பாஜக-வின் கட்சிப் பத்திரிகையாக செயல்படுவதில் நம்பர் 1 தமிழ் நாளிதழ் எது? கருத்துக் கணிப்பு

ஆண்டு இறுதியை நெருங்கி விட்டோம். சிறந்த மனிதர்கள், சிறந்த முன்னோடிகள், சிறந்த ஆளுமைகள் என ஊடகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு விருதுகள் வழங்கி வருகின்றன. மக்களுக்கு விருது வழங்கும் ஊடகங்களுக்கு விருது கொடுத்தால் என்ன? அதன்படி நேற்று பாஜகவிற்கு நம்பர் ஒன் இடத்தில் சொம்படிக்கும் செய்தி சானல் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்தோம். இன்று நாளிதழ்களைப் பார்ப்போம். புத்தாண்டில் கருத்துக் கணிப்பு முடிவு அடிப்படையில் விருதுகளை வழங்க இருக்கிறோம்.

இன்றைய கணிப்பிற்காக நாம் தெரிவு செய்த நாளிதழ்கள் தினத்தந்தி, தினமலர், தினமணி, தி இந்து (இந்து தமிழ் திசை).

அன்றாடம் கூகுள் செய்திப் பக்கம் சென்று அதில் தமிழ் பிரிவில் பார்த்தால் பாஜக மற்றும் மோடி அரசின் குற்றச் செய்திகள் ஒன்று கூட இருக்காது. மாநில அளவில் உள்ள சமூக ரீதியிலான குற்றச் செய்திகள், எடப்பாடி அரசின் சில்லறைச் செய்திகள், முக்கிய பிரச்சினைகள் குறித்த நீதிமன்ற சால்ஜாப்புகள் இவைதான் இப்பத்திரிகைகளின்  தலைப்புச் செய்திகளாக இருக்கும். தலையங்க பக்கத்திலும் இதுவே நிலைமை.

கடந்த நான்கு நாட்கள் தலையங்க  செய்திகளை மட்டும் பாருங்கள்:

தினத்தந்தி: கம்யூட்டர் தகவல்கள் கண்காணிப்பு (இதில் மோடி அரசு குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை), இயற்கை சீற்றத்தில் இந்தோனேசியா – இலங்கை (பிரச்சினையே இல்லை), சிமெண்டுக்கு வரியை குறைக்க வேண்டும் ( இதில் ஜி.எஸ்.டி வரி குறைப்பிற்காக பாஜகவிற்கு பாராட்டு, பின்பு சிமெண்டு வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை), அரசு மருத்துவமனையிலேயே இந்த கொடுமையா ( பிரச்சினையே இல்லை), இலவச பஸ் பாஸ் இன்னும் வழங்கவில்லை (பிரச்சினையே இல்லை)

தினமலர்: மீண்டும் மீண்டும் பழைய பல்லவி ஏன்? (இதில் ஐந்து மாநில தேர்தல் முடிவகளுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் திட்டம் மறைமுகமாக பழைய பல்லவியாக விமர்சிக்கப்படுகிறது. இந்த பழைய பல்லவிக்கு எதிராக பாஜக புது திட்டங்கள் என்ன முன்வைக்கும்? என்ற ஆவலைக் கேட்கிறது), ஏதோ நடக்கிறது…(இலங்கை பாராளுமன்ற குழப்பம், பிரச்சினையே இல்லை), தனிநபர் உரிமைகள் பாதிப்பு ஏற்படுமா? (இதில் மத்திய அரசின் கணினி கண்காணிப்பு குறித்து எழுதியிருக்கிறார்கள். பயங்கரவாதிகளை கண்காணிக்க வேண்டிய அவசியத்தை விலியுறுத்தி விட்டு, மக்களுக்கு பாதிப்பு இருக்குமா, என விவாதம் நடத்தி சில திருத்தங்களை கொண்டு வரலாமாம்), நல்ல துவக்கம் வரட்டும் (இதில் தமிழகத்தில் தொழில் முதலீட்டிற்கு நல்ல அறிகுறைகள் தென்படுதாம்)

