எச்.ஐ.வி பாதித்த இளைஞர் தனது ரத்தத்தால் கர்ப்பிணித்தாய்க்கு தொற்று பரவி விட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து இறந்திருக்கிறார். அந்த இளைஞருக்கு ஆழ்ந்த இரங்கல்களை பதிவு செய்து இந்த கட்டுரையை ஆரம்பம் செய்கிறேன். நடந்தது என்ன? புதிதாக படிப்பவர்களுக்கான ஒரு சின்ன பின்னோக்கு பயணம்

நவம்பர் 30,2018 ஒரு இளைஞர் ரத்தம் கொடையாக வழங்குகிறார்.  டிசம்பர் 3,2018
அவர் வழங்கிய ரத்தம், அது தேவைப்படும் ஒரு கர்ப்பிணி தாய்க்கு ரத்த சோகையை சரி செய்ய ஏற்றப்படுகிறது.

டிசம்பர் 16, 2018 தான் வெளிநாடு செல்ல விண்ணப்பித்த இடத்தில் மருத்துவ பரிசோதனை செய்தவர்கள். ரத்தத்தில் “எச்.ஐ.வி” தொற்று இருப்பதாக தகவல் தருகிறார்கள். உடனே தனது ரத்தம் யாருக்கும் ஏற்றப்படாமல் தடுக்க வேண்டும் என்ற உந்துதலில் மீண்டும் ரத்த வங்கிக்கு தொடர்பு கொள்கிறார். ஆனால் காலம் கடந்துவிட, அந்த உதிரம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டுவிட்டிருக்கிறது.

டிசம்பர் 17, 2018 அந்த கர்ப்பிணிக்கு ரத்த பரிசோதனை செய்தததில் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு ரத்தம் மூலம் ” எச்.ஐ.வி” தொற்று பரவியிருப்பது கண்டறியப்படுகிறது. இந்த விசயம் பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணிக்கு நஷ்ட ஈடு, நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ரீதியில் மீடியாக்களால் கையில் எடுக்கப்படுகிறது.

“மூன்றாவது கண்ணாக” மாறி வரும் அதிகமான மக்கள் இயங்கும் முகநூல் மற்றும் டிவிட்டர் மீடியாவும் இந்த விசயம் பரவலாக பேசப்பட்டது. பேசப்படுகிறது.

இந்த விசயத்தில் என்னென்ன தவறுகள் நடந்திருக்கலாம் என்ற ரீதியில் நானும் ஒரு பதிவு செய்தேன். ஆனால் இது அனைத்தையும் முடிவு செய்ய வேண்டியது துறை சார்ந்த ஆய்வு முடிவு மட்டுமே. ஆகவே, நாம் எப்போதும் நடுநிலையுடனே இந்த பிரச்சனையை ஆய்வு செய்வோம்

சந்தர்ப்பம் 1
ஒரு வேளை அந்த ஆய்வக நுட்புணர்கள், கொடையாக அளிக்கப்பட்ட ரத்தத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்யாமல் கர்ப்பிணி பெண்ணுக்கு அளித்திருந்தால் அது அந்த ஆய்வக நுட்புணர்களின் மிகப்பெரும் தவறு.
அதற்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சந்தர்ப்பம் 2
ஆய்வக நுட்புணர்கள் அவர்கள் வேலையை சரியாக செய்தும் பரிசோதனையில் நெகடிவ் என வந்திருந்தால் அது விண்டோ பீரியடினால் ஏற்பட்ட மருத்துவ பரிசோதனை பிழை ( Error in medical test) என்ற ரீதியில் அணுகப்பட்டு , இந்த பிழைகள் இன்னும் குறைக்கப்பட அரசு ஆணவ செய்ய வேண்டும்.

அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அப்பாவிகள் இரண்டு பேர் ஒருவர்
தனக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது தெரியாமல் ரத்தம் கொடையாக கொடுத்த அந்த இளைஞர். மற்றொருவர் தனக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டு அதனால் பாதிப்புக்குள்ளான அந்த கர்ப்பிணி.

