பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் || தெருமுனைக்கூட்டம் – சென்னை

"பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்" என்ற தலைப்பில் தமிழ்நாடு தழுவிய பரப்புரை இயக்கம் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளால் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 06.10.2024 மாலை 5:30 மணி அளவில் சென்னை ஓட்டேரி பகுதியில் தெருமுனைக்கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்று முடிந்தது.

பாசிச மோடி கும்பல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, குறிப்பாக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பிறகு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடூரங்கள் பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

உ.பி மாநிலத்தில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் பயங்கரவாதத்தை முடிவு கட்டும் முயற்சியாக “பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தழுவிய பரப்புரை இயக்கம் ம.க.இ.க., பு.ஜ.தொ.மு., பு.மா.இ.மு., மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளால் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 06.10.2024 மாலை 5:30 மணி அளவில் சென்னை ஓட்டேரி பகுதியில் தெருமுனைக்கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்று முடிந்தது.

தோழர் துணைவேந்தன் பு.மா.இ.மு அவர்கள் கூட்டத் தலைமையை முன்மொழிய, மக்கள் அதிகாரம் ஓட்டேரி பகுதி தோழர் சகுபர் சாதிக் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக ஓட்டேரி பகுதி சிறுவர்கள் உடன் ம.க.இ.க.வின் சிவப்பு அலை கலைக்குழுவின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு அழகியல் நிறைந்த இளம் இன்னிசை உடன் தொடங்கியது.

தோழர் சகுபர் சாதிக் தனது தலைமையுரையில், “பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் எமது தோழமை அமைப்புகள் இணைந்து பரப்புரைகள் மேற்கொண்டு அதன் ஒரு பகுதியாக தெருமுனைக்கூட்டத்தை நடத்தி வருகிறோம். எமது அமைப்பு பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்தை முடிவு கட்ட 15 முழக்கங்களை முன்வைத்து உழைக்கும் மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பது தான் தீர்வாக அமையும் என்று கூறுகிறது” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, தோழர் புரசை அன்புச்செல்வன், வட சென்னை மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம் அவர்கள் பேசுகையில் மூட நம்பிக்கை பற்றியும், பெண்கள் உடன் கட்டை ஏறுதல் போன்ற சனாதன விசயங்களை எதிர்த்துப் பேசினார். சாதி மறுப்பு திருமணங்களின் அவசியத்தையும், பெண்கள் விடுதலையில் பெரியாரின் பங்கை வலியுறுத்தியும் பேசினார். தற்பொழுது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் மூளையை வறுத்து உண்ணும் மிருகங்களாக மாறியுள்ளதையும் அம்பலப்படுத்திப் பேசினார். பெரியாரின் கொள்கையைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் இது போன்ற ஒன்றிணைந்து கூட்டங்களையும் மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

மேலும், தோழர் ஏ. அப்துல் ஷபிக், தமிழக வாழ்வுரிமை கட்சி, வட சென்னை மாவட்டச் செயலாளர் அவர்கள் பேசுகையில் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள மாநிலங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்க பரிவார கும்பல் தான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. சாதி ரீதியாக, மதரீதியாக, இனரீதியாக மக்களைப் பிரித்து கலவரத்தை நடத்துகின்றன.

மேலும் விளையாட்டுத் துறையிலும் வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீராங்கனைகள் பா.ஜ.க-வைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்தனர். ஆனால் தண்டிக்கப்படவில்லை. இதற்கு எதிரான போராட்டங்களையும் நடத்தி ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரைக்கும் முன்னேறினார். சதித்தனமாக பதக்கத்தையும் பறித்துக் கொண்டது இந்த பி.ஜே.பி கும்பல். மேலும் பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் யூட்யூப் சேனல்களையும் பிரபலங்களையும் தடை செய்வதற்கான மக்கள் அதிகாரம் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனக் கூறி உரையை முடித்துக் கொண்டார்.

தோழர் ஆதிமொழி, வி.சி.க கருத்தியல் பரப்புத் துணைச் செயலாளர் அவர்கள் பேசுகையில், இந்தியாவை ஆட்சி செய்வது பி.ஜே.பி எனும் அரசியல் கட்சி அல்ல; ஆர்.எஸ்.எஸ் எனும் பார்ப்பனிய சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கும் பாசிச கும்பல் தான். 2020இல் போக்சோ சட்டத்தின் கீழ் 43 ஆயிரம் வழக்குகள் 12 நிமிடங்களுக்கு ஒரு முறை பாலியல் பண்புணர்வு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான அடிப்படை காரணம் என்ன என்று நாம் பார்க்க வேண்டும். நாட்டை ஆள்வது மனுநீதி, மனுஸ்மிருதி எனும் பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் சித்தாந்தம் தான். இதனுடன் கஞ்சா மது போதைப் பொருட்கள் என இணைந்து மனிதர்களை மிருகமாக்குகின்றது என்று பேசினார்.

