privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாபிரக்சிட் - இடியாப்பச் சிக்கலில் இங்கிலாந்து !

பிரக்சிட் – இடியாப்பச் சிக்கலில் இங்கிலாந்து !

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினாலும், அதன் பிரெக்சிட் தலைவலி இன்னும் தீர்ந்தபாடில்லை. அதன் சிக்கலை அலசுகிறது இக்கட்டுரை.

-

ஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்

பிரிட்டன் மற்றும் வட அயர்லாந்து அடங்கிய ஐக்கிய அரசு (யுனைட்டட் கிங்டம்) ஐரோப்பிய ஒன்றியத்துடன் 1975-ம் ஆண்டு இணைந்தது. ஐரோப்பிய ஒன்றியம் என்பது 28 ஐரோப்பிய நாடுகள் ஒன்றாக சேர்ந்து தமக்கிடையே பொருட்கள், மனிதர்கள் பரிமாற்றத்தில் கட்டுப்பாடுகளை நீக்கிக் கொண்ட ஒப்பந்தமாகும்.

இந்த நாடுகளுக்கிடையே தடையற்ற வர்த்தகம், ஒரு நாட்டு குடியுரிமை வைத்திருப்பவர் இன்னொரு நாட்டுக்குச் சென்று வேலை செய்வதில் சுதந்திரம் என்று ஒற்றை பொருளாதார பிரதேசமாக அவை செயல்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உருவாக்கம் முதலாளித்துவத்தின் உற்பத்தி, சந்தை, மூலதனம் ஆகியவற்றை உலக அளவில் சமூக மயமாக்கும் போக்கின் ஒரு வெளிப்பாடு.

ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் – நீல சாயம் பூசப்பட்ட பகுதிகள் (இடது பக்கம் உள்ள பகுதியளவு நீலம் பூசப்பட்ட தீவு அயர்லாந்து – அதன் அருகில் இருக்கும் நீலம் பூசப்படாத பெரிய தீவு பிரிட்டன்)

ஆனால், அந்த சந்தையில் இணைந்த பிரிட்டிஷ் முதலாளிகளுக்கிடையேயான வேறுபாடுகள், அமெரிக்காவுடன் ஐக்கிய அரசுக்கு இருக்கும் நெருக்கம் இவற்றின் காரணமாகவும், முதலாளித்துவ நெருக்கடியால் தொழிலாளி வர்க்கம் வேலை இழப்புகளை எதிர்கொள்வதன் காரணமாகவும் ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அது வெளிநாட்டவர் மீதான வெறுப்பு அரசியலாகவும் தேச பெருமிதமாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் மீது 2016-ம் ஆண்டு ஜூன் 26 அன்று நாடு முழுவதும் நடந்த கருத்துக் கணிப்பில் 51.9% பேர் ஐக்கிய அரசு வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஆனால், ஐக்கிய அரசின் ஒரு பகுதியாக இருக்கும், தனியாக பிரிந்து போகும் இயக்கம் தீவிரமாக இருக்கும் ஸ்காட்லாந்தும், வட அயர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்று மேலே சொன்ன கருத்துக் கணிப்பில் வாக்களித்திருந்தன. ஸ்காட்லாந்தில் 62% பேரும், வட அயர்லாந்தில் 55.8% பேரும் வெளியேறுவதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

எனவே, ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதில் பல இடியாப்பச் சிக்கல்கள் உள்ளன.

ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், நாங்கள் பிரிந்து சென்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்வதற்கான கருத்துக் கணிப்பை நடத்த கோருவோம் என்று ஸ்காட்லாந்து தேசியக் கட்சி அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே 2014-ல் நடந்த அத்தகைய கருத்துக் கணிப்பில் 55% பேர் சுதந்திரத்துக்கு எதிராக வாக்களித்திருந்தனர். அடுத்த கருத்துக் கணிப்பை 2018 இறுதியில் அல்லது 2019 தொடக்கத்தில் நடத்த வேண்டும் என்று அக்கட்சி கோருகிறது.

பிரிட்டன் மற்றும் வட அயர்லாந்து அடங்கிய ஐக்கிய அரசு அயர்லாந்து தீவின் வட பகுதியை தன்னுடன் இணைத்து வைத்திருக்கிறது. அதை எதிர்த்த போராட்டங்களைத் தொடர்ந்து வட அயர்லாந்தை தன்னுடன் வைத்திருப்பதற்கு 1998-ல் ஒரு ஒப்பந்தத்தை பிரிட்டன் போட்டிருக்கிறது.

