கேள்வி : ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனில் தமிழகம் முழுதும்  ஆர்.கே நகர் தானே, அப்போ தேர்தல் புறக்கணிப்பு ஒன்று தானே வழி ?

– ஆர் ராதாகிருஷ்ணன்

ன்புள்ள ராதாகிருஷ்ணன்,

காசு வாங்கி ஓட்டுப்போடும் மக்களை திட்டுவதில் கமலஹாசன் போன்றோர் கூட ’தைரியமாக’ திட்டுகிறார்கள். முன்னதை விட பின்னதுதான் பிரச்சினை.

ஒரு தோராயமான மதிப்பீட்டின் படி 2 இலட்சம் வாக்காளர்களைக் கொண்ட தமிழக சட்டமன்ற தொகுதி ஒன்றில் 65 முதல் 70% வாக்குகள் பதிவாகின்றன. அதில் வெற்றி பெறும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் முப்பது முதல் நாற்பது சதவீத வாக்குகளைப் பெறுகிறார். இதன்படி தொகுதி மக்களில் 56,000 பேர் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த 56,000 பேர்களில் அதீத ஏழைகள், உதிரிப்பாட்டாளிகள் பத்து சதவீதம் என்றால் சுமார் 5,600-ம் பேர் இருப்பார்கள். என்றால் இவர்களுக்கு மட்டும்தான் அந்த வேட்பாளர் பணம் கொடுக்க வேண்டும். 5,600 பேர்களுக்கு ரூ 500 கொடுத்தாலே மொத்தம் 28 இலட்ச ரூபாய் வருகிறது. சரி 10,000 பேர்களுக்கு கொடுப்பது என்றால் 50 இலட்சம் வருகிறது. 234 தொகுதிகள் என்றால் 117 கோடி ரூபாய் வருகிறது. அரவக்குறிச்சி, ஆர்.கே.நகர் போன்று பில்லியனர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இந்த சராசரி கூடலாம்.

எல்லா தொகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் பணம் கொடுக்கத் தேவையில்லை. அது சாத்தியமும் இல்லை. நலிந்த பிரிவினரில் நமக்கு யார் ஓட்டுப் போடுவார்கள் என்பதை உறுதி செய்தே பணம் கொடுக்கிறார்கள். இரண்டு இலட்சம் மக்கள் தொகையில் 5000 பேர்கள் பணம் வாங்குவதால் முழு மக்களும் வாங்குகிறார்கள் என்று சொல்ல முடியாது. சில ஊர்கள், பகுதிகளில் ஊர்க் கமிட்டி மூலம் மொத்தமாகவும் பணம் வாங்குகிறார்கள். அல்லது கோவில் கொடை, திருப்பணி என்றும் வாங்குகிறார்கள். எனவே பணம் வாங்கும் போக்கு அதிகரித்திருப்பது உண்மைதான்.

பணம் வாங்குவது மூலமாக சமீப ஆண்டுகளில் மக்களின் நேர்மை வீழ்ச்சியடைந்திருப்பதையும் காட்டுகிறது. இந்த வீழ்ச்சி எந்த அளவுக்கு சரிந்திருக்கிறது என்றால் இரு கட்சிகளிடம் காசு வாங்குவது, எல்லா கட்சிகளிலும் காசு வாங்கி காசுக்கேற்ற மாதிரி குடும்பத்தின் வாக்குகளை பங்கு வைப்பது, அதிக வாக்காளர்கள் இருந்தால் அந்தக் குடும்பத்திற்கு பத்தாயிரம், ஐயாயிரம் ரூபாய் பெறுவது என்று இந்த ஏற்பாடுகளுக்கு முடிவே இல்லை.

படிக்க:
♦ ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து : அதே ஆம்பூர் பிரியாணி அதே தேர்தல் ஆணையம் !
♦ அரசியல் கட்டமைப்பில் அதிகரித்து வரும் அராஜகம் : மக்கள் அதிகாரமே மாற்று !

பணம் வாங்கினாலும், வாங்கா விட்டாலும் மக்களுக்கு இந்த தேர்தல் அரசியல் மூலம் தம் வாழ்வில் வசந்தம் மலர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இருப்பதில்லை. மேற்கண்ட நேர்மையின்மைக்கு இதுவும் ஒரு காரணம். எவனோ எவளோ ஜெயிக்கட்டும், அவனால் அவளால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்றாலும் சில நூறு ரூபாய் பணம் வருவதை ஏன் இழக்க வேண்டும் என்று மக்கள் ‘பொதுநலம் கலந்த காரியவாதமாக’ எண்ணுகிறார்கள். தமது அரசியல் அமைப்புக்கள் சரியில்லை எனக் கருதும் மக்கள் அதை மாற்றுவதற்கு தாமும் போராட வேண்டும் எனக் கருதுவதில்லை. யாராவது ஒரு தேவதூதன், சூப்பர் ஸ்டார் வந்து அபயமளிப்பாரா என எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய எதிர்பார்ப்பில்தான் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் துணிந்து கட்சி ஆரம்பிக்கிறார்கள்.

