லகிலேயே மிகப்பெரிய சிலை என்கிற வெட்டி பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை நர்மதா நதிக்கரையில் திறந்துவைத்தார் பிரதமர் மோடி. இந்த வெட்டி சிலை திறப்பு சமூக ஊடகங்களில் சந்தி சிரித்தது. “ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” தமிழ் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. ஆனால், மோடி ஆதரவு ஊடகங்களால் போற்றி புகழப்பட்ட சிலை திறப்பு நூற்றுக்கணக்கான பழங்குடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பலிவாங்கியிருக்கிறது.

பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பறித்த ‘உலகின் மிகப் பெரிய சிலை’!

சுமார் மூவாயிரம் கோடி செலவில் ‘ஒற்றுமைக்கான சிலை(!)’ஐ, வல்லபாய் பட்டேல் பிறந்த நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் திறக்கப்பட்டது. இந்த இடத்தை புதிய சுற்றுலா தளமாக மாற்ற மோடி சூளுரைத்த நிலையில், இந்தச் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த பழங்குடிகள்  கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்தது குஜராத் போலீசு. இவர்களில் பெரும்பாலோனோர் பழங்குடியின விவசாயிகள். சிலை திறப்பு விழாவன்று கைதானவர்கள் ஒரு நாளுக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

லக்கன் முசாஃபர், பட்டேல் சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள இடத்தில் அமைந்துள்ளது லக்கன் முசாஃபரின் கிராமம்.  சிலை திறப்பை எதிர்த்து போராடியதற்காக கைது செய்யப்பட்ட 24 பேரில் இவரும் ஒருவர். பட்டேல் சிலை திறப்பு தன்னுடைய கிராமத்தினரை சினம் கொள்ள வைத்துள்ளது என்கிறார் இவர்.

“மோடியின் தனிப்பட்ட விருப்பத்துக்காக, பழங்குடிகளின் உரிமைகளின் மீது இந்த சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. மக்களின் பணம், பிரயோசனம் இல்லாமல் வீணாக்கப்பட்டிருக்கிறது” என்பதே சினத்துக்கு காரணம் என்கிறார் லக்கன்.

நர்மதா நதியில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை மூலம் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மக்கள் வாழிடங்களை இழந்திருக்கும் நிலையில், கெவாடியா என்ற இடத்தில் ‘ஒற்றுமைக்கான சிலை’ நிறுவப்பட்டுள்ளது. கெவாடியா பகுதியைச் சுற்றிலும் தெற்கு குஜராத்தின் பழங்குடிகள் வசிக்கிறார்கள். சர்தார் சரோவர் அணை மற்றும் பட்டேல் சிலையை உள்ளடக்கி இந்த பகுதி சுற்றுலா தளமாகும் போது பழங்குடிகளில் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

பழங்குடிகளின் விவசாய நிலங்களும் வீடுகள், ‘பூக்களின் பள்ளத்தாக்கு’ ஆகவும் ‘டெண்ட் நகரம்’ ஆகவும் சுற்றுலா துறையால் மாற்றப்படும். அனைத்து மாநிலங்களுக்குமான விருந்தினர் இல்லங்கள், ஹோட்டல்கள், படகு குழாம் ஆகியவை ஆக்கிரமிக்கும். இதை சாத்தியப்படுத்த கெவாடியாவிலிருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி நர்மதா ஆற்றின்  கீழே சிறிய அணையை கட்டிமுடித்திருக்கிறது. அணை பணிகள் முழுமையடையும்போது, ஆற்றிலிருந்து இந்த சிறிய அணைக்கு நீர் கொண்டுவந்து நிரப்புவார்கள்.

இந்த சிறு அணைக்காக, ஆறு கிராமங்களில் நிலங்கள் ஏற்கனவே பிடுங்கப்பட்டுவிட்டன. பணி நிறைவடையும்போது, இருபக்கமும் உள்ள மேலும் ஏழு கிராமங்கள் காணாமல் போகும்.

லக்கன் முசாஃபர்.

“இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக நர்மதா ஆற்று நீரை பாசனத்துக்காக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் லக்கன். “எங்களுக்கு எப்போதும் தண்ணீர் பிரச்சினை இருந்தது. உண்மையில் அரசுக்கு எங்கள் மீது அக்கறை இருந்திருந்தால் ஒரு கால்வாயின் மூலமாக அணையிலிருந்து எங்கள் கிராமத்துக்கு தண்ணீரை கொண்டுவந்திருப்பார்கள். ஆனால், எங்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்யும் அரசியல் விருப்பம் அவர்களுக்கு இல்லை.”

