லகமயச் சூழலில் பெரியவர்களுக்கே வாழ்க்கை என்பது எந்திரம் போல ஆன பிறகு குழந்தைகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் விளையாட்டு உலகம், மழலையர் உலகம் அனைத்தும் சுருங்கி வருகிறது. குழந்தைகளின் உலகில் முக்கியமான குதூகலம் சர்க்கஸ். நேற்றைய தலைமுறையினர் பார்த்துக் களித்த சர்க்கஸ் உலகம் இன்று இல்லை. அவ்வப்போது வரும் இன்றைய சர்க்கஸில் பழைய சர்க்கஸின் பிரம்மாண்டம் இல்லை.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ,மூர்மார்க்கெட் பின்புறம்  கண்ணப்பர் திடலில் ஜம்போ சர்க்கஸ் நடைபெறுகிறது.  சென்னை மக்களை மகிழ்விக்க வந்துள்ள ஜம்போ சர்க்கஸ்  கலைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிய அங்கு சென்றோம்.

சர்க்கஸ் திடலினுள் நுழைந்த போது, தமிழக மற்றும் வட இந்திய கலைஞர்கள், தொழிலாளர்கள் என அனைவரும தங்கள் காலை வேலைகளில்  மும்முரமாக இருந்தனர். ஒருவர் பல் துலக்கிக்கொண்டிருந்தார். மற்றொருவர் இடுப்புத் துண்டுடன் குளிக்க சென்றார்.  சிலர் சமையல் கட்டில், காலை சாப்பாட்டுக்கு கோதுமை மாவு பிசைந்து கொண்டிருந்தனர். சிலர், குதிரைகளுக்கும் நாய்களுக்கும் தீனியை தயார் செய்து கொண்டிருந்தனர். வளையத்துக்குள் கலைஞர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். பெண் கலைஞர்கள்  குழந்தைகளுடன் பக்கத்தில் உள்ள  கடைத்தெருவுக்கு சென்று கொண்டிருந்தனர்.

சிலர் கூடாரம் அமைக்க உதவும் படுதாக்காளை விரித்து வெயிலில் உலர்த்தினர். சிலர் கிழிந்த படுதாக்காளை ஒட்டுப்போட்டு தைத்துக் கொண்டிருந்தனர். முதியோர் சிலர்  காலை வெயிலில் வெறுமனே உட்கார்த்து கொண்டிருந்தனர். ஊழியர்களுடன்  அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவர்களோ வேலை மும்முரத்தில் எங்களிடம் ஈடுபாடு காட்டவில்லை.

சர்க்கஸ் நிர்வாக அலுவலகத்திற்கு சென்றோம். அவர்கள் வேண்டா வெறுப்புடன், “பேட்டி எடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஏற்கனவே வந்து பார்த்தவர்கள் செய்தது போதும்” என்றனர். விளக்கங்களை எவற்றையும் அவர்கள் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கொஞ்சம் வலியுறுத்திக் கேட்ட பின்னர், “பலமுறை நாங்கள் மனு கொடுத்தும் எந்த அரசாங்கமும் எதுவும் செய்யவில்லை. இனி எங்களுக்கு எதுவும் நடக்காது. நாங்கள்தான் இந்த வேலையை விட்டு வேறு வேலையை பார்க்க வேண்டும். எங்களுக்கும் இதை விட்டால் வேறு வேலை எதுவும் தெரியாது. அதனால்தான் இதில் கிடந்து  உழல்கிறோம்.  நீங்கள் ஓனரிடம் பேசிக் கொள்ளுங்கள். அவர் பொங்கல் தினத்தில் இங்கு வருவார்” என்றனர்.

ஒரு தொழிலாளி, என்ன விசயமென்று விசாரிக்க நம் அருகே வந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். நான் தமிழன்தான்  என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தனது 40 ஆண்டுகால சர்க்கஸ் பணியை ஒரு துயரக் கதை போல் விவரித்தார்.

