“நாய் மனிதர்களை கடித்தால் செய்தியல்ல, மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி” எதைச் செய்தியாக்க வேண்டும் என ஊடக பாடம் எடுப்பவர்கள் தவறாமல் சொல்லும் உதாரணம் இது.

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
அதாவது செய்தி படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்; படிப்பவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைய வேண்டும். தினத்தந்தி, தினமலர் போன்ற அதிகம் விற்பனையாகும் நாளிதழ்கள் மேற்கூறிய ஊடக பாடத்துக்கு மிகச் சிறந்த உதாரணங்கள். படிக்கும் வாசகருக்காக அவை செய்திகளை சுவாரஸ்யமாக்கி தருன்றன.

ஒரு பெண்ணை நால்வர் பாலியல் வன்புணர்வு செய்த செய்தி, படிக்கிறவர்களுக்கு கவலையையோ, கோபத்தையோ உண்டாக்காமல் வெறுமனே அந்த நேர அரட்டைக்குரிய பொருளாகிறது. முதலாளித்துவம் இதைத்தான் விரும்புகிறது. ஒரு செய்தி படிக்கிறவர்களின் சிந்தனையை தூண்டிவிடக்கூடாது என்பதில் அது கண்ணும்கருத்துமாக இருக்கிறது.

தமிழ் செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை அடுத்தவர் துயரம், படிப்பவருக்கு நுகர்வாக பறிமாறப்படுவது ஒரு புறம் நடக்கிறது. இன்னொரு புறம், கட்சி செய்திகள், அரசு தரப்பு செய்திகள், பத்திரிகை சந்திப்புகள் இவை மட்டுமே செய்திகள் ஆகின்றன. அதாவது, இந்தச் செய்திகளைப் படிக்கும் பெரும்பாலான மக்களின் துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள் ஒருபோதும் செய்தியாவதில்லை.

உதாரணத்துக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து எத்தனை செய்தி ஊடகங்கள் களத்துக்குச் சென்று செய்தி சேகரித்து வெளியிட்டன என ஆராய்வோம்.  ஒரு சில புலனாய்வு பத்திரிகைகள் மட்டுமே நேரடியாக மக்களைச் சந்தித்து செய்தி சேகரித்த வெளியிட்டன. செய்தி ஊடகங்களின் களச் செய்தி சேகரிப்பு என்பது, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர்கள் சந்தித்தபோது உடன் போனது, பிரபலங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது அவர்கள் பின்னால் போனது என்பதாகத்தான் இருந்தது.

துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், எதனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என துப்பாக்கிச்சூட்டின் பின்னணி, விளைவுகள் குறித்து எந்த செய்தி ஊடகமும் களத்திலிருந்து மக்களுக்கு உண்மையைச் சொல்லவில்லை. அப்போதும் வினவு களத்திலிருந்து செய்திகளை வழங்கியது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களைக் கூட பார்க்க விடாமல் அரசு மருத்துவமனை முன்பு மக்களை போலீசு தடுத்து நிறுத்திய போது (23.05.2018) எங்களையும் சுடு என மார்பைக் காட்டி நிற்கும் ஒருவர். – படம் : வினவு செய்தியாளர்

தமிழகத்தை மாறி மாறி ஆளும் இரண்டு கட்சிகளும் தங்களுக்கு எதிராக செயல்படும் ஊடகங்களை துடைத்தெறிவதை கடந்த காலங்களில் தீவிரமாகப் பின்பற்றின. காலப்போக்கில் தன்னைத்தானே தணிக்கை செய்துகொண்டு ஊடகங்கள் எப்படியாவது பிழைத்திருந்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டன.

இன்றைய நிலையில் மத்திய – மாநில அரசுகளின் பி.ஆர். ஓக்களாக செயல்படுவது லாபகரமானது என்பதை ஊடகங்கள் கண்டுகொண்டுவிட்டன. விளம்பர வருவாய், கணிசமான வாசகர்கள் என லாபம் கொழிக்கும் ஊடகங்கள்கூட அரசு மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயையும் மறைமுகமாகக் கிடைக்கும் இன்னபிற சலுகைகளையும் இழக்கத் தயாராக இல்லை.