இந்த இருவரில் அந்த இளைஞர் தனக்கு தொற்று இருப்பது தெரிந்ததும், தானாக இந்த விசயத்தை பற்றி அறிய ரத்த வங்கிக்கு தொடர்பு கொள்கிறார். தனது ரத்தம் பிறருக்கு ஏற்றப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணமே அவ்வாறு செய்யத் தூண்டுகிறது.

அந்த ஒரு நற்செயலாலேயே அவர் இந்த மாய சுழுலுக்குள் சிக்கி இறக்கவும் செய்கிறார்.

ஆம்..

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட செய்தி அறியாமல் அவர் செய்த ரத்தக்கொடைக்கு அவரை பலிகடாவாக இன்று பலி கொடுத்திருக்கிறோம்

ஒருவருக்கு எச்.ஐ.வி கிருமி தொற்று என்று கண்டறியப்பட்டால் விதிகளின்படி அவரது நெருங்கிய சொந்தங்களுக்கு கூட( அவரது மனைவி உட்பட) அவரது விருப்பம் இன்றி தெரியப்படுத்தக்கூடாது.

காரணம் ??

நமது சமூகத்தில் ” எச்.ஐ.வி” என்றாலே விபச்சாரம் / பாதுகாப்பற்ற உடலுறவு இவற்றால் மட்டுமே வரும் நோய் என்ற மூடநம்பிக்கை ஆள்மனதில் ஆணியாக அடிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் உண்மை நிலவரம் வேறு எச்.ஐ.வி தொற்று – ரத்தம் ஏற்றுதல் மூலம், காயமுற்ற ஒருவர் பயன்படுத்திய ரேசர், பிளேடு போன்றவற்றை பிறர் பயன்படுத்தும் போது கீறிவிடுதல், தாயிடம் இருந்து பிள்ளைக்கு(perinatal transmission) , மருத்துவ துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எச்.ஐ வி பாதித்த ஊசி குத்தி(Needle stick injury) என இன்னும் சில வழிகளில் பரவியிருக்கலாம்.

ஆனால் நாம் ஒருவருக்கு எச்.ஐ.வி என்று தெரிந்தால் உடனே அவரது நடத்தை / கற்பொழுக்கம் போன்றவற்றை பேசுபொருளாக மாற்றி அவர்களை தனிமைப்படுத்தி நாதியற்றவர்களாக மாற்றி விடுகிறோம்.

சமீபத்தில் வெளியான “அருவி” எனும் திரைப்படம் கூட ஒரு விபத்து மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட கதையின் நாயகியை அவரது குடும்பமே எவ்வாறு ஒதுக்கி வைக்கிறது. சமூகம் அவரை எப்படி நடத்துகிறது என்று காண்பித்திருப்பார்கள்.

மெடிக்கல் துறையில் ஒரு சொற்பதம் உண்டு. அனைத்து மருத்துவ ஊழியர்களும் நோயாளியை பார்க்கும் போதும் ஊசி போடும் போதும் Universal safety precautions ஐ கடைபிடிக்க வேண்டும் என்று ஏனென்றால் “Unless proved otherwise , all should be considered HIV positive is the rule என்று பழக்கப்படுத்தப்பட்டோம்

ஆம்.. நீங்களோ? நானோ? யாரோ ? ரத்த பரிசோதனை மூலம் நிரூபிக்காத வரை HIV தொற்று அற்றவர்கள் என்று கூறமுடியாது இதுவே நிதர்சனம். இந்த காரணத்தினால் தான் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் அவர்கள் கர்ப்ப காலத்தில் முதல் ரத்த பரிசோதனையில் கட்டாயம் எச்.ஐ வி பரிசோதனை செய்யப்படுகிறது.
அவர்களது கணவர்களுக்கும் எச்.ஐ.வி பரிசோதனை செய்யப்படுகிறது.

அவர்களுக்கு இருந்தால் குழந்தைக்கு பரவுவதை தடுக்க ஆவண செய்ய வேண்டும் என்பதற்காக. மேலும் அனைத்து காச நோய் பாதித்தவர்களுக்கும் எச்.ஐ.வி தொற்று இருக்கிறதா என்று பார்க்கப்படுகிறது (TB – HIV co infection).

