உன்ன விட பெரிய டாக்டர் யாரும் இங்க இல்லையா ?

அடுத்த கேள்வி, "ஆடுதுறைல எங்க சார்?" என்றார். அவரது நோக்கம் வீடு இருக்கும் இடத்தை வைத்து எப்படியாவது என்னுடைய ஜாதியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதே.

ன்று காலை என்னுடைய மருத்துவமனையில் உட்கார்ந்து நோயாளிகள் ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டிருந்தேன். (கலைஞர் இருந்திருந்தால் நோயாளிக்கு மாற்றாக வேறு பெயர் வைக்கச் சொல்லிக் கேட்டிருக்கலாம். நோயாளி என்ற சொல்லே நோய்வாய்ப்பட்டுவிட்டது. நோயாளியை ஆங்கிலத்தில் அழைக்கும் பேசண்ட் என்ற வார்த்தை இதமாக இருக்கிறது)

சரியாக பதினாறாவது பேஷண்ட்டாக வாட்ட சாட்டமான ஜீன்ஸ் பேண்ட் அரைக்கை சட்டை அணிந்திருந்த 50 வயது மதிக்கத் தக்க ஒருவர் வந்தார். வந்ததும் என்னிடம் “தம்பி டாக்டர் இருக்காரா?” என்று எதன் மேலும் அக்கறை இல்லாத, தான் மட்டும்தான் உயர்ந்தவன் என்று நினைப்பில் இருக்கும் மனிதனைப் போல் கேட்டார். நானும் சிரித்துக் கொண்டே ” நான் தான் டாக்டர்” என்றேன். ‘என்னது நீயெல்லாம் டாக்டரா?’ என்று அவர் மனதில் நினைப்பதை அவரது பாடி லாங்குவேஜ் எனக்கு காட்டிக் கொடுத்தது. ” இல்ல தம்பி, உன்ன விட பெரிய டாக்டர் யாரும் இங்க இல்லையா?” என்றார். ( இப்பவும் அவர் என்னை டாக்டராக ஏற்றுக் கொள்ளவில்லை. டாக்டர் என்று அழைக்காமல் தம்பி என்றுதான் அழைத்தார், ‘உன்னவிட’ என்று ஒருமையில்தான் அழைத்தார் ).” இங்க நான் மட்டும்தான் பெரிய சிறிய டாக்டர் எல்லாம் ” என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னேன். ( டாக்டர்கள் முக மலர்ச்சியுடன் இருப்பது புரோபஷனல் எதிக்ஸ்ஸாம். போலிஸ் ஸ்டேஷன் போய் அங்கு இருக்கும் இன்ஸ்பெக்டரைப் பார்த்து , தம்பி இன்ஸ்பெக்டர் இருக்காரா ? என்று கேட்டால் அந்த இன்ஸ்பெக்டர் காண்டாகி வாயிலையே மிதித்திருப்பார்?. அப்படி ஒரு டாக்டர் காண்டாக முடியாது.)

“சரி, உட்காருங்க, பேரு சொல்லுங்க ?” என்றதும் என் மேல் நம்பிக்கையற்று வேண்டா விருப்பாய் உட்கார்ந்து , ” ராகவன் சீனிவாசன் ” என்றார்.

ராகவன் சீனிவாசன் என்ற பெயரிலேயே அவர் யார் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். (பெயரில் என்ன இருக்கிறது? பெயரில்தான் எல்லாமும் இருக்கிறது).

“சொல்லுங்க சார் என்ன பண்ணுது ? ” என்றேன். அவர் நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் ” தம்பி, எந்த காலேஜ்ல படிச்சிங்க? கவர்ன்மெண்ட்டா பிரைவேட் மெடிக்கல் காலேஜ்ஜா? என்று கேட்டார்.

அவர் பேசிய தமிழைப் பார்த்து நான், ” என்ன ராகவன், நீங்க கும்பகோணமா? ” என்றேன். ( சார் எனக்கு இப்போ ராகவனாகிவிட்டார் )

அவர் முகமலர்ச்சியுடன் ” ஆமா சார், எப்படி கண்டுப்பிடிச்சிங்க??” (தம்பி இப்போது ‘சார்’ராகிவிட்டேன் )

” நான் ஆடுதுறை தான் ” என்றேன். ஆடுதுறை என்றதும் ராகவன் இன்னும் குஷியாகிவிட்டார்.