இந்த நிலையில் ஒரு மாற்று ஊடகத்தின் தேவை பெருவாரியான மக்களின் பெருங்கனவாக இருக்கிறது. பெரும் ஊடகங்கள் செய்தியை நுகர்பவர்களாக மக்களை மாற்றிவிட்டபோதும்கூட, அதே மக்கள் ‘உண்மைக்காக’ ஏங்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். மக்களின் உண்மைக்கான ஏக்கத்தை தீர்த்து வைக்கும் முன்னெடுப்பாக ‘வினவு’ தளத்தை நான் பார்க்கிறேன். சமீபத்தில் வினவு நடத்திய கருத்து கணிப்பில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் இந்தக் கருத்தை பிரதிபலித்திருந்தார்கள்.

படிக்க:
தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !
♦ கஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் !

ஒரு குறிப்பிட்ட சித்தாந்ததை பேசும் வலைத்தளமாக தொடங்கப்பட்ட பத்தாண்டுகளில் மாற்று ஊடகமாக, மக்கள் ஊடகமாக வினவு பரிணமித்திருக்கிறது. இது திட்டமிட்ட வளர்ச்சியா என்றெல்லாம் தெரியாது; ஆனால், தமிழ்ச் சமூகத்துக்கு தேவையான வளர்ச்சியாகவே நான் பார்க்கிறேன்.

ஊடகத்துறையில் பதினான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிவருகிற வகையில், நாளிதழ்கள்-காட்சி ஊடகங்கள்-இதழ்கள்-இணைய இதழ்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் ஊடகங்கள் உள்ளடக்கத்தில், குறிப்பாக அச்சு இதழ்கள் மிக பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. தமிழ் ஊடகங்களுக்கு மறுமலர்ச்சி தேவை. அதை அவர்கள் உணர்ந்து செய்கிறார்களோ இல்லையோ, வினவு அதைச் செய்து கொண்டிருக்கிறது.

படம் – வினவு செய்தியாளர்

எப்போதெல்லாம் சமூகம் புதிய மாற்றத்துக்கு தயாராகிறதோ அப்போது ஊடகம் மறுமலர்ச்சி காண்கிறது. சமூக நீதி பேசி தமிழ் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பெரியார், கொள்கைகளை பரப்புவதற்காக பயன்படுத்திய ஊடகத்தின் தமிழ் ஊடக மொழிக்கு புத்துயிர் கொடுத்தார்.  பார்ப்பனர் மொழியில் இயங்கிக்கொண்டிருந்த தமிழ் ஊடகங்களை பெரியார் மீட்டார்; சீர்திருத்தம் செய்தார். ஊடக மொழியை அனைவருக்குமானதாக மாற்றினார். இன்றளவும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த சீர்திருத்தமும்கூட தன்னை புதுப்பித்துக்கொள்ள கோருகிறது. ஆனால், பெருமுதலாளிய ஊடகங்களில் அதைச் செய்வாரில்லை. வினவு அதைச் செய்ய முனைந்திருக்கிறது.

அறிவியல், மருத்துவம், சமூகவியல், வரலாறு, பொருளாதாரம், கல்வி, பண்பாடு என முக்கியமான, ஆழமான கருத்துக்களையுடைய கட்டுரைகளை வினவு வெளியிட்டுவருகிறது. ஆங்கிலம் வழியே படிக்க முடியாத பல கட்டுரைகள், புரிகிற மொழியில் வினவில் காணமுடியும். சிறுபத்திரிகைகளும்கூட ஆழமான கட்டுரைகளை வெளியிடுகின்றன. மொழிநடைதான் அவற்றில் முக்கியமான பிரச்சினை. சிறுபத்திரிகை கட்டுரைகள் அறிவுஜீவிகளுக்காக எழுதப்படுபவை. அதுமக்களுக்கான ஊடகம் அல்ல. சிக்கலான கருத்தையும் எளிய மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக வினவு எழுதுகிறது.