எந்த தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாலும் சரி.. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றாலும் சரி… அதன் மருத்துவ பரிசோதனைகளில் எச்.ஐ.வி கண்டறிதலும் இருக்கும்.

இதன் மூலம் நான் கூற வருவது “ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது என்பது அவரை எந்த விதத்திலும் ஒழுக்கம் கெட்டவராக ஆக்கிவிடாது”. மேலும் பிறரது ஒழுக்கத்தை எள்ளிநகையாடும் முன் நமது ஒழுக்கத்தை அனைவரும் பேணுதல் சிறப்பு.

இந்த சம்பவத்தில் அந்த இளைஞன் எந்த தவறும் செய்யாமல் சமூகம் தந்த அழுத்தத்தால் தற்கொலை செய்திருக்கிறார். எலி பாசானம் (Rat killer poisoning) என்பது ரத்தம் உறைதலை தடுக்கும் (warfarin ) வகையைச் சேர்ந்தது. அந்த வகை பாசானங்களை பொது வெளியில் தடை செய்வது சிறந்தது.
காரணம் தற்போது அந்த பாசானம் உண்டு மக்கள் இறக்கும் நிகழ்வு அதிகமாகிவருவதை காணமுடிகிறது.

சரி.. விசயத்துக்கு வருவோம்..

அந்த இளைஞரை கொன்றது எலிப்பாசானம் என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது. ஆனால் அவரைக்கொன்றது “ஈவு இரக்கமற்ற நமது சமூகமே” என்றால் யாரும் மறுப்போருண்டோ?

அவரது பெயர், ஊர், இருப்பிடம் என்று அத்தனையையும் அம்பலமாக்கி அவரை கூனிக்குறுகச்செய்து கடைசியில் அவரது கதையையும் முடித்து விட்டாயிற்று. உண்மையில்.. எச்.ஐ.விக்கு எதிரான நமது ART (anti retro viral therapy ) அதிவேக முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பல மக்கள் சரியான மருந்துகள், ஊட்டச்சத்து உணவுகள் உட்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது ஆயுட்காலமும் நீண்டு வருகிறது.

எச்.ஐ.வி வந்தால் ஐந்து வருடத்தில் இறந்து விடுவோம் என்ற காலமெல்லாம் மலையேறிப்போய்விட்டது. இந்த நிலையில் எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வு ,
அது பாதித்தோர் மீது நாம் காட்டும் அரவணைப்பு இவற்றின் மூலம் அறிவார்ந்த சமூகமாக நாம் வளர முடியும்.

எச்.ஐ.வி பாதித்த ஒருவரையும் புறம்தள்ளிவிட வேண்டாம்….

அந்த இளைஞரின் இறப்பு மூலம் நாம் அடையும் பாடமாக அது இருக்கட்டும் …

***

கட்டுரையின் கீழ் வந்த பின்னூட்டங்களில் வந்த கேள்விகளுக்கு விடையளிக்குமாறு இந்த கட்டுரையை எழுதுகிறேன்

கேள்வி 1

ஒருவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதில் இருந்து எத்தனை நாளில் நம்மால் அதை பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் ??

நமது generation 4 ELIZA antigen antibody test kits களை வைத்து நாம் எச்.ஐ வி உள்ளே நுழைந்த 28 நாட்களுக்கு பின் கண்டு பிடிக்கலாம். generation 3 ELIZA kits களை கொண்டு மூன்று மாதத்திற்கு பின் மிகத்துள்ளியமாக கண்டறிய முடியும்.

இதற்கு முன்னமே கண்டறிய வேண்டும் என்றால் அதற்கு NAAT எனும் பரிசோதனை உள்ளது. Nucleic Acid Amplification Test இந்த பரிசோதனை மூலம் உள்ளே வந்த எச்.ஐ.வி கிருமியில் உள்ள ஜீன்களை பெருக்கம் செய்து கண்டறிவார்கள். இது துள்ளியமானது. இதே NAAT எனும் பரிசோதனையை தற்போது காச நோய் எனும் Tuberculosis பாதித்த மக்களுக்கு கூட்டு சிகிச்சைக்கு கட்டுப்படாத காச நோயை கண்டறிய பயன்படுத்துகிறோம்(Multidrug resistant TB).

