சும்மா இருக்கும் சமூகத்தில் எங்கோ யாராவது பேசினால் எழுதினால் ஏன் கட்டிப்பிடித்தால் கூட பா.ஜ.க.-வினர் சும்மா விடுவதில்லை. ஏதோ எச்.ராஜா போல தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே வெறியோடு காத்திருக்கும் விலங்கு போல தயாராக இருக்கிறார்கள். மிரட்டும் ஹேஷ்டேக், வழக்குகள், கைது, குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்… தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சித் இந்துமதவெறியர்களது பிடியில் சிக்கியுள்ளார். இவ்வளவிற்கும் இவரது அரசியல் வாழ்வே பா.ஜ.க.வில் இருந்தே ஆரம்பித்தது.

கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்நாள் அரசியல்வாதியுமான இம்ரான் கான் பிரதமராக பதவியேற்கும் விழாவில் நவஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு செல்ல இந்தியப் பிரபலங்கள் – கிரிக்கெட்டையும் உள்ளிட்டு – பலருக்கு விருப்பமிருந்தாலும் சங்கி மங்கிகளுக்கு பயந்து வாய்மூடி இருந்தனர். சித்து மட்டும் ஏதோ தற்செயலாக கலந்து கொண்டார்.

“இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இந்திய அரசிடம் அனுமதி கேட்டேன், கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் என்னை தொலைபேசியில் அழைத்து பாகிஸ்தான் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்” என்கிறார் சித்து. அப்படி அவ்விழாவிற்கு போகிறார் எனத் தெரிந்ததுமே பார்ப்பன இந்துமதவெறியர்கள் பல தளங்களில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அரசின் திட்டங்களை எதிர்ப்போரையே சமூகவிரோதிகள் என்போருக்கு, பாகிஸ்தானுக்கு ஒருவர் போகிறார் என்றால் சும்மா விடுவார்களா?

இஸ்லாமாபாத் நிகழ்ச்சியில் சித்துவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாகிஸ்தான் இராணுவ தளபதி சித்துவை கட்டித் தழுவி வரவேற்றார். முதல் வரிசையில் இடம், இராணுவ தளபதியை கட்டிப்பிடித்தது என சித்துவை புரட்டி எடுத்தனர் சங்கபரிவார ட்ரோல்கள். தேசபக்தியை குத்தகைக்கு எடுத்திருக்கும் பா.ஜ.க.-விற்கு போட்டியாக காங்கிரசும் கோதாவில் குதித்தது.

பாக்கின் இராணுவத் தளபதியை சித்து கட்டித் தழுவியதை காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் கண்டித்தார். முசாபர்பூர் நீதிமன்றத்தில் சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் சித்து மீது தேசத்துரோக வழக்கே தொடுத்து விட்டார். பாகிஸ்தான் இராணுவத்தினரால் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டு வரும் போது சித்துவின் செயல் இந்திய இராணுவ வீரர்களை அவமதிப்பதாகும்”  என அந்த வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

பதவியேற்பு விழாவில், முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது பற்றி தனக்குத் தெரியாது என்று கூறும் சித்து  இதில் என்ன தவறு என்கிறார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் லாகூருக்குப் பேருந்தில் பயணித்தது, பிரதமர் நரேந்திர மோடி 2015-ஆம் ஆண்டு அறிவிப்பின்றி லாகூருக்குச் சென்று அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பை கட்டித் தழுவியதையெல்லாம் யாரும் விமர்சிக்கவில்லை; ஆனால், என்னை என் தலைவரான பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கே விமர்சித்துள்ளார் என வேதனையுடன் கேட்கிறார் சித்து.

“பாகிஸ்தானில் உள்ள புகழ்பெற்ற குருத்வாரா கார்த்தார்பூர் சாஹிப்புக்கு இந்திய மக்கள் வருவதற்காக வழித்தடம் உருவாக்கும் முயற்சி எடுக்கப்படுவதாக பாகிஸ்தான் இராணுவ தளபதி தெரிவித்தார். அப்போது என் அன்பை வெளிப்படுத்துவதற்காக அவரைக் கட்டியணைத்தேன். இதில் என்ன தவறு?” என்கிறார் சித்து. இந்த வரலாறு, தர்க்கமெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-இடம் எடுபடுமா என்ன? அவர்கள் சொல்வதுதான் தேசபக்தி, அவர்கள் தீர்ப்பளித்தால் மற்றவர்கள் தேச துரோகிகள்!

