privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாமும்பை விமான நிலையத்தில் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார் !

மும்பை விமான நிலையத்தில் ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார் !

எல்கார் பரிஷத் வழக்கில் மாவோயிஸ்டு கட்சியோடு தொடர்பில் உள்ளவர் எனும் பொய்க்குற்றச் சாட்டின் கீழ் முனைவர் ஆனந்த் தெல்தும்டே அவர்களை பூனா போலீசு கைது செய்திருக்கிறது.

-

முனைவர் ஆனந்த் தெல்தும்டே

தோழர் ஆனந்த் தெல்டும்டே இன்று (02/02/2019) அதிகாலை 3:30 மணிக்கு கைது செய்யப்பட்டிருக்கிறார். மும்பை விமான நிலையத்தில் வைத்து அவரைக் கைது செய்த பூனா போலீசார், பூனாவுக்கு கொண்டு சென்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய பின்னர் நீதிமன்றத்தின் மூலம் விசாரணைக் காவலில் எடுக்க பூனா போலிசு திட்டமிட்டிருக்கிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி மகாராஷ்ராவின் பீமா கோரேகானில் தலித்துகளின் மேல் இந்துமதவெறியர்கள் நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, அந்தக் கலவரத்தைத் தூண்டியது மற்றும் மோடியைக் கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதி என்கிற பொய் வழக்கைப் புனைந்து ஊஃபா சட்டத்தின் கீழ் ஏற்கனவே 9 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே பொய் வழக்கில்தான் ஆனந்த் குறி வைக்கப்பட்டிருந்தார்.

படிக்க:
என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்
ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து செய் !

இந்நிலையில் தன்னைக் கைது செய்யக் கூடாது எனக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடிய தோழர் ஆனந்த் தெல்டும்டே, அரசால் புனையப்பட்டது ஒரு பொய் வழக்கு என ஆதாரப்பூர்வமாக நிறுவியிருந்தார். கடந்த ஜனவரி 14-ம் தேதியன்று தெல்டும்டேவைக் கைது செய்ய 4 வார தடை விதித்த உச்சநீதிமன்றம், அவர் கீழமை நீதிமன்றங்களில் பிணை கோரலாம் என கூறியிருந்தது. உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புக் காலம் பிப்ரவரி 11-ம் தேதி நிறைவடையும் நிலையில் பிப்ரவரி 2-ம் தேதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீசாரால் புனையப்பட்டது பொய் வழக்கு தான் என்பதை நிறுவி அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு செய்திருந்தார். அப்போது உயர்நீதிமன்றத்திடம் “மூடி முத்திரையிடப்பட்ட கடிதம்” ஒன்றை போலீசார் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது. அதில் என்ன இருந்தது என்பது வழக்கின் எதிர்மனுதாரரான ஆனந்திடம் தெரிவிகாமலேயே அதில் இருப்பதை ஆதாரமாக ஏற்று அவருடைய பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர் உச்சநீதிமன்றம் இதை உறுதி செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு தன்னை நிரபராதி என நிரூபிக்க எந்த வாய்ப்பும் அளிக்காமல், அவர் மேல் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கு போடப்பட்டிருக்கிறது என்பதைக் கூட தெரிவிக்காமல் சிறையில் அடைத்துள்ளனர். இயற்கை நீதிக்கே எதிரான இந்தப் போக்கை எல்லா வழக்குகளிலும் மத்திய பாசிச பா.ஜ.க அரசு கையாள்வதோடு ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக சொல்லப்படும்  நீதித்துறையையும் இந்த அநீதிக்கு பழக்கப்படுத்தியிருக்கிறது.