நிக்கோல் ஸ்டுர்ஜியன்
பிரிந்து போக விரும்பும் ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் நிக்கோல் ஸ்டுர்ஜியன்

ஐக்கிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறினால், வட அயர்லாந்தின் நிலை என்ன? அயர்லாந்து குடியரசுடன் அதன் உறவின் நிலை என்ன?

அயர்லாந்து தீவில் சுதந்திர வர்த்தகம் தடைபடுவது வட அயர்லாந்து பிரிட்டனுடன் இணைந்த 1998 ஒப்பந்தத்தை மீறுவதாக இருக்கும். அப்படி வட அயர்லாந்துக்கும் அயர்லாந்து குடியரசுக்கும் இடையே சுதந்திர வர்த்தகத்தை அனுமதித்தால், வட அயர்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஒரு சுங்க எல்லை உருவாகி, வட அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடர்ந்து, அயர்லாந்து குடியரசுடன் நெருக்கமாகி ஒன்றுபடும் சூழல் உருவாகும்.

தலை சுற்றுகிறதா? இதை இந்திய காஷ்மீருக்கும், பாகிஸ்தானிய காஷ்மீருக்கும் இடையே சுங்க ஐக்கியம் ஏற்படுத்தி, அதன் விளைவாக காஷ்மீருக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையே ஒரு எல்லைக் கோடு போடப்படுவது போன்றது என்று குத்து மதிப்பாக புரிந்து கொள்ளலாம்.

இந்தப் பிரச்சனை குறித்து பிரிட்டனில் விவாதம் நடந்து வருகிறது. இதைப் பற்றி ரிக் என்பவர் மார்ச் 1, 2018 அன்று வெளியிட்டிருக்கும் கட்டுரையின் கூடுதல் விளக்கங்களுடனான மொழிபெயர்ப்பு.

*****

யர்லாந்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஒரு கடல் எல்லையை உருவாக்குவது ஒரு முட்டாள்தனமான திட்டம், ஆனால், கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை (ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறவும் வேண்டும், அதே நேரம் வர்த்தக ஆதாயங்கள் தொடரவும் வேண்டும்) என்ற சவடாலும் முட்டாள்தனமானதுதான்.

“ஐரோப்பிய ஒன்றியம் வட அயர்லாந்தை பிரிட்டனிலிருந்து பிரித்து தன்னுடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறது.”

ஐக்கிய அரசு (பிரிட்டன்+வட அயர்லாந்து) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பாக ஐக்கிய அரசுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே போடப்பட வேண்டிய ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஆணையம் முழு விபரங்களுடன் வெளியிட்டதைத் தொடர்ந்து பிரிட்டன் வெளியேறுவதை (பிரெக்சிட்) ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அறிவு ஜீவிகளும் போட்ட கூப்பாடு இதுதான்.

இவர்களை உண்மையில் கடுப்பேற்றியது அயர்லாந்து / வடஅயர்லாந்து தொடர்பாக அந்த வரைவு ஒப்பந்தத்தின் பக்கம் 98-ல் தரப்பட்டுள்ள விதிமுறைகள்தான்.

அயர்லாந்து தீவின் இரு பிரிவுகளுக்கிடையே (பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருக்கும் வட அயர்லாந்துக்கும், தனி நாடான அயர்லாந்து குடியரசுக்கும்) இடையே வலுவான ஒரு எல்லையை உருவாக்குவதை தவிர்க்க வேறு எந்த வழியும் கிடைக்கா விட்டால் வட அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுங்க ஐக்கியத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதன் விளைவு என்னவாக இருக்கும்? அயர்லாந்து தீவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கடலில் ஒரு சுங்க எல்லையை உருவாக்கினால், அது பிரிட்டனும் வட அயர்லாந்தும் அடங்கிய ஐக்கிய அரசை (united kingdom) இரண்டாக பிளந்து விடும்.

“எந்த ஒரு ஐக்கிய அரசு பிரதமரும் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என்று பிரிட்டன் பிரதமர் தெரேசா மே சொல்கிறார். பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒருபோதும் இதை நிறைவேற்றப் போவதில்லை என்று சொல்லப்படுவதும் உண்மைதான்.