போதிய இழப்பீடு பெறுவதைத் தவிர வேறு எதையும் அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது என்பதே கடந்த காலங்களில் வாழிடங்களை இழந்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்களின் அனுபவமாக இருக்கிறது. 1990களில் நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த 19 கிராமத்தினர் சர்தார் சரோவர் அணைக்காக வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். அந்த இடங்களில் இன்னமும்கூட போதிய குடிநீர் வசதியோ, இன்னபிற அடிப்படை வசதிகளோ செய்து தரப்படவில்லை என்கிறார் லக்கன். பல விவசாயிகளின் வீட்டு, விவசாய நிலத்திலிருந்து வெகு தூரம் தள்ளியிருந்தது.

விவசாயிகள் குறித்து மோடிக்கும் குஜராத் அரசுக்கும் கடுகளவும் அக்கறை இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை அக்டோபர் 31-ஆம் தேதி நிரூபணம் ஆனது. பட்டேல் சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் கால்வாயை நிரப்ப, நர்மதா அணையிலிருந்து சுற்றியிருக்கும் கிராமத்தினருக்கு எவ்வித முன்னெச்சரிக்கை விடப்படாமல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் குறைந்தது முப்பது விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்திருந்த அறுவடையை இழந்துள்ளனர். ஊடகங்களில் சிறப்பாக காட்டப்பட வேண்டும் என்பதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணாக்கப்பட்டிருக்கிறது என கொதிக்கிற லக்கன், குறைந்தபட்சம் தண்ணீர் திறந்துவிடப்போகிறோம் என்பதையாவது சொல்லியிருக்கலாம் என்கிறார்.  “தண்ணீர் நிரம்பிய விவசாயி நிலங்களில் படகை விடப்போகிறார்களா?” என கேட்கிறார் லக்கன்.

பட்டேலின் சிலையை அடைய போடப்பட்ட சாலைக்காக ஆறு கிராமங்களைச் சேர்ந்தவர்களின் நிலங்கள் பறிபோயிருக்கின்றன. கடந்த வாரம் குருதேஸ்வர் கிராமத்தில் வீடுகள், கடைகள், தண்ணீர் குழாய்கள் ஆகியவை சேதப்படுத்தப்படுவதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் லத்தி கம்புகளை கொண்டு போராட்டக்காரர்களை அடித்திருக்கிறது போலீசு. அங்கே வீடிழந்தவர்கள் ஒரு கிலோ மீட்டர் தள்ளி குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

தன்கண்முன்னே சக கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லலுறுவதைக் கண்ட லக்கன், ’உலகின் மிகப்பெரிய சிலை’ என்கிற வெட்டி பெருமையை கடுமையாக சாடுகிறார்.

படிக்க:
மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !!
பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!

“இந்த திட்டத்தால் இங்கே வாழும் மக்களுக்கு யாதொரு பயனும் இல்லை. குறைந்தபட்சமாக உறுதியளித்த வேலை வாய்ப்பும்கூட ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. இந்த அரசுக்கு சுற்றுலா வருமானத்தின் மீதுதான் முழு கவனமும். ஆனால், அவர்கள் உள்ளூர்வாசிகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை.  மோடி தனக்காக இதை செய்கிறார், தன்னுடைய புகழுக்காக இதைச் செய்கிறார். இப்போது அவர், ‘நான் உலகத்திலேயே பெரிய சிலையை உருவாக்கியவன்’என சொல்லிக்கொள்ளலாம். மேலும் அவர், இதை பெரிய நிறுவனங்களாகவும் செய்கிறார்” என்கிறார் லக்கன்.

மேலும் அவர், “விவசாயிகளும் உள்ளூர்வாசிகளும் பழங்குடிகள் என்பதாலேயே இப்படியான விட்டேத்தி தனத்துடன் அரசு நடந்துகொள்கிறது. இதுவே ‘பட்டேல்’களாக இருந்திருந்தால் அவர்களால் அசைத்திருக்கக்கூட முடியாது. ஆனால், பழங்குடிகளால் ஒன்றும் செய்யமுடியாது என அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் போராடுகிறோம்”.

செய்தி ஆதாரம்:
‘Statue of Unity tourism zone will displace us from our lands’: Why Adivasis protested Modi event