பீமா கோரேகான் வழக்கில் மோடியைக் கொல்ல சதி செய்வதற்காக எழுதப்பட்டதாக அரசு தரப்பு முன்வைக்கும் கடிதத்தில் தோழர் A மற்றும் தோழர் ஆனந்த் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது ஆனந்த் தெல்டும்டேவைத் தான் என்பதும், அவரது சகோதரரும் மாவோயிஸ்டு கட்சியைச் சேர்ந்தவருமான மிலிந்த் தெல்டும்ப்டேவுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் முன்வைக்கப்படுகின்றது. மேலும், ”மாவோயிஸ்டு தொடர்பு” என்கிற இந்த பொய்யை ஆனந்த் தெல்தும்ப்டே வழியாக பிரகாஷ் அம்பேத்கர் வரை இழுக்கிறது மோடி அரசும் அதன் அல்லைக்கைகளான முதலாளித்துவ ஊடகங்களும்.

எனினும், சொல்லப்படும் அந்தக் கடிதம் அயோக்கியத்தனமான புனைவு என்பதை தோழர் ஆனந்தும் பிறரும் நிறுவியுள்ளனர். முன்னாள் போலீசு அதிகாரிகள் பலரும் அந்த மொட்டைக்கடிதத்தின் யோக்கியதையை விமரிசித்துள்ளனர். இந்த பொய் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஆனந்த் எழுபது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். வரவரராவ் எண்பது வயதைக் கடந்தவர். இவர்களைக் கைது செய்து மொத்தமாக முடக்குவதோடு, அறிவுத்துறையைச் சார்ந்தவர்கள் அனைவரையும் அச்சுறுத்தி முடக்குவதையே மோடியின் பாசிச அரசு நோக்கமாக கொண்டிருக்கிறது.

படிக்க:
அபாயமான காலத்தில் வாழ்கிறோம் | பேரா. ஆனந்த் தெல்தும்டே உரை | காணொளி
நான் ஒரு பயங்கரவாதி போல நடத்தப்பட்ட சோதனைகள் ! முனைவர் ஆனந்த் தெல்தும்டே
ஆனந்த் தெல்தும்ப்டேவுக்கு எதிரான பொய் வழக்கை ரத்து செய் ! ஊபா உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை ரத்து…

முன்னதாக கைதான வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங், தலித் செயல்பாட்டாளர் சுதிர் தவாலே, கைதிகளின் உரிமை தொடர்பான செயல்பாட்டாளர் ரோனா வில்சன், பழங்குடியின செயல்பாட்டாளர் மகேஷ் ராட், ஓய்வுபெற்ற நாக்பூர் பேராசிரியர் சோமா சென் ஆகியோர் மீது 5000 பக்கங்களுக்கு மேலுள்ள குற்றப்பத்திரிகையை போலீசு பதிவு செய்திருக்கிறது.

கைதாகி சிறையில் உள்ள வழக்கறிஞரும் கல்வியாளருமான சுதா பரத்வாஜ், செயல்பாட்டாளர் வெர்னோம் கொன்சால்வ்ஸ், அருண் ஃபெரைரா, தெலுங்கு கவிஞர் வரவரராவ் ஆகியோர் மீது இன்னமும் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்படவில்லை. இவர்கள் தங்களுடைய மனித உரிமை செயல்பாடுகளுக்காக அறியப்பட்டவர்கள், பொது வாழ்வில் நீண்ட வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள்.

இவர்கள் மீதும் தற்போது கைதாகியுள்ள ஆனந்த் தெல்தும்ப்டே மீதும்,  சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதானால் ஆதாரங்கள் இருக்கிறதோ இல்லையோ 12 மாதங்கள் பிணை மறுக்கப்பட்டு சிறையில் இருக்க நேரிடும். எந்த நேரத்திலும் தான் கைதாகக்கூடும் என சில நாட்களுக்கு முன்னரே அச்சம் தெரிவித்திருந்தார் ஆனந்த் தெல்தும்ப்டே. இந்நிலையில் நீதிமன்றம் வழங்கிய கெடுவை பொருட்படுத்தாது அவரை கைது செய்துள்ளது போலீசு.

மோடி அரசின் பாசிச தாக்குதலை முறியடிக்க விரும்புவோர் அனைவரும் இந்த அநீதியான கைதையும் பொய் வழக்கையும் கண்டிக்க வேண்டும்.