privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்பல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் ?

பல்துறை சிந்தனையின் மொத்த வடிவங்களையும் வரலாற்றையும் கொண்ட ஒரே எழுத்தாளர் யார் ?

என் புத்தகத்தை எழுதி முடிப்பதற்காக என்னுடைய ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியை, குடும்பத்தை நான் தியாகம் செய்திருக்கிறேன். இந்த விளக்கத்திற்கு மேல் அதிகமாக நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மார்க்ஸ் பிறந்தார் தொடர் பாகம் 23

-

மார்க்ஸ் பிறந்தார் – 23
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

9. ஒரு மேதையும் அவருடைய சூழலும் – 3

மார்க்சை விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சி அறிவின் உருவகம் என்று கூறலாம். படைப்புச் சிந்தனையே அவருக்கு வாழ்க்கையில் மிகப் பெரிய ஆனந்தம். ஏதாவதொரு வேலையின் காரணமாக விஞ்ஞான ஆராய்ச்சியை அவர் நிறுத்த நேரிட்ட சமயங்களில் அவர் மிகவும் அதிகமாக வேதனைப்பட்டார்.

அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த காலங்களில் ஆராய்ச்சியைத் தொடர முடியவில்லையே என்று அவருக்கு ஏற்பட்ட வேதனையுடன் ஒப்பிடுகின்ற பொழுது நோயினால் ஏற்பட்ட துன்பம் ஒன்றுமல்ல என்றே கூற வேண்டும்.

மார்க்சினுடைய விஞ்ஞான நேர்மை குறை சொல்லப்பட முடியாதது மட்டுமல்ல, எங்கெல்ஸ் கூறியதைப் போல அது மிகையானதும் கூட. எங்கெல்ஸ் துல்லியத் தன்மையை மிக அதிகமாக வற்புறுத்தினார் என்றாலும் அவர் சில சமயங்களில் மார்க்சினுடைய நுழைநுணுக்க நேர்மையைப் பற்றிப் பொறுமையிழந்தார். ஒரு கருத்தை ஒரு டஜன் வெவ்வேறான முறைகளில் நிரூபிக்க முடிந்தாலன்றி அவர் அதைப் பற்றி ஒரு வாக்கியத்தைக் கூட எழுதத் துணியமாட்டார்.(1)

மார்க்சிடம் மாபெரும் சிந்தனையாளர் மாபெரும் விமர்சகருடன் இணைந்திருந்தார்; ஆனால் இளமைக் காலத்திலும் முதிர்ச்சிக் காலத்திலும் அவருடைய விமர்சனம் பிரதானமாக அவருக்கு எதிராகவேதான் இருந்தது. “நான் எழுதி முடித்த ஒன்றை நான்கு வாரங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் பொழுது அது எனக்குத் திருப்தியளிக்கவில்லை என்றால் அதை முற்றிலும் திருத்தி எழுதுவது என்னுடைய குணாம்சம்”(2) என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார்.

மூலதனத்தின் முதல் தொகுதியின் (அதைப் போலவே மற்ற தொகுதிகளுக்கும்) பிரதான கருத்துக்கள் ஏற்கெனவே 1857-58ம் வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன, வரையறுக்கப் பட்டுவிட்டன என்பதை மூலதனத்தின் முதல் கையெழுத்துப் பிரதிகள் எடுத்துக் காட்டுகின்றன; எனினும் இத்தொகுதியை இறுதியாக வெளியிடுபவரிடம் அனுப்புவதற்கு முன் மேலும் பத்தாண்டுகள் மார்க்ஸ் கடுமையாக உழைத்தார்.

படிக்க :
♦ மார்க்ஸ் எனும் அரக்கன் ! வீடியோ 
♦ ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !

அந்தச் சமயத்தில் (1867) “வரலாற்றுப் பகுதி”, அதாவது “உபரி மதிப்புத் தத்துவங்கள்” உட்பட எஞ்சிய தொகுதிகளின் வேலை மிகவும் அதிகமான அளவுக்கு முன்னேற்றமடைந்திருந்தபடியால் மொத்தப் பணியையும், அதிகமாகப் போனால் கூட, ஒரு வருடத்துக்குள் முடித்துவிட இயலுமென்று மார்க்ஸ் கருதினார். எனினும் அவரால் அந்தப் பணியை மரணத்துக்கு முன்னர் பூர்த்தி செய்ய முடியவில்லை (மூலதனத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை அச்சிடுவதற்குத் தயாரிக்கின்ற பொறுப்பை எங்கெல்ஸ் நிறைவேற்றினார்). ஒரு பகுதி சம்பந்தமான ஆராய்ச்சிக்கு ருஷ்ய விவரங்களை ஆராய்வது அவசியமான காரணத்தால் மார்க்ஸ் ருஷ்ய மொழியைக் கற்க ஆரம்பித்தார்.