சர்க்கஸ் தொழிலாளி

“நான் கள்ளக்குறிச்சி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவன். பத்து வயதிலேயே சர்க்கஸில் சேர்ந்து விட்டேன். அதுமுதல் இப்போது 54 வயது வரை இங்கேயே என்  காலம்  ஓடுகிறது. நான்  சர்க்கஸுக்கு விரும்பி வரவில்லை. என்னுடைய போதாத காலம், என்னை இங்கு தள்ளிவிட்டது. எனக்கு சிறுவயதிலேயே அம்மா இல்லை. அப்பா மட்டும்தான். பெங்களூரில் இருந்த என் அண்ணன் என்னை அங்கு அழைத்துச் சென்றார். என் அண்ணியோ எனக்கு சோறு போட மறுத்தார். நான் பொறுக்க முடியாமல் கால்போன போக்கில் நடந்து, கடைசியில் சென்னை வந்தேன். இங்கு சோத்துக்கு ஹோட்டலில் பிளேட் கழுவினேன். அங்கு என்னை பார்த்த ஒருவர்  பக்கத்தில் நடக்கும் சர்க்கஸுக்கு வேலைக்கு வருகிறாயா என்று கூப்பிட்ட, நானும்  சர்க்கஸ் பார்க்கும் ஆசையில்  வந்தேன். இங்கும் எனக்கு முதலில் பாத்திரம் கழுவும் வேலையை தான்  கொடுத்தார்கள். அப்போது மாதம் 60 ரூபாய் சம்பளம். ஆனால்  ஓட்டலில் மாதம் ரூபாய் 10 தான். தொடர்ச்சியாக இங்கே பல வேலைகளை கற்றுக் கொண்டேன்.

அதுமுதல் சில ஆண்டுகள் ஒரு சர்க்கஸ் கம்பெனியில் இருப்பது திரும்பவும்  இன்னொரு சர்க்கஸ் கம்பெனிக்கு மாறுவது என்று இதுவரை 40 ஆண்டுகளில், பத்துக்கும் மேற்பட்ட சர்க்கஸ் கம்பெனிகளில் வேலை பார்த்துள்ளேன். நியூ கிராண்ட் சர்க்கஸ் – கேரளா, பாரத் சர்க்கஸ் – கர்நாடகா, ஜியோ சர்க்கஸ் – மேற்கு வங்கம், எஸ்.எம். சர்க்கஸ் – ஆந்திரா, வீனஸ் சர்க்கஸ் – தமிழ்நாடு, என்று ஏராளமான சர்க்கஸ் கம்பெனியில் வேலை பார்த்து விட்டேன்.  இந்த ஜம்போ சர்க்கஸில்தான் நீண்ட நாட்களாக  இருக்கிறேன்.” என்றார்.

இன்றளவும் வாகனம் மூலம் விளம்பரம் செய்யும் ஜம்போ சர்கஸ் நிறுவனம்.

சர்க்கஸ் தொழில் பற்றி கேட்ட பொழுது, “சர்க்கஸ் பற்றி என்ன சொல்வது? எல்லாம் போய்விட்டது! எங்கள் வாழ்க்கை எல்லாம் கண்ணெதிரில் செத்துக் கொண்டிருக்கிறது. எவ்ளோ பேர் சர்க்கஸை விட்டு போய் விட்டார்கள் ! போக முடியாதவர்கள்தான்  இன்னும் இருக்கிறார்கள். விலங்குகள் எப்போது எங்களை விட்டு போனதோ அப்போதே எங்கள் உயிரும் போய்விட்டது. விலங்குகளை வதை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களிடமிருந்து விலங்குகளை ஓட்டிக் கொண்டு சென்றவர்கள் அவற்றையும் கவனிக்காமல் கொன்று விட்டார்கள். அதன் பிறகு நாங்களும இங்கு  செத்துக் கொண்டிருக்கிறோம். சர்க்கஸ் என்றாலே விலங்குகள்தான். இப்போது விலங்குகள் இல்லாததால் கலைஞர்கள் ஒவ்வொரு நொடியும் தங்கள் உயிரை கொடுத்து புதுபுது வித்தைகளை செய்து காட்டுகிறார்கள். அதை ரசிக்க ஏதோ கொஞ்சம் பேர் வருகிறார்கள்.” என்றார்.

“இப்போது கொடுக்க வேண்டிய கூலியை கூட  முதலாளியால் ஒழுங்காக கொடுக்க முடியவில்லை. நாங்களும் அவரை நெருக்கி கேட்பதில்லை. எங்கள் முதலாளிகளுக்கு எங்களை ஏமாற்றும் எண்ணம் ஏதும் இல்லை என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.  இப்போது வருமானம் இல்லை என்றாலும் எங்களுடைய சாப்பாட்டுக்கு அவர்கள் எந்த ஓரவஞ்சனையும் செய்வதில்லை. இன்னமும்  காலையில்  டிபன் உப்புமா, பூரி, சப்பாத்தி என்று அவரவர்களுக்கு விருப்பமானதை தேவையான அளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். மதியம் குழம்பு சாம்பார் கூட்டு,பொறியல் முட்டையுடன் சாப்பாடு கிடைக்கும். இன்றளவும் எங்கள் சாப்பாட்டுக்கு மட்டும் முதலாளி எந்த குறையும் வைத்தது இல்லை. கம்பெனிக்கு போதுமான வருமானம் வரவில்லையே என்று எங்களுக்குத்தான் மனசு வருத்தமாக இருக்கிறது..” என்று தனது முதலாளியை விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

