நான் இப்போது சொல்லப்போவது நிஜமாகவே ஒரு த்ரில்லர் கதைதான். ஒரு சிறிய தவறான புள்ளிவிவரம் எப்படி மிக மோசமான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது குறித்த த்ரில்லர்தான் இந்த கட்டுரை.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணையை முன்கூட்டியே திறக்காமல் நிறையத் தண்ணீர் தேங்கிய பிறகு திறந்ததுதான் காரணம் என ஒரு கட்டுக் கதை கடந்த சில வாரங்களாக சொல்லப்பட்டு வருகிறது. இப்போது இன்மதி இதழில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரை, அதை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நிரூபிப்பதாகக் கூறுகிறது. இதை எழுதியிருப்பவர் ஹிமான்ஷு தாக்கூர்.

ஹிமான்ஷு தாக்கூர் இந்திய அளவில் அணைகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். அதில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவமும் பெற்றவர். அவர் நடத்திவரும் Sandrp.in அணைகள், பருவமழை, வெள்ளம் குறித்து ஏகப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும். ஆனால், அவரே இந்த முறை சறுக்கியிருக்கிறார். எப்படி என்று பார்க்கலாம்.கேரளாவில் வெள்ளம் எப்படி ஏற்பட்டது, அதில் அணைகளின் பங்கு குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் பங்கு என்ன என்பது குறித்து இன்மதி இணைய இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

மிக நீண்ட அந்தக் கட்டுரையின் இணைப்பு:

ஆம்,கேரள வெள்ளத்தில் தமிழகத்துக்கு பங்கு இருக்கலாம், ஆனால், கேரளாவின் 40 அணைகளின் பங்கு என்ன?

அந்தக் கட்டுரையில் அவர் சர்ச்சைக்குரிய விதத்தில் சொல்லியிருக்கும் விஷயங்களை சுருக்கமாகச் சொல்கிறேன்.

1 ஜூலை 26ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணை தனது 90 சதவீத கொள்ளளவை, அதாவது 173 மில்லியன் கனமீட்டர் அளவை எட்டியுள்ளது. ஆனால் பருவமழை முடியும் வரை இது நிகழ்ந்திருக்கக்கூடாது. இந்த அளவுக்கு தண்ணீர் நிரம்பிய நிலையில், இந்த அணையைப் பராமரித்து வரும் தமிழக பொதுப் பணித்துறைக்கு, கூடுதல் தண்ணீர் வரவை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இதுவே, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணம்.

2  ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய நீர் ஆணையத்தின் வாராந்திர அறிக்கைப்படி, அணையின் நீர்மட்டம் 147 அடியாக உள்ளது. அதாவது அணையில் நீர் தேக்கி வைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட முழுக் கொள்ளளவான 142 அடியை விட, 5 அடி கூடுதலாக உள்ளது. மத்திய நீர் ஆணைய அறிக்கையின்படி, அணையின் முழு கொள்ளளவு 867.41 மீ. ஆகஸ்டு 16ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 868.91மீ, அதாவது அனுமதிக்கப்படட் முழு கொள்ளளவை விட 1.5 மீட்டர் (அதாவது 5 அடி) அதிகமாக இருந்துள்ளது.

3 இந்தச் சூழ்நிலையால், ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. அதனால், வண்டிபெரியாறில், அதாவது முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியான பெரியாறு ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெள்ளம் பாய்ந்துள்ளது. அதாவது, உச்சபட்ச வெள்ள அளவை விட, 3.5 மீட்டர் அளவு அதிகம். முழுக் கொள்ளளவுக்கு மேல் நீர்மட்டம் நான்கு நாட்களுக்கு மேல் நீடித்துள்ளது.