லெப்டினண்ட் ஜெனரல் தீபந்தர் சிங் (ஓய்வு).

சரி, பாகிஸ்தான் இராணுவத்தால் அன்றாடம் இந்திய வீரர்கள் கொல்லப்படுகிறார்கள் என்கிறார்களே, அந்த இராணுவத்தின் அதிகாரிகள் சித்துவின் கட்டிப்பிடி பிரச்சினை குறித்து என்ன கூறுகிறார்கள்? இது குறித்து மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை சில முன்னாள் அதிகாரிகபளிடம் – பாக் போர்களில் பணியாற்றியவர்கள் – கருத்துக் கேட்டிருக்கிறது.

நாம் அற்பத்தனமாக இருக்க கூடாது. அந்த மனிதர் அங்கே போக, அங்கு வந்த ஒருவர் கட்டிப்பிடிக்க… இதில் என்ன தவறு? நாம் பெரியதொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, நமது நடத்தையும் ஒரு பெரிய நாட்டிற்க்குரியதாக இருக்க வேண்டும். பஞ்சாபி பாணியில் ஒருவர் வாழ்த்துவது என்பதே இப்படிக் கட்டிப் பிடிப்பதுதான்
– லெப்டினண்ட் ஜெனரல் தீபந்தர் சிங் (ஓய்வு).

அவர் தவறேதும் இழைத்ததாக நான் கருதுவில்லை. இதை நாம் ஒரு விரிந்த தளத்தில் பார்க்க வேண்டும். கட்டிப் பிடிப்பதாலேயே ஒருவர் தனது நாட்டை விற்றுவிட முடியாது. யாராவது ஒருவர் பாகிஸ்தான் பிரதமரை கட்டிப்பிடித்தால் என்ன பொருள்? பாக் இராணுவ தளபதி கூட அந்த பிரதமரின் கீழ்தானே பணியாற்றுகிறார். இங்கே சித்து தன்னை நோக்கி வந்தவரை கட்டித் தழுவி “ஹலோ எப்படி இருக்கீங்க” என்கிறார். அப்படி அவர் கட்டிப் பிடித்ததால் தீங்கொன்றும் நிகழ்ந்து விடாது. சித்து ஒன்றும் நம்மை எல்லையை நோக்கி சுடக்கூடாது என்று சொல்லவில்லை.
– லெப்டினண்ட் தேஜ் சாப்ரு(ஓய்வு)

பாக் இராணுவத் தளபதியை அவர் கட்டியணைத்ததில் என்ன தவறு? பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட வீச முடியாத பலவீனத்தில் இருக்கும் இந்த வலதுசாரி அணியினர்தான் இப்படி பெருங்கூச்சல் போடுகிறார்கள். நான் பல கருத்தரங்குகளுக்குச் சென்றிருக்கிறேன், அங்கே ஓய்வு பெற்ற பாக் இராணுவ அதிகாரிகளை ஒருவருக்கொருவர் கட்டி அணைத்திருக்கிறோம். இதெல்லாம் ஒரு பிரச்சினையா?
– லெப்டிணன்ட் ஹெச்.எஸ்.பனாக் (ஓய்வு).

பாக் இராணுவத் தளபதியோடு எப்போதும் பேசுவதற்கு ஒரு ஏற்பாடு இருக்க வேண்டும். இத்தகைய பின்வாயில் ஏற்பாட்டில் பேசுவது கூட ஒரு வழக்கமான இராஜதந்திரம் அல்லவா? இதை விமரிசிப்போர் எவரும் முட்டாள்கள்தான். எங்களுக்கு நிகரான பாகிஸ்தான் அதிகாரிகளை கொடி அணிவகுப்பின் போது சந்திக்கிறோம். அப்போது நலம் விசாரித்துக் கொள்வோம். அதே நேரம் தேவை ஏற்படின் ஒருவரையொருவர் சுட்டுக் கொல்வோம்.
– பிரிகேடியர் சுரீந்தர் சிங் (ஓய்வு).

இப்படி ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இந்துமதவெறியர்களால் தேசபக்திக்கு அடையாளமாய் அடிக்கடி சுட்டப்படும் இராணுவத்தின் அதிகாரிகளே “டேய் ஓவரா சவுண்டு விடாதீங்க லூசுப் பயலுகளா” என்று சொல்லிவிட்டனர். இதற்கு மேல் இவர்களை என்ன செய்ய?

  • வினவு செய்திப் பிரிவு

மேலும்:
War veterans back Navjot Singh Sidhu, call hug row ‘petty’