மிழக முதலமைச்சர் எடப்பாடிக்கு கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் எழுதிய கடிதத்தில் முல்லைப் பெரியாறு அணை இடம் பெற்றிருந்தது. அணையில் நீர் மட்டத்தை 142 அடி உயரத்திலிருந்து 139 அடியாக குறைக்குமாறு அவர் கோரியிருந்தார். ஏற்கனவே இடுக்கி அணை நிரம்பி திறந்து விடப்பட்டு பெரும் வெள்ள சேதம் ஏற்பட்ட நிலையில் முல்லைப் பெரியாறு அணையிலும் திடீரென்று நீரை திறந்து விட்டால் அது இடுக்கி அணை சேர்ந்து சேதாராம் அதிகரிக்கும் என்பது அவரது கவலை. இதை ஒட்டி சமூக வலைத்தளங்களில் முல்லைப்பெரியாறு அணை நீர் திறந்து விடப்பட்டதே கேரள வெள்ளத்திற்கு காரணம் என சிலர் வதந்திகளை பரப்பி விடுகின்றனர். ஆனால் உண்மை என்ன?

முல்லைப் பெரியாறு அணையில் பணியாற்றியவரும் தமிழக அரசு பொதுப் பணித் துறையின் சிறப்பு தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்றவருமான அ. வீரப்பன் அவர்கள் பி.பி.சி. தமிழ்  இணைய தளத்திற்கு அளித்த நேர்காணலில் இது குறித்து தெளிவாகவும், தரவுகளோடும் விளக்கியிருக்கிறார்.

முதலில் முல்லைப் பெரியாறு அணை எப்படி பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை விளக்குகிறார். அடுத்து அணையில் தமிழகம் கோரியபடி 152 அடி நீரை தேக்கினால் இந்த அணையின் எல்லையோர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிமிரத்து கட்டப்பட்ட கட்டங்கள் மூழ்கும் என்பதால் கேரளாவில் எதிர்க்கிறார்கள் என்பதை கூறுகிறார்.

ஒருவேளை முல்லைப் பெரியாறு அணை 152 அடி நீர் தேக்கி மொத்த அணை உடைந்தால் என்ன நடக்கும்? இந்த உயரத்தில் தேக்கினாலும் அணையின் நீர் 10 டி.எம்.சி. எனும் போது அது மொத்தமும் இடுக்கி அணைக்கு போனால் கூட பெரிய பிரச்சினை இல்லை. ஏனெனில் தற்போதுதான் இடுக்கி அணை நிரம்பி திறந்திருக்கிறார்கள். மற்ற ஆண்டுகளில் அங்கே 10 முதல் 20 டிஎம்சி நீர்தான் நிற்கும். முல்லைப் பெரியாறு அணை உடைந்து 10 டி.எம்.சி நீர் 50 கி.மீட்டர் தூரத்தில் உள்ள இடுக்கி அணை போனாலும் ஒன்றும் பிரச்சினை இல்லை. மேலும் இடுக்கி அணையின் உயரம் 555 அடி, இடுக்கி அணையின் முழு கொள்ளளவு 70 டி.எம்.சி. என்கிறார் பொறியாளர் வீரப்பன்

அடுத்து தற்போதைய வெள்ள சேதத்திற்கும் முல்லைப் பெரியாறு அணைக்கும் எந்த தொடர்புமில்லை என்பதை விளக்குகிறார்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் கீழே அமைந்திருக்கிறது இடுக்கி அணை. முல்லைப் பெரியாறு அணையை கேரளா பக்கமாகத் திறந்தால், அந்த நீர் 50 கி.மீ. தூரம் பள்ளத்தாக்கில் பயணித்து இடுக்கி அணையை அடையும். இந்த ஆண்டு முல்லைப் பெரியாறு அணை நிரம்புவதற்கு முன்பாகவே இடுக்கி அணை நிறைந்து, திறந்து விடப்பட்டு விட்டது.

தவிர, ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் வேறு. முல்லைப் பெரியாறு அணையின் நீரால் இடுக்கி அணை நிரம்பவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பொறியாளர், வீரப்பன்.

எனினும் கேரள முதலமைச்சர் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 ஆக குறைக்குமாறு கோருகிறார். அப்படிக் குறைத்தால் கூட அதாவது 142-லிருந்து 139 ஆக குறைத்தால் அரை டி.எம்.சி. நீர்தான் இடுக்கி அணைக்குச் செல்லும். 70 டி.எம்.சி. கொள்ளவு அணையில் அரை டி.எம்.சி. என்ன பாதிப்பை ஏற்படுத்திவிடப் போகிறது?

எதற்கு இந்த பிரச்சினை? முழு நீரையும் தமிழகம் பக்கம் திருப்பி வைகையில் திறந்து விட்டால் ஒன்றும் பிரச்சினையில்லை என்று நினைக்கிறீர்களா? அது தவறு. ஏனெனில் முல்லைப் பெரியாறு அணை தமிழக நிலப்பரப்பை விட தாழ்ந்த பகுதியில் உள்ளது.  அதனால் 104 அடிக்கு மேல் உள்ள நீரைத்தான் தமிழகம் எடுக்க முடியும். அதுவும் சுரங்கம் வழியாக வினாடிக்கு அதிக பட்சம் 2,200 கன அடி நீரைத்தான் கொண்டு செல்ல முடியும். ஆகவே 104 அடி வரை முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழகத்தை பொறுத்த வரை Dead storage என்கிறார்.

எனவே அணையின் மிகுநீரை திறந்து விடவேண்டுமென்றால் அது தாழ்பகுதியான கேரளத்தில் இருக்கும் மதகு வழியாகத்தான் முடியும்.

இந்த விளக்கத்தை தமிழக பொறியியலாளர்கள் உருவாக்கிய ஆவணப்படத்திலேயே விரிவாக விளக்கியிருக்கிறார்கள்.

  • வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க