இந்த பரிசோதனையை அனைத்து இந்திய ரத்த வங்கிகளிலும் கட்டாயமாக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா?

அதில் சிக்கல் உள்ளது. இந்த NAAT எனும் இந்த பரிசோதனையை Rapid test ஆக செய்ய முடியாது. இது நேரம் எடுக்கும் ஒரு பரிசோதனை. மேலும் இந்த பரிசோதனைக்கு ஆகும் செலவு இப்போது இருப்பதை காட்டிலும் பன்மடங்கு அதிகம்.

சரி செலவு ஆனால் ஆகிவிட்டுப்போகிறது. நமக்கு எச் .ஐ.வி தொற்று பரவக்கூடாது என்பதே தலையாய நோக்கம். ஆகவே பல லட்சங்களில் விற்கும் இந்த NAAT மெசின்களை ரத்த வங்கி முழுவதும் வாங்கி வைத்து பரிசோதனை செய்யலாம்.

நிச்சயம் அந்த காலம் கூடிய விரைவில் வரும். தமிழகத்தில் உள்ள அரசு ரத்த வங்கிகளில் அந்த பரிசோதனை செய்யப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

காரணம் மருத்துவம் சார்ந்த விசயங்களில் நாம் தான் நாட்டுக்கே முன்னோடி ஆகவே இதிலும் நாமே முன் செல்வோம். சரி இப்போது NAAT இல் உள்ள ப்ராக்டிகல் பிரச்சனை என்ன தெரியுமா? அது ஒரு Highly sensitive test.

sensitive ஆ? அப்படியென்றால் என்ன? ஆய்வக பரிசோதனைகளை பொறுத்த வரை sensitivity & specificity என்ற இரு பதங்கள் பேசப்படும்.

ஒருவன் ரொம்ப சென்சிடிவாக இருக்கிறான் என்று எப்போது கூறுவோம்?சிறிய விசயத்துக்கெல்லாம் மூக்குக்கு மேல் கோபம் வருபவனை தான் சென்சிடிவ் என்று கூறுவோம். அதே போல்.. ஒரு கருத்தை பேச மேடை ஏறியவர்.. தொன தொனவென்று பேசிக்கொண்டிருந்தால் அவரை நாம் என்ன சொல்வோம் Be specific please என்போம்.

இந்த இரண்டும் தான் பரிசோதனைகளுக்கும் தேவை அதாவது ஒரு பரிசோதனைக்கு sensitivity அதிகம் என்றால் அது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களுள் நோய் இருப்பவர்களை மிக மிக துள்ளியமாக காட்டும். True positive கேஸ்களை கனக்கச்சிதமாக பிடித்துவிடும்.

sensitivityஐ மிக அதிகமாக வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? நோய் இருப்பவர்களை நோய் இருப்பவர்கள் (true positive) என்று காட்டும் கூடவே பல நோய் இல்லாதவர்களையும் நோய் இருப்பவர்கள்(false positive) என்று காட்டி விடும்.

specificity அதிகம் உள்ள ஒரு பரிசோதனையை தேர்ந்தெடுத்தால்
அது என்ன செய்யும் தெரியுமா? பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நோய் இல்லாதவர்களை சரியாக இவர்களுக்கு நோய் இல்லை(True negative) என்று காட்டி விடும். ஆனால் அதனுடன் சேர்ந்து நோய் இருப்பவர்கள் சிலரையும் நோய் இல்லாதவர்கள்(False negatives) என்று காட்டும்.

இதில் நமது NAAT எனும் இந்த ஜீன் எக்ஸ்பர்ட் பரிசோதனை Highly sensitive category இல் வருகிறது. இந்த NAAT க்கும் window period ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் (குறைந்த பட்சம் 7 முதல் 10 நாட்கள்). இன்று எச்.ஐ.வி தொற்று பெற்ற ஒருவர் ஒரு வாரத்துக்குள் ரத்தம் கொடுத்தால் அவருக்கு NAAT பரிசோதனையே செய்தாலும் Negative என்று வரலாம். காரணம் Window period.