அடுத்த கேள்வி, “ஆடுதுறைல எங்க சார்?” என்றார். அவரது நோக்கம் வீடு இருக்கும் இடத்தை வைத்து எப்படியாவது என்னுடைய ஜாதியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதே. ஆனால் என்னுடைய ஊர் தூத்துக்குடி.

(சென்னையில் இருப்பவர்களில் அதிகப்பட்சம் பிற மாவட்டங்களிலிருந்து வந்து குடியேறிய வந்தேறிகள் தான். என்னிடம் பேஷண்ட்டாக வருபவர்களின் பேச்சு ஸ்லாங்கை வைத்து அவர்கள் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்று கண்டுப்பிடித்துவிடுவேன். உதாரணத்திற்கு சேலம் மாவட்டைச் சேர்ந்தவர் என்று கண்டுப்பிடித்துவிட்டால், அவரிடம் நான், ‘என்ன சார் சேலமா?’ என்று கேட்பேன். அவரும் குஷியாகி ‘ஆமா சார். நீங்களும் சேலமா?’ என்று என்னிடம் கேட்பார். நானும் சேலம் தான் என்பேன். அவர் சேல்த்தில் அம்மா பேட்டை என்றால், நான் எனது ஊரை சீல நாயக்கன்பட்டி என்று சொல்லிவிடுவேன். இப்படிப் பொய் சொல்வதால், இரண்டு நன்மைகள் உண்டாகின்றன, 1. டாக்டர் நம்ம ஊர்க்காரர் என்ற எண்ணம் அவர்களுக்கு வருவதால், என்னிடம் மிகவும் நெருங்கிவிடுவார்கள். மனதார நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 2. அவர்கள் என்னைவிட்டுவிட்டு வேறு மருத்துவர்களிடம் அதன்பின்பு போக மாட்டார்கள்)

நான் யூ.பி.எஸ்.ஸி மெயின் எக்ஸாமிற்கு இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆப்ஷனல் பேப்பர் தமிழ் இலக்கியம். தமிழ் விருப்பப் பாடத்தில் பக்தி இலக்கியம் என்ற பகுதியில் திருஞானசம்பந்தரின் திருவாசகத்தில் ‘ நீத்தல் விண்ணப்பம்’ என்ற பகுதியும் உள்ளது. நீத்தல் விண்ணப்பம் பகுதியை இன்று படித்துக் கொண்டிருந்ததால் அந்த புத்தகத்தை எனது மேசையில் வைத்திருந்தேன். ராகவன் அந்த திருவாசகம் புத்தகத்தைப் பார்த்து மேலும் குஷியாகிவிட்டார். ” சார் நீங்க் திருவாசகம் எல்லாம் படிப்பீங்களா? ” என்று என் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார். ( தம்பி டாக்டராகி இப்போது என் கையைப் பிடித்துவிட்டார்)

“திருவாசகம் மட்டுமல்ல, தேவாரமும் படிப்பேன் ” என்றேன். ராகவனின் கண்களில் உள்ள பாப்பா விரிந்து கண்களில் நீர்க்கோர்த்துப் பளிச்சிடுவதைப் பார்க்கிறேன் இப்போது.

” நீங்க சிவன் பக்தரா ? ” என்று அடுத்தக் கேள்வியைப் போட்டார். அதாதவது அவர் நான் என்ன ஜாதி என்று கண்டுபிடித்துவிட்டார். இப்போது அதன் உட்பிரிவுக்குள்ப் போய் சைவமா, வைணவமா என்று கண்டுப்பிடிக்க வேண்டும்.?

“அதெல்லாம் இன்னொரு நாள் வாங்க அப்போ ஃபிரீயா பேசலாம் ராகவன். வெளியில் நிறைய பேஷண்ட்ஸ் வெயிட் பண்றாங்க, நீங்க உங்க உடம்புக்கு என்னப் பிரச்சனைனு சொல்லுங்க?” என்றேன். ( மனதிலுள்ள பிரச்சனையை அல்ரெடி கண்டுப்பிடித்துவிட்டேன்)

” சார் மோஷன் போற இடத்துல கட்டி இருக்கு” என்றார்.

