ந்திரா மாநிலம்-காக்கிநாடா நகரம் சார்ந்த் பகுதிகள்தான் கோதாவரி நதியின் கடைமடைப்பகுதி. காக்கிநாடவை சுற்றியுள்ள பகுதி கோதாவரியின் டெல்டா என்றழைக்கப்படுகிறது. காக்கிநாடா நகரை விட்டு வெளியே சென்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விவசாய நிலங்கள், குறுக்கும் நெடுக்குமாக வாய்க்கால்கள், கால்வாய்கள் என நீர் ஆதாரம் நிறைந்த பகுதியாக இருக்கிறது.

இங்கு விவசாய நிலங்கள் பெரும்பாலும் பண்ணையார்கள் வசம்தான் உள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இரண்டு ஏக்கருக்கும் குறைவாகவே நிலமுள்ளது; அல்லது அதுவும்கூட இல்லாமல் இருக்கிறது. அதில் ஒரு கிராமம்தான் அயனவள்ளி-லங்கா மண்டலத்தைச் சேர்ந்த வீரனவள்ளிபாலேம்.

கோட்டிப்பள்ளி

இந்த கிராமத்திற்கு  செல்ல கொட்டிப்பள்ளியில் இருந்து கோதாவரி ஆற்றின் குறுக்கே கடந்துதான் செல்ல வேண்டும். ஆறு என்றதும் நம் ஊர்போல வறண்ட பாலைவனம் போல் இருக்கும், மணல் கொள்ளையடிக்கப்பட்டு ஆறு என்பதற்கான தடமே அழிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்க வேண்டாம்.

எங்களை ஆட்டோவில் அழைத்து சென்ற நண்பர் ஒருவர், “நாம் ஆற்றை கடக்க படகில் செல்லப் போகிறோம்” என்றார். ஆற்றை  கடந்ததும் எதில் செல்வோம் என்றோம்.  அப்போழுது அவர் “ஆட்டோவையும் படகில் ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும்” என்றதும் திகைப்பு தான் ஏற்பட்டது. உண்மையில் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாண்டமாக இருந்தது கோதாவரி.

கோதாவரி ஆறு

ஆற்றின் கரையில் இருந்த பெரிய படகில் மக்கள் ஏறிக்கொண்டு இருந்தனர். முன்னதாக அந்த படகில் ஒரு காரை ஏற்றி வைத்திருந்தார்கள். ஆட்டோவை படகில் ஏற்றியதும் கிளம்பியது. எதிர் கரையில் இருந்து இன்னொரு படகு மக்களை சுமந்துக் கொண்டு கொட்டிப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆற்றை கடக்கும் தூரம் சுமார் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். படகில் பயணித்த மக்களுக்கு அது புதிதில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் பயணிக்கும்போது புதிதாகவே உணர்கிறார்கள் என்பதை அவர்கள் வளைத்து வளைத்து எடுத்துக்கொண்ட செல்ஃபி நமக்கு உணர்த்தியது.

கோதாவரி படகு பயணம்

“எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த தண்ணியின் வரத்து கொஞ்சம் கொறஞ்சி இருக்கு. இதோட முழு அளவுல பார்த்தா இன்னும் பிரமாண்டமா இருக்கும்” என்று அதன் பெருமை மெய்சிலிர்த்தவாறு சொன்னார் அழைத்துச் சென்ற நண்பர். அவர் சொல்லும்போதே இப்பகுதி பாசனத்தின் வளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த ஆறு இல்லையென்றால் ஆந்திராவில் இருந்து மாபெரும் குடிபெயர்வு மூலம் மக்கள் சென்றிருப்பார்கள் என்பது மிகையல்ல.

கோதாவரி படகு

“பரந்து விரிந்த தென்னை விவசாயம், வாழை விவசாயம், அதற்கிடையில் ஊடுபயிராக சிறுதானிய பயிர் வகைகள், கத்தரி-பூசணிக்காய் என்று காணும் இடமெல்லாம் பசுமை. நிலம் அனைத்தும் பண்ணையாரின் வசம். இந்த பசுமையை கொஞ்சம் அசைத்துப் பார்த்துள்ளது கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி வீசிய பெய்ட்டி புயல்.

