ந்த வருடத்தில் நான் சந்தித்த இரண்டாவது பூங்கொடி இவர். முதல் பூங்கொடி, தோழர் முகிலனின் இணையர். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் வண்டிகளில் பெண்கள் பெட்டியில் இவரை நீங்கள் பார்க்கலாம். ‘கடல..பட்டாணி சுண்டல் பத்து ரூபாஎன விற்றுக் கொண்டிருப்பார். எப்போதாவது அவரிடம் ஒரு பாக்கெட் சுண்டல் வாங்கினால் இனாமாகக் கொஞ்சம் புன்னகையைப் பெறலாம். பல நாள் இடைவெளிவிட்டுச் சந்தித்தால்எப்படி இருக்கிங்க?’ என்று பரஸ்பரம் கேட்டுக் கொள்வோம். எங்களது அதிக பட்ச உரையாடல் அவ்வளவுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு இரவு பயணத்தில் அவருடன் ஆர அமரப்பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

எங்கே?” என்றார்.

புகைப்படம் எடுக்க வெளியூர் பயணம்என்றேன்.

இந்த வேளையில வெளியூருக்கா? வீட்டுல அப்பா அம்மா ஏதும் சொல்லமாட்டாங்களா?” என்று அடுத்த கேள்வி.

இல்ல. அப்பாதான் எனக்கு பக்கபலமே!” என்றேன்.

! எத்தனை வயசு இப்போ?”

“28!”

நீங்க ஒரே பொண்ணா?”

இல்ல. குட்டி தம்பி இருக்கான்!”

ம்ம்ம். உங்க வயசுல எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைங்க இருந்துச்சு! ரொம்ப சின்ன வயசுலயே கல்யாணம் செய்துட்டாங்க. இப்போ பெரிய பையன் ஏழாவது படிக்கிறான். படிப்ப விட்டது எவ்வளவு தப்புனு இப்ப நினைச்சு பார்க்கறேன்

இரண்டு பிள்ளைங்களா? உங்களப் பாத்தா ரெண்டு பிள்ளைங்களுக்கு அம்மான்னு நம்பவே முடியல! இப்போ என்ன வயசாகுது உங்களுக்கு?”

“33!”

அப்போ நான் உங்கள பூங்கொடி அக்கானே கூப்பிடலாம்!” ( சிரித்தபடி)

! கூப்பிடலாமே” (அவரும் சிரிக்கிறார்)

லவ் மேரேஜ்தானே? அழகா சிரிக்கறிங்க லவ் மேரேஜாதான் இருக்கும்!”

ஏன்டா நீங்க வேற! நானே டைவர்ஸ்க்கு கோர்ட்டுக்கு அலைஞ்சிட்டு இருக்கேன்..”

அத்தனை மகிழ்ச்சியான முகத்தின் வாழ்க்கை எத்தனை உயிர்ப்பானதாக இருக்கும் என்று அவரைப் பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் மகிழ்ந்துகொண்ட எனக்கு அவரது அந்த பதில் எதிர்பார்க்காததாகவே இருந்தது.

ஏன்க்கா..!”

அந்த மனுசன் ஒரே குடிம்மா!. நாந்தான் குடும்பத்த காப்பாத்தியாகனும். இதுல நைட்ல இப்படி சுண்டல் வித்துட்டு வீட்டுக்குப் போனா, ‘எவன பாத்துட்டு வரன்னு சந்தேகப்படுது வேற. நம்மால முடியல! ரெண்டு புள்ள பெத்தாச்சு. இனிமே நா யாரப் பாத்து என்ன செய்யப்போறேன்?”

அப்போ.. பிள்ளைங்கள யாரு பாத்துக்கறாங்க?”

அம்மாதான்!”

அப்போ! உங்க வருமானம் தான் குடும்பத்துக்கா?”

ம்ம்ம். பிள்ளைங்க படிப்பு.. அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, அவங்களப் பாத்துக்கனும். எல்லாத்துக்கும் என் வருமானம்தான்!”

தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே!நா உங்களுக்கு வேற வேல பாத்துத் தரவா?”

பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். எனக்கு என்ன வேல கெடைக்கப் போவுது?”

பத்தாவது படிச்சிருக்கிங்க!. அதெல்லாம் கெடைக்கும்..! தேடவா? சூப்பரா.. மனசுக்கு பிடிச்ச மாதிரி

(சிரிக்கிறார்..)

எங்கக்கா நீங்க எறங்கனும்?”

மவுண்டுடா…!..ஹ்ம்ம்ம்.உங்ககிட்ட இன்னிக்கு பேசுனது மனசுக்கு தெம்பா இருக்கு

அதெல்லாம் இல்ல. நீங்கதான் தெம்பானவங்க. உங்ககிட்டதான் நான்லாம் கத்துக்கனும்!”

யாரு..என்கிட்டயா?” என்றுவிட்டு சட்டென இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டுவிட்டு தன் சுண்டல் பையைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தார். மவுண்ட் ரயில் நிலையம் வந்திருந்தது.

நா வரேன்!..” என்று உரக்கக் கூறிக்கொண்டே சென்றது ரயிலின் சத்தத்துக்கிடையே கேட்டது.

படிக்க:
பெண் : வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் மின்னூல் !
பெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை

இங்கு எத்தனையோ போராட்டங்களுக்கு அடித்தளமாக ஒரு பெண்ணாக நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணி ஒன்று இருக்கிறது. அது நம் அருகிலிருக்கும் மற்றொரு பெண்ணை வலிமையாக்குவது. துரோகங்கள், சண்டைகள், சிக்கல்கள், சச்சரவுகள், புறங்கூறுதல் என சில்லரை விஷயங்களைக் கடந்து எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பெண்ணாக வலிமையுடன் மற்றொரு பெண்ணுக்காக நாம் அறத்துடன் நிற்பது. அது நீங்கள் அறியாத பல வகைகளில் பூமியை உய்யச் செய்திருக்கும். பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.

பூங்கொடிகள் வலிமையானவர்கள்!

முகநூலில்: Aishwarya Govindarajan