தி இந்து (இந்து தமிழ் திசை):

பருவநிலை ஒப்பந்தம்: நம்பிக்கையளிக்கும் கடோவிஸ் மாநாடு! (பிரச்சினையே இல்லை), வெண்மணியிலிருந்து என்ன கற்க வேண்டும்? (பிரச்சினையே இல்லை),  மணிப்பூர் பத்திரிகையாளர் கைது: ஜனநாயக விழுமியங்களுக்கு ஆபத்து! (இதில் மணிப்பூர் அரசு தவறாக பயன்படுத்தியிருப்பதாக சொல்லிவிட்டு, மாநில அரசுகள் இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று ஒரே போடாக போட்டு விட்டார்கள். மணிப்பூர் பத்திரிகையாளர் மோடி, பாஜகவை எதிர்த்து எழுதியதற்காக கைது என்பதால் அம்பை ஏவியவர் குறித்து எதுவுமில்லை), சிரியாவலிருந்து வெளியேறும் துருப்புகள்: டிரம்பின் பிடிவாதம் ஆபத்தானது! (பிரச்சினையே இல்லை)

தினமணி:

உறைகிறோம்..உருகுகிறோம்…! (வட இந்திய மாநிலங்களில் பனிப்பொழிவாம், பிரச்சினையே இல்லை), பாலமல்ல பாதுகாப்பு அரண்! (அஸ்ஸாம் பாலத்தை திறந்து வைத்த மோடிக்கு பாராட்டு), தடையரே கல்லாதவர்!( கல்வி குறித்து ஒரு சர்வே, அப்துல் கலாம் டைப் அட்வைசுகள், பிரச்சினையே இல்லை) கண் கெட்ட பின்னால் (இதில் ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து தாமதமான முடிவு என்கிறார்கள். பாஜகவை மெல்லியதாக விமரிசித்து விட்டு காங்கிரசின் செயல்பாடும் மெச்சும்படியாக இல்லை என்கிறார்கள்.)

நான்கு நாட்கள் தலையங்கத்திலேயே இந்தனை வில்லங்கம் என்றால் நான்கு வருடத்தில் எப்படியெல்லாம் மானே தேனே போட்டு எழுதியிருப்பார்கள். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த மான் தேன் இன்னும் அமில அருவியாக கொட்டும்.

இன்றைய கேள்வி:

பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 நடுநிலை தமிழ் நாளிதழ் எது?

தினத்தந்தி
தினமலர்
தமிழ் இந்து திசை
தினமணி

(தெரிவு செய்யக் குழப்பமா? விடுங்கள், இரண்டு பதில்களை தெரிவு செய்யுங்கள்)

 

யூ-டியூபில் வக்களிக்க :

https://www.youtube.com/user/vinavu/community

2 மறுமொழிகள்

  1. தினமணி, தினமலர் இரண்டும் இயல்பாக பார்ப்பன பாசம் கொண்டவை.அதன் இயல்பே பாஜக ஆதரவும் மோடி பஜனையும்தான். தமிழ் இந்து திசை,தினத்தந்தி இரண்டும் பணத்துக்காகவோ இல்லை பயத்தினாலோ பாஜகவுக்கு ஜால்ரா தட்டுகின்றன.

  2. பரிசை நாலு பேருக்கும் சமமாகப் பகிர்ந்தளிப்பதுதான் நாணயமான செயல். இவர்களில் ஆட் மேன் தினத்தந்திதான். எனவே அவருக்கு ஒரு சிறப்புப் பரிசையும் சேர்த்து அளிக்கவும்.

    உங்கள் மூலமாக அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..
    முன்னர் குங்குமம் இதழுடன் பரிசுப்பொருள் வழங்கப்பட்டதுபோல இனி
    இந்த நாளேடுகள் அனைத்தும் அதனுடன் ஒரு ஸ்டிரிப் ஜெலுசில் வில்லைகளையும் சேர்த்து போட்டால் நலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க