ஒரு பிரச்சினை சம்பந்தப்பட்ட எல்லாப் புத்தகங்களையும் – ஆசிரியருடைய “தரம்” இங்கே முக்கியமானதல்ல – படிக்காமல் அதைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது நியாயமல்ல என்பது மார்க்சின் கருத்து. மூலதனத்தில் அவர் மெய்யாகவே “வரலாற்றின் தீர்ப்பை வழங்கினர்”; ஒவ்வொரு பொருளியலாளருக்கும் – அவருடைய பங்கு எவ்வளவுதான் அற்பமானதாக இருந்தாலும் – உரிய வெகுமதியளித்தார்.

மூலதனம் ஒப்புவமையில்லாத நூலாகும், அது விவரங்களில் பேருருவத்தைக் கொண்டிருக்கிறது, பொருளாதார (பொருளாதாரம் மட்டுமல்ல) சிந்தனையின் எல்லா வடிவங்கள் மற்றும் வெளியீடுகளின் மொத்த வரலாற்றின் கூட்டிணைப்பாக இருக்கிறது; மார்க்சின் வாழ்க்கையின் ஆன்மிக வளர்ச்சியின், கடந்த காலக் கலாச்சார பாரம்பரியம் அனைத்தின் கூட்டிணைப்பாகவும் இருக்கிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறை அதன் தவிர்க்க முடியாத வீழ்ச்சியை நோக்கி முன்னேறுகின்ற தர்க்கம் முதன்முறையாக வெளிப்படுத்தப்படுவதன் காரணமாகவும் அது ஒப்புவமையில்லாத நூலாக இருக்கிறது.

மூலதனம் ஒரு பொருளாதார நூல் மட்டுமல்ல. அது முதலாளித்துவச் சமூகத்தின் எல்லா உறவுகளையும் அம்சங்களையும் பகுப்பாய்வு செய்கிறது. தன் விடுதலைக்காகத் தொழிலாளி வர்க்கம் நடத்துகின்ற அரசியல் போராட்டத்துக்கும் உலக கம்யூனிஸ்டு இயக்கத்தின் போர்த்தந்திரத்துக்கும் செயல்தந்திரத்துக்கும் உறுதியான விஞ்ஞான அடிப்படையை அளிக்கிறது. அதனால் தான் – மார்க்ஸ் கூறியபடி – இப்புத்தகம் முதலாளி வர்க்கத்தை நோக்கிச் செலுத்தப்பட்ட “மிக பயங்கரமான வெடிகுண்டாக” இருக்கிறது. அது முதலாளி வர்க்கத்தின் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை; அதில் மேன்முறையீட்டுக்கு இடமில்லை.

மூலதனம் இலக்கிய நயம் நிறைந்த பேரிலக்கியமாகும். அதைப் படிக்கும் பொழுது ஒருவர் ஆழமான அழகியல் ரசனையை அடைகிறார். அது “முழுமையான கலைப்படைப்பு”. அதன் அமைப்பு, சமநிலை மற்றும் விளக்கத்தில் அமைந்துள்ள கறாரான தர்க்கம் ஆகியனவற்றில் மட்டுமல்ல, அதன் நேர்ப் பொருளிலும் அது உண்மையே. ஏனென்றால் மார்க்ஸ் இந்நூலில் மாபெரும் எழுத்துக் கலைஞராகத் திகழ்கிறார்.

மார்க்ஸ் தன்னுடைய சிந்தனைகளை வெளியிடுகின்ற இலக்கிய வடிவத்துக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்தார். வறட்சியான முறையில், அரசாங்க அறிக்கையின் பாணியில் எழுதுவது புலமைக்கு அவசியமான கூறு என்று கருதிய அறிஞர்களை மார்க்ஸ் வழக்கமாகக் கேலி செய்வார். வொல்தேருடன் சேர்ந்து அலுப்பூட்டுகின்ற நடையைத் தவிர எல்லா இலக்கிய நடையும் நன்றே என்று அவர் திரும்பத் திரும்பக் கூறினார்.

மூலதனத்தின் இரண்டாவது ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய பின்னுரையில் தன்னுடைய எழுத்து நடையைப் பற்றி அக்காலத்திய பத்திரிகைகளின் கருத்துக்கள் சிலவற்றை மார்க்ஸ் மேற்கோள் காட்டினார். ஆங்கிலப் பத்திரிகைகள் அவருடைய கருத்துக்களை எதிர்த்தன, எனினும் அவை கூட மூலதனத்தை எழுதுவதில் கையாளப்பட்டிருக்கின்ற முறை வறட்சியான பொருளாதாரப் பிரச்சினைகளுக்குக் கூட தனிவகையான அழகைத் தந்திருக்கிறது என்று குறிப்பிட்டன.