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே
“எந்த ஒரு ஐக்கிய அரசு பிரதமரும் இதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை” என்று பிரிட்டன் பிரதமர் தெரேசா மே சொல்கிறார்.

அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்வது, ஏற்க மறுப்பது என்பதைத் தாண்டி அயர்லாந்து கடலில் பிரிட்டனுடன் ஒரு சுங்க எல்லையை உருவாக்குவது தீர்க்கப் போகும் பிரச்சனைகளை விட அதிகமான பிரச்சனைகளை உருவாக்கும் ஒரு முட்டாள்தனமான திட்டம்தான் என்பதில் சந்தேகமில்லை.

வட அயர்லாந்தில் பிரிட்டனுக்கு விசுவாசமான தரப்பினர் (உல்ஸ்டர் புராட்டஸ்டன்ட் பிரிவினர்), வட அயர்லாந்தை அயர்லாந்துடன் இணைக்க விரும்பும் அயர்லாந்து குடியரசுவாதிகளின் தாக்குதல்கள் போன்றவை நிகழக் கூடிய சாத்தியங்களை ஒதுக்கி விட்டாலும் அத்தகைய ஒரு எல்லை நேரடியான பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.

வட அயர்லாந்தின் அன்னிய வர்த்தகத்தில் முதலிடம் பிடிக்கும் வெளிநாடு அயர்லாந்து குடியரசாக இருந்தாலும், அதன் பெரும்பான்மை வர்த்தகம் பிரிட்டனுடன் நடைபெறுகிறது. எனவே, வட அயர்லாந்துக்கும் கிரேட் பிரிட்டனுக்கும் இடையே ஒரு சுங்க எல்லையை உருவாக்குவது, அதற்கும் அயர்லாந்து குடியரசுக்கும் இடையே ஒரு சுங்க எல்லையை உருவாக்குவதை விட அதிக பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இது ஒருபுறம் இருக்க, அயர்லாந்து குடியரசு பிரெக்சிட் தொடர்பாக எதிர்கொள்ளும் தலைவலிகளான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற பகுதிகளுக்கு தனது ஏற்றுமதி பொருட்களை அனுப்புவதற்கான பாலமாக ஐக்கிய அரசை பயன்படுத்துவதை இழப்பது போன்ற பிரச்சனைகளையும் அது தீர்த்து விடப் போவதில்லை.

ஐரோப்பிய ஆணையத்துக்கு இவை அனைத்தும் தெரியும். அத்தகைய ஒரு நிலைமை (அயர்லாந்து கடலில் சுங்க எல்லை உருவாக்கப்படுவது) பிரிட்டனில் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் அதற்குத் தெரியும். இத்தகைய ஒரு பரிந்துரை வலுவான எதிர்ப்பைக் கிளப்பும் என்பதும் தெரியும்.

இந்நிலையில் அதன் பரிந்துரை பிரிட்டிஷ் உணர்வுகளை மதிக்காத ஒரு மிரட்டலாக இருக்கலாம். அல்லது ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதன் விளைவுகளை இப்போதே எதிர்கொள்ளும்படி பிரிட்டனை கட்டாயப்படுத்துவதற்காக இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர், இதை “அதிர்ச்சி வைத்தியம்” என்று அழைக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்துள்ள வரைவு ஒப்பந்தத்தின் 49-வது பத்தி இவ்வாறு சொல்கிறது:

போரிஸ் ஜான்சன்
“அயர்லாந்து எல்லை பிரச்சனை எல்லாம் பெரிய சிக்கல் இல்லை” என்று புறந்தள்ளிய போரிஸ் ஜான்சன், பிரதமர் தெரசா மே உடன்.

“[அயர்லாந்தின்] வடக்கு-தெற்கு ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கும் இரண்டுக்கும் இடையே ஒரு சுங்க எல்லையை தவிர்ப்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கவும் ஐக்கிய அரசு (UK) உறுதி அளிக்கிறது. எதிர்காலத்தில் போடப்படும் வேறு எந்த ஒப்பந்தங்களும், மற்ற அனைத்தையும் விட முக்கியமான இந்த நோக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.