4 கேரள அதிகாரியான ஜேம்ஸ் வில்சன் சொல்வது போல இருந்தால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் அதிகபட்ச நீர் திறப்புத் திறன் 2,200 கன அடி. ஆனால், இந்த அளவின்படி முல்லை பெரியாறு அணையில் இருந்து ஜூல 20லிருந்து ஆகஸ்டு 20ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த காலகட்டத்தில் மின்சார தயாரிப்புக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகபட்சத்தை நெருங்கும் அளவில் இருக்கும். அதாவது மின்சார தயாரிப்புக்காக, பவர் டர்பைன்களில் 1,600 கன அடி தண்ணீரை கடத்த முடியும். இக்காலகட்டத்தில் பெரியாறு அணையிலிருந்து தினசரி எவ்ளவு தண்ணீரை தமிழக பொதுப்பணித்துறை திறந்து விட்டது என்று கேட்பது அவசியம்.

5 வைகை அணை பாசனத்துக்காக ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தமிழக அரசு தண்ணீரை ஏன் திறந்து விடாமல் காத்திருந்தது என்பது மர்மமாக உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து, பெரியாறு அணைக்குத் திருப்பிவிடப்பட்ட தண்ணீர் தமிழகத்திலுள்ள வைகை அணையை சென்று சேரும். வைகை அணையில் இருந்து முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தால், பெரியாறில் இருந்து அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கும். இது தமிழகத்துக்கும் பயனளித்திருக்கும். அதேவேளையில் வெள்ள நேரத்தில் கேரளாவுக்கு குறைந்த அளவு தண்ணீரே சென்றிருக்கும். ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு முன்னதாகவே வைகை அணையிலிருந்து ஏன் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்ற கேள்விக்கும் தமிழகம் பதில் கூற வேண்டியது அவசியமாகிறது.

இப்போது ஒவ்வொரு கேள்விக்கான பதிலாகப் பார்க்கலாம்.

பதில் 1 ஜூலை 26ஆம் தேதியன்று அணை தனது முழு கொள்ளளவில் 90 சதவீததத்தை எட்டியது. அந்த காலகட்டத்தில் அந்த அளவுக்கு தண்ணீரைத் தேக்கியிருக்கக்கூடாது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல். ஜூலை 26ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.6. இன்னும் ஆறு அடிக்கு தண்ணீரைத் தேக்கலாம். ஆதாரம்: 26 ஜூலை தினமணி மதுரைப் பதிப்பு – படம் 1.

அப்படியானால் எங்கே தவறு நேர்ந்தது? ஹிமான்ஷு எங்கே தவறு செய்கிறார்? சென்ட்ரல் வாட்டர் கமிஷனின் (சிடபிள்யுசி) புள்ளிவிவரங்களை வைத்தே அவர் முடிவுக்கு வருவதால்தான் இந்தத் தவறு நேர்கிறது. சென்ட்ரல் வாட்டர் கமிஷன்தானே நாடு முழுவதுமுள்ள அணைகளின் நீர் அளவைச் சொல்ல சரியான ஆணையம் என்று கேட்கலாம். ஆனால், இந்த ஆணையம் முல்லைப் பெரியாறு விஷயத்தில் ஒரு தவறைச் செய்திருக்கிறது.

அதாவது முல்லைப் பெரியாறு அணையின் உயரம் இந்த CWC இணையதளத்தில் மீட்டரில் கொடுக்கப்படுகிறது. அதுவும் கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம் கொடுக்கப்படுகிறது. நாம் வழக்கமாக அணையின் உயரத்தை Feet அளவில்தான் அறிந்து பழகியிருக்கிறோம். CWC இணைய தளத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 867.41 மீட்டர் எனக் குறிக்கிறது. இது குழப்பத்திற்கு முதல் காரணம்.

இரண்டாவதாக, இந்த 867.41 மீட்டர் என்பது 142 அடியைக் குறிக்கவில்லை. 136 அடியைக் குறிக்கிறது. அதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முந்தைய அணையின் உயரத்தையே CWC தன் இணையதளத்தில் இன்னமும் குறிப்பிட்டுவருகிறது. அதுதான் இந்த மொத்தக் குழப்பத்திற்கும் காரணம். அது எப்படி என்பதை அடுத்த பதிலில் பார்க்கலாம்.