வெகுஜென ஊடகங்களில் பணியாற்றிய எனக்குத் தெரியும்…வினவில் வெளிவரும் பல கட்டுரைகளை தமிழ் இதழ்களில் பார்க்கவே முடியாது. இதையெல்லாம் படிக்க மாட்டார்கள் என ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள். ஆனால், வினவில் படிக்கிறார்கள். இதைத்தான் சீர்திருத்தம் என்கிறேன்.

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் நம்பர் ஒன் நாளிதழான தினத்தந்தியில் தலையங்க பகுதியே கிடையாது. அதுபோல, நடுப்பக்க கட்டுரைகளும் வராது. தினமணியைத் தவிர, சமீப ஆண்டுகளில்தான் தமிழ் நாளிதழ்களில் நடுப்பக்க கட்டுரைகளும் தலையங்கமும் வரத் தொடங்கியிருக்கிறது.

பெரிய கட்டுரைகளையெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என படிப்பவர்களை குறைத்து மதிப்பிட்டன ஊடகங்கள். அல்லது அவர்களுக்கு அறிவூட்ட இவர்கள் தயாராக இல்லை. இந்த லட்சணத்தில் ஆழமான அறிவியல் கட்டுரையோ, வரலாற்றுப் பதிவோ அச்சேற இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம். அதற்குள் அச்சு ஊடகங்கள் காலாவதியாகிவிடும்.

கஜா புயல் பாதிப்பால் குடிநீர் இன்றி அவதிப் பட்டுவந்த பட்டுக்கோட்டை, கறம்பயம், ஜீவா காலனி மக்கள் சாலை மறியல். படம் – வினவு செய்தியாளர்

அதுபோல, நூறாண்டுகால வரலாற்றைக் கொண்ட தமிழ் நாளிதழ்கள் செய்யத் துணியாத மற்றொரு விசயம், களச்செய்தி சேகரித்தல். கஜா புயலுக்கு பின் வந்த நாளிதழ்களைப் புரட்டிப்பாருங்கள். களத்திலிருந்து மக்கள் பிரச்சினையை சொன்ன செய்திகள் மிக மிக சொற்பமாகத்தான் இருக்கும். புயல் போன்ற பேரிடர் பாதிப்பு செய்தியிலும்கூட, சுவரஸ்யமானது மட்டுமே செய்தியாக்கும் அவலத்தை தமிழ் ஊடகங்கள் செய்து வருகின்றன.

ஒரு ஊரில் நான்கு பேர் இறந்தால் செய்தியாகும், நானூறு பேர் பட்டினி கிடப்பது சுவாரஸ்யமற்ற செய்தி. அது அச்சேறாது. நான்கு லட்சம் மரங்கள் வீழ்ந்தது தலைப்புச் செய்தியாகாது, வீழ்ந்த மரத்தை பிடுங்கி நடலாம் என்பது தலைப்புச் செய்தியாகும். அரசு என்ன செய்கிறது என மக்கள் கேட்பது செய்தியாகாது;  ‘இவர்கள்தான் ஹீரோக்கள்’ என தன்னார்வலர்களுக்கு கூடுதல் கவரேஜ் தரப்படும். எளிமையாக சொல்வதென்றால் தி இந்து ஆங்கில பதிப்புக்கும் தி இந்து தமிழ் பதிப்புக்கு உள்ள வேறுபாடு.