பெய்ட்டி புயல் பாதிப்புகள்

இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழைகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தன. வெளியில் இருந்து பார்க்கும் போது அதன் பாதிப்பு தெரியவில்லை. உள்ளே செல்ல செல்ல தான் புயலின் பாதிப்பை முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது. எனவே இவ்விடங்களுக்கு ஊடகங்களோ, அதிகாரிகளோ சென்றிருக்க வாய்ப்பேயில்லை.

ஆற்றை கடந்து குண்டும் குழியுமான சாலையில் ஊர்ந்து செல்லும்போது சாய்ந்து கிடந்த வாழைத்தோப்பின் அருகே இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார் 49 வயதான விவசாயி நாகேஸ்வரராவ். கோதாவரி ஆற்றுப் படுகையோரம் 40 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார்.

விவசாயி நாகேஸ்வரராவ்
விவசாயி நாகேஸ்வரராவ்

அவரிடம் புயல் பாதிப்பு குறித்து கேட்டபோது….

“இந்தமாதிரி சேதாரம் எத்தனையோ பார்த்துட்டோம். இந்த தடவை மொத்த வாழையும் போயிடுச்சி. பூம்பழம், ரஸ்தாளி, கதளி, பழவாழைன்னு நாற்பது ஏக்கரிலும் இதான் போட்டிருக்கேன்.  இந்த வாழையில ஊடுபயிரா பப்பாளி போட்டிருக்கேன். ஆனா இந்த வாழையே தென்னையின் ஊடுபயிராகத்தான் இருக்குது. தென்னையை தவிர மொத்தமும் அழிஞ்சிடுச்சி” என்று சொல்லிக்கொண்டே தோப்பின் உள்ளே கூட்டிச் சென்று காட்டினார். சாய்ந்து கிடந்த மரங்கள் எல்லாம் பாதி குலைதள்ளிய நிலையில் இருந்தது.

சேதமடைந்த காக்கிநாடா வாழை விவசாயம்

“இது உங்களுக்கு சொந்த நிலமா?”…  எனக்கேட்டதும் ….சிரிக்கிறார்.  “இல்லை. இங்க இருக்க மொத்த நிலமும் விஜயநகர ஜமீந்தாருக்குத்தான் சொந்தம். அவங்களுக்கு கோதாவரி படுகையில சொந்தமா ஆயிரக்கணக்கான ஏக்கர் இருக்கு. ஆத்தோட நடுவுல பல மணல்திட்டுகள் இருக்கு. அந்த மணல் திட்டுகளும் ஜமீனுக்குத்தான் சொந்தம். இந்த மணல் திட்டுலயும் விவசாயம் பண்றாங்க. அங்கயும் வாழைதான்” என்கிறார்.

பெய்ட்டி புயல் சேதம்

இன்று சமவெளியில் விவசாயம் செய்வதே இயலாத நிலையில் ஆற்றின் நடுவில் விவசாயம் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. ஆனால், இது அப்பகுதியில் இயல்பாக நடக்கும் ஒன்று.

கோதாவரி மணல் திட்டு விவசாயம்

“சமவெளியில இருக்கறவங்களாவது பரவாயில்ல. கோதாவரி ஆத்து திட்டுல விவசாயம் செய்யிறவங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம். அவங்க சொந்தமா சின்னதா படகு வச்சிருக்காங்க. அவங்களால தெனைக்கும் வந்து போக முடியாது. அதனால  இரண்டு நாள் நிலத்துலயே தங்கி பயிர் பச்சிலய பார்த்துட்டு போயிடுவாங்க. அறுவடை சமயத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.  பயிரை கொண்டு வந்து படகுல தான் ஏத்திட்டு கொண்டு போறதுக்குள்ள போதும்னு ஆயிடும். ஆத்துல வெள்ளம் போனா அவங்க நெலம இன்னும் மோசமாயிடும்.