மார்க்ஸ் கையாண்டிருக்கின்ற நடையில் தெளிவும் அசாதாரணமான உயிரோட்டமும் சிறப்பான கூறுகளாகும்; இந்நூல் ஜெர்மானிய அறிஞர்கள் எழுதிய புத்தகங்களைச் “சிறிதும் ஒத்திருக்கவில்லை”, அவர்கள் மிகவும் வறட்சியான, புரியாத நடையில் தங்கள் புத்தகங்களை எழுதுவதால் சாதாரண வாசகர்களின் மண்டைகள் உடைந்து விடும் என்று ஸெயின்ட் பீட்டர்ஸ்பர்க் சஞ்சிகை எழுதியது.

மார்க்ஸ் மூலதனத்தில் எடுத்துக் கொண்ட மிகச் சிக்கலான பொருளை வியக்கத்தக்க தெளிவு மற்றும் வர்ணனையுடன் எழுத முடிந்ததென்றால், மதிப்பின் வடிவங்கள், பண்ட வழிபாடு, முதலாளித்துவத் திரட்டலின் சர்வாம்ச விதி ஆகியவற்றைப் பற்றித் தன்னுடைய பகுப்பாய்வில் நகைச்சுவையையும் கிண்டலையும் அவர் சேர்க்க முடிந்ததென்றால் அவருடைய இலக்கியத் திறமை அவருடைய கட்டுரைகளிலும் வாதப் போரிலும் எவ்வளவு சிறப்பாகப் பிரகாசித்திருக்கும்!

மார்க்ஸ் வன்மையான, இயக்காற்றலுடைய, அதிகமான கருத்துக்களைத் தாங்கி வருகின்ற வாக்கியத்தை எழுதுகின்ற கலையில் பரிபூரணமான திறமை பெற்றிருந்தார். அவர் சிலேடையை மிகவும் விரும்புவார். அவர் மரணப்படுக்கையில் இருந்த பொழுதும் சிலேடை இல்லாமல் என்னால் பேச முடியவில்லை என்று தன் புதல்வியருள் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.

ஷேக்ஸ்பியர்

எழுத்துத் துறையில் லேஸ்ஸிங், கேதே, ஷேக்ஸ்பியர், தாந்தே, செர்வாண்டிஸ், ஹேய்னெ ஆகியோரை மார்க்ஸ் தன்னுடைய ஆசான்களாகக் கொண்டிருந்தார். அவர்கள் நூல்களை மார்க்ஸ் திரும்பத் திரும்பப் படிப்பார். ஆனால் அவர் மாணவர் மட்டுமல்ல, அந்த மாபெரும் ஆசான்களை அவர் சில அம்சங்களில் விஞ்சிவிட்டார்.

மார்க்ஸ் வேறு எந்த மாபெரும் எழுத்தாளரையும் காட்டிலும் “உணர்ச்சிகளைத் தத்து வாசிரியர்களாக” மாற்றுவது எப்படி, ஒரு இலக்கியச் சொற்றொடரில் ஆழமான சிந்தனையை ஏற்றிச் சொல்வது எப்படி என்பதை நன்றாக அறிந்திருந்தார். அந்த வாக்கியத்தின் அமைப்பிலேயே இயக்கவியலின் அழுத்தத்தை வேறு எந்த எழுத்தாளரையும் காட்டிலும் அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்.

முதலில் “ஒரு பக்கத்தில்” என்றும் பிறகு “மறு பக்கத்தில்” என்றும் ஆராய்வதும் முடிவில் “கூட்டு ஆய்வுரை” என்பதும் அவருடைய ஆராய்ச்சி முறையல்ல. ஒரே வாக்கியத்தில், ஒரே பிம்பத்தில் வெவ்வேறு அம்சங்களின் “மோதலையும்” அவற்றின் “கூட்டு ஆய்வுரையையும்” அவர் கொடுப்பதற்கு முயற்சிக்கிறார். எதிர்முனைகள் என்ற முறையில் பெயர்ச் சொல்லையும் வினைச் சொல்லையும் துணிகரமாக ஒன்றுசேர்த்து அவை ஒன்றோடொன்று மோதும்படி, உடனடியாக அவற்றின் எதிரிடையாக மாறும்படி அவர் நிர்ப்பந்திக்கிறார்.

இத்தகைய கருத்துக்களின் இயக்கவியல் ரீதியான பல்டியில், அவற்றைத் தலைகீழாகத் திருப்புவதில்தான் மார்க்சின் நடையின் தனியழகும் புதுமையும் இருக்கின்றன.

“மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், அது உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சி.”

“…விமர்சனம் என்பது அறிவின் உணர்ச்சியல்ல, அது உணர்ச்சியின் அறிவு. அது சிறு கத்தியல்ல, அது ஒரு ஆயுதம்.”

