மூடிமறைக்கப்பட்ட, மர்மமான வழக்குகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மூடிமறைக்கப்பட்ட, மர்மமான தீர்ப்பு குறித்து யாரும் கேள்விப்பட்டதுண்டா? அத்தகையதொரு மகாபாக்கியத்தைத் தமிழக மக்களுக்கு அருளியிருக்கிறது, சென்னை உயர்நீதி மன்றம்.

அந்தத் தீர்ப்புக்குரிய வழக்கும் சாதாரணமானதல்ல. பார்ப்பன பாசிச பா.ஜ.க. கும்பல் தமிழகத்தைக் கொல்லைப்புற வழியில் ஆட்சி செலுத்துவதற்கு அடிகோலிய ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு அது.

அ.தி.மு.க. என்ற கொள்ளைக்கூட்டத்தின் தலைவி ஜெயலலிதா இறந்துபோனதையடுத்து காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குக் கடந்த ஆண்டு (2017) ஏப்ரலில் இடைத்தேர்தல் நடைபெறவிருந்தது. அச்சமயத்தில் அ.தி.மு.க., ஓ.பி.எஸ். தலைமையில் ஓர் அணியாகவும், சசி-தினகரன் தலைமையில் மற்றொரு அணியாகவும் இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. ஓ.பி.எஸ்.-க்கு மோடியின் ஆசியும் பாதுகாப்பும் கிடைக்க, தமிழக ஆட்சியுரிமையோ தினகரன் அணியிடம் சிக்கியிருந்தது. அப்பொழுது தினகரனின் எடுபிடியாக இருந்த எடப்பாடி, தற்காலிகத் தமிழக முதலமைச்சராக உட்கார வைக்கப்பட்டிருந்தார். “நிரந்தர” முதல்வராகும் திட்டத்தோடு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார், தினகரன்.

அந்த இடைத்தேர்தலில் ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாயை வாரியிறைத்த பிறகும்கூட ஓ.பி.எஸ். அணியின் சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதை உளவுத்துறை மூலம் மோப்பம் பிடித்த மோடி – குருமூர்த்தி கும்பல், அந்த இடைத்தேர்தலையே ரத்து செய்யும் சதித் திட்டத்தை அரங்கேற்றியது. அதன்படி, அச்சமயத்தில் தினகரனின் கணக்குப்பிள்ளையாக இருந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, குவாரிகள் உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு ஏவிவிடப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனை வெற்றிபெற வைப்பதற்காக, ஓட்டுக்கு நான்காயிரம் ரூபாய் என்ற கணக்கில், ஏறத்தாழ 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்ட விவரமும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் வழியாக அந்தப் பணம் விநியோகிக்கப்பட்ட ஆதாரங்களும் துண்டுச்சீட்டு வடிவில் சிக்கின.

ஓட்டுக்குப் பணம் பட்டுவாடா செய்த கும்பல்.

இந்த ஆதாரங்களை வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்திடம் வழங்க, அதன் அடிப்படையில் இடைத்தேர்தலை ரத்து செய்தது, ஆணையம். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர் வைரக்கண்ணு மற்றும் தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில், “ஓட்டுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடருமாறு சென்னை – அபிராமிபுரம் போலீசு நிலையத்திற்குப் பரிந்துரைத்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் தனக்குப் பதில் அளித்திருப்பதாக”த் தெரிவித்திருந்தார், வைரக்கண்ணு.

அரசியல் சாசனத்தின் கீழ் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு எனப் பெருமை பாராட்டப்படும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை, அபிராமிபுரம் போலீசு நிலைய ரைட்டர்கூடச் சீந்தாததால், சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு தலையிட்டு, அப்பரிந்துரையின்படி வழக்குப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது.

தேர்தல் அதிகாரிகளின் ‘அதிரடி’.

மாடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு, சித்தப்பனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு என்றொரு சொலவடை உண்டு. அதற்கேற்ப, சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை சிரமேற்று, அபிராமிபுரம் போலீசு நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது, எந்தவொரு குற்றவாளியின் பெயரையும் குறிப்பிடாமலேயே! இந்த மோசடியை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் முறையிட, தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருக்கும் நபர்களைக் குறிப்பிட்டு முதல் தகவல் அறிக்கையைத் தயாரிக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதி மன்றம், இது தொடர்பாக சென்னை மாநகர கிழக்கு இணை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

இவையெல்லாம் இந்த வழக்கின் பிளாஷ்பேக் காட்சிகள். வழக்கின் தொடக்கம் ஏப்ரல் 2017; நடப்பது டிசம்பர் 2018. இடைப்பட்ட இந்த இருபது மாதங்களில் வழக்கு விசாரணையில் நடந்திருக்கும் “முன்னேற்றம்”தான் சுவாரசியமான ஆண்ட்டி-கிளைமாக்ஸ்.

♣  ♣  ♣

டந்த டிசம்பர் 3 அன்று இந்த வழக்கை ஆடி அசைந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வின் முன் ஆஜரான அரசு வழக்குரைஞர் சபிதாராணி, அபிராமிபுரம் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஒன்பது மாதத்திற்கு முன்பே – மார்ச் 2018-லியே ரத்து செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு, அந்த உத்தரவை மிகவும் விநயத்தோடு நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார். வழக்கின் அடிப்படையே காலி செய்யப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்ட நீதிபதிகள் அதிர்ச்சியில் உறைந்தே போனார்களாம்.

கிரிமினல் மாஃபியா கும்பல் ஸ்கெட்ச் போட்டு தடயமேயில்லாமல் கொலை செய்வார்களே, அது போல, இம்முதல் தகவல் அறிக்கையைக் காலி செய்திருக்கிறது, எடப்பாடி பழனிச்சாமி கும்பல்.

திருத்தணி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., நரசிம்மன்.

ஆளும் அ.தி.மு.க.வின் திருத்தணி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான நரசிம்மன் இம்முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களுள் யாராவது ஒருவர்தான் இப்படியொரு வழக்கைத் தாக்கல் செய்ய முடியுமே தவிர, அதற்குச் சம்மந்தமேயில்லாத நபர் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடுக்க முடியாது என ஐ.பி.சி.யில் கூறப்பட்டிருக்கிறதாம். இதன்படி, முதல் பார்வையிலேயே இந்த மனுவைச் சட்டப்படி தள்ளுபடி செய்திருக்க முடியும். ஆனால், நீதிபதி எம்.எஸ்.ரமேஷோ நரசிம்மனின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறார்.

இம்மனுவில் எதிர்மனுதாரராக அபிராமிபுர போலீசு நிலைய ஆய்வாளர் மட்டுமே சேர்க்கப்படுகிறார். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குத் தொடுக்குமாறு பரிந்துரைத்த ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலர் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்படாமல் திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்படுகிறார். இந்த கிரிமினல்தனத்தை அரசு வழக்குரைஞர் மட்டுமல்ல, நீதிபதி ரமேஷும் கேள்விக்குள்ளாக்கவில்லை. எதிர்மனுதாரராகச் சேர்க்கப்பட்ட அபிராமிபுர போலீசு நிலைய ஆய்வாளரோ இந்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி எதிர்மனு தாக்கல் செய்யாமல் கைகழுவுகிறார்.

மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்.

இம்முதல் தகவல் அறிக்கையைச் சட்டப்படியே தள்ளுபடி செய்வதற்கான அனைத்து முகாந்திரங்களையும் எடப்பாடி பழனிச்சாமி அரசு திட்டமிட்டு ஏற்படுத்திக் கொடுக்க, நீதிபதி ரமேஷோ இன்னும் ஒருபடி மேலேபோய், “பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றால், பெருநகர நடுவர் மன்ற நீதிபதியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். இந்த வழக்கில் அப்படிப்பட்ட அனுமதி பெறப்படவில்லை” எனக் குறிப்பிட்டு, இம்முதல் தகவல் அறிக்கையைத் தான் சட்டப்படி ரத்து செய்வதாகக் காட்டுகிறார்.