பதில் 2 ஆகஸ்ட் 16ஆம் தேதி அணையின் உயரம் உச்ச நீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியையும் தாண்டி 147 அடியைத் தொட்டுவிட்டது என்கிறது கட்டுரை. அதற்கு ஆதாரமாக CWCன் புள்ளிவிவரத்தையே அளிக்கிறார் ஹிமான்ஷு. அதாவது அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 868.91 மீட்டர் என்கிறார் அவர். அதாவது 867.41 மீட்டரை 142 அடி என்று கணக்கில் கொண்டு, 868.71 மீட்டரை 147 அடி என்று புரிந்துகொள்கிறார். ஆனால், உண்மையில் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 142.2 அடிதான்.

அன்று மாலை நான்கு மணியளவில் அணையின் நீர்மட்டம் 141.8 அடிக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆதாரம்: கேரள மாநில பேரிடம் மேலாண்மை ஆணையத்தின் ட்விட்டர் பதிவு. பார்க்க படம் – 3.

முல்லைப் பெரியாறு அணையைப் பொருத்தவரை ஷட்டர் மட்டமே 142 அடிதான். அதற்கு மேல் 20 -30 சென்டிமீட்டர் தண்ணீர் நிற்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் ஷட்டர் மீதே வழிந்துவிடும். 147 அடிக்கு தண்ணீரைத் தேக்க வேண்டுமென்றால் கூடுதலாக ஷட்டர்களை இறக்க வேண்டியிருக்கும். அது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவிடும். அதனால், எப்போதுமே 142 என்ற மட்டத்திலேயே ஷட்டர்கள் இருக்கும். ஆக 147 அடிக்கு தண்ணீரைத் தேக்குவது சாத்தியமே இல்லை.

இதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணை முழு உயரத்தை எட்டியது. அன்றைய தினத்தில் CWC இணைய தளத்தில் இருக்கும் தகவலைப் பாருங்கள். (படம் எண் 2) அப்போதும் 868.76 மீட்டரைத் தொட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆக அப்போதும் அணையின் நீர்மட்டம் 147 அடியை எட்டியதா? இல்லை. அன்றும் 142 அடிக்குத்தான் தண்ணீர் நின்றது. சிடபிள்யுசி இணையதளம்தான் அப்போதும் இப்போதும் update ஆகவில்லை.

பதில் 3 ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழகம் முல்லைப் பெரியாறு அணையத் திறந்து பெருமளவு தண்ணீரை வெளியேற்றியது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 136.1 அடி. அன்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் சரியான மழை. தொடர்ந்து அணையில் நீரைத் தேக்கியது தமிழகம். அதனால் அடுத்த நாள் 140.7 அடியைத் தொட்டது நீர்மட்டம். இதில் எங்கே தண்ணீர் திறக்கப்பட்டது? அப்படி யார் சொன்னது? அப்படியே தண்ணீர் திறக்கப்பட்டாலும் அந்தத் தண்ணீர் நேரடியாக மக்கள் வாழும் பகுதியைச் சென்றடையாதே? இடுக்கி அணைக்குத்தானே போகும்? முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டது ஆக்ஸட் 15ஆம் தேதி.

பார்க்க செய்தி இணைப்பு.

முல்லைப் பெரியாறு நீர்மட்டம் 142 அடியை எட்டியது- உபரி நீர் திறப்பு

அதுவும் வெறும் 11,000 கன அடி மட்டுமே. பிரம்மாண்டமான இடுக்கி அணைக்கு இந்த 11,000 கன அடி என்பது ஒன்றுமே இல்லை.

பதில் 4 ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20 வரை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்கப்பட்டதற்கான ஆதாரமே இல்லை என்கிறது கட்டுரை. இதுவும் தவறான தகவல். ஜூலை 25 தேதி பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு அதிகபட்ச நீர் திறப்பு அளவான 2200 கன அடி நீரைத் திறக்க ஆரம்பித்துவிட்டது தமிழகம்.