இந்த நோக்கத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், ஐக்கிய அரசுக்கும் இடையேயான ஒட்டு மொத்த உறவு சட்டகத்துக்குள் நிறைவேற்றிக் கொள்வதாக ஐக்கிய அரசு உறுதி அளிக்கிறது. ஒருவேளை இது சாத்தியமில்லாமல் போனால், அயர்லாந்து தீவின் தனிச்சிறப்பான நிலைமைகளை உறுதி செய்வதற்கான தீர்வுகளை ஐக்கிய அரசு முன் வைக்கும்.

பரஸ்பரம் ஒப்புதல் உடைய தீர்வுகள் எதுவும் ஏற்படா விட்டால் இப்போதும் எதிர்காலத்திலும் உள்நாட்டு சந்தை, சுங்க ஒன்றியம் தொடர்பான வடக்கு-தெற்கு (அயர்லாந்து) ஒத்துழைப்பு, ஒட்டு மொத்த தீவின் பொருளாதாரம், 1998 ஒப்பந்தத்தை பாதுகாப்பது போன்ற விதிகளை முழுமையாக பராமரிப்பதை ஐக்கிய அரசு உறுதி செய்யும்.”

இதன் பொருள் என்னவென்றால் அயர்லாந்து குடியரசுடனான எல்லை சோதனைகளை தவிர்ப்பதற்கு ஏதாவது ஒரு வடிவிலான வர்த்தக ஒப்பந்தம் அல்லது தொழில்நுட்பத் தீர்வை பிரிட்டன் முன் வைக்கவில்லை என்றால், வடஅயர்லாந்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே ஒற்றைச் சந்தை, சுங்க ஒன்றியம் போன்றவற்றை முழுமையாக பராமரிப்பதற்கு ஐக்கிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த அறிக்கை வெளியான ஒரு சில நாட்களுக்குள்ளாகவே, இது ஒரு ஒப்பந்தம் இல்லை, வரைவு அறிக்கை மட்டுமே என்று டேவிட் டேவிஸ் என்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். ஆனால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு போவதற்கு வகை செய்யும்படி ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது என்று நினைத்திருந்த பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதைக் கேட்டு கடுப்பாயின.

எல்லாவற்றையும் எப்படியாவது சரி செய்து விடலாம் என்று சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருந்தாலும், விளக்கமான எந்த ஒரு தீர்வையும் முன் வைக்க பிரிட்டிஷ் அரசு தவறியிருக்கிறது. இவ்வாறு உருப்படியான முன்வைப்பு எதுவும் இல்லாத நிலையில்தான் வட அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுங்க ஒன்றியத்தை பராமரிக்கும் திட்டம் முன்வைக்கப்படுகிறது.

இந்த வட அயர்லாந்து எல்லைப் பிரச்சனைக்கு எளிதான தீர்வு எதுவும் இல்லை என்று பிரிட்டிஷ் அமைச்சர்கள் நீண்ட நாட்களாகவே உணர்ந்திருக்கிறார்கள். முன்னாள் லண்டன் மேயராகவும் 2016 முதல் 2018 வரையிலும் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இருந்த போரிஸ் ஜான்சன் உண்மையிலேயே இந்த சிக்கல் லண்டன் மாநகரின் பகுதிகளுக்கும், காம்டன், வெஸ்ட் மினிஸ்டர் போன்ற பகுதிகளுக்கும் இடையே போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது போன்ற சிக்கல்தான் நினைத்திருந்தால் ஐரோப்பிய ஒன்றியம் முன் வைத்த வேறு வழிகள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றிய முன் வைப்பு குறித்து சிறிதளவும் கவலைப்பட்டிருக்க மாட்டார். ஏனென்றால், இது தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் எளிதாக தீர்க்கப்படக் கூடியது, எனவே இந்த நடைமுறைகள் பற்றி யோசிக்க வேண்டியதில்லை என்று அவர் சொல்லியிருக்கிறார்.

அப்படி இது ஒரு தொழில்நுட்ப பிரச்சனைதான் என்று அவர் உண்மையிலேயே நம்பியிருந்தால் எப்படி எதிர்வினை ஆற்றியிருப்பார்? “எதற்கு இந்த தேவையில்லாத பரிந்துரை அறிக்கை. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டு விடப் போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அயர்லாந்து எல்லையில் சுங்க சோதனைச் சாவடிகளை தவிர்ப்பதற்கு தேவையான தொழில்நுட்ப தீர்வு நம்மிடம் உள்ளது” என்று மட்டும் சொல்லியிருப்பார். ஆனால் இதற்கு மாறாக, அவர் கோபப்பட்டு, பிதற்ற ஆரம்பித்தார்.