ஆனால், உண்மையோ வேறுவிதமாக இருக்கிறது. இம்முதல் தகவல் அறிக்கை 23-ஆவது பெருநகர நடுவர் மன்ற நீதிபதியின் அனுமதியைப் பெற்றுத்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனை நீதிபதியிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அம்பலப்படுத்தியிருக்கிறார். அதாவது அரசு மறைத்த விவரம், நீதிபதி ரமேஷுக்குக் கிடைத்த சாக்காகி விட்டது.

மேலும், “அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட துண்டுச்சீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்களும், அவர்களிடம் மொத்தமாக 89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட கணக்கு விவரங்களும் இருந்தாலும், அந்தத் துண்டுச்சீட்டில் ஓட்டுக்கு இலஞ்சம் கொடுத்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. அந்தத் துண்டுச் சீட்டை ஆதாரமாகக் கொண்டு போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” எனக் குறிப்பிட்டு, அம்முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்திருக்கிறார், நீதிபதி ரமேஷ். இனி இலஞ்சப் பரிமாற்றங்கள் ஸ்டாம்ப் பேப்பரில் சாட்சி கையெழுத்துக்களோடு குறித்து வைக்கப்பட்டிருந்தால்தான் வழக்கே பதிய முடியும் போலும்!

சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தபோது, அந்நீதிமன்றத்திற்கே தெரியாமல், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அவ்வழக்கையே காலிசெய்துவிட முயற்சி செய்தார், ஜெயா. அக்கிரிமினலின் வாரிசுப் பட்டியலில் தனக்கும் இடமுண்டு என்பதை நிரூபித்திருக்கிறார், எடப்பாடி பழனிச்சாமி.

அன்று சொத்துக்குவிப்பு வழக்கைக் காலி செய்ய ஜெயா – சசி கும்பலுக்கு நீதிபதி அருணா ஜெகதீசன் உடந்தையாகச் செயல்பட்டார் என்றால், இன்று நீதிபதி ரமேஷ் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கைத்தடியாகச் செயல்பட்டிருக்கிறார்.

முதல் தகவல் அறிக்கையைச் சதித்தனமான முறையில் ரத்து செய்ததோடு, அத்தீர்ப்பைக் கமுக்கமாக அமுக்கியும் வைத்திருந்தது, எடப்பாடி பழனிச்சாமி அரசு. குறிப்பாக, இப்பணப்பட்டுவாடா விவகாரத்தை விசாரித்துவரும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மட்டுமல்ல, வழக்குப் போட பரிந்துரை செய்த தேர்தல் ஆணையத்திற்கும்கூட தீர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. சென்னை உயர்நீதி மன்றப் பதிவாளருக்குத் இத்தீர்ப்பு விவரம் தெரியாமல் போயிருந்தால்கூட நாம் அதிர்ச்சியடைந்துவிட முடியாது.

♣  ♣  ♣

சென்னை உயர்நீதி மன்றத்தின் ஒரு அமர்வு முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்கிறது. மற்றொரு அமர்வோ அச்சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றிய எடப்பாடி பழனிச்சாமி அரசிடமே, அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வீர்களா எனக் கேட்கிறது. டான்சி நிலபேர ஊழல் வழக்கில் உச்சநீதி மன்றம் ஜெயாவின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்த கேவலத்திற்கும் இதற்கும் வேறுபாடு கிடையாது.

வீட்டில் ரெய்டுக்கு வந்த போலீசிடம் மல்லுக்கட்டும் விஜயபாஸ்கர்.

கரூர் அன்புநாதன், தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ், மணல் கடத்தல் மாஃபியா சேகர்ரெட்டி, விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலெட்சுமி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்கள் என அடுத்தடுத்து நடந்துவரும் வருமான வரித்துறை ரெய்டுகள் இப்பொழுது 2,400 கோடி ரூபாய் பெறுமான சத்துணவு ஊழலில் பங்குதாரரான கிறிஸ்டி ஃபுட்ஸ் நிறுவனத்தில் வந்து நிற்கிறது. இந்த ரெய்டுகள் அனைத்தும் அ.தி.மு.க.வையும் எடப்பாடி பழனிச்சாமி அரசையும் தனது விருப்பப்படி ஆட்டிப்படைக்க பா.ஜ.க. நடத்திவரும் மிரட்டல் நாடகங்கள் என்பதைத் தமிழக மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளோ, ரெய்டைத் தொடர்ந்து விஜய பாஸ்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என சீரியஸாக முகத்தைவைத்துக் கொண்டு வருமான வரித்துறையிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.