இதற்கான செய்தி இணைப்பு இங்கே.

பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

ஏன் ஜூன் 11ஆம் தேதியே பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு துவங்கிவிட்டது.

செய்தி இணைப்பு இங்கே.

பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறப்பு – கம்பம் விவசாயிகள் ஆத்திரம்

கட்டுரையாளர் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஜூலை 26ஆம் தேதியிலிருந்து தற்போதுவரை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச அளவான வினாடிக்கு 2200 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது என்பதுதான்.

பதில் 5 வைகை அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை கூடுதலாக வைகையில் தேக்கியிருக்கலாம் என்கிறது கட்டுரை. இதுவும் ஒரு அபத்தமான, தவறான புரிதல். 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு முல்லைப் பெரியாறிலிருந்து வினாடிக்கு 2,200 கன அடிதான் அனுப்ப முடியும். அதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். முன்கூட்டியே வைகையை திறந்திருந்தால், அணை காலியாகி, தண்ணீர் எதற்கும் பயனில்லாமல் போயிருக்கும்.

ஹிமான்ஷு எந்த உள்நோக்கத்துடனும் இந்தக் கட்டுரையை எழுதியிருப்பார் எனக் கருதவில்லை. ஆனால், அணைகளைப் பற்றி அறிந்தவர், அடிப்படையான ஒரு கேள்விக்கு பதிலை யோசித்திருக்க வேண்டும். அதாவது 142 அடி உயரமுள்ள அணையில் அவர் சொல்வதுபோல 147 அடிக்கு எப்படி தண்ணீர்த் தேக்க முடியும் என்பதுதான் அந்தக் கேள்வி.

ஒரு உணர்ச்சிகரமான பிரச்சனையை நடுநிலையோடுதான் அணுக வேண்டும். ஆனால், நடுநிலை எடுக்க வேண்டுமென்பதற்காகவே தவறான தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தைச் சாடுவது என்ன நியாயம்?

இந்தக் கட்டுரையோடு இணைக்கப்பட்டிருக்கும் படங்களையும் பாருங்கள். முல்லைப் பெரியாறு, வைகை அணையின் தினசரி நீர்மட்டங்களையும் பாருங்கள். ஹிமான்சுவின் கட்டுரை தவறானது எனப் புரியும்.

நன்றி: பேஸ்புக்கில் Muralidharan Kasi Viswanathan, (ஆகஸ்டு 30, 2018)

முல்லைப் பெரியாறு: ஹிமான்ஷுவின் பதிலும் ஒரு Tamil enthusiastன் விளக்கமும்
———————————————————————
முல்லைப் பெரியாறு அணை குறித்த ஹிமான்ஷு தாக்கரின் கட்டுரைக்குப் பதிலாக நான் எழுதிய சில கருத்துகளுக்கு அவர் சில பதில்களை அளித்திருக்கிறார்.

முதலில் ஹிமான்ஷு தாக்கரின் பதில் (கருத்துகளுக்கு பதில் சொல்லும்போது எளிதாக இருக்க அவற்றுக்கு எண்களை இட்டிருக்கிறேன்) :

1. இந்தக் கட்டுரையின் வாதம், ஜூலை 20ஆம் தேதியிலிருந்து ஆகஸ்டு 20 தேதிவரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பது அல்ல. இந்தக் கட்டுரை நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதைக் குறித்தே பேசுகிறது. ஆனால், அதிகபட்ச நீர் திறப்பு 2,200 கன அடி நீர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு தரமான சாட்சியங்களை நம்பத்தகுந்த இணைய தளங்களில் காண விரும்புகிறேன்.