“அவற்றை (கருத்துக்களை) வழிபாடு செய்வதை அவர்கள் ஒரு மரபாகச் செய்திருக்கிறார்களே தவிர அவற்றை வளர்ப்பதில்லை.”

“அநியாயமான முறைகள் அவசியமாக இருக்கின்ற குறிக்கோள் நியாயமான குறிக்கோள் அல்ல.”

“காலணிகளைத் தைத்த ஜாகப் பொமெ மாபெரும் தத்துவஞானியாவார். ஆனால் பல பிரபலமான தத்துவஞானிகள் பாராட்டுக்குரிய காலணி தைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.”

“கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கிறது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடந்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.”

மேலே தரப்பட்டிருக்கும் வாக்கியங்களை எழுதிய பொழுது சமூக நிகழ்வுகளின் சாராம்சமே – அவற்றின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும், வளர்ச்சியிலும் மறுப்பிலும் – மார்க்சின் கையைச் செலுத்தியது வாழ்க்கை இயக்கவியல் கருத்தமைப்புகளின் இயக்கவியலில் மிகப் பூரணமான, மிகச் சுருக்கமான வெளியீட்டை அடைந்தது என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கே ஒவ்வொரு சொற்றொடரும் சிந்தனை விசைச்சுருளாக இருக்கிறது. பிம்பத்துக்கும் கருத்துக்கும் இடையே மோதலில் அதிகச் “செறிவான” உள்ளடக்கத்தைக் கொண்ட ஒவ்வொரு சொற்றொடரும் மிக விரிவாக அமைந்திருப்பதால் அது ஒரு மூதுரையைப் போல இருக்கிறது. மார்க்ஸ் எழுதிய இத்தகைய வாக்கியங்களைக் கொண்டு ஒரு புத்தகமே தயாரிக்க முடியும்.

இதே மூதுரையின் சுருக்கம், ஆழம், ஏளனத்தைத் தொடுகின்ற கிண்டல் ஆகியவற்றுடன் மார்க்ஸ் மனிதர்களையும் வர்ணித்தார். சில வார்த்தைகளைக் கொண்டு ஒரு ஆழமான உளவியல் மற்றும் சமூக ஓவியத்தைத் தீட்டக் கூடிய திறமை மார்க்சுக்கு இருந்தது. பல பிரபலமான தொழில்முறை எழுத்தாளர்கள் கூட இத்திறமையைப் பற்றிப் பொறாமைப்படுவார்கள்.

மார்க்சின் இலக்கிய நடை, அந்த நடையின் நயங்கள் இன்னும் ஆராயப்படாமலிருப்பது துரதிர்ஷ்டமே. அதை நுணுக்கமாக ஆராய்வது அதன் சாராம்சம் இன்னும் அதிகமாக வெளிப்படுவதற்கு, மனிதகுலத்தின் மாபெரும் மேதைகளில் ஒருவருடைய படைப்பு ரீதியான சோதனைச் சாலையை ஊடுருவுவதற்கு உதவி புரியும்.

மூலதனம் நூல் பொருளில் முழுமையாகவும் வடிவத்தில் குறை சொல்லப்பட முடியாததாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மார்க்ஸ் நெடுங்காலம் அதிகமான முயற்சியுடன் பாடுபட்டார். எனினும் புத்தகத்தை எழுதி முடித்த பிறகு அவருக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மூலதனத்தின் முதல் தொகுதி வெளியிடப்பட்ட பிறகும் கூட அவர் அதைத் தொடர்ந்து திருத்திக் கொண்டிருந்தார்.

பயிற்சி மிக்க, கவனமிக்க வாசகர்களின் கண்களுக்குக் கூடத் தெரியாத தவறுகள் அவருக்கு மட்டுமே தெரிந்தன. ஐயம், அதிருப்தி என்ற “பிசாசு” அவரைக் கடைசி நாட்கள் வரை தொடர்ந்தபடியால் அவர் பூர்த்தியடைந்த இரண்டாவது தொகுதியை வெளியிடவில்லை; மூன்றாவது மற்றும் நான்காவது தொகுதிகளின் வேலையை முடிக்கவில்லை.

மூலதனம் எழுதப்பட்ட நிலைமைகளை நாம் நினைத்துப் பார்த்தால் அது உண்மையிலேயே ஒரு மனித மற்றும் விஞ்ஞானச் சாதனையாகும்.

