பாத்தல.

ஆயிஷா.

ஏங்க, இன்னா பேசுறிங்க? பிரசவன்னா, சளி புடிக்குற விஷயமா, சுக்கு கசாயம் குடிச்சி வீட்டுலயே சரி பன்னிக்கிறதுக்கு. இல்லனா கை, கால் குடைச்சலா தவுடு ஒத்தடம் கொடுக்கிறதுக்கு? பிரசவத்துக்கு ஆஸ்பித்திரிக்கு போவக்கூடாது… அல்லோபதி வைத்தியம் பாக்கக் கூடாதுன்னு எந்த முட்டாள் சொல்றான்?

முத்துலட்சுமி, கணவர் மீனவர்.

தாயிக்கு மட்டுமில்ல.. கர்ப்பத்துல இருக்க கருவுக்கு என்ன குறைன்னு கருவுலயே கண்டுபுடிக்கிறாங்க. கேன்சர், டயாபெட்டிசு, சுகர்னு மட்டுமில்ல, மூள வளர்ச்சி இல்ல, முதுகுத் தண்டு நேரா இல்லனு கண்டுபிடிக்குறாங்க.  இந்த கொழந்த வேணாம் கலச்சிடுங்கன்னு சொல்லுராங்க. அது எவ்ளோ பெரிய உதவின்னு எங்கள மாதிரி ஏழைங்களுக்கு தான் தெரியும் புரியும். ஆஸ்பித்திரிக்கு நாங்க வராம வீட்லயே இருந்தா நொண்டி, மொடம், குருடுன்னு கொழந்தைங்கள தான் பெத்துக்கினு காலம் ஃபுல்லா சாவனும். 

ஸ்ரீதேவி, (புகைப்படம் தவிர்த்தார்).

ஆஸ்பித்திரிக்கு வரது பிரசவத்துக்கு மட்டுமில்ல. குழந்தைய காலம் ஃபுல்லா காப்பாத்துறதுக்கு. கரு உண்டாயிடுச்சின்னு சொல்லிட்டு ஆஸ்பித்திரிலயே கூடவே கையோட அட்டை போட்டு குடுப்பாங்க டாக்டருங்க. அதுல மாசாமாசம் கருவுல இருக்கிற குழந்தைங்க நிலமை தாயோட நிலமை குறிக்குறாங்க. நோய் வந்தா எந்த மருந்து எப்ப கொடுக்கனும்னு எழுதுவாங்க. எந்த மருந்து கொடுத்தா குழந்தைக்கு பாதிக்காதுன்னு நமக்கு தெரியுமா?    டாக்டருங்க சொன்னா தானே தெரியும். கரு உண்டாவுர ஆரம்ப நாள்ல… தாயிக்கு ஜுரம்னா கூட மாத்திரய பாத்து தான் கொடுக்கனும். வழக்கமானத கொடுத்தாலும் அது கருவ பாதிக்கும்னு சொல்லுறாங்க டாக்டருங்க. இதெல்லாம் ஆஸ்பித்திரிக்கு வந்தா தானே தெரியும். வீட்டுல யாரு சொல்லுவாங்க?

கலைச்செல்வி.

சும்மா.. பேசாதிங்க.. .பிரசவத்துக்கு ஆஸ்பித்திரிக்கு போகலாமா? போகக்கூடாதான்னு கேக்குறதே தப்பு… பிரசவத்தை வீட்டுலயே பாத்துக்கனும்னு சொல்லுறவங்கள  ரோட்டுலயே இழுத்து போட்டு உதைக்கனும். ஏழைங்க உயிரோட விளையாடுறதுக்கு அவன்… யாரு?

கலையரசி.

எங்க பாட்டிக்கு பொறந்தது பதினோரு பேரு. அதுல எட்டு பொழச்சது… இப்ப இருக்கிறது ஆறுதான். ஆனா, இப்ப இன்னா பன்றோம். கணக்கா பெத்துக்கிறோம் ஒன்னு இல்ல இரண்டு.  அதுங்க உயிரோட இருந்து கடைசி வரைக்கும் நல்லா வாழுதுங்க.. இதுக்கு யாரு காரணம்? நம்ம தாத்தா பாட்டிங்களா? ஆஸ்பித்திரியில இருக்க டாக்டருங்க தானே! நோயி நொடியில்லாம நம்மள காப்பத்துறது யாரு? அவுங்க தானே!  அதையும் மீறி போறது எங்கயோ ஒன்னு ரண்டு தான். அதையே காமிச்சி ஆஸ்பித்திரிக்கு போகக் கூடாதுன்னு சொன்னா இன்னா நடக்கும்? திரும்ப வத வதன்னு பத்து பெத்துக்குனு அதுல கூனு, குருடு நொண்டி பலது. சிலதுதான் நல்லாயிருக்கும். இதெல்லாம் இப்ப தேவையா? போயி வேலையப் பாருங்க.