இந்த அனாமதேயங்களும் சரி இந்த அரசியல் அமைப்புகளை ஜனநாயகம் என்று கருதுவோரும் சரி, வாக்களிப்பதை ஜனநாயகக் கடமையாகவும், காசு வாங்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமெனவும் கூறுகிறார்கள். நம்மைப் பொறுத்த வரை மக்களுக்கு இடமில்லாத இந்த ஜனநாயக அமைப்பை மாற்றுவது குறித்து மக்கள் யோசிக்க வேண்டும், போரட வேண்டும் என்கிறோம். காசு வாங்குவது மட்டுமே பிரச்சினை அல்ல.

vote politics
நம்மைப் பொறுத்த வரை மக்களுக்கு இடமில்லாத இந்த ஜனநாயக அமைப்பை மாற்றுவது குறித்து மக்கள் யோசிக்க வேண்டும், போரட வேண்டும் என்கிறோம்.

அரசியல் உலகை சாக்கடை என பொதுப்புத்தியில் ஒரு அரசியலற்ற கருத்தியலை உருவாக்கும் ஊடகங்களே, மற்றொரு புறம் வாக்களிப்பதில் நேர்மையை வேண்டும் என கூறிகின்றன. அரசியலில் மக்கள் இறங்குவது என்பத தேர்தல் அரசியலோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல. நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள், ஊடகங்கள் அனைத்தும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மல்லுக் கட்டும் போது அதை எதிர்த்து நிற்க வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கருதுகிறார்கள் அல்லவா அவர்கள் யாரும் ஸ்டெர்லைட்டின் பிரச்சினையை தேர்தலோடு தொடர்புடையதாக கருதுவதில்லை. மேலும் தேர்தல் அரசியல் கட்சிகள் இந்த விடயத்தில் கையாலாகதவர்கள், கைவிட்டவர்கள் என்பதை அவர்களுடைய அனுபவமே கற்றுத் தந்திருக்கிறது. கூடவே அரசின் நீதிமன்றம், அதிகாவர்க்கம் போன்ற அமைப்புக்களும்தான்.

ஊடகங்கள் உருவாக்கும் அரசியலற்ற கருத்துருவாக்கத்திற்கு லஞ்சம் பற்றிய சித்தரிப்பு மற்றொரு சான்று. அன்றாட அரசு அலுவலகங்களில் பணம் கொடுக்க வேண்டிய அவஸ்தையை மாபெரும் ஊழலாக சித்தரித்து விட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்புடைய மாபெரும் ஊழலை ஏதோ புரியாத புள்ளிவிவரமாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு முறைகேடாக  காரியங்களை சாதித்து தொழில் நடத்தும் நாட்டில் அரசு அலுவலகங்களில் ஒரு சாதி சான்றிதழ் வாங்குவது பணம் கொடுக்காமலா கிடைக்கும்? காவல் நிலையங்களில் அடித்துக் கொல்லும் போலீசை தண்டிக்க முடியாத நாட்டில் போலீசால் நாட்டு மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்? அல்லது ஒரு ரவுடியை எதிர்த்து எப்படி மக்கள் சண்டையிட முடியும்? நாட்டில் அதிகாரங்களை குவித்து வைத்திருக்கும் மேல் மட்டங்கள் அத்தனையும் முறைகேடு செய்வதோடு அதை மறைப்பதை சட்டப்படி செய்யும் போது கீழ்மட்ட நிர்வாக செயல்பாட்டில் என்ன தரம் வந்து விடும்? மேல அடிக்காமல் கீழே என்ன மாற்றம் வந்து விடும்? ஆனால் ஊடகங்கள் அனைத்தும் கீழே அடித்தால் நாடே உருப்பட்டுவிடும் என்று உளறுகிறார்கள்.

தேர்தல் புறக்கணிப்பு என்பது காசு வாங்குவதோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல, அது நமது உரிமைகளை பெறுவதற்காக மாற்று அரசியலை யோசிப்பதோடும் தொடர்புடையது.

ஆகவே தமிழகம் முழுவதும் தூத்துக்குடி மக்கள் போல ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் போல மக்கள் தமது கோரிக்கைகளை உரிமைகளை புரிந்து கொள்ளத் துவங்கினால், பிறகு ஆர்.கே.நகர் மட்டுமல்ல, தேர்தல் மூலமாக மட்டுமே மாற்றம் வரும் என்ற அறியாமைகளும் அலகத் துவங்கும்.

இறுதியில் மக்கள் தமது அதிகாரத்தை தாமே கையிலெடுத்தால்தான் சமூகத்தில் பரந்து பட்ட ஜனநாயகம் அமலுக்கு வரும். இதை மக்கள் புரிந்து கொள்வதற்கு காலம் எடுக்கும். அந்த காலத்தை துரிதப்படுத்துவது எப்படி என்பதே நம் முன் உள்ள பிரச்சினை!
♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்