ஏண்ணே! இந்த கோதண்டராமன் பண்ண வேலைய பாத்தீங்களா?

ஏன்,      நாலு கறவ மாட  வச்சிகிட்டு, நல்ல விதமா ஊருக்கு பால் ஊத்திகிட்டுதானே இருக்கான், நல்ல மனசுக்காரனாச்சே ஏன் என்னாச்சி!

அட! நம்ப பால்கார கோதண்டராமன் இல்லண்ணே பாறாங்கல்லு கோதண்டராமன்..  நம்ம திருவண்ணாமல பக்கத்துல ஒரு பெரிய சிலையா செஞ்சி அது பெங்களூரு கோயிலுக்கு போவுதாம்ல, படுத்துகிட்டு போனவன் கெடுத்துகிட்டு போனாங்குற கதையா, போற வழியெல்லாம் ரோடு அகலம் பத்தாம கட கண்ணியெல்லாம் மட மடன்னு இடிச்சிகிட்டு போவுதுண்ணே! ஏன்ணே இவ்வளவு  மெனக்கெடு?

டேய்.. அது பெங்களூரு பக்கம் ஈஜிபுரான்னு ஒரு இடத்துல உள்ள கோயிலுக்கு போவுது, அந்த கோயிலோட ட்ரஸ்டி  சதானந்தாவுக்கு ஒரு ஆசை, நூத்தியெட்டு அடி உயரம், இருவத்தியாறு அடிக்கு மேல அகலம், அதுல பதினோரு மூஞ்சி,     இருபத்திரெண்டு கையோட, ஏழு தலை பாம்போட பிரமாண்ட டிசைன்ல ஒரு கோதண்டராமர் சிலை வைக்கணும்னு…

ஏன்ணே! என்னமோ அவுரு மூஞ்சில நாமம் வச்சிக்கிற மாதிரி ஈசியா சொல்றிங்க..  தாராளமா வைக்கட்டும், அத உன் ஊர்ல பண்ணு!  கர்நாடகாவுல கெடைக்காத கல்லா? ஊரான் வூட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேனா எப்புடி? எவ்வளவு சனத்த பாதிக்கிது.

டேய்.. இவ்வளவு பெரிய சிலைய ஒரே கல்லுல செய்யணும்னு பிளானு, சாட்டிலைட்டு வச்சி தேடி இருக்கிராய்ங்க.. அப்புடி ஒரு கல்லு வந்தவாசி கொரக்கோட்டைல கெடச்சிருக்கு!  பாத்தான்..  பேத்தான்!

ராமரு இங்கதான் பொறந்தாருங்குற மாதிரி,  கோதண்டராமரு இந்த கல்லுல தான் என்னய கொடையணும்னாரா?  என்னமோ சாமியே கேட்டுகிட்டமாரி போட்டு வுடுறாய்ங்க பாருங்க! இப்போ தேர இழுத்து தெருவுல வுட்ட கதையா..  சாமியும் தவிக்குது சம்சாரியும் தவிக்கிறான்!

அதுனாலதான்டா,  ஜனம் பூரா  ஆத்திரமாயி திண்டிவனம் பக்கம் மறியல் பண்ணிருக்காய்ங்க!  ஏதோ கொஞ்சம் இடிப்பாங்க, இழப்பீடும் தருவாங்கன்னு விட்டா..  சாமி போவ போவ  பூமி  அதிருது பொட்டு பொட்டுனு வீடு மொகப்பு இடியிது கடையெல்லாம் கழலுது..  போலீச வச்சி ஜனங்கள சமாதான படுத்திருக்காய்ங்க..

என்னத்த சமாதானம்!  வேற வழி. இரனூத்தி நாப்பது டயராலையே நகத்த முடியல,  இத எவன் நகத்தறது.  இப்படியே தெருவுல வுட்டுட்டு போனாங்கணா எவன் வெளிய தெருவ போறது.  புள்ளைங்க பள்ளி கூடம் போவணும்,  பொம்பளைங்க கட கண்ணிக்கு போயாவணும் அதனால இப்புடி அடைச்சிக்கிட்டு நிக்கிறத விட.. ஒடச்சிக்கிட்டு போனாலும் சரிதான்ணு விட்டாய்ங்க!  அவனுங்க பாட்டும் இங்கயே எதுக்குறாங்கனு விட்டுட்டு போய்ட்டா.. எவனால இருக்கு இதோட மல்லுக்கட்ட.. மாட்ட புடிக்கவே வூட்ல ஆளக் காணும்!  நல்லா கொண்டாந்தாய்ங்கயா ரோட்ல!

என்னடா பண்றது மத்த வெவகாரமா இருந்தா மொத்த சனமும் எதுத்துக்கும் இது சாமி வெவகாரமாச்சே..  எல்லாம் கன்னத்துல போட்டுகிட்டு சாமியே போய்டுன்னு வேண்டிக்கிறாங்க.. நீவேற வாய கெளறி எதாவது வெவகாரத்துல இழுத்துவிட்றாத!

ஏன்ணே நான் தெரியாம தான் கேக்குறேன்,  இந்த சாட்டிலைட்டு பேட்ரிலைட்டெல்லாம் வச்சி கல்ல கண்டுபிடிச்சவன்,  அது போவ ஒரு வழிய கண்டுபுடிச்சிட்டுல வேலய பாக்கணும்.  ஏன்ணே!  நம்ம ஊர்ல ஒரு கொசு மருந்து அடிக்க வந்தாகூட முதுவுல இருக்குற டின்னு போவுமாணு ரோசன பன்னிட்டு தான் சந்துகுள்ள வர்றாங்க..  புசு புசுனு இவ்ளோ பெரிய செலய தூக்கிட்டு வாராய்ங்கண்ணா.. எவன் என்ன செஞ்சிடுவானு திமிருதான்ணே!

ஆமாண்டா!  ஒண்ணு எட்டு வழி  சாலைனு காட்ட புடுங்குறான்,  இல்ல சுத்துபட்டுலேயே பெரிய சாமின்னு வீட்ட இடிக்கிறான்.. நம்ம ஊருன்னாலேயே இவய்ங்களுக்கு எளப்பமா போய்டிச்சி.

பின்ன, நாம தண்ணி கேட்டா அவன் கல்ல கொண்டு அடிக்கிறான்!   இங்க வந்து தண்ணி காட்டிட்டு கல்ல கொண்டு போறான்..  கேக்க ஆளு இல்லேனா.. கருவாடு திருடுன பூன கன்னத்துல ரெண்டு முத்தம் கேக்குமாம்!  அந்த கதயால்ல இருக்கு.

என்னமோடா,  நாம குடிக்க தண்ணி கேட்டு ரோட்ல உக்காந்தா கேச போடுறான்,  இது ஒரு மாசமா ஊர மறியல் பண்ணிட்டு கெடக்கு! சூடம் கொளுத்துறான்!  பேசிகிட்டே போனா கேட்டுகிட்டே போவாதடா.. இன்னிக்காவது இந்த டீய குடிக்க வுடுறா..!

ஏன்ணே! கடசியா ஒரு சந்தேகம், இந்த ராமர்னு பேரு வச்சாலே எதயாவது ஒண்ண இடிச்சிக்கிட்டு தான் கெடக்குமா? ஏன்ணே.. கொஞ்சம் நின்னு சொல்லிட்டு போங்கண்ணே!

படிக்க:
ஸ்டெர்லைட் : டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது | மக்கள் அதிகாரம்
பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !