டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்று !

ஸ்டெர்லைட் ஆலையை மூன்று வாரத்திற்குள் மீண்டும் திறக்க ஆவண செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டுள்ளது. 13 உயிர்களைப் பலி கொண்ட பிறகும் டெல்லி திமிர்த்தனமான ஒரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதை மக்கள் அதிகாரம் எதிர்க்கிறது. தமிழக அரசு ஸ்டெர்லைட்டை மூட அரசாணை போட்டதே ஒரு நாடகம் என்று நாங்கள் அன்றே சொன்னோம். எந்த சர்வதேச நீதிமன்றத்துக்கு போனாலும் ஆலையை திறக்க முடியாது என்று சவடாலாக அன்றைக்கு தமிழக அமைச்சர்கள் பேசினர். ஆலையை திறக்கவே முடியாது என்றும், மக்கள் அதிகாரம் வேண்டுமென்றே போராடத்தூண்டுவதாகவும் சொல்லி அடக்குமுறையையும் ஏவியது அரசு. தமிழக அரசின் இந்த கபடநாடகம் இன்று அம்பலமாகியிருக்கிறது.

17-12-2018 அன்று தமிழகம் தழுவிய அளவில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற சிலமணி நேரங்களில் பா.ஜ.க அரசால் தேசிய பசுமைத் தீர்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர்தான் நீதிபதி கோயல். இவர் கார்ப்பரேட் சார்பு நீதிபதி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக தீர்ப்பளித்த நபர். இவர் ஆரம்பம் முதலே ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஓய்வு பெற்ற நீதிபதி அமர்விலான தீர்ப்பாயம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்வதோ, தமிழக அரசாணையை ரத்து செய்வதோ, ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் இறையாண்மையை, ஜனநாயகத்தை கேள்விகுள்ளாக்குவதாகும்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போகிறோம் என்று நடித்துக் கொண்டு, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடும் மக்களை ஒடுக்குகிறது தமிழக அரசு. அமைதி வழி எதிர்ப்புகளுக்கு கூட தடைவிதிக்கப்படுகிறது. கிராமங்களில் போலீசு குவிக்கப்பட்டுள்ளது. முன்னணியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எந்த நேரமும் மக்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தும்மினால்கூட போலீசு சுற்றி வளைக்கிறது, வெளியூர் நபர்கள் யாரும் தூத்துக்குடியில் நுழையக்கூடாது, நெல்லையில்கூட லாட்ஜில் தங்க இடம் தரக்கூடாது என போலீசால் மிரட்டப்படுகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட போலீசு மட்டுமல்ல தமிழக அரசு அதிகாரம் முழுவதும் வேதாந்தா நிறுவனத்தின் கூலிப்படையாக செயல்படுகிறது. அன்றைய ஆங்கிலேய காலனியாதிக்கத்துக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

படிக்க:
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை !
தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?

எங்கள் ஆலையால் எந்தவித மாசும் ஏற்படவில்லை,ஏற்படாது. அதற்கான எந்த ஆதாரமும் தமிழக அரசிடம் இல்லை என அடாவடியாக வாதிட்ட ஸ்டெர்லைட், இன்று தூத்துக்குடி மக்களின் மருத்துவ சிகிச்சைக்கும், மேம்பாட்டிற்கும் 100 கோடி ரூபாய் எதற்காக தரவேண்டும்? பாதிக்கப்பட்ட மக்கள் பணமா கேட்டார்கள்?. உயிரைத் துச்சமாக கருதி ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என மக்கள் போராடுகிறார்கள்.

கோவா, குஜராத், மகாராஷ்டிராவில் மக்கள் ஸ்டெர்லைட்டை அடித்து விரட்டினார்கள். ஆலை இயங்கலாமா கூடாதா என்று தீர்மானிப்பது தமிழக மக்களின் உரிமை. யாரோ ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தீர்ப்பாயம் என்கிற பெயரில் இதை முடிவு செய்ய முடியாது. தமிழக மக்கள் நம் உரிமையை நிலைநாட்ட வேண்டும். வேதாந்தா என்ற பன்னாட்டு முதலாளியை தூத்துக்குடி மக்கள் மட்டும் போராடி வெல்ல முடியாது. அவர்களோடு தமிழக மக்கள் கரம் கோர்த்து வீதியில் இறங்க வேண்டிய நேரமிது!

தமிழக முழுவதும் வருகிற 17-12-2018 அன்று காலை 11-00 மணிக்கு மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்புடன் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்றக்கோரி போராட்டம் நடத்த உள்ளோம். அனைவரும் பங்கேற்க வேண்டும் என அறை கூவி அழைக்கிறோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர். சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்கள் அதிகாரம்.

இதையும் பார்க்க:

புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல் | PALA Song | #bansterlite

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க