1848-ம் வருடப் புரட்சி ஒடுக்கப்பட்ட பிறகு மார்க்ஸ் குடும்பம் இங்கிலாந்தில் குடியேறியது. அவர்கள் வாழ்க்கைக்கு வழியில்லை. 1852-இல் மார்க்சின் பெண் குழந்தை இறந்த பொழுது அதை அடக்கம் செய்வதற்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை என்பதிலிருந்து அவர்களுடைய வறுமையைப் புரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞான ஆராய்ச்சியை ஒதுக்கி வைத்து விட்டுக் குறைவான ஊதியமாவது கிடைப்பதற்குரிய வழியைத் தேடும்படி மார்க்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டார். New-York Daily Tribune (“நியூயார்க் தினசரி”) என்ற அமெரிக்கப் பத்திரிகைக்கு வாரந்தோறும் இரண்டு கட்டுரைகள் எழுதினார். இப்படிப் பல வருடங்கள் அவர் ஓய்வில்லாமல் உழைத்தார். ஆனால் இந்தக் குறைவான ஊதியம் கூட மார்க்சுக்கு முறையாகக் கிடைக்கவில்லை.

ஏனென்றால் பத்திரிகையின் ஆசிரியர் மார்க்ஸ் எழுதிய எல்லாக் கட்டுரைகளையும் வெளியிடமாட்டார்; சன்மானமாகக் கொடுத்த குறைந்த தொகையையும் அவர் வெட்கமின்றி அடிக்கடி குறைத்துவிடுவார். பத்திரிகை வேலையில் எனக்குக் கிடைத்த ஊதியத்தைக் கொண்டு அனுபவமற்ற எந்த எழுத்தாளரையும் காட்டிலும் குறைவாகவே நான் சாப்பிட்டேன் என்று மார்க்ஸ் எழுதியது முற்றிலும் நியாயமே.

அவர் தன்னுடைய ஆராய்ச்சியை எப்பொழுதாவதுதான் செய்ய முடிந்தது; தொடர்ச்சியாகப் பல மாதங்களை ஆராய்ச்சிக்குச் செலவிட முடிந்தால்….. என்று மார்க்ஸ் கனவு காண்பதுண்டு, அது அவர் கைக்கு எட்டாத ஆனந்தத்தின் சிகரம்.

வருடங்கள் ஓடின; ஆனால் வறுமை மார்க்சையும் அவர் குடும்பத்தையும் தொடர்ந்து துன்புறுத்தியது. 1861-இல் மார்க்ஸ் பத்திரிகை நிருபர் வேலையை, தன்னுடைய முக்கிய வருமானத்தை இழந்தார். சில சமயங்களில் அவர் வாரக்கணக்கில் வீட்டை விட்டு வெளியே போவதில்லை, ஏனென்றால் அவருடைய உடைகள் அடகுக் கடையில் இருந்தன.

மூலதனம் நூலுக்காகத் தயாரித்துக் கொண்டிருந்த புள்ளி விவரக் கணக்குகளை ஒதுக்கி வைத்துவிட்டுத் தன்னுடைய கடன் பட்டியலை எழுதுவார்: ரொட்டிக் கடைக்காரருக்கு, இறைச்சிக் கடைக்காரருக்கு, வீட்டின் உடைமையாளருக்கு…. கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து பணம் கேட்கும் சந்தர்ப்பங்களில் முதலாவது அகிலத்தின் “பயங்கரமான” தலைவர் மறைந்து கொள்வதும் உண்டு. மார்க்ஸ் அந்த நபர்களை அரக்கர்கள் என்று கருதினார்.

சில சமயங்களில் நிலைமை நம்பிக்கையற்றதாக இருக்கும். அதிகமான மன வலிமையையும் துரதிர்ஷ்டமான சமயங்களில் கூட நகைச்சுவையைக் கண்டு ரசிக்கின்ற சிறப்பான திறமையையும் கொண்டிருந்த மார்க்ஸ் தன்னுடைய வீட்டில் “மறு தரப்பிலிருந்து” (அதாவது அவருடைய மனைவியிடமிருந்து) வருகின்ற தாக்குதல்களைச் சமப்படுத்துவதற்காக மெளனமாக இருப்பார்”.(3)

சில சமயங்களில் அவரும் பொறுமையிழந்து விடுவார். தன்னுடைய குடும்பத்தின் வறுமை, கடன்கள், மனைவியின் நோய், தன்னுடைய உடல்நலமின்மை ஆகிய துன்பங்களை வர்ணிக்கின்ற பொழுது “சுருக்கமாகச் சொல்வதென்றல் பிசாசு ஆட்டுகிறது”(4) என்று மார்க்ஸ் கசப்பாக எழுதியதுண்டு.

“மெதுவாக எரிகின்ற நெருப்பில் வாட்டப்படுதல் – அதில் தலையும் இதயமும் காயமடைகின்றன, மேலும் பொன்னான நேரமும் வீணாகிறது – முடிவடைய வேண்டும்!’’(5) ஆனால் அது முடிவடையவில்லை.

மார்க்ஸ் மென்மையும் பாசமும் நிறைந்த தந்தையாக இருந்தார். வறுமையின் கொடுமை தன் புதல்வியர்களைப் பாதிப்பதைப் பற்றி அவர் மிகவும் வேதனைப்பட்டார். சில சமயங்களில் அணிவதற்கு உடைகள் இல்லாமல் அவர்கள் பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாமற் போனதுமுண்டு.

1862-இல் மார்க்ஸ் எங்கெல்சுக்குப் பின்வருமாறு எழுதினார்:

“தானும் குழந்தைகளும் செத்துவிட்டால் நல்லது என்று என் மனைவி தினமும் சொல்கிறாள், உண்மையில் நான் அவளைக் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் இந்த நிலைமையில் நாங்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய அவமதிப்புக்களும் கடுந்துன்பங்களும் பயங்கரங்களும் உண்மையிலேயே வர்ணிக்க முடியாதவை.”(6)

எனினும் லண்டனில் மார்க்ஸ் மற்றும் அவர் குடும்பத்தினருடைய வாழ்க்கை முற்றிலும் துன்பமயமாக இருந்தது என்று கூறிவிட முடியாது. மார்க்ஸ் தன்னுடைய துன்பங்களை வீரத்துடன் தாங்கிக் கொண்டது மட்டுமல்லாமல் மகிழ்ச்சியோடிருப்பதற்கு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதை அகமும் முகமும் மலரப் பயன்படுத்தினார். அவர் இருள்படிந்த, கடுகடுப்பான, எரிந்து விழுகின்ற மனிதர் என்று முதலாளி வர்க்கப் பத்திரிகைகள் எழுதியதுண்டு; ஆனால் அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மார்க்ஸ் வேறுவிதமானவராக இருந்தார்.

அவர் தன்னுடைய இளமைப் பருவத்தைப் போலவே முதுமையிலும் நகைச்சுவை நிறைந்த உரையாடலை விரும்பினார், ரசித்தார். உடலியல் மற்றும் ஆன்மிக நோய்களுக்கு அது மிகச் சிறந்த மருந்து என்று அவர் கருதினார்.

மார்க்ஸ் ஜெர்மனிக்குப் போயிருந்த பொழுது லஸ்ஸாலைச் சந்தித்த பிறகு அவருக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்:

“என் தலை முழுவதிலும் ஏராளமான கவலைகள், கல்லீரல் நோய் வேறு இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் முக்கியமானது என்னவென்றால் நாம் இருவரும் சேர்ந்து நன்றாகச் சிரித்தோம். Simia non ridet (குரங்கு சிரிப்பதில்லை. – ப-ர்) ஆகவே நாம் பரிபூரண புத்தர்கள் என்பதை நிரூபித்து விட்டோம்.”(6)

மார்க்ஸ் அதிகமான வேதனையுடன் எங்கெல்சுக்கு எழுதிய கடிதங்கள் கூட நகைச்சுவையான செய்திகளுடன் தொடங்குகின்றன. மார்க்சுக்கும் எங்கெல்சுக்கும் நடைபெற்ற மொத்தக் கடிதப் போக்குவரத்திலும் மேதாவிலாசமான நகைச்சுவை நிறைந்திருக்கிறது. இரு தரப்பிலும் பிரகாசமான மத்தாப்பு வேடிக்கைகளைப் பார்க்கலாம்.

மார்க்ஸ் “இருள்படிந்த” தன்மையைக் கொண்டவர் என்று அற்பவாதிகள் கூறியதற்குப் பதிலளித்து எங்கெல்ஸ் எடுவார்டு பெர்ன்ஷ் டைனுக்குப் பின்வருமாறு எழுதினார்.

“மூருக்கும் (மார்க்சின் செல்லப் பெயர்) எனக்கும் நடைபெற்ற கடிதப் போக்குவரத்தைப் படிக்கின்ற வாய்ப்பு இந்த முட்டாள்களுக்குக் கிடைக்குமானால் அவர்கள் எல்லா உணர்வையும் இழந்துவிடுவார்கள். எங்களுடைய துணிகரமான, குதூகலமான உரைநடைக்கு முன்னால் ஹேய்னெயின் கவிதை குழந்தை விளையாட்டாகவே இருக்கும். மூர் ஆவேசப்படுவதுண்டு, ஆனால் நம்பிக்கை இல்லாமலிருப்பது கிடையாது! பழைய கடிதங்களை மறுபடியும் படித்த பொழுது எனக்குத் தாங்க முடியாத சிரிப்பு ஏற்பட்டது.”(8)

புரட்சிகரமான நிகழ்ச்சிகளைப் பற்றி, தொழிலாளர்களின் வெற்றிகளைப் பற்றி, முதலாளித்துவ அமைப்பில் நெருக்கடிகளைப் பற்றி செய்திகள் வரும் பொழுது மார்க்ஸ் குடும்பத்தில் அதிகமான மகிழ்ச்சி ஏற்படும். உதாரணமாக, 1857-ம் வருடத்திய அமெரிக்க நெருக்கடி வெடித்த பொழுது-அதன் விளைவாக அவருடைய ஒரேயொரு வருமானத் தோற்றுவாய், பத்திரிகைக்கு எழுதுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது என்றபோதிலும்-மார்க்ஸ் அதை உற்சாகமாகக் கொண்டாடினார்.