இப்ப அதெல்லாம்கூட பாதிக்கப்பட்டிருக்கு. இந்த நிலம் ஜமீனோட ட்ரஸ்டுக்கு சொந்தமானது. கொட்டிபள்ளியில தான் ட்ரஸ்ட் ஆபிஸ் இருக்கு. அங்கதான் போயிட்டு குத்தகை பணம் கட்டிட்டு வருவோம்” என்று அவர் சொல்லி முடிக்கும்போது கூட இருந்த நண்பர் குறுக்கிட்டு……….

“இந்த நிலங்கள் எப்படி அறக்கட்டளையாக மாறியதுன்னா…. 1950-60 களில் வினோபாவின் பூமிதான இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீவிர நிலப்பறி போராட்டம். அதைத் தொடர்ந்து  நில உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்தாங்க. அந்த சமயத்துல மீப்பெரும் நிலச்சுவாந்தாரர்கள் தங்கள் பெயரில் இருக்கும் நிலத்தை பிரித்து தங்களது ரத்த உறவுகளின் பெயரிலும், பினாமிகளின் பெயரிலும் எழுதியது போக மீதி நிலத்தை அறக்கட்டளை பெயரிலும் எழுதிக் கொண்டார்கள்.

நிலத்தின் அனுபவஸ்தர்களாக அவர்களே இருப்பார்கள். எல்லா உரிமையும் அவர்களுக்கே இருக்கும்படி செய்து கொண்டார்கள். இதன் காரணமாகவே பெரும்பான்மை மக்களுக்கு நிலம் மறுக்கப்பட்டு காலம் காலமாக குத்தகை விவசாயிகளாகவே இருந்து வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து நாகேஸ்வரராவிடம் “இந்த நிலத்துல நீங்க எவ்ளோ வருஷமா பயிர் வக்கிறீங்க? எவ்ளோ குத்தகை கட்டுறீங்க?

“எங்க தாத்தா-அப்பா, இப்ப நான் என்று வழிவழியா குத்தகைக்கு எடுத்துதான் விவசாயம் பன்றோம். இதை விட்டு வெளியில போக முடியாது. ஒருவேளை போயிட்டா  யார்கிட்டயாவது கொடுத்துடுவாங்க. திரும்ப நம்மள நெனச்சிக்கூட  பாக்க முடியாது. இதனாலயே நாங்க யாரும் பள்ளிக்கூடம்கூட போகல.  ஒரு ஏக்கருக்கு வருசத்துக்கு ரூ.25,000 கட்டிடனும். இதுல பயிர் வக்கிற உரிமை மட்டும்தான் நமக்கு இருக்கு.  தென்னைக்கும் நமக்கும் சம்பந்தம் இல்ல. அதுல விளையிர காயை எல்லாம்  குத்தகைக்கு விட்டுடுவாங்க. குத்தகை எடுக்கிறவங்க எஸ்டேட்ல காச கட்டிடுவாங்க. நாங்க ஒரு மட்டையக்கூட அதுல இருந்து எடுக்க கூடாது. நிலத்துல இருந்து ஒரு பிடி மண்ண எடுத்தாலும் எனக்கு குத்தகை கேன்சல் ஆயிடும்.”

புயலால் சரிந்து கிடக்கும் பப்பாளி

அப்படின்னா…. தென்னைக்கு தண்ணி பாய்ச்சிறது, பராமரிப்பு வேலையெல்லாம் யார் செய்வாங்க?

“வாழைக்கு பாய்ச்சும்போதே தென்னைக்கும் நீர் போயிடும். அதுக்குன்னு தனியா ஆள் வைக்க மாட்டாங்க. எல்லாத்தையும் நாமளே பார்த்துக்க வேண்டியதுதான். கூலி எதுவும் கொடுகிறதில்ல” என்று நிலப்புரபுத்துவ விவசாயத்தின் சுரண்டலை எந்த சலனமுமின்றி இயல்பாக சொல்கிறார்.

உங்களுக்கு மொத்தமா எவ்ளோ இழப்பு? நிவாரணம் எதாவது தர்றதா சொன்னாங்களா?