2. ஆகஸ்டு 14ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிட்டது தொடர்பாக வண்டிபெரியாறு இணையதளத்தில் உள்ள வரைபடத்தைப் பாருங்கள். (முதன்மை கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது) அதில் ஆகஸ்டு 14ஆம் தேதியன்று வண்டிபெரியாறில் உச்சபட்ச வெள்ள அளவு எவ்வாறு உயர்ந்தும் குறைந்தும் உள்ளது என்பதையும் பாருங்கள். இந்த அளவு மதிப்பீடுகள் அனைத்தும் மத்திய நீர் மேலாண்மை ஆணையத்திலிருந்து பெறப்பட்டது. அக்கட்டுரையில் நான் குறிப்பிட்டது போல, நீர் ஆதாரங்கள் தகவல் சேவை (WRIS) அறிக்கையின்படி, வண்டிபெரியாறின் 90% நீர்ப்பிடிப்பு முல்லைப்பெரியாறில் இருந்துதான் பெறப்படுகிறது. அதாவது வண்டிபெரியாறு வெள்ளம் பெருமளவில் முல்லைப்பெரியாறில் இருந்து வந்ததுதான்.

3. அணையின் நீர்மட்டம் குறித்து வெளிப்படையான தகவல்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நீர் மேலாண்மை ஆணையத்தின் வெளியீட்டின்படி, முல்லைபெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு நீர்மட்டம் 867.41மீ(கடல் மட்டத்துக்கு மேல்) என கொடுக்கப்பட்டுள்ளது. இது 142 அடி என நான் யூகித்துக்கொண்டேன், அதுதான் அணையின் மொத்தக் கொள்ளளவு நீர்மட்டம். இந்த கொள்ளளவு நீர்மட்டத்தின் மேலதிக தகவல்களை நான் எந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பார்க்கவில்லை. மத்திய நீர் மேலாண்மை ஆணையம் அணையின் நீர்மட்டம் குறித்து சரியான தகவல்களைக் கொடுத்திருக்கும் என யூகித்தேன். காரணம், மத்திய நீர் மேலாண்மை ஆணையம் அவர்கள் வெளியீட்டில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் சம்பதப்பட்ட மாநில அரசால் கொடுக்கப்பட்டவை என்று குறிப்பிட்டிருந்தது. ஒருவேளை மத்திய நீர் மேலாண்மை ஆணையம் தவறான தகவல்களைக் கொடுத்திருந்தால், அது அந்தந்த மாநிலங்கள் கொடுத்த தகவல்களைப் பொறுத்து அது வெளியிட்டுள்ளது என்பது என் புரிதல்.

4. இந்த கட்டுரையில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்டத்தைவிட 5 அடி கூடுதலாக இருந்தது என மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் வெளியான தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டது. நீர்மட்டம், அணையின் நிர்ணயிக்கபட்ட நீர்மட்டத்தை விட 5 அடி அதிகமாக தேக்குவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. இந்தியாவில் பல அணைகளில் நீர்மட்டம், உச்சபட்ச நீர்மட்டத்தை விட பல அடிகள் அதிகமாக உள்ளது. அது அணையின் வெள்ள அளவையும் மதகுகளின் நிலையையும் பொறுத்து அமையும்.

இப்போது Tamil enthusiastன் பதில்கள்:

1. ஜூலை – 20 முதல் ஆகஸ்ட் 20வரை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச அளவான 2,200 க்யூசெக்ஸ் திறக்கப்பட்டதா என்பதற்கு எந்த அதிகாரபூர்வ ஆதாரமும் இல்லை என்கிறார் ஹிமான்ஷு. ஜூலை 25 வாக்கிலேயே 2100 கன அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்த பத்திரிகை செய்தியை என் பதிவில் இணைத்திருந்தேன். அதை ஹிமான்ஷு ஏனோ கணக்கில் கொள்ளவில்லை. அதிகாரபூர்வமாக ஒவ்வொரு வினாடியும் தண்ணீர் எந்த அளவுக்குத் திறக்கப்படுகிறது எனத் தெரிய வேண்டுமானால், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிக்கப்படும் Log – book மட்டுமே ஒரே வழி. அது கிடைக்க வாய்ப்பில்லை.