அவருடைய பழைய சக்தி திரும்பியது; அவர் இரண்டு மடங்கு சக்தியுடன் உழைத்தார், அதாவது பகலில் தன்னுடைய அன்றாட உணவுக்காகவும் இரவில் அரசியல் பொருளாதார ஆராய்ச்சியை முடிப்பதற்கும் பாடுபட்டுழைத்தார்.

1861-இல் ஒரு புதிய நிதித்துறை நெருக்கடி வெடித்த பொழுது அவர் பின்வருமாறு கூறினார்:

“இந்த அருவருப்பான நிலைமைகளிலிருந்து நான் விடுதலையடைந்து கடும் வறுமையினால் என் குடும்பம் நசுக்கப்படாமலிருக்குமானால், Tribune பத்திரிகையில் நான் நெடுங்காலமாகப் பன்முறை முன்னறிவித்த டிசம்பர் நிதி முறையின் தோல்வியை எவ்வளவு உற்சாகமாகக் கொண்டாடுவேன்!”(9)

ஃபெர்னாண்டு  லஸ்ஸால்

மார்க்ஸ் தன்னுடைய மேதாவிலாசமான அறிவைக் கொண்டு முதலாளி வர்க்கத்துக்கு அடிமைப்பட்ட அறிவுஜீவிகள் நடத்துகின்ற வசதியான வாழ்க்கை தன் குடும்பத்துக்குக் கிடைக்கும்படி சுலபமாகச் செய்திருக்க முடியும். ஆனால் பணம் சம்பாதிக்கின்ற வழியாக விஞ்ஞானத்தைப் பயன்படுத்துவது அதைத் திரித்துக் கூறுவதைப் போலக் கேவலமானது என்று அவர் கருதினார். அதைக் காட்டிலும் மரணமடைவதற்கு அவர் தயாராக இருந்தார்.

விஞ்ஞானத்துடன் தொடர்பில்லாத ஒரு நடவடிக்கையின் மூலம் வருமானம் பெறுவதற்கு அவர் விரும்பினார்; ஆனால் அந்தத் துறையில் அவருடைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஒரு ரயில்வே அலுவலகத்தில் வேலைக்கு முயற்சி செய்த பொழுது, அவருடைய கையெழுத்து சரியில்லை என்று வேலை மறுக்கப்பட்டது.

எவ்வளவு நெருக்கடிகளும் சோதனைகளும் ஏற்பட்டாலும் மார்க்ஸ் தன்னுடைய இலட்சியத்தை நோக்கி உறுதியாக முன்னேறினார். மூலதனத்தை எழுதுவதற்கு இத்தனை வருடங்கள் அவசியமாக இருந்தன என்பது முக்கியமானதல்ல; இவ்வளவு நெருக்கடியான சந்தர்ப்பங்களுக்கு இடையில் அந்த நூலை எழுதி முடித்ததுதான் சிறப்புக்குரியதாகும்.

மேதாவிலாசம் என்பது எல்லையற்ற பொறுமை என்பார்கள். மார்க்சைப் பற்றி இதைக் கூறுவது குறைவான மதிப்பீடுதான். மார்க்ஸ் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடர்வதற்காக இரும்பு போன்ற, மனிதனைக் காட்டிலும் மேலான உறுதியைப் பல வருடங்கள் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது, அவர் கடைசி வரை கடுமையாகப் பாடுபட்டார், அவர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டபடியால் எப்பொழுதும் மரணத்தின் விளிம்பிலேதான் இருந்து கொண்டிருந்தார்.

ஆனால் எந்தச் சோதனையினாலும் இந்த மனிதரை வளைக்க முடியவில்லை.

அவர் தன்னுடைய இளமையில் ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தார், எவ்வளவு கடுமையான தண்டனை கிடைத்தாலும் நெருப்பைக் கொண்டு வருவேன் என்று உறுதி பூண்ட புரோமித்தியசைப் போல மக்களுக்கு அறிவு நெருப்பைத் தருவேன் என்னும் தியாகியின் பாதையை அவர் தேர்ந்தெடுத்தார். அந்தப் பாதையில் தலையை உயர்த்திக் கொண்டு அவர் கம்பீரமாக நடந்தார். புரோமித்தியசைப் போலவே மார்க்சும் “பூமியுலகக் கடவுள்களின்” ஊழியர்கள் தந்த சமரசங்கள் அனைத்தையும் நிராகரித்தார்.