சந்திரபாபு நாயுடு ஆட்சியில இந்த நாலு வருஷமா 3-4 தடவை வெள்ளம்-புயல் வந்துடுச்சி… இதே மாதிரிதான் டேமேஜ் ஆனது. ஆனா எந்த நிவாரணமும் தரல. இதுக்கு முன்னாடி இருந்த காங்கிரசு அரசாவது எதாவது நிவாரணம் கொடுத்துச்சி. இப்ப அதுவும் வரதில்ல.

இழப்பு எவ்ளோ?

ஏக்கருக்கு 800 கண்ணு, ஒரு கண்ணு ரூ.12 மேனிக்கு ரூ 9600. வாழைக்கு பக்கபலமா முட்டுக்கு சவுக்கு கழி வாங்கனும். ஒரு கழி ரூ.49 மேனிக்கு 800 மரத்துக்கு ரூ.39,200 ரூபா. உரம் 6,000 ஆகும். மொத்தம் 54,800 ரூபா செலவாகும். கூட குறைவா பூச்சி தாக்குனா செலவாகும். நல்லா வெளஞ்சி வியாபாரிகிட்ட விற்கும்போது ஒரு தார் வாழை  150 ரூபாய் (விளைச்சல்-சந்தையின் தேவைக்கு ஏற்ப தாரில் விலை அதிகரிக்கும்) போகும். 800 தார் என்று கணக்கு போட்டால் 1,20,000 வரும். இதுல செலவுக்கான கழிவு போக, குத்தகை 25,000 கட்டனும், மீண்டும் இதை அடுத்த வெட்டுக்கு பராமரிக்க ரூ.15,000 ஆகும். அதெல்லாம் போக மிஞ்சுறதுலதான் குடும்பத்த காப்பாத்தனும். இதுல என்னோட உழைப்ப இல்லாம சொல்லியிருக்கேன்.

விற்பனைக்கு உதவாத வாழைகள்

சாஞ்ச  மரத்தில தேறும் காய் அடிபட்ட காய்னு குறைவான விலைக்குத்தான் வாங்குவாங்க. அதனால ஒன்னும் பிரயோஜனம் இல்லை. ஏற்கனவே இந்த செலவை எல்லாம் வெளியில 3, 4 பைசா வட்டிக்கு வாங்கித்தான் செஞ்சிருக்கேன். இதுல இந்த பாதிப்ப எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல…

வங்கியில விவசாய கடன் தரதில்லையா?

நமக்கெல்லாம் எப்படி தருவான்..?. இந்த நிலம் குத்தகை நிலம். கடன் வாங்கனும்னா, நிலத்தோட உரிமைப் பத்திரம் வேணும். அது எங்ககிட்ட இருக்காது. குத்தகை அக்ரீமெண்ட் பத்திரமாவது தரனும்…. அதுவும் கிடையாது.

அரசாங்கம் குத்தகை விவசாயின்னு ஒரு ஐ.டி கார்டு கொடுப்பாங்க. அதுவும் தரதில்ல. அப்புறம் எப்படி வாங்க முடியும்? நாங்க பயிர் வச்சிருந்தாலும் நிலத்துக்கு சொந்தாகரங்கன்னு சொல்லி ஜமீன்கள் வாங்கிப்பாங்க.

ஒருவேளை சொந்த நிலம் வச்சிருக்கிறவங்களுக்கு பேங்குல லோன் கொடுத்தாலும் ஏக்கருக்கு ரூ.15000 தான் கொடுப்பாங்க. அதுவும் அவ்ளோ சீக்கிரத்துல வாங்கிட முடியாது.

அரசு நிவாரணமும் கிடைக்காது

வியாபாரிகிட்ட இருந்து முன்பணம் எதாவது வாங்கி இருக்கிங்களா?

“ஆமா, ஏக்கருக்கு ரூ.20,000 வாங்கி இருக்கோம். அந்த வகையில ஒரு கடன் இருக்கு. இதை எப்படி அடைக்கிறது, வியாபாரிகிட்ட என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியல” என்கிறார் சோகமாக.