இந்த NAAT எனும் பரிசோதனை மேலைநாடுகளில் Genexpert என்று அழைக்கப்படுகிறது. இதில் உள்ள பாதகம் யாதெனில் இது ஒரு Highly sensitive test. இதை எச்.ஐ.வி கிருமி கண்டுபிடிக்க உபயோகித்தால் நோய் இருப்பவர்களை நோய் இருப்பவர்கள்( true positive) என்று துள்ளியமாக காட்டும்.

அது பிரச்சினையில்லை. கூடவே நோய் இல்லாத பலரையும் நோய் இருப்பவர்கள் (False positive) என்றும் காட்டிவிடும். இப்படி நோய் இல்லாத ஒருவர் ரத்தம் வழங்கிவிட்டு வீட்டுக்கு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அவருக்கு NAAT முறைப்படி பரிசோதனை செய்யப்படுகிறது. அது Highly sensitive test ஆதலால் false positive ஆக அந்த நோயற்ற நபருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக காட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு உடனே ரத்த வங்கியில் இருந்து கால் பறக்கும். உடனே ரத்த வங்கிக்கு வாருங்கள். இவர் அரக்கப்பறக்க ஓடுவார்.

ரத்த வங்கி அதிகாரி “சார். வீ ஆர் சாரி டு சே திஸ். யூ ஆர் ஹேவிங் எச்.ஐ.வி இன் யுவர் ப்ளட் .. ICTCக்கு உடனே போங்க.. ART ஸ்டார்ட் பண்ணுவாங்க” என்பார்.

நம்ம ஆளுக்கு தலை கிறு கிறுவென சுத்தும். இதை வீட்டிலும் சொல்ல முடியாது. எங்கும் பகிர்ந்து கொள்ள முடியாது. நேரே ICTC க்கு சென்று Antiretro viral therapy ஆரம்பிப்பார்.

வீட்டிற்கு இந்த விசயம் சில நாட்களுக்கு பின் தெரியவந்தால் வீட்டில் பெரிய கலவரமே நடக்கும். காரணம் எச்.ஐ.வி தொற்று என்றாலே தகாத உறவு முறை மூலம் மட்டும் தான் வரும் என்ற பொதுக்கற்பிதம் இன்றும் உள்ளது. அந்த நபரின் மானம் பறிபோகும். வீட்டின் அமைதி பறிபோகும்.

மனைவி குழுந்தைகளுடன் தனது ஊருக்கு சென்று விடுவார். இவர் மது அருந்த ஆரம்பிப்பார். இன்னும் மனம் லேசானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவைக் கூட எடுப்பார்கள். ( இவையெல்லாம் எனது அரசுப்பணியில் நான் எனது நேரடி கண்காணிப்பில் பார்த்த எச்.ஐ.வி நோயாளிகளுக்கு நடந்தவை. கதையோ கற்பனையோ அல்ல).

திரும்பவும் கூறுகிறேன். ஜீன் எக்ஸ்பர்ட் கூறிய ஒரு தவறான முடிவு. ஒருவரின் வாழ்க்கையை தடம்புரளச்செய்து விடும் அளவு சக்தி வாய்ந்தது. சரி . ஜீன் எக்ஸ்பர்ட் ஒருவரை நோயாளி என்று முத்திரை குத்திவிட்டால் அது தான் இறுதியானதா?

இல்லை இல்லை. இல்லவே இல்லை.

ஜீன் எக்ஸ்பர்ட் ஒருவரை நோயாளி என்று சொன்னாலும் மூன்று மாதங்களுக்கு பிறகு எடுக்கப்படும் ELIZA antibody test தான் confirmatory ஆகும். எனவே NAAT எனும் இந்த பரிசோதனையை எச்.ஐ.வி கண்டறிய பயன்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உண்டு. அதைக்களைந்து நிச்சயம் ஒரு நாள் NAAT தமிழகத்தில் நடைமுறைக்கு வரும்.