மார்க்ஸ் ஜெர்மன் ஜனநாயகவாதி ஸிக்பிரிட் மேயெருக்கு எழுதிய கடிதத்தில் மூலதனத்தின் முதல் தொகுதியை எழுதும் பொழுது தனக்கேற்பட்ட துன்பங்களைச் சிறப்பான வன்மையுடனும் நேர்மையுடனும் தெரிவிக்கிறார். மேயெர் மார்க்சுக்கு அதிகமான நட்புணர்ச்சியுடன் கடிதங்கள் எழுதுவார். அந்த “வேதனை மிக்க காலகட்டத்தில்” அவருடைய கடிதங்கள் மார்க்சுக்கு அதிகமான மகிழ்ச்சியும் ஆறுதலும் அளித்தன. அதிகார பூர்வமான உலகத்துடன் கசப்புமிக்கப் போராட்டத்தை நடத்துகின்ற பொழுது அவர் அதைச் சிறிதளவு கூடக் குறைவாக மதிப்பிடவில்லை என்று மார்க்ஸ் எழுதினார்.

“சரி, உங்கள் கடிதத்துக்கு நான் ஏன் பதில் எழுதவில்லை? ஏனென்றால் நான் மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்ததனால் தான். எனவே நான் வேலை செய்யக் கூடிய ஒவ்வொரு கணப் பொழுதையும் என் புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு நான் உபயோகிக்க வேண்டியிருந்தது. அதற்காக என்னுடைய ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியை, குடும்பத்தை நான் தியாகம் செய்திருக்கிறேன். இந்த விளக்கத்திற்கு மேல் அதிகமாக நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நம்புகிறேன்.

‘காரியவாதிகள்’ என்று சொல்லப்படுகிறார்களே அவர்களுடைய அறிவைப் பற்றி நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. ஒரு நபர் மாடாக இருக்க முடிவு செய்தால் தன்னுடைய உடம்பைக் கவனித்துக் கொண்டு மனிதகுலத்தின் துன்பத்தைப் பார்க்காமல் முதுகைத் திருப்பிக் கொள்ளலாம். ஆனால் என்னுடைய புத்தகத்தை – குறைந்தபட்சம் கையெழுத்துப் பிரதியாகவாவது – எழுதி முடிக்காமல் நான் இறந்துவிட்டால் உண்மையிலேயே காரியவாதி அல்ல என்று தான் கருதியாக வேண்டும்.”(10)

படிக்க :
சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?

இது மார்க்சின் இதயத்திலிருந்து பிறந்த ஒப்புதல். மார்க்ஸ் தன் வாழ்க்கையை ஆரம்பித்த பொழுது எழுதிய கட்டுரையை, எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பள்ளியிறுதிக் கட்டத்தில் அவர் எழுதிய கட்டுரையை நினைக்கத் தோன்றுகிறது. மனிதகுலத்துக்காகப் பாடுபட வேண்டும், பொது நலத்துக்காகத் தனிப்பட்ட சுகத்தைத் தியாகம் செய்ய வேண்டும் என்று மார்க்ஸ் எழுதியது நம் நினைவுக்கு வருகிறது.

இளம் பருவத்தில் இக்கருத்து அலங்காரமான சொற்றொடராக அவருக்குத் தோன்றவில்லை. அவருடைய வாழ்க்கை முழுவதிலும் அது வழிகாட்டியது. அவருடைய எல்லா முயற்சிகளுக்கும் ஆதாரசுருதியாக இருந்தது. அந்தப் பள்ளியிறுதிக் கட்டுரையை எழுதி முப்பத்திரண்டு வருடங்களுக்குப் பிறகு அவர் மூலதனத்தை வெளியிட்ட பொழுது தன்னுடைய இளமைப் பருவத்தில் எழுதிய வார்த்தைகளை அவர் பெருமையுடனும் திருப்தியுடனும் நினைவுகூர்ந்திருப்பார்:

“மனிதகுலத்தின் நன்மைக்காக நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால் அதன் எந்தச் சுமையும் நம்மை அழுத்த முடியாது, ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் செய்யப்படுகின்ற தியாகம்.”

குறிப்புகள்;

(1) Reminiscences of Marx and Engels, p. 90.
(2) Marx, Engels, Werke, Bd. 30, S. 622.
(3) Marx, Engles, Werke, Bd, 30, S. 310-311.
(4) Ibid., S. 310.
(5) Ibid., S. 314-15.
(6) Ibid., S. 248.
(7) Ibid., S. 604.
(8) Marx, Engles, Werke, Bd, 36, Berlin, 1967, S. 36.
(9) Marx, Engles, Werke, Bd, 30, S. 200.
(10) Marx, Engels, Selected Correspondence, p. 173.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய 22 பாகங்களை படிக்க:

மார்க்ஸ் பிறந்தார் வரலாற்றுத் தொடர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க