தொடர்ந்து ஜம்போ சர்க்கசின் வரலாற்றைப் பற்றி கூறத் தொடங்கினார். “ஜம்போ சர்க்கஸ் தொடங்கிய முதலாளி எம்.வி. சங்கரன், கேரளத்துக்காரர். இவர் விலங்குகளின் மீது தீராக் காதல் கொண்டவர். ஜம்போ என்ற பெயர் கொண்ட யானை பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் பல லட்சம் குழந்தைகளின் செல்லப்பிராணியாக வலம் வந்தது. இது பதினாறு அடி உயரமும் 7 டன் எடையும் கொண்ட பலசாலி. ஆனால் சிறு குழந்தைகளும் அணுகும் மெல்லிய மனம் படைத்தது. அது இறந்த பிறகும் மக்கள் மனதை விட்டு நீங்காமல் இன்றளவும் அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் எலும்புக்கூடாக பராமரிக்கப்படுகிறது. இதன் நினைவாகத்தான் தன்னுடைய சர்க்கஸ் நிறுவனத்துக்கு ஜம்போ சர்க்கஸ் என்று பெயர் வைத்தார்.”

முன்னாட்களில் சர்க்கசில் என்னென்ன வகையான மிருகங்கள், கலைஞர்கள், சர்க்கஸ் சாகசங்கள் இருக்கும் என்பது குறித்து தொடர்ந்து விளக்கினார். “ரசியாவின் கொசவ் பிரதேசத்திலிருந்து வந்த குதிரைகள், அரேபியாவின் ஒட்டகங்கள், உலகின் பல முனைகளிலிருந்தும் வந்த நாய் இனங்கள், பாமரனியன், டால்மியன், பாண்ட் மற்றும் கூர்வுணர்ள்ள ரசியன் பூடில், டாஷ், பாரசீக பூனைகள், ஓநாய்கள், நீர் யானை, வரி குதிரை, பிரேசிலிய காடுகளில் காணப்படும் மாஸா என்ற அரிய கிளி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் காக்டெயோஸ் என்ற அரிதான பறவை, கரும்புள்ளி பெக் இப்படி ஒவ்வொரு மிருகங்களையும் பறவைகளையும் பார்த்து பார்த்து வாங்கி அவற்றின் மீது தங்களது உயிரையே வைத்திருந்தனர் கலைஞர்கள்.

இந்த கலைஞர்களும் உலகின் பல பாகங்களிலிருந்தும்  வந்தவர்கள்தான். ரசியா, ஆப்பிரிக்கா, நேபாளம், இந்தியாவின் மேற்கு வங்கம், கேரளா என்று உலகே இந்த கூடாரத்தில் வசித்தது. அப்போது மக்களையும் மகிழ்வித்து மனநிறைவோடு வாழ்ந்தோம். அது ஒரு காலம்! அப்போது காட்சிக்கு காட்சி புதுமைகள் செய்வோம். 40-க்கும் மேற்பட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் பார்ப்போரை பரவசப்படுத்தும். குழந்தைகளும் பெரியவர்களும் இளைஞர்களும் வைத்த கண் எடுக்காமல் மெய் மறந்து ரசிப்பார்கள். பஃபூன்களின் சேட்டை கண்டு குழந்தைகள் வயிறு நோக சிரிக்கும். அக்குழந்தைகளின் சிரிப்பை அடக்க முடியாமல் பெரியவர்கள் திண்டாடுவார்கள். அப்படி ஒரு சந்தோசம் அது.

எத்தனை எத்தனை விசித்திரங்கள்? க்ளோன் சேர், ரசியன் ரோப், காமிக் ஜாகிங், புல் பெண்ட் ரோலிங், அக்ரோபேட் ஸ்டேச், சைனீஸ் வாக்கிங் லேடர், டெத் குளேப், ரிங் ஷிப் அப், டெத் எட்ஜ், ஸ்கை வாக், லெக் ஜங்லிங், ஆப்பிரிக்கன் பையர் டேன்ஸ், ரசியன் டிராம்போ, பிரமிட் இப்படி எண்ணற்ற கலைகளோடு நீர் யானை, குதிரை, ஒட்டகம், யானை, நாய், கிளி, சிங்கம், புலி, வரி குதிரை, பூனை இவற்றின் சாகசங்கள் என ஆயிரம் கண்கொண்டு பார்த்தாலும் தீராத காட்சிகள். ஆனால்  இப்போது நிலைமை சொல்ல முடியாத துயரமாகி விட்டது.” என்றார்.

“40 ஆண்டுகால கலைஞர்களுக்கும் மாஸ்டர்களுக்கும் தினக்கூலி ரூ 800 கொடுப்பதற்கு பெரும்பாடாக இருக்கிறது. இதற்கு அவர்கள் 12 மணி நேரம் உழைக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணத்தை ஏற்படுத்தும் சாகசங்கள் செய்ய வேண்டும். இந்த நிலையில் இங்கு யார் விரும்பி வேலை செய்ய முடியும்? உதவியாளர்களுக்கு, எலக்ட்ரிசின்களுக்கு, சமையல் செய்பவர்களுக்கு, வாகன ஓட்டுநர்களுக்கு, செக்ரூட்டிகளுக்கு, அலுவலக ஊழியர்களுக்கு என ரூ 300-லிருந்து ரூ.700 வரைதான் தினக்கூலி.

அதற்கே இங்கு சர்க்கஸில் தினப்படி வசூல் வருவது பெரும்பாடாக இருக்கிறது. இதற்கே போலீசுக்கு ஓசி டிக்கெட், அதிகாரிகளுக்கு ஓசி டிக்கெட் தரவேண்டும். தற்போது சராசரியாக மொத்தத்தில் 20-லிருந்து 25 சதவீதம்தான் டிக்கெட் விற்கிறது. அதை வைத்து என்ன செய்வது? முதலாளி எங்களுக்கு இவ்வளவு செய்வதே பெரிய பாக்கியம். கேரளா அரசாங்கம் மட்டும்தான் பழைய உறுப்பினர்களுக்கு, நலிந்த சர்க்கஸ் கலைஞர்களுக்கு மாதம் ரூ. 2000 பென்சன் தருகிறது. அதுவும்கூட இப்போது இருப்பவர்களுக்கு இல்லை. எங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அரசு  மருத்துவமனைதான் ஒரே போக்கிடம்.

முன்பெல்லாம் எங்களுக்கு, விலங்களுக்கு என்று தனித்தனியாக மருத்துவர் இங்கேயே இருந்தார். அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை. நடுத்தெருவில் நிர்கதியாய் நிற்கிறோம். இதற்கும் உங்களைப் போன்ற பத்திரிகைகாரர்கள் ஏதாவது எழுதி வேட்டு வைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் உங்களிடம் முகம் கொடுத்து பேசவில்லை. மற்றப்படி யார் மீதும் அவர்களுக்கு கோபம் இல்லை.” விரக்தியோடு பேசி முடித்தார்.

மக்களை மகிழ்விக்க மனித குலத்தின் ஆகத் திறமையான கலைஞர்களை உருவாக்கிய சர்க்கஸ் கலை இங்கே ஆதரவின்றி தவிக்கிறது. மனித உடல் எதையெல்லாம் செய்ய முடியாது என்பதை உடைத்து எதிர்கால தலைமுறையினருக்கு திறமைகளை கைமாற்றிக் கொடுத்த அந்த முதுபெரும் கலை இன்று சீண்டுவாரின்றி நலிகிறது.

நிற்கதியாய் இருக்கும் அந்த சர்க்கஸ் கூடாரத்தை பார்த்துக் கொண்டே கனத்த மனத்தோடு திரும்பினோம்.

3 மறுமொழிகள்

  1. ”சனங்களைக் குஷிப்படுத்தி கைதட்டலைப் பெறத்தான் நீங்க சாகசம் செய்றீங்க, காசுக்காக அல்ல! அதனால ஆட்கள் நூற்றுக்கணக்கில் வந்தாலும் சரி, கொஞ்ச பேர் வந்தாலும் சரி, எப்போதும் அருமையாக செய்யனும்”

    #பெண் சர்க்கஸ் கலைஞர் தன் பிள்ளைகளிடம்!!

    சிறுவயதில் சர்க்கஸ் பார்க்க அத்தனை ஆர்வமாக இருக்கும். சிங்கம், புலி, யானை, குதிரை என மிருகங்களைப் பார்க்கவே உற்சாகமாக சர்க்கஸ் போவோம்.