கேள்வி 2

எடுக்கப்பட்ட ரத்தத்தை எச்.ஐ.விக்கான அதன் window period ( 28 நாட்கள்) வரை வங்கியிலேயே வைத்திருந்து பிறகு பரிசோதனை செய்து அதை ஏற்றலாமே ? என்று பலரும் கேட்கின்றனர்.

window period என்பது ஒரு கிருமி ஒரு உயிருள்ள உடலுக்குள் நுழைந்ததில் இருந்து அந்த நோய்க்கான ரத்த பரிசோதனையில் பாசிடிவ் என வரும் வரை உள்ள இடைப்பட்ட காலம் window period ஆகும்.

இது உயிருள்ள உடலுக்குள் மட்டுமே பொருந்தும். வெளியே எடுத்த ரத்தத்திற்கு பொருந்தாது. காரணம் ஒருவருக்கு நேற்று எச்.ஐ வி தொற்று ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

இன்று அவர் ரத்தம் கொடையாக தருகிறார். அவருக்கு எச் ஐ வி பரிசோதனை செய்யப்படுகிறது. அது நெகடிவ் என்று வருகிறது. அதே ரத்தத்தில் 28 நாட்கள் கழித்து எடுத்தாலும் Negative என்று தான் வரும்.

ஆனால் அதே நபருக்கு இப்போது எச்.ஐ வி பரிசோதனை செய்தால் positive என்று வரலாம். காரணம் அவரது ரத்தம் இப்போது உடலுக்குள் இல்லை. அந்த கிருமிக்கு எதிராக எதிர்வினை செய்யும் உடலின் நொதிகள் இல்லை. ஆகவே ரத்தம் எடுக்கப்பட்ட போது எத்தனை கிருமிகள் அந்த ரத்தத்தில் இருந்ததோ. அதை விட கொஞ்சம் பெருகியோ அல்லது அதே அளவு தான் இருக்கும்.

காரணம் ரத்தத்தோடு அது உறையாமல் இருக்க ரசாயனம் சேர்க்கப்படுகிறது. அந்த ரசாயனம் ரத்தத்தை அது எடுத்த போது எப்படி இருந்ததோ..அதே போன்று வைக்கிறது..

உண்மையில் எடுக்கப்பட்ட ரத்தத்தின் ஆயுட்காலம் எவ்வளவு ? 21 நாட்கள் முதல் அதிகபட்சம் 35 நாட்கள் மட்டுமே.

ஒருவர் தரும் முழு ரத்தமானது (whole blood)
1. மலேரியா
2. எச்.ஐ வி 1&2 வைரஸ்
3. சிஃபிலிஸ்
4. ஹெப்பாடைடிஸ் பி&சி

போன்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அதில் நெகடிவ் என்று தெரிந்த பிறகே ஏற்றப்படுகின்றன.

தமிழகத்தின் பெரிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் முழு ரத்தம் மட்டுமல்லாமல்
ரத்தத்தின் தனித்தனி பாகங்கள் பிரிக்கப்பட்டு தேவைப்படுவோர்க்கு ஏற்றப்படுகின்றன.

முழு ரத்தமானது (Whole blood ) குளிர் நிலையில் 21 முதல் 35 நாட்கள் வைக்கப்படலாம். இப்போது உள்ள டிமாண்டில் ஒரு வாரத்திற்குள் நாம் கொடுத்த ரத்தம் உபயோகப்படுத்தப்பட்டுவிடும். ரத்தத்திற்கான டிமாண்ட் அவ்வளவு அதிகம். Packed cell unit என்போம். அதாவது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை மட்டும் பிரித்து எடுத்து அதை மட்டும் ஏற்றுவார்கள். பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்படும் போதும். ரத்த சோகையை சரிசெய்யவும் இது போன்று ஏற்றப்படும். இந்த சிவப்பு அணுக்களை 6 டிகிரி செல்சியஸில் 42 நாட்கள் வைத்திருக்கலாம்.