குழந்தை சித்தார்த்

ஆயா..! சாப்டியா.. என்று கோஷா ஆஸ்பித்திரி வாசலில் கர்ப்பிணிகளுக்கு  கடை விரித்திருக்கும் தன் ஆயாவிடம் வம்பு செய்யும் பேரன்…. ”இந்த ஆஸ்பிட்டல்ல தான் பொறந்தான்’ன்னு சொல்லி சிரித்தார் அவனுடைய பாட்டி.

வசந்தா (இடதுபுறம் அமர்ந்திருப்பவர்)

எம் பொண்ணுக்கு இரண்டாவது பிரசவம். பொண்ணோ, மண்ணோ எது பொறக்குதோ பொறக்கட்டும். ஆஸ்பித்திரிக்கு வந்துட்டோம். இப்ப நிம்மதியா இருக்கிறோம். எம்பொண்ணு பதட்டம் இல்லாம படுத்துனு இருக்கிறா.  இங்க யாரும் எடுத்ததுக்கெல்லாம் ஆபுரேசன் பன்னுறது இல்ல. வெயிட் பன்னி தான் பாக்குறாங்க. எங்களுக்கே தேதி முடிஞ்சி அஞ்சி நாள் ஆகிடுச்சி. நார்மல் டெலிவரி ஆகும். வெயிட் பன்னுங்கன்னு சொல்லுறாங்க. தோ, இங்க கெடக்குறோம். ஒரு பயமும் இல்ல. வீட்டுல இப்படி இருக்க முடியுமா?

வசந்தா (வலதுபுறம் அமர்ந்திருப்பவர்)

மருமகள பிரசவத்துக்கு கூட்டிவந்திருக்கேன். வீட்டுலயே வச்சிருந்தா எது ஒன்னு நடந்தாலும் நம்ம மேலதான் பழி வரும். பக்கத்துல இருக்கவங்க சாதாரணமாவா சொல்லுவாங்க. ஆஸ்பித்திரிக்கு இட்டுனு போயிருந்தா பொழச்சிருக்கும்னு நம்மள கொடையிவாங்க. நல்லதோ கெட்டதோ இங்க வந்தா நிம்மதி.

சம்புராணி

பக்கத்துல உள்ள கிராமத்துல இருந்து வந்திருக்கோம். இங்க வந்த பிறகு தான் தெரிஞ்சது கருவுல இருக்க குழந்தை வளர்ச்சி இல்லனு. ஏழு மாசம் ஆவுது. முழுசா ஸ்கேன் எடுத்தாங்க. மூளை வளர்ச்சி இல்ல. கொழந்த நிக்காது’ன்னு சொல்றாங்க. கரு நிக்கும் போது ஜுரத்துல எதாவது ஊசி போட்டிங்களான்னு கேட்டாங்க. ஆமான்னு சொன்னோம். அது தான் இப்படி ஆயிருக்குனு சொல்றாங்க. இங்க வந்ததால நாங்க பொழச்சோம்.. ஆஸ்பித்திரிக்கு வராம இருந்தா என்ன ஆயிருக்கும்?

சாந்தி

அப்ப காலம் வேற. இப்ப பொம்பளங்களுக்கு நாற்பது, ஐம்பது வயசுலயே மூட்டு வலி வந்துடுது. இதுவாது பரவால. இருபது இருபத்தஞ்சி வயசு பசங்க பத்து நோய சொல்லுறாங்க. பூஸ்ட், மால்ட்டா பேரீட்சைபழம்னு அவங்களுக்கு நல்ல உணவு தான் தறோம். படிப்பை தவிர ஒரு வேலையும் விட்றது இல்ல. இருந்தாலும் நோயி மேல நோயி வருது. ஒழுங்கா ஆஸ்பித்திரிக்கு வந்து பார்க்கும் போதே இவ்ளோ கஷ்டம். இந்த லட்சணத்துல ஆஸ்பித்திரிக்கே போகாதிங்கன்னு சொன்னா என்ன ஆகும்?

  • வினவு புகைப்படச் செய்தியாளர்.