அரசுக்கு நோகக்கூடாது என நினைக்கிறார்களா அல்லது தமிழ் ஊடக ஆசிரியர்களின் சட்டியில் உள்ள சரக்கே அவ்வளவுதானா அல்லது இரண்டுமே கூடவா என்பதை ஊடக மாணவர்கள் யாராவது ஆராய்ந்து பட்டம் வாங்கலாம்.  கஜா புயல் தொடர்பாக வினவு களச்செய்தியாளர்கள் சேகரித்த செய்திகளை படித்த உந்துதலே, தமிழ் ஊடகங்களின் நிலையை எழுதக் காரணம். ஆங்கில ஊடகங்களுக்கு இணையாக (வேறு உதாரணங்கள் இல்லை என்பதால்) வினவின் களச்செய்திகள் தரத்துடன் அமைந்துள்ளன.  சொல்லப்போனால் பல களச்செய்திகள் வினவு தளத்தில் வெளியாகி ஒரு வாரம் கழித்து ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

 

கஜா புயலில் சேதமான மாமரங்கள் – இடம் : வெங்கடாபுரம். படம் – வினவு செய்தியாளர்

உதாரணத்துக்கு  கஜா புயலில் சாய்ந்த மாமரங்கள் குறித்த செய்தி வினவு தளத்தில் வெளியாகி, ஐந்து நாட்கள் கழித்து இந்து ஆங்கில பதிப்பிலும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிலும் வெளியானது. உண்மையை, மக்களின் உணர்வுகளை, இன்னல்களை ஆதாரத்துடன் சொன்ன விதத்தை தரம் என்கிறேன். உண்மையைச் சொல்லத்தான் ஊடகங்கள் தேவை. புனைவுகளை சேர்த்து சுவாரஸ்யம்கூட்டி தரப்படுவது செய்தியாக இருக்காது. அதில் தரமும் இல்லை; அறமும் இல்லை. வினவு இந்த இரண்டையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களை சிவில் சமூகத்தின் பிரதிநிதியாக கண்காணிப்பதே ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தின் பணி என அறிவுஜீவிகள் வரையறுத்தார்கள். இன்றைய ஊடகங்கள் சிவில் சமூகத்தை கைகழுவிட்டு, அதிகாரத்தோடு நெருக்கமாகிவிட்டன. மாற்று ஊடகத்தின் தேவையை அவை தானாக உருவாக்கியிருக்கின்றன.

மக்களின் பிரதிநிதியாக, மாற்று ஊடகமாக தன்னுடைய பணியைச் செம்மையாக செய்துகொண்டிருக்கிறது வினவு. ஆறு களச்செய்தியாளர்களை வைத்துக்கொண்டு, கஜா புயல் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட செய்திப்பதிவுகளை தந்திருக்கிறது வினவு. லாபநோக்கத்தோடு செயல்படும் வெகுஜென ஊடகத்தால் இதை நிச்சயம் செய்யமுடியாது. மக்களுக்காக செயல்படுகிறவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

மு.வி.நந்தினி
மாற்று ஊடகம் இல்லையே என்கிற பெருங்கனவைப் பற்றி பெருமூச்சோடு பேசிவிட்டுச் செல்கிற நாம், வினவு தொடர்ந்து இயங்க உதவ வேண்டும். மக்களின் ஊடகம் மக்களின் நிதியால், ஆதரவால்தான் இயங்க முடியும். அதை உணர்ந்து வினவு இயங்க நிதி கொடுங்கள். நமக்கான ஊடகத்தை கட்டியெழுப்புவோம்.

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

3 மறுமொழிகள்

  1. நேர்மையான முறையில் வினவு பற்றிய மதிப்பீடு செய்துள்ளார் ஊடகவியலாளர் நந்தினி அவர்கள், பார்ப்பனீய பாசிச பயங்கரவாத RSS, பா.ஜ.க ….. ரவுடிகள் கும்பலை பற்றி வினவின் அம்பலப்படுத்தும் பதிவுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்…

  2. திமுகவின் சொம்பாகி, விரைவில் முரசொலியாக பரிணமிக்க இருக்கும் , ngo கருத்துக்களை வாந்தியெடுக்கும் வினவு மாற்று ஊடகமா? காமெடி பண்ணாதீங்கய்யா. ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை சர்க்கரைங்ற மாதிரி தான்.

  3. வெட்டி . . !
    உங்க காமெடிதான் தாங்க முடியல. . . !
    சிரிச்சு . . சிரிச்சு. . வயிறு புண்ணாகி போச்சு போங்க . . !

Leave a Reply to வெட்டி மேற்கு குழு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க