இங்கிலாந்தில் வீடற்று தெருவில் உறங்கும் மனிதர்களின் மரணங்கள் பெரும்பாலும் ஆய்வு கூட செய்யப்படுவதில்லை.

ங்கிலாந்து   வீதிகளில் வீடின்றி வாழ்ந்து நடுங்கும் குளிரில்  மரணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரிட்டனின் வீதிகளில் இப்படியான மரணங்களை பிரிட்டனைச் சேர்ந்த “புலனாய்வு இதழியல்” (Bureau of Investigative Journalism) எனும் தன்னார்வ புலனாய்வு அமைப்பு  அம்பலப்படுத்தி வருகிறது. ‘மரணிக்கும் வீடற்றவர்கள்’ என்ற ஒரு நெடுநாள் செயல்திட்டத்தின் கீழ் இந்த புலனாய்வை மேற்கொண்டு வருகிறது இந்த அமைப்பு.

ஊஸ்டர் (Worcester) நகரின் நடைபாதை ஒன்றின் அருகிலிருந்த கூடாரத்தில் 74 வயதான கார்டன் பேன்பீல்ட் (Cardon Banfield) கடுங்குளிரால் உறைந்து போய் மரணித்ததைக் கண்டறிந்த பின்னர் ஆண்டுகள் இரண்டு கடந்து விட்டன. கரீபியன் பகுதியைச் சேர்ந்த அவர் கடந்த 1961-ஆம் ஆண்டு பிரிட்டனில் குடியேறினார். கவனியாமல் விடப்பட்டு மோசமாக சிதிலமடைந்த அந்த உடலின் டி.என்.ஏ ஆய்வு மூலம்தான் அது கார்டன் பேன்ஃபீல்ட் என அடையாளம் காணப்பட்டது.

பிறகு இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் வீடற்ற இந்த வயதான மனிதரின் அவலமான மரணத்திற்கான அதிகாரபூர்வ ஆய்வினை மேற்கொள்ள ஆர்வலர்களும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களும் கோரி வந்தன. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் தோல்வி குறித்து ஆய்வு செய்யும் உள்ளூர் வயதுவந்தோர் பாதுகாப்பு வாரியமோ (Safeguarding Adults Board) கார்டனின் மரணத்தைப் பற்றிய அதிகாரபூர்வ ஆய்வினை மேற்கொள்ள மறுத்துவிட்டது.

வீடற்றவர்களின் மரணங்கள் குறித்து இங்கிலாந்து மற்றும் வேல்சில் பெரும்பாலும் எந்த ஆய்வுகளும் நடைபெறுவதில்லை. 2010–ஆம் ஆண்டிலிருந்து சராசரியாக ஆண்டிற்கு ஒரு ஆய்வு மட்டுமே நடந்துள்ளது என்று  “புலனாய்வு இதழியல்” அமைப்பு கூறுகிறது. இம்மரணங்களுக்கு அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரம் எதுவுமே கிடையாது. மேலும், மரணங்கள் குறித்து சொற்பமான ஆய்வுகள் மட்டுமே நடைபெறுவதால் அதிகாரிகளுக்கு இந்த அவலமான மரணங்கள் குறித்து எதுவுமே தெரியாது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

“மரணிக்கும் வீடற்றவர்கள்” திட்டம் 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிறகு, இதுவரை சராசரியாக வாரத்திற்கு மூன்று மரணங்கள் என 100-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சான்றாக, தொடர்ச்சியான பட்டினியின் கோரப்பிடியில் சிக்கிய 41 வயதான ஒருவர் பிரிஸ்டலில் இறந்திருக்கிறார். குடும்பம் ஏதுமற்ற 81 வயது முதியவர் ஒருவர் இறந்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட கொட்டகை ஒன்றில் 69 வயதான பெரியவர் ஒருவரது உடல் கொடூரமாக சிதைந்ததால் அவர் எப்படி இறந்தார் என்று உடற்கூறு ஆய்வில் கூட கண்டறிய இயலவில்லை.

“மரணிக்கும் வீடற்றவர்கள்” திட்ட தரவுத்தளத்தில் கடைசியாக பதிவு செய்யப்பட 83 மரணங்கள் பற்றி தெரிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மூலம் கவுன்சில்களிடம் கேட்டபோது அம்மரணங்கள் மீது அதிகாரப்பூர்வ ஆய்வு ஒன்று கூட நடக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஒரே ஒரு மரணத்திற்கு மட்டும் அதுவும் அதிகாரப்பூர்வமற்ற ஆய்வு மட்டுமே நடைபெற்றதாக தெரிய வந்தது என்று ”புலனாய்வு இதழியல்” அமைப்பு கூறுகிறது.

வீடற்றவர்களின் மரணங்களைப் பற்றி 2010-ஆம் ஆண்டிலிருந்து வெறுமனே 8 அதிகாரபூர்வமான ஆய்வுகள் மட்டுமே” வயது வந்தோர் பாதுகாப்பு வாரியத்தால்”  நடத்தப்பட்டுள்ளன. இந்த அதிகாரபூர்வமான ” (Safeguarding Adult Review) என்பது மருத்துவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊழியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்று அனைவரையும் இணைத்து ”வயது வந்தோர் பாதுகாப்பு வாரியம்”  நடைமுறைப்படுத்த வேண்டிய ஒரு ஆய்வாகும்.

2022–ஆம் ஆண்டுகளில் பாதியாகக் குறைக்கவும் 2027-ஆம் ஆண்டில் வீடற்றவர் மரணங்களை முழுமையாக தடுக்கவும் இங்கிலாந்து அரசு சூளுரைத்து இருக்கிறது. வெறுமனே ஒரு அவல மரணத்தைக் கூட ஆய்வு செய்ய மறுக்கும் இங்கிலாந்தின் முதலாளித்துவ அரசு எப்படி அம்மரணங்களைத் தடுக்கும் என்பது கேள்விக்குறியே?

இன்று சமூக நலத்திட்டங்களை படிப்படியாக குறைத்து வரும் இங்கிலாந்து உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் அன்று சோசலிச இரசியாவின் சமூகநலத் திட்டங்களின் தாக்கத்தால், மக்கள் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவே மக்கள் நல அரசு என்ற வேடத்தை போட்டுக்கொண்டன. இன்று அப்படி ஒரு அச்சம் எதுவும் தேவைப்படவில்லை என்றாலும், திவாலாகி வரும் முதலாளித்துவத்தால் முதலாளிகளின் இலாபத்தை காப்பாற்ற இப்படி மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்கின்றன.ஆனால் இதை எதிர்த்து போராடும் மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு போதும் நிம்மதியில்லை!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க