28.05.2026
சென்னை: 61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்
பத்திரிகைச் செய்தி
சென்னை, வேளச்சேரியில் நூறடி சாலை பெட்ரோல் பங்க் அருகே உள்ள பூங்காவில் அதிகாலை நான்கு மணிக்கு நடைப்பயிற்சி சென்ற 61 வயதான மூதாட்டியை ஐந்து பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரைத் தாக்கியுள்ளது. அதிகாலை நான்கு மணிக்கு போதையிலிருந்த கும்பல், அவரை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடும் இடமான மாநகராட்சி பூங்காவில் இத்தகைய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெண்களின் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் பத்து வயது சிறுமி பாலியல் வன்முறை செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் விவாதப்பொருளாகி இருக்கிறது. மேலும், மரக்காணம், உளுந்தூர்பேட்டை, திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்டு பல இடங்களில் பெண்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் தாக்குதல் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில், பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு போதை மற்றும் ஆபாச இணையதளங்கள் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.
சாராயம், கஞ்சா போதை உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களையும் தடை செய்ய வேண்டும் என்றும், பெண்களை பாலியல் பண்டங்களாகச் சித்தரிக்கும் ஆபாச இணையதளங்கள், திரைப்படங்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றைத் தடை செய்ய வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த தி.மு.க அரசும், தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க அரசும் இதில் பாராமுகமாகவே இருக்கின்றன. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் நாள்தோறும் விலைகொடுத்து வருகின்றனர்.
மேலும், பெண்கள் மீது நடைபெறும் பாலியல் தாக்குதல்களில் போலீசு உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் அடங்குவர். இத்தகைய நபர்களை அரசு அதிகாரங்களில் இருக்கும் போது பெண்களின் பாதுகாப்பு குறித்து இவர்களிடமே முறையிடுவது என்பது எவ்வகையிலும் குற்றச் சம்பவங்களைத் தடுக்காது.
எனவே, மக்கள் அதிகாரக் கழகம் கீழ்வரும் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்துகிறது. உடனடியாக பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை அவசர அவசிய பிரச்சினையாகக் கையிலெடுத்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாடு அரசே!
-
- மூதாட்டியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பாலியல் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்!
- மூடு டாஸ்மாக்கை! கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களையும் தடை செய்!
- பெண்களை பாலியல் பண்டமாகச் சித்தரிக்கும் ஆபாச இணையதளங்கள், விளம்பரங்கள், திரைப்படங்கள், புராண இதிகாசங்கள் மதம் சார்ந்த புத்தகங்களைத் தடை செய்!
- பாலியல் குற்றப் பின்னணி கொண்ட அரசு அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்! போதைப் பொருட்கள் கடத்தல், விநியோகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடும் அதிகாரிகளையும் அதற்கு கையூட்டு வாங்கிக் கொண்டு அனுமதிக்கும் அதிகாரிகளையும் பணி நீக்கம் செய்!
![]()
இவண்,
மக்கள் அதிகாரக் கழகம்,
சென்னை மாவட்டம்.
7358482113
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads





