அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி

மக்கள் அதிகாரம் சென்னையில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடத்திய அரங்கக் கூட்டத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே ஆற்றிய உரை - காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று நடைபெற்ற மக்கள் அதிகாரம் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமைதாங்கினார். இக்கூட்டத்தில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்தக் காணொளியில் முதலில் பேரா. ஆனந்த் தெல்தும்டே குறித்து தோழர் மருதையனின் அறிமுக உரையும், அடுத்ததாக ஆனந்த் தெல்தும்டேவின் ஆங்கில உரையும், இறுதியாக அவ்வுரைக்கு தோழர் தியாகு செய்த மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளது. அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு..

”நாம் வலியுறுத்தும் செய்தி நாம் ஆபத்தான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். காங்கிரசுக்கும் பி.ஜே,பி-கும் முக்கிய வேறுபாடு உள்ளது. காங்கிரஸ் சந்தர்ப்பத்தின் தேவையை ஒட்டி செயல்படுகிறது. ஆனால் பாஜக ஒரு சித்தாந்தத்தோடு, இந்துத்துவா – இந்துராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது.

பீமா கோரெகான் கலவரத்தில் முக்கியக் குற்றவாளியான சம்பாஜி பீடே, மோடியால் தனது குருநாதர் எனப் புகழப்பட்டவர். இந்தக் கலவரத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டது இந்துத்துவக் கும்பல். மராத்திய அரசன் சிவாஜியின் மகனின் சமாதியிலிருந்து கலவரத்தை தூண்ட நினைத்தது இந்துத்துவக் கும்பல். அது உள்ளூர் மக்களால் முறியடிக்கப்பட்டது.

பீமா கோரெகான் கலவரத்துக்கு முன்னால் நடந்த எல்கார் பரிஷத் மாநாட்டில் வன்முறை வெறியேற்றும் விதத்தில் எதுவும் பேசப்படவில்லை என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. எல்கார் பரிஷத் ஏற்பாட்டாளர்களை மாவோயிஸ்டுகள் என திட்டமிட்டு குறிப்பிட்டது அரசு. அதன் ஏற்பாட்டாளர்களின் வீடுகளில் சென்று அவர்களது கணிணிகளைக் கைப்பற்றி அதில் பல்வேறு கடிதங்களை அவர்களே உருவாக்கி அதனடிப்படையில் பொய் வழக்கு புனைந்தார்கள்.

இந்தக் கடிதங்கள் அனைத்தும் போலியானவை என பலரும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மோதல் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் சஹானி அவர்கள் இதை விரிவாக விளக்கியுள்ளார். கடிதம் போலி என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். ஆனால் விசயம் என்னவென்றால், இந்த ஆள்தூக்கி கருப்புச் சட்டங்கள்தான் இங்கு பிரச்சினை.

மோடியின் ஆட்சியில் அனைத்து இயற்கை வளங்களையும் அள்ளி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். மோடியின் திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கின்றன. எதிர்கட்சிகள் கடுமையாக சிதைந்திருக்கின்றன. மக்கள் கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  அடுத்த தேர்தலுக்கு நேரம் மிகக் குறைவாக இருக்கும் நிலையில், நாம் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்து மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும்”

– வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க