    மிருகங்களை பயன்படுத்தக்கூடாது என்ற தடைக்கு பிறகு வண்ண வண்ண கிளிகளை, நாய்களை பயன்படுத்தினார்கள். இப்பொழுதும் அவைகளுக்கும் தடை போட்டுவிட்டார்கள். எதுவும் இல்லை.

    சுதந்திரத்திற்காக சிந்திக்கிற, செயல்படுகிற நாம் விலங்களையும். பறவைகளையும் கூண்டுக்குள் அடைத்து வைத்து வித்தை காட்ட வைப்பது அபத்தம் தான்!

    மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, என் பெண்ணுக்காக சர்க்கஸ் போயிருந்தேன். பார்த்த சர்க்கஸை என் பெண் மறந்துவிட்டபடியால், சமீபத்தில் ஜம்போ சர்க்கஸ் (சென்னை மூர் மார்க்கெட் அருகே ) போயிருந்தோம்.

    முழுக்க மனிதர்களின் சாகசம் தான். 40 அடி உயரத்தில் பறந்த படி சாகசம், நீளத்துணியினால் ஒரு ஜோடி அந்தரத்தில் ஸ்டைலான சாகசம் என ஐந்தாறு வகைகள் மிக அருமையாக இருந்தன.

    ஜோக்கர்கள் எப்பொழுதும் போரடிக்காமல் பார்த்துகொள்வார்கள். இப்பொழுதோ ஜோக்கர்களே ரெம்பவும் போரடிக்கிறார்கள்.

    மற்றபடி, சர்க்கஸ் கலைஞர்கள் வண்ண வண்ண உடைகளில் பளபளப்பாக வந்தாலும், சர்க்கஸ் கலை வளரவில்லை என்பது அதன் வடிவத்திலேயே தெரிகிறது. செய்த சாகசங்களே செய்யப்படுகின்றன. அதே டெண்ட் கொட்டாய் தான். புழுதியில் தான் சேர்கள் போட்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் காலரி போடப்பட்டிருக்கும். கொஞ்சம் வசதியாக இருக்கும்.

    கலைஞர்கள் முகத்தில் மலர்ச்சி இல்லாமல், ஒருவித இறுக்கத்துடன் தான் இருக்கிறார்கள். கனமான வெயிட்டை தூக்கி சாகசம் செய்த ஒரு கறுப்பின கலைஞன் கைதட்டை கேட்டு கேட்டு வெயிட்டை தூக்கி சாகசம் செய்தார். மார்கழி மாதத்திலும் அத்தனை வியர்வை!

    சமீபத்தில் ஒரு சீனப் பெண்களின் ஐந்து நிமிட சர்க்கஸ் பார்த்தேன். அத்தனை துல்லியம். முகத்தில் மகிழ்ச்சி. பார்க்கவே அத்தனை சந்தோசமாக இருந்தது!
    ஒருவேளை அரசு ஏதும் மானியம் கொடுத்தால் இந்த கலையை இன்னும் கொஞ்ச காலம் காப்பாற்றலாம். அரசு செய்யுமா? எல்லா பொறுப்புகளையும் கழட்டிவிட நினைக்கும் இந்த அரசு செய்ய வாய்ப்பேயில்லை.

    மற்றபடி, புதிது, புதிதாய் இந்த மண்ணில் பிறக்கும், விழிகள் விரித்து ஆச்சர்யமாய் பார்க்கும் குழந்தைகள் தான் சர்க்கஸ் கலையை இன்னும் வாழவைக்கிறவர்கள் என சொல்லலாம்!

    – ஒரு பார்வையாளனாக எனது அனுபவம்!

  2. உள்ளம் நெகிழவைத்த கட்டுரை…..வினவு செய்தியாளர்களின் இந்தத் தன்மை தான் மற்ற விளம்பரப் பொறுக்கி ஊடகங்களுக்கு மாற்று எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறது.

    2000-ம் ஆண்டு வாக்கில் திருச்சியில் பார்த்த அந்த சர்க்கஸ் மனதை விட்டு மறையவில்லை….ஆனால் சென்ற வருடம் பார்த்த ஜம்போ சர்க்கஸ் மனதில் நிற்க மறுக்கிறது…

    இதற்கும் பார்ப்பனியத்திற்கும் சம்மந்தம் உண்டென்று சொன்னால் மணிமாமா பொங்கிவிடுவார்.

    • அவர் பொங்குவதால் தான் உங்களுக்கெல்லாம் தீனி கிடைக்கிறது…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க