ரத்த தட்டணுக்களை (Platelets transfusion) மட்டும் ஏற்றும் முறையும் இருக்கிறது.
டெங்கி போன்ற நோய் பாதித்தவர்கள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்த தட்டணுக்களை ஏற்றலாம்.

அடுத்தது “ப்ளாஸ்மா ட்ரான்ஸ்ப்யூசன்” எனும் முறை. இதில் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் யாவும் எடுக்கப்பட்டு ப்ளாஸ்மா மட்டும் ஏற்றப்படும்.

விபத்தில் அடிபட்டவர்கள், தீக்காயமுற்றவர்களுக்கு இது உதவும். இதிலும் Cryoprecipitate என்ற முறையில் ரத்தம் உறைய வைக்க தேவையான clotting factor VIII மற்றும் fibrinogen மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு ஏற்றப்படுகிறது. இது hemophilia போன்ற ரத்த உறைதல் பிரச்சனை இருப்போருக்கு உபயோகமாக இருக்கின்றது.

ப்ளாஸ்மா மற்றும் க்ரையோ ப்ரிசிபிடேட்டை ஒரு வருடம் கூட உறை நிலையில்(freezed) வைத்திருக்கலாம். நாம் தந்த முழு ரத்தத்தை இவ்வாறு componentகளாக பிரிக்கும் நவீன கருவிகள் நமது அரசு மருத்துவக்கல்லூரிகளில் உண்டு.

கேள்வி 3

20,000 பேருக்கு இந்தியாவில் கடந்த வருடம் ரத்தம் ஏற்றுதல் மூலம் எச்.ஐ வி வந்துள்ளது என்று நோயாளிகள் வாயிலாக எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் கூறுகின்றன. இது இந்திய மக்கள் தொகையை கணக்கிடுகையில் மற்றும் ரத்தம் ஏற்றப்படும் மக்களின் அளவைக்காட்டிலும் மிக குறைவு என்று கூறினேன்
அதற்கு சிலரிடம் இருந்து எதிர்ப்பு வந்தது.

எனது பதில் இதுவே இந்தியாவில் வருடம் ஒன்றிற்கு 90 லட்சம் யூனிட் ரத்தம் கொடையாக வழங்கப்பட்டு அது தேவைப்படும் மக்களுக்கு ஏற்றப்படுகிறது.

ரத்தம் ஏற்றுதல் என்பது உயிர் போகும் நிலையில் இருக்கும் ஒருவருக்கும் அது தேவைப்படும் ஒருவருக்கும் அத்தியாவசிய உயிர் காக்கும் சிகிச்சை.

இந்தியாவின் வருடாந்திர ரத்த யூனிட் தேவை 1.25 கோடி. ஆனால் கிடைப்பதோ 90 லட்சம் யூனிட்கள் தான். அதுவும் அனைத்து இடங்களிலும் சரிசமமாக கிடைப்பதில்லை. டெல்லி போன்ற பெருநகரங்களில் 200 % க்கு மேல் ரத்தம் கிடைக்கிறது. ஆனால் அதுவே பிஹார் போன்ற மாநிலங்களில் 85% கிடைப்பதே இல்லை.

ஒரு கார் ஆக்சிடண்ட்டில் கால் உடைந்த நோயாளிக்கே 100 யூனிட் ரத்தம் தேவைப்படும் நிலை இருக்கிறது. பிரசவ காலத்தில் ரத்தப்போக்கு நேர்ந்தால் அதை நிறுத்த 20 யூனிட் முதல் 50 யூனிட் ரத்தம் ஏற்றி தாய் பிழைத்த சம்பவங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன். நான் பயிற்சி மருத்துவனாக இருந்த நேரத்தில் பிரசவத்தில் ரத்தப்போக்கு சென்ற தாய்க்கு இருபது யூனிட் ரத்தம் ஏற்றியும் பிழைக்காமல் போனதையும் பார்த்துள்ளேன்.