தோழர் குணங்குடி முஹைதீன் மாவட்ட தலைவர் மனித நேய மக்கள் கட்சி, வடசென்னை, மேற்கு மாவட்டம், பேசுகையில் மக்கள் அதிகாரம் கொடுத்துள்ள துண்டறிக்கையில் குறிப்பிட்டது போல் பெண்கள் மீதான பாலியல் வன்கொடூரங்கள் அதிகரிப்பதற்கான ஒரு காரணம் மது போதை அதனைத் தமிழ்நாட்டில் திமுக அரசாங்கம் நடத்தி வருகின்றது. மதுவினால் வருகின்ற வருமானத்தினால் தான் பல்வேறு நலத்திட்டங்களை அவர்கள் அறிவித்து வருகின்றனர். இது ஏற்புடையது அல்ல. திமுக அரசு கட்டாயம் பூரணம் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனக் கூறினார்.

தோழர் ஆ.கா.சிவா மாநில ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு. அவர்கள் பேசுகையில், ஒரு பெண் தொழிலாளி ஆலையில் வெறும் உழைப்பு சுரண்டலுக்கு மட்டும் ஆளாகவில்லை ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் போல உழைப்பு சுண்டல் ஒரு புறமும் பாலியல் சுரண்டல் மறுபுறமும் ஆளாக்கப்படுகின்றார்கள். மறுகாலணியாக்கப் பொருளாதாரக் கொள்கை திணிக்கப்படுவதால் பார்ப்பனிய சித்தாந்தமும் முதலாளித்துவ சீரழிவுக் கலாச்சாரங்களும் பெண்கள் மீது போர் தொடுக்கின்றது. பெண்கள் மீதான பயங்கரவாதத்துக்கு மூலாதாரமான காரணமான அந்நிய ஏகபோக மூலதன பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக, இதனால் ஆதாயம் அடையும் அதானி அம்பானி கார்ப்பரேட் ஊடகங்களுக்கு எதிராகவும் தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் ஒரு மாற்றுக் கட்டமைப்பான பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசு நோக்கி முன்னேற வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.

தோழர் அமிர்தா மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம் அவர்கள் பேசுகையில், தொடர்ந்து பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் பயங்கரவாதிக்குத் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கு அல்ல, பாசிச பி.ஜே.பி தோட்ட பெண் தொழிலாளர் மீது பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டான், அவன் தலைமறைவாகியுள்ளான். சென்னையில் 14 வயது சிறுமியின் மீது 16 வயது சிறுவர்கள் இருவர் பாலியல் வன்புணர்வு செய்ததைக் குறிப்பிட்டு, இதுபோன்று பல்வேறு உதாரணங்களை முன் வைத்தார்.

மேலும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வில் இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருக்கிறது. பெண்கள் வாழத் தகுதியில்லாத மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறி வருகிறது. ஆளும் ஆர்.எஸ்.எஸ் பாஜக கும்பலின் இந்துராஷ்டிர கனவான உத்தரப்பிரதேசம் விளங்குகிறது. குஜராத், உத்தரப்பிரதேசம் என இவர்கள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு, தலித் சிறுமிகளுக்கும், முஸ்லிம்களுக்கும், பழங்குடியினப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இவர்கள் பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதுபவர்கள் இவர்கள் சித்தாந்தம் என்பது அது தான்.

பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் புரியும் குற்றவாளிகளுக்கு அரணாக இருக்கின்றது. பிரஜ்வல் ரேவண்ணா முதல் மணிப்பூர் வரை இவர்கள் குற்றவாளிகளின் பக்கம் நிற்கிறார்கள். காஷ்மீரில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்காக ஊர்வலம் சென்றவர்கள் இவர்கள்; உ.பி-யில் இரவோடு இரவாக பாதிக்கப்பட்ட பெண்ணை எரித்தவர்கள்; பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தவர்கள். இவர்களை ஒழிக்காமல் பெண்களின் நிலையை மாற்ற முடியாது என்றும் சமூக ரீதியான காரணிகளில் ஆபாச வீடியோக்களை தடை செய்ய வேண்டும், கல்லூரிகளில் மாணவர் தேர்தல் ஏன் நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார்.

இறுதியாக, ம.க.இ.க.வின் சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக தோழர். வின்செண்ட் நன்றியுரை வழங்கினார்.

தகவல்
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
9176801656


சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க