படிக்க:
டீசல் விலை உயர்வு : பிரான்ஸ் மக்கள் போராட்டம் வென்றது ! இந்தியாவில் எப்போது ?
தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு ! மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகை !

வருமான வரித்துறை மட்டுமா? ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பரிந்துரைத்த தேர்தல் ஆணையம்தான், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு நடத்தியிருக்க வேண்டிய இடைத்தேர்தலை “ரெட் அலர்ட்டை”க் காரணமாகக் காட்டி நிறுத்தி வைத்தது.

குட்கா வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ.தான் அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர்களை இன்னமும் முதல் தகவல் அறிக்கையில்கூடச் சேர்க்காமல் விசாரணையை நடத்திவருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் டி.டி.வி. தினகரன்.

அவ்வளவு ஏன், தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கிலும், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கக் கோரிய வழக்கிலும் சென்னை உயர்நீதி மன்றம் அளித்திருக்கும் முரண்பட்ட தீர்ப்புகள்தான் இன்றுவரை இந்த ஊழல் ஆட்சி கவிழ்ந்துபோய் விடாமல் காப்பாற்றி வருகின்றன.

எடப்பாடி அரசைக் காப்பாற்றும் இந்தச் சேவையில் மற்ற எல்லோரையும்விட தமிழகத்துப் பார்ப்பனக் கும்பல்தான் முன்னணியில் நிற்கிறது. சந்தேகமிருப்பவர்கள், தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை உறுதி செய்து மூன்றாவது நீதிபதி சத்ய நாராயணன் அளித்த தீர்ப்பின் விளைவுகள் பற்றி எழுதப்பட்டிருக்கும் துக்ளக் (7.11.2018) தலையங்கத்தைப் படித்துப் பார்க்கலாம். அதில், தமிழகத்துப் பார்ப்பனக் கும்பலின் ராஜகுருவாகப் பட்டமேற்றிக்கும் துக்ளக் குருமூர்த்தி இப்படி எழுதுகிறார்:

“இந்த நிலையில், மினி (சட்டசபை) பொதுத் தேர்தலையும் (காலியாகவுள்ள 20 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள்) நாடாளுமன்றத் தேர்தலையும் மட்டும் சந்திப்பதைவிட, சட்டசபையைக் கலைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலையும் இணைத்து நடத்த அ.தி.மு.க. சிந்திக்கலாம்” என எடப்பாடி – ஓ.பி.எஸ்.-க்கு ஆலோசனை கூறும் குருமூர்த்தி, அதற்காக முன்வைத்திருக்கும் காரணம்தான் சுவாரசியமானது.

“தற்பொது வெளிப்படையாக நடக்கும் ஊழல் மிகுந்த ஆட்சி 2021 வரை தொடர்ந்து, ஊழல் அதிகமாகி, சட்டசபைத் தேர்தல் நடந்தால், அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். நாளாக நாளாக ஊழல் அதிகமாகுமே தவிர குறையாது. அது பற்றி அ.தி.மு.க. சிந்திக்க வேண்டும். சரியான கூட்டணி அமைத்து 2019-லேயே சட்டசபைத் தேர்தலை நடத்துவது அ.தி.மு.க.வுக்கு நல்லது.” (துக்ளக், 7.11.2018, பக்.4, 5)

குருமூர்த்தி போன்ற பிரம்மஸ்ரீக்களும், நீதிமன்றம், சி.பி.ஐ., வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்களும் எடப்பாடி அரசைக் காக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும்போது, எடப்பாடி பழனிச்சாமி – ஓ.பி.எஸ். கும்பல் அடுத்த தேர்தல்களில் தமது வெற்றி பற்றி கவலை கொள்வார்களே தவிர, ஊழல் வழக்குகளில் தாம் தண்டிக்கப்படுவோம் என அஞ்சிக் கொண்டிருக்கமாட்டார்கள்.

– செல்வம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க