இத்தன வருசமா விவசாயம் செய்யுறீங்க.. ஏன் சொந்தமா நிலம் வாங்கல?

நமக்கு யார் கொடுப்பாங்க…..? அதோட இங்க ஏக்கருக்கு 25 லட்சத்துல இருந்து 50 லட்சம் வரைக்கும் விலை போவுது… அது எந்த மாதிரியான நிலமா இருந்தாலும் இதான் விலை. அப்புறம் எப்படி வாங்க முடியும்?

கோதாவரி

இவ்ளோ பாதிப்பு இருக்க இடத்துல விவசாயம் செய்யிறீங்களே வேற எங்கயாவது போயிட்டு குத்தகை எடுத்து விவசாயம் செய்யிறதுதானே?

சொல்றது சரிதான். ஆனா வேற எங்க போனாலும் லீசு அதிகம். இத விட்டுட்டு போனா திரும்ப இந்த நிலம் கிடைக்காது. இத வாங்க காத்திட்டு கெடக்காங்க. கோதாவரி பக்கமா இருந்தாலும் அந்த தண்ணிய பயன்படுத்துவது இல்லை. பக்கத்துலயே கடல் இருக்கதால உப்புத்தண்ணி கலந்துடுது.  மழை அப்படி  இல்லனா போர் தண்ணி பஞ்சமில்லாம கெடைக்கும்.

திரும்பவும் நீங்க வாழை வைப்பிங்களா? என்ன பண்ண போறீங்க?

அப்படி ஒரு எண்ணம் இல்ல. இதை எல்லாம் கிளீயர் பன்றதுக்கே கொறஞ்சது 15,000 ஆகும். அதுக்கே என்ன பன்றதுன்னு தெரியல. திரும்ப வைக்கணும்னாலும் நேரம் இல்ல. பருவம் தவறி போயிடுச்சி. இப்ப வச்சா மரம் வளர்ந்து நிக்கும்போது திரும்பவும் காத்து, புயல் அடிக்குற காலம் வந்துடும். அப்புறம் எல்லாமும் நாசமாயிடும்.

சவுக்கு கழி
சவுக்கு கழி

உங்களுக்கு பசங்க இருக்காங்களா-என்ன பன்றாங்க?

ரெண்டு பசங்க. ஒரு பொண்ணு ஒரு பையன் . இப்பதான் அரசுப்பள்ளியில  படிக்கிறாங்க.

அவங்கள எதிர்காலத்துல என்ன படிக்க வக்க போறீங்க?

என்ன படிக்க வக்கிறது..! அப்படியே இந்த வேலைதான். இதுதான் எங்க ஊர்ல இருக்க எல்லோருக்கும். ஒரு சிலர் தான் காலேஜ் வரைக்கும் போயிட்டு படிக்கிறாங்க. கடன் வாங்குறது- விவசாயம் செய்யிறது- அதனை அடைக்கிறது- மீண்டும் கடன் வாங்கி விவசாயம் செய்யிறதுன்னு இப்படியே சுத்தி சுத்தி வரணும்.. இதுல புயல்- மழை வந்தா அதையும் சரி கட்டனும். அப்புறம் எங்க படிக்க வைக்கிறது? என்னால படிக்க வக்கிறதெல்லாம் முடியாத காரியம்.

நான் காலையில ஆறு மணிக்கு வீட்டவிட்டு வந்தா நைட்டு பத்து மணிக்குத்தான் நிலத்த விட்டு போவேன். நகரத்துக்கு எப்பவாது ஒருமுறை தான் போவேன். அதுவும் உரம் வாங்க போவேன். அதுக்கு மேல எங்களுக்கு அங்க வேலை இல்ல. நிலந்தான் எங்களுக்கு வாழ்க்கை..! இத காப்பாத்திக்கிட்டாலே போதும்..!

படம், செய்தி: வினவு செய்தியாளர்கள்,
ஆந்திரா, காக்கிநாடாவில் இருந்து..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க