ஒரு ரத்த வங்கிக்கு இன்று முப்பது யூனிட் ரத்தம் வருகிறதென்றால், அதே நாள் தேவை – 40 யூனிட்டாக இருக்கும். மேலும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு தேவைப்படும் வங்கிக்கு ரத்தம் பறந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு யூனிட் ரத்தமும் அது கிடைக்கும் பல உயிர்களை காப்பாற்றிக்கொண்டே இருக்கிறது. 50 கோடி இளைஞர்கள் ரத்தம் தர தகுதிகள் இருக்கும் நாட்டில் வெறும் 90 லட்சம் யூனிட்டுகள் மட்டுமே ரத்தம் வருடம் கிடைக்கிறது. மேலும் 20,000 பேருக்கு ரத்தம் ஏற்றுதல் மூலம் எச்.ஐ.வி வந்தது என்று கூறியிருப்பது. நோயாளிகள் அவர்கள் வாய்மொழி வழி கூறியது.

தகாத உறவு மூலம் வந்த எச்.ஐ.வி தொற்றைக்கூட நோயாளிகள் மறைத்து ரத்தம் மூலம் வந்தது என்று கூறவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே ரத்தம் மூலம் எச்.ஐ.வி வந்தவர் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருக்கும்.

130 கோடி மக்கள் வாழும் நாட்டில் வருடந்தோறும் 1.2 கோடி பேர் ரத்தம் கொடுக்க தேவையுள்ள நாட்டில் 20000 என்பது குறைந்த எண்ணிக்கை இதை பெரிய எண்ணிக்கையாக பார்ப்பவர்கள் பின்வரும் எண்ணிக்கையையும் பாருங்கள்.

இந்தியாவில் நாள்தோறும் 400 பேர் வாகன விபத்துகளில் சாகின்றனர்
ஆண்டொன்றிற்கு சுமார் 1.5 லட்சம் மக்கள் வாகன விபத்துகளில் உயிரை இழக்கின்றனர். ஆறு லட்சம் பேர் விபத்துகளால் முடமாகின்றனர். இவற்றை விபத்துகள் என்ற கேட்டகரிக்குள் கொண்டு வந்து அனைவரும் மெளனிகளாக வாழ்கிறோம்

ஆனால் ரத்தம் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 20,000 பேருக்கு எச்.ஐ.வி வந்தது என்றால் இந்த உயிர் காக்கும் சிகிச்சை மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு எதிராகவும் கூக்குரல் எழுப்புகிறோம்

ஏன் இந்த ரெட்டை நிலை?

முடிவுரை

ஒரு உயிருக்கும் தெரிந்தே தீங்கு இழைக்கப்படக்கூடாது என்பதே நீதி. ஆனால் விபத்துகள் அனைத்து துறைகளிலும் நடக்கின்றன. நமது பதிவின் நோக்கம் யாதெனில் மருத்துவத்துறையில் நடக்கும் விபத்துகளை மட்டும் பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்குவது தவறு.

தவறுகள் நடந்திருந்தால் அதை சரிசெய்யும் பொருட்டு கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும். அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு / வாழ்வாதாரத் தேவை/ உயர்தர சிகிச்சை போன்றவற்றை அரசு உறுதி செய்யும்.

ஆகவே அரசு மருத்துவமனைகள் மீது காழ்ப்புணர்ச்சி வேண்டாம். அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கானது மட்டுமன்று. அனைவருக்குமானது. நல்ல நிலையில் இருக்கும் நீங்கள் இன்று அரசு மருத்துவமனைகள் மீதும் ரத்தம் ஏற்றுதல் மீதும் கல்லெறிந்தால் ரத்தம் கிடைப்பது இன்னும் குறையத்தான் செய்யும்.

ஒருநாள் நீங்கள் மகிழ்வுந்தில் சத கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்று எங்கேனும் ஆள் அரவமில்லா இடத்தில் சாலை விபத்து நடந்தால் அங்கு உங்களை காப்பாற்ற 108 இலவசமாக ஓடி வரும். அருகில் பெரிய தனியார் மருத்துவமனைகள் இருக்காது.

அரசு மருத்துவமனைக்கு 108 செல்லும். அங்கு ரத்த வங்கியில் இருக்கும் கடைசி பை ரத்தம் தான் உங்களை காப்பாற்றும் ஒன்றாகக் கூட இருக்கலாம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.