டெல்லியில் ஓடும் பேருந்தில் 30 வயதான பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பிதாம்புரா பகுதியில் வசிக்கும் அந்தப் பெண், மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த மே 11-ஆம் தேதி இரவு, வேலை முடிந்து வழக்கம்போல் அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சரஸ்வதி விஹார் ‘பி’ பிளாக் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு ஸ்லீப்பர் பேருந்தின் கதவு அருகே நின்ற நபரிடம் அவர் மணி என்ன என்று கேட்டுள்ளார்.
உடனே அந்த நபர், அந்தப் பெண்ணைப் பேருந்துக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளான். பின்னர் பேருந்து நங்லோய் நோக்கிச் சென்றுள்ளது. ஓடும் பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் ஆகிய இரண்டு காமவெறிப்பிடித்த மிருகங்களும் அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, பேருந்திலிருந்து அந்தப் பெண்ணைத் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
மறுநாள் (12.05.2025) தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து ராணி பாக் போலீசு நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் பிரிவு 64(1): பாலியல் வன்கொடுமை, பிரிவு 70(1): கூட்டுப் பாலியல் வன்கொடுமை, பிரிவு 3(5): பொதுவான நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் குற்றவாளிகள் இருவரைக் கைது செய்துள்ள போலீசு, அந்தப் பேருந்தைப் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன், அந்தப் பேருந்து சட்டவிரோதமாக இயக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பேருந்தில் தடை செய்யப்பட்ட கருப்பு நிறக் கண்ணாடிகள் (Tinted windows) பொருத்தப்பட்டிருப்பதும், அவசரக்கால வெளியேறும் வசதிகள் (Emergency exits) முறையாக இல்லாததும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசு விசாரித்து வருகிறது.
படிக்க: உ.பி: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தலித் சிறுமி தற்கொலை!
2012-ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி ஒருவர் ஆறு பேர் கொண்ட கும்பலால் மிகக்கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியதுடன், மக்கள் நீதிகேட்டு வீதிகளில் இறங்கிப் போராடவும் வழிவகுத்தது. இதன் விளைவாக, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கப் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இருப்பினும், இச்சட்டங்கள் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கவில்லை என்பதையே, தற்போது நிகழ்ந்துள்ள இக்கொடூர சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
டெல்லியில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவின் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் நகரமாக டெல்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக, பாசிச பா.ஜ.க கும்பல் ஆட்சியைக் கைப்பற்றும் மாநிலங்கள் அனைத்திலும், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தீவிரமடைவது ஒரு தொடர் போக்காகவே உள்ளது. சான்றாக, ஒடிசாவில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. தற்போது டெல்லியிலும் இத்தகைய கொடூரச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவது மற்றும் உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை அதிகரிப்பதுமே பாசிச கும்பல் முன்மொழியும் ‘இரட்டை எஞ்சின்’ (Double Engine) ஆட்சியின் உண்மை முகம் என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