அவரைப் போல எல்லை பிரச்சனையை தொழில்நுட்பம் மூலம் தீர்த்து வைத்து விடலாம் என்று தொடர்ந்து உறுதியளித்து வந்த எல்லோருமே (அவர்களில் பலர் அது தொடர்பாக எதுவும் பேசாத ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையை மேற்கோள் காட்டினார்கள்) இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முன்வைப்பு மீது கடுப்பை உமிழ்கிறார்கள். இதுதான் ஒட்டு மொத்த பிரச்சனையின் சாரம் என்று நான் நினைக்கிறேன்

பிரிட்டனின் வெளியேற்றம் ஏற்படுத்தவிருக்கும் தவிர்க்க இயலாத இழப்புகள் பற்றி அரசு இதுவரை தெளிவான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலைப்பாட்டிலேயே அது நிற்கிறது. பொருட்களும், மக்களும் கட்டுப்பாடுகள் இல்லாமல் நகர்வதை முடிவு கட்டி, தனக்கு ஏற்ற வகையில் வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுக் கொள்ளும் அதே நேரத்தில் அயர்லாந்தில் வலுவான எல்லைக் கட்டுப்பாடுகளை தவிர்க்க முடியும், வர்த்தக பிரச்சனைகள் காரணமாக பொருளாதார இழப்புகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கமுடியும் என்று கருதுகிறது.

ஆனால், வடஅயர்லாந்து எல்லை பிரச்சனைக்கு எந்த ஒரு மாய தீர்வும் இல்லை. ஐக்கிய அரசு தனது சொந்த வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்த உடனேயே அயர்லாந்து குடியரசுடன் ஒரு சுங்க எல்லை ஏற்படுத்தப்பட வேண்டும்.

எடுக்க வேண்டிய முடிவு நேரானது. ஐக்கிய அரசு பிற நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் போட்டிருக்கும் ஒப்பந்தங்களை ரத்து செய்து விட்டு தனியாக வர்த்தக ஒப்பந்தங்களை போட வேண்டுமானால் அயர்லாந்துடன் இப்போதைய எல்லை ஏற்பாடுகளை தொடர முடியாது.

இந்த இரண்டில் ஒன்றுதான் சாத்தியம். வலுவான எல்லை என்று முடிவு செய்தால், ஐக்கிய அரசுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் இப்போதைய நிலைப்பாடு. இதை எவ்வளவு உறுதியாக கடைப்பிடிக்கும் என்பது யாராலும் சொல்ல முடியாது, ஆனால் வர்த்தக ஒப்பந்தம் எதுவும் ஏற்படாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து யு.கே வெளியேற வேண்டியதன் அபாயத்தை இந்த நிலைப்பாடு அதிகரித்துள்ளது.

அதாவது, இதில் ஒரு வெளிப்படையான லாப நஷ்டக் கணக்கு உள்ளது. பிரெக்சிட் ஆதரவாளர்கள் வாக்களித்த ஒரு சில பலன்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கும் அனைத்தும் கிடைக்கப் போவதில்லை.

நமக்கு எது முக்கியம், அதை பாதுகாப்பதற்கு எதை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று நாம் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இதுவரையில் இவை எதைப் பற்றியும் நாம் முறையான அரசியல் விவாதம் எதையும் நடத்தவில்லை. நாம் எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளலாம் என்று அரசு சாதித்து வருகிறது. லேபர் கட்சி இதுவரையில் அமைதியாக உள்ளது. இப்போது, வடஅயர்லாந்து தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்வைப்பு, திட்டமிட்ட தூண்டுதலாக இருக்கிறதோ இல்லையோ, அது விஷயத்தை விவாதத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

“மலம் எவ்வளவு நாறுகிறது என்பதை சிலருக்கு புரிய வைக்க வேண்டுமானால், அவர்களது தலையை அதற்குள் முக்குவதுதான் ஒரே வழியாக இருக்கிறது” என்று முன்பு என்னுடன் பணியாற்றிய ஒரு நண்பர் சொல்வார். அதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

– ரிக்
ஆங்கில மூலம் :
An Irish Sea border is a silly idea but so is the cake-and-eat-it bluster
நன்றி :
 new-democrats இணையதளத்தில் வெளியான கட்டுரை.