கிளினிக்கில் சந்தித்த பதினோறாம் வகுப்பு மாணவிக்கு பரிசோதனை செய்து அவருக்கான மாத்திரைகளை எழுதும் பொழுது… படிப்புல எப்டிமா? என்று பேச்சு கொடுத்தேன்.

“நல்லா படிப்பா சார்.. கெட்டிகாரி.. பத்தாவதுல 493/500 -க்கு” என்றார் அவளது தாய்.

“அருமை மா.. என்ன க்ரூப் மா எடுத்துருக்கீங்க?”

” சய்ன்ஸ் சார்”

“அருமை. என்ன ஆம்பிஷன் வச்சுருக்கீங்க?”

( இந்த கேள்வியை இனி யாரிடமும் கேட்கவே கூடாது என்று நொந்து கொண்டேன். இதற்கு கிடைத்த பதில்தான் இன்று எனக்கு கிடைத்த பேரிடி )

” டென்த் வரைக்கும் டாக்டர் ஆகணும்னு வச்சுருந்தேன் சார் . இப்ப தான் நீட் வந்துடுச்சே… போச்சு.”

சிறிது நேரம் எதுவும் பேச முடியாத கையாலாகாத ஒருவனாய் நிசப்தத்துடன் நான் ஏன் இந்த கேள்வியை கேட்டேன் என்று நொந்து கொண்டவனாய்
கண்களை ஈரமாக்கிய நீரை அவர்கள் இருவருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு…

“ஓ.. ஆமா.. நீட் வந்துடுச்சுல்ல.. அதுக்கு தனியா கோச்சிங் ஒரு வருசம் போகலாம்ல மா?”

படிக்க:
♦ மகளிர் தினம் : வெறும் கொண்டாட்டமல்ல.. உரிமையை மீட்கும் நாள் !
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாய் புதிய கலாச்சாரம் நூல்கள் !

அவளது அம்மா இடைமறித்து, “போகலாம் சார். இங்க இருந்து இவள மதுரை வரைக்கும் போய் படிக்க இவ அப்பா விடமாட்டாரு. அது போக வருசம் ஒரு லட்சம் செலவழிச்சு படிக்க வைக்க வசதி இல்ல சார்”

“ஆமா மா.. போன வாரம் கூட ஒரு பொன்னு கிட்ட கேட்டேன் ஒரு லட்சம் செலவாகுதாம். உண்மைதான்”

இப்போது அந்த மாணவி “ஏதாவது கிடைக்கிறத படிப்பேன் சார். டாக்டராகுறதலாம் இனி நினைச்சு பாக்குறது தப்பு சார்”

சிறிது நேர நிசப்தம் அவர்கள் எழுந்து சென்று விட்டார்கள்… கண்ட கனவுக்காக உழைத்து அது பலிக்காமல் போனால் கூட வலி பெரிதாய் இருக்காது, ஆனால் கனவே காணக்கூடாது என்று தடுப்பதெல்லாம் கொடுமையின் உச்சம்.

இனி ஒரு போதும் பள்ளி பயிலும் யாரிடமும், “உங்கள் ஆம்பிசன் என்ன ?” என்று நான் கேட்கப் போவதில்லை. இறைவனிடமே கையேந்துகிறேன் இது போன்ற சமூக நீதிக்கு எதிரான பரீட்சையை துடைத்தெறிவாய் இறைவா..

இது போன்ற எத்தனை Dr.அனிதாக்கள் தமிழகம் முழுவதும் இருக்கிறார்களோ? சாணை தீட்டப்படாத ரம்பத்தைக் கொண்டு நெஞ்சை அறுப்பது போல ஒரு வலி.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.