மற்றொரு வழி, அணையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவைவைத்து ஓரளவுக்குக் கணிக்கலாம்.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மின் நிலையத்திலும் தயாரிக்கப்படும் மின்சாரத்தின் அளவை Power system corporation என்ற மத்திய அரசு நிறுவனம் வெளியிடுகிறது. அந்த நிறுவனம் அளிக்கும் புள்ளிவிவரத்தின்படி லோயர் பெரியார் புனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் 180 மெகா வாட். ஜூலை 24ஆம் தேதி மின் உற்பத்தி 147 மெகா வாட். தண்ணீர் 2100 கன அடி திறக்கப்பட்ட பிறகு அதன் உற்பத்தித் திறன் 171 மெகாவாட்.

அதாவது உற்பத்தித் திறனில் 95 சதவீதத்திற்கு மேல். ஜூலை 26, 27 என அடுத்தடுத்த நாட்களிலும் இதேபோல மின் உற்பத்தி தொடர்கிறது. ஆக, ஜூலை 25ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட முழு அளவுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது என்பதற்கு இதுதான் அதிகாரபூர்வமான புள்ளிவிவரம். இதையாவது ஹிமான்ஷு ஏற்பாரா எனத் தெரியவில்லை. Srldc இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களை இணைத்திருக்கிறேன்.

2. வண்டிப் பெரியாரில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பெரியாறு அணை திறக்கப்பட்டதே காரணம் என்று மீண்டும் சொல்கிறார். சென்ட்ரல் வாட்டர் கமிஷனில் எடுக்கப்பட்ட படங்களை வைத்து அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடியது என்கிறார் ஹிமான்ஷு. இதற்கு சற்று விளக்கமாகப் பதிலளிக்க வேண்டும்.

A. இந்த அபாய அளவு என்பது எப்போது குறிக்கப்பட்டது என்பது தெரிய வேண்டும். ஒருவேளை அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருக்கும்போது குறிக்கப்பட்டிருக்கலாம். இப்போது வண்டிப் பெரியாறில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் ஓடியது என்றால், அறிவியல் ரீதியாக அந்த மட்டத்திற்கு, அபாய அளவை மாற்றியமைக்க வேண்டும். கேரள அரசு அதற்குத் தயாராக இருக்குமா? இதனை இப்படிப் புரிந்துகொள்ளலாம். சென்னையில் நிலநடுக்கமே ஏற்படவில்லையென்று வைத்துக்கொள்வோம். அது seismic zone 4ல் இருக்கும். ஒரு முறை நிலநடுக்கம் வந்தாலே seismic zone 2க்கோ மூன்றுக்கோ சென்னை தள்ளப்படும். Seismic zone4ல் ஏன் நிலநடுக்கம் ஏற்பட்டது எனக் கேட்கக்கூடாது. அதைப்போலத்தான்.

B. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1,20,000 கன அடி அளவுக்கு தண்ணீரைத் திறக்க அணையைத் தயாராக வைத்திருக்க வேண்டுமென கேரள அரசு கோரிவருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி திறக்கப்பட்ட 24 ஆயிரம் கன அடி நீரே வண்டிப் பெரியாரை மூழ்கடித்தது என்றால் 1,20,000 கன அடி நீரைத் திறக்க ஏன் தயாராக இருக்கச் சொல்கிறது கேரள அரசு? அப்போது இதைவிட நான்கு மடங்கு தண்ணீர் வருமே, வண்டிப் பெரியாறு அப்போது மூழ்காதா? ஆக, இந்த HFL அளவு என்பது ஒரு மாறாத அளவு அல்ல. ஒவ்வொரு வெள்ளத்தையும் வைத்து அந்த அளவை மாற்ற வேண்டும்.