“மோஷன் போற இடத்துல மட்டும்தான் கட்டி இருக்கா?” என்றேன் சிரிப்புடன்.

“உங்களுக்கு ரத்தக் கொதிப்பு இருக்கணுமே? , சுகரும் கொலஸ்டிராலும் இருக்கணுமே? என்றேன்.

“ஆமா சார் இருக்கு” என்றார்.

” நீங்க பேசும்போதே இவ்ளோ மூச்சு வாங்குதே, அப்போ நடக்கும்போது இதவிட அதிகமா மூச்சு வாங்குமே ? ”

“ஆமா சார்…. ஆமா சார்”

“அப்படின்னா உங்களுக்கு ரீசண்ட்டா ஹார்ட்ல எதுவும் பிரச்சனை வந்திருக்குமே? LVH வேற இருக்கும் போல. ரெண்டு காலும் வீங்கிப் போய் இவ்ளோ ஷைனிங்கா இருக்கே , ரத்தத்துல யூரியா லெவலும் ஜாஸ்தியா இருக்கும் போலயே?? என்றேன்.

” ஆமா சார், எப்படி ரிப்போர்ட் எதுவும் பாக்காம இவ்ளோ கரெக்ட்டா சொல்றீங்க தெய்வம் சார் நீங்க..!”

(தம்பி டாக்டராகி, இப்போது தெய்வமாகிவிட்டார் )

(ஹாரிசன் புக்க ஒழுங்காப் படிச்சா எந்த ரிப்போர்ட்டும் தேவை இல்லை. நோயின் அறிகுறியையும் உடலில் ஏற்பட்ட மாற்றங்களையும் வைத்து எந்த நோயையும் எளிதில் கண்டுப்பிடிக்கலாம். தேங்க்ஸ் டூ ஹாரிஸன் )

எக்ஸ்டர்னல் ஹெமராயிடிற்கு மெடிசின்ஸ் கொடுத்து, ‘சிட்ஸ் பாத்’ எடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறேன்.

அடுத்த முறை ராகவன் வரும்போது மேஜையில் 1.அம்பேத்கர் 2.பெரியார் புத்தகங்கள். 3.மார்க்ஸ், 4.ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய டெலூசன் ஆஃப் காட் போன்ற புத்தகங்களை வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி: ஃபேஸ்புக்கில்   Selva Prabhu 

8 மறுமொழிகள்

 1. ////அடுத்த முறை ராகவன் வரும்போது மேஜையில் 1.அம்பேத்கர் 2.பெரியார் புத்தகங்கள். 3.மார்க்ஸ், 4.ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய டெலூசன் ஆஃப் காட் போன்ற புத்தகங்களை வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.////

  டாக்டர் இப்ப உங்கள் வருமானத்தை நீங்களே கெடுத்துக்க போரிங்க. அது நிச்சயம்

 2. இம்மாதிரியான மருத்துவரை அறிமுகப்படுத்தலாமே .
  எனக்கும் ஒரு பிரச்னை உள்ளது.
  நானும் பரிசோதித்து கொள்வேன்.
  நன்றி

 3. Idhellam nambura madhiriya irukku? Unga karpanaikku alavae illaiya? Paarpanargal thangaladhu jaadhi veriyai velippadaiyaaga kaatta maatargal. Vanniyar, Dhevar, Chettiar, Mudhaliar migavum jaadhi veriyargal.

 4. திருஞானசம்பந்தரின் திருவாசகத்தில் ‘ நீத்தல் விண்ணப்பம்’ என்ற பகுதியும் உள்ளது.
  திருவாசகம் – மாணிக்கவாசகர் அருளியதல்லவா?

 5. //அடுத்த முறை ராகவன் வரும்போது மேஜையில் 1.அம்பேத்கர் 2.பெரியார் புத்தகங்கள். 3.மார்க்ஸ், 4.ரிச்சர்ட் டாகின்ஸ் எழுதிய டெலூசன் ஆஃப் காட் போன்ற புத்தகங்களை வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.//
  அதன் பின் அவர் உங்களிடம் வரவேமாட்டார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க