தினமணியின் பார்ப்பனிய விஷமத்தனம் !

தினமணி தமிழ் நாளேட்டில், நடுப்பக்கத்தில் “இட ஒதுக்கீடு சலுகை : விட்டுக் கொடுக்க தயாரா? ” என்ற தலைப்பில் பூ.சேஷாத்ரி என்ற தினமணியில் பணியாற்றும் பார்ப்பனர் கட்டுரை எழுதியுள்ளார்.

எந்தவொரு சமூக பொருளாதார ஆய்வும் இல்லாமல், வரலாற்று அறிவும் இல்லாமல் … அம்பேத்கர் கருத்துக்களையும் தப்பும், தவறுமாக திரித்து தனது 2000 ஆண்டு கால சாதீய வன்மத்தை தலித்துகள் & பழங்குடிகள் மீது காட்டியுள்ளார்.

1) “பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது ” எனத் துவங்கி, “பொருளாதாரத்தில் மேம்பட்ட SC &ST பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் தாமாகவே முன்வந்து இட ஒதுக்கீடு எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் என அறிவிக்க வேண்டும் ” என முடிக்கிறார்.

பொருளாதாரத்தில் மேம்பட்ட என்பதற்கு “ரூ.8 இலட்சம் ஆண்டு வருமானம் – 5 ஏக்கர் நிலமா ” என அவர் எந்த அளவுகோலும் சொல்லவில்லை ; எவ்வளவு பேர் வருவார்கள் என்றும் சொல்லவில்லை. பார்ப்பன குசும்பும், காழ்ப்புணர்ச்சியும் இத்துடன் நிற்கவில்லை.

2) “10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தேவை என அம்பேத்கர் கூறியிருந்தார்” என மொட்டையாக ஒரு கருத்து சொல்லுகிறார். எப்போது தெரிவித்தார்? கல்வி, வேலைவாய்ப்பு விசயத்தில் சொன்னாரா? என்பது பற்றி எல்லாம் விளக்கவில்லை. பலரும் இவ் விசயத்தில் குழம்புகிறார்கள்.

இரட்டை வாக்குரிமை பற்றிய விவாதத்தில் தான் அம்பேத்கர் , மக்கள் மன்றங்களில் 10 ஆண்டு கால அரசியல் இட ஒதுக்கீடு பற்றி முன்மொழிகிறார். காந்தி தலையீட்டால் இரட்டை வாக்குரிமை முடிவுக்கு வந்துவிட்ட வரலாறு அனைவரும் அறிந்ததே! சாதிய அமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என அம்பேத்கர் பல இடங்களில் தெரிவித்து உள்ளார்.

3) அம்பேத்கர் இயக்க ஆய்வாளர் சுஹாஸ் சோனாவணே என்பவர் ‘தலித் அமைப்புகளோ, அம்பேத்கரியவாதிகளோ அரசியல் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் எனக் கோரவில்லை; இதனால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை ; இது தேவையில்லாதது” எனக் கூறிவிட்டாராம். !

எனவே பூ.சேஷாத்ரி அய்யர் தாங்களாகவே பலரும் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்ததுபோல … பொருளாதாரத்தில் மேம்பட்ட SC & ST யினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என விட்டு தரவேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொருளாதாரத்தில் ஏழைகளாக உள்ள முன்னேறிய சாதிகளுக்கு, வசதி படைத்த பார்ப்பனர்கள் விட்டு கொடுக்கலாமே! பின்வரும் RTI தகவல் ஒன்றை பாருங்கள்!

Kind Attention : பூ.சேஷாத்ரி & வைத்யநாதன்!

1. ஜனாதிபதி செயலகத்தின் மொத்த பதவிகள் – 49.
இவர்களில் 39 பிராமணர்கள்; எஸ்.சி – எஸ்.டி – 4; ஓ.பி.சி – 06.

2.  துணை ஜனாதிபதி செயலகத்தின் பதவிகள் – 7.
7 பதவியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள்.
எஸ்.சி – எஸ்.டி – 00. ஓ.பி.சி – 00

3. கேபினட் செயலாளர் பதவிகள் 20.
பிராமணர்கள் – 17; எஸ்.சி – எஸ்.டி – 01 . ஓ.பி.சி. – 02.

4. பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் .
பிராமணர்கள் – 31; எஸ்.சி – எஸ்.டி – 02; ஓ.பி.சி.  – 02.

5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த பதவிகள் – 274.
பிராமணர்கள் – 259; எஸ்.சி – எஸ்.டி – 05; ஓ.பி.சி. –10

6. மொத்த அமைச்சகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் 1379.
பிராமணர்கள் – 1300; எஸ்.சி – எஸ்.டி – 48; ஓ.பி.சி. – 31.

7. சமூக நல & சுகாதார அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 209.
பிராமணர்கள் – 132; எஸ்.சி – எஸ்.டி – 17; ஓ.பி.சி. – 60

8. நிதி அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 1008.
பிராமணர்கள் – 942; எஸ்.சி – எஸ்.டி –20; ஓ.பி.சி. – 46.

9. பிளானட் அமைச்சகத்தில் மொத்தம் 409 பதவிகள்.
பிராமணர்கள் – 327; எஸ்.சி – எஸ்.டி –19; ஓ.பி.சி. – 63.

10. தொழில் அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 74.
பிராமணர்கள் – 59; எஸ்.சி – எஸ்.டி – 4; ஓ.பி.சி. – 9.

11. கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 121.
பிராமணர்கள் – 99; எஸ்.சி – எஸ்.டி – 00; ஓ.பி.சி. – 22.

12. கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் ஒட்டுமொத்தம் – 27.
பிராமணர்கள் – 25; எஸ்.சி – எஸ்.டி – 00; ஓ.பி.சி. – 2.

13. தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140.
பிராமணர்கள் – 140; எஸ்.சி – எஸ்.டி – 00; ஓ.பி.சி. – 00.

14. மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் – 108.
பிராமணர்கள் – 100; எஸ்.சி – எஸ்.டி – 03; ஓ.பி.சி. – 05.

15. மத்திய பொதுச் செயலாளர் பதவிகள் –26.
பிராமணர்கள்–18; எஸ்.சி – எஸ்.டி – 01; ஓ.பி.சி.-7.

16. உயர் நீதிமன்ற நீதிபதி – 330.
பிராமணர்கள் – 306; எஸ்.சி – எஸ்.டி – 04; ஓ.பி.சி. – 20.

17. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் – 26.
பிராமணர்கள் – 23; எஸ்.சி – எஸ்.டி – 01; ஓ.பி.சி. – 02.

18. மொத்த ஐஏஎஸ் அதிகாரி–3600.
பிராமணர்கள்– 2750; எஸ்.சி – எஸ்.டி – 300; ஓ.பி.சி. – 350.

கோயில்கள், வழிபாட்டு தலங்கள், திருமணங்கள் & கருமாதிகளில் பிராமணர்கள் வாய்ப்பு 99% ஆகும். நாட்டின் மக்கள் தொகையில்
3% க்கும் குறைவான பிராமணர்கள் 90% பதவிகளைப் பெற்றனர்.

(டெல்லியினை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியா’ எனப்படும் நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் பெற்றது.)

பூ.சேஷாத்ரி அய்யர் அவர்களே!

இது எல்லாம் ஆயிரத்தில் ஒன்று என்ற வகையான தகவல் ஆகும். மத்திய, மாநில அரசுகளின், பொதுத்துறையின் கணிசமான உயர் பதவிகளை, இடைநிலை பதவிகளை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள் என்பது தாங்கள் அறியாத செய்தியல்ல! (தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், IT துறைகளை ஆக்கிரமித்துள்ள பார்ப்பனர்கள் பற்றி இங்கு விவாதிக்க விரும்பவில்லை. )

பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள பார்ப்பனர்கள் தாமாகவே முன்வந்து “இத்தகைய அரசுப் பணிகள் எல்லாம் எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் – ஏழை பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கிவிடுங்கள் ” என்று சொன்னால், உயர்சாதி ஏழைகள் பயனடைய வாய்ப்பாகவும் முன்னுதாரணமாகவும் அமையும்.

தாங்கள் இதைப் பற்றியும் கட்டுரை ஒன்றை தினமணியில் எழுத வேண்டும்.

பின்குறிப்பு :
அய்யா,
தாங்கள் தினமணியில் வகிக்கும் பதவியை ஒரு உயர்சாதி ஏழைக்கு விட்டுக் கொடுத்து சென்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்.

சந்திரமோகன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி: டைம்ஸ் தமிழ்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

3 மறுமொழிகள்

 1. ”3% க்கும் குறைவான பிராமணர்கள் 90% பதவிகளைப் பெற்றனர்”.

  அவன் அவன அவனவன் இடத்தில வெச்சிருந்தா நாடு முன்னேறியிருக்கும்;
  படிப்புக்கு எங்கசார் மரியாத இருக்கு? எத்தன ஜென்மம் ஆனாலும் இந்த நாடு முன்னேறாது சார்;
  நாய் வால நிமிர்த்த முடியுமா சார், இந்த நாட்ட யாரும் திருத்த முடியாது சார்?;
  பிராக்கெட்டுக்குதான் சார் காலம். அடக்கி வாசிக்க வேண்டியிருக்கு;
  படிச்சவனுக்கு இங்க வேலை இல்ல சார் அதான் ஃபாரின் போயிடறான்.

  இப்படி நாட்டை நாசமாக்கிய சமூகத்தின் பிரதிநிதிகள் இந்த சமூக அமைப்பில் ஏற்படும் சிறு சலனத்தைக் கூட பொருத்துக்கொள்ள முடியாமல் முழுப் பூசனிக்காயை சோத்தில் மறைத்துக்கொண்டு வக்கணை பேசுவதைப் பலரும் கேட்டிருப்பீர்கள். இதைக் கேட்கும் வாய்ப்பு பிறப்பால் மேல்சாதிக்காரர்களுக்குத்தான் அதிகம் கிடைக்கும்.

  • சரியான பிதற்றல். யார் வேண்டுமெனாலும் இம்மாதிரி ஒரு லிஸ்டை கொடுக்கமுடியும். இதற்கெல்லாம் ஏதேனும் ஒரு ஆதாரம் உண்டா? ரிசர்வேஷன் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் எப்படி இப்படியொரு நிலையில் எல்லாவிதத்திலும் பிராமணர்கள் இருக்க முடியும். மேலும், கடந்த இருபதுஆண்டுகளாக பெரும்பாலான பிரமாண ஆண்கள் வெளிநாடுகளில் வேலை செய்து அங்கேயே செட்டிலாகிவிட்டார்கள். இங்கே எப்படி எல்லா பதவிகளிலும் மீண்டும் அவரகளே இருக்கமுடியும். கேட்பவன் கிறுக்கனாயிருந்தால் என்னவேணுமென்றாலும் சொல்ல ஒரு கூட்டமே அலைகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க