C. தவிர, வண்டிப் பெரியாறில் வெள்ளம் ஏற்பட்டதற்கு முல்லைப் பெரியாற்றின் நீர்தான் காரணம் என்கிறார் ஹிமான்ஷு. ஆகஸ்ட் 15 இரவில் வண்டிப் பெரியாறில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டதாக ஒரு செய்தியும் இல்லை. ஆனால், கடந்த ஜூலை 18ஆம் வண்டிப் பெரியாறில் வெள்ளம் ஏற்பட்டு பெரும், உடமைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. (https://timesofindia.indiatimes.com/…/articles…/65035962.cms ) அன்றைய தினம் முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 127.5 அடி. அணையிலிருந்து கேரளாவுக்கு நீர் திறப்பே இல்லை. அன்றைக்கு எப்படி வண்டிப் பெரியாறில் வெள்ளம் வந்தது? முல்லைப் பெரியாறு அணையின் நீரைத் தாண்டியும் வண்டிப் பெரியாறுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகள் உண்டு என்பதுதான் இதற்குக் காரணம்.

3. சென்ட்ரல் வாட்டர் கமிஷனின் இணைய தளத்தில் 867.41 அடிதான் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே அதுதான் 142 அடி என மீண்டும் சொல்கிறார் ஹிமான்ஷு. ‘நண்பர்களிடம் கேட்டேன். அவர்களிடமும் தகவல் இல்லை’ என்கிறார்.

தகவலைப் பெற எளிய வழிகள் இருக்கின்றன. ஒன்று, தமிழகத்தில் உள்ள Dam Safety Directorateல் கேட்கலாம். அல்லது முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றும் உறைவிடப் பொறியாளர்களைக் கேட்கலாம். அவர்கள் அடுத்த நிமிடமே தந்துவிடுவார்கள். Mean Sea levelல் இருந்து 867.41 என்பது 136 அடிதான். அதிலிருந்து ஐந்து அடி கூடினால் 145 அடி வருமே தவிர, 147 அல்ல. ஆக ஆகஸ்ட் 15ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 142.3 அடிதான்.

4. இன்னொரு கருத்தையும் சொல்கிறார் ஹிமான்ஷு. பெரும்பாலான அணைகளில் உயர்ந்தபட்ச அளவைவிட கூடுதலாக 5-6 அடி அளவுக்கு நீரை நிறுத்த முடியும். அப்படியிருக்கையில் முல்லைப் பெரியாறில் அன்றைய தினம் ஏன் 147 அடியாக இருக்க முடியாது என்று கேட்கிறார். சரியான கேள்விதான். முல்லைப் பெரியாறு அணையில் அப்படிச் செய்ய வேண்டுமெனால், அணையின் நீர்மட்ட உயரம் 152 அடி வருமளவுக்கு ஷட்டர்களை இறக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் 156 அடிக்கு தண்ணீரை நிறுத்த முடியும்.

தற்போது அங்கு 142 அடி அளவுக்கே ஷட்டர்கள் இறக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு மேல் தண்ணீர் வந்தால் ஷட்டரைத் தாண்டி வழிந்துவிடும். இப்போது ஒரு கேள்வி வரலாம். அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி அணையின் நீர்மட்டம் அதிகபட்ச அளவான 142 என்ற அளவைத் தாண்டி, 142.3 என்ற அளவுக்கு வந்ததே, அது எப்படி எனக் கேட்கலாம்.
தண்ணீர் ஷட்டரைத் தாண்டி வழியும்போது ஒரு உயரம் இருக்குமல்லவா, அதுதான் அந்த 0.3 அடி அளவு.

சரி, நான்தான் Tamil enthusiast; எனக்குத்தான் விவரம் தெரியாது. கேரளப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகஸ்ட் 16 அன்று 141.6 அடிதான் நீர் மட்டம் என்கிறதே, அவர்களுமா அப்படி இருப்பார்கள்?

Muralidharan Kasi Viswanathan,ஆகஸ்டு 31, 2018

மேலும்:

1 மறுமொழி

Leave a Reply to தேமா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க