பிரிட்டனின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் போர்க்கால ஐரோப்பாவின் மிகச் சிறந்த தலைவராக கொண்டாடப்படுபவர்.  இந்த புகழுக்கிடையே வரலாற்றில் நீக்க முடியாத இழிபுகழ் ஒன்றுக்கும் அவர் சொந்தக்காரர். அது 1943-ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் முப்பது இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலிவாங்கிய பஞ்சத்தை ஏற்படுத்தியவர் என்ற இழிபுகழ் வின்ஸ்டன் சர்ச்சிலையும் அவருடைய அமைச்சரவையையும் சேரும்.

வங்காள பஞ்சத்துக்கு காரணம் வின்ஸ்டன் சர்ச்சிலின் கொள்கைகளே என்கிற குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக புதிய ஆய்வு ஒன்று Geophysical Research Letters என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 1873 முதல் 1943 வரை இந்திய துணைக் கண்டம் எதிர்கொண்ட ஆறு மிகப் பெரிய பஞ்சங்களின்போது இருந்த காலநிலை புள்ளிவிவரங்கள் மற்றும் மண்ணின் ஈரப்பதம் குறித்து ஆய்ந்தறிந்து இந்த அறிக்கையை எழுதியுள்ளனர்.

இந்த ஆய்வின்படி, வங்காள பஞ்சமானது சர்ச்சிலின் கொள்கைகளால் ஏற்பட்டதே தவிர, வறட்சியால் ஏற்பட்டதல்ல.  ஆறு பெரும் பஞ்சங்களில் ஐந்து பஞ்சங்கள் வறட்சியால் ஏற்பட்டவை என்றும், 1943-ம் ஆண்டின் பஞ்சத்தின்போது, மழையளவு சராசரியைவிட அதிகமாக இருந்ததாகவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

“பெரும்பான்மையான பஞ்சங்கள் மிகப் பெரிய அளவிலான வறட்சியின் விளைவாக உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டவை. ஆனால், இந்த ஒரு பஞ்சம் மட்டும், பிரிட்டீஷ் ஆட்சியின் கொள்கை தோல்வியால் உண்டானது” என ஆய்வு கூறுகிறது.

“சுதந்திரத்துக்குப் பின், பெரிய அளவிலான பஞ்சம் ஏதும் ஏற்படவில்லை” என்கிறார் இந்த ஆய்வின் தலைவரான விமல் மிஸ்ரா. ஐஐடி காந்திநகரில் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார் இவர். “பாசனப் பற்றாக்குறை போன்ற காரணிகளால் ஏற்படும் வறட்சியே பஞ்சங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற சிந்தனையில்தான் எங்களுடைய ஆய்வுகளைத் தொடங்கினோம்”.

1896-97-ம் ஆண்டுகளில் வட இந்தியாவில் ஏற்பட்ட 11% பற்றாக்குறை, நாடு முழுவதிலும் ஏற்பட்ட உணவு பற்றாக்குறையும் ஐம்பது இலட்சம் மக்களை கொன்றது. ஆனால், 1943-ம் ஆண்டு மழையளவு சராசரியை விட அதிகம் என இந்த ஆய்வு கூறுகிறது.

“இந்த பஞ்சம் பிரத்யேகமானது, மழையளவு குறைவினால் அல்ல, இது கொள்கை தோல்வியினால் ஏற்பட்டது” என்கிறார் மிஸ்ரா.  இராணுவத்துக்கு தேவையான பொருட்களின் விநியோகத்துக்கு மட்டும் முன்னுரிமை தந்தது, அரிசி இறக்குமதியை நிறுத்தியது போன்ற கொள்கை தவறுகளால்தான்  இந்த பஞ்சம் ஏற்பட்டு, இந்த மிகப் பெரும் பேரழிவை ஏற்படுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, உணவு வழங்கலில் ஏற்பட்ட தடையே, முப்பது இலட்சம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. 1873-74 ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது 25 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் இறப்பு விகிதம் குறைவாக இருந்தது. காரணம், அப்போது பெங்காலின் கவர்னராக இருந்த ரிச்சர்ட் டெம்புள் அப்போதைய பர்மாவிலிருந்து உணவு இறக்குமதி செய்து விநியோகித்தார். மேலும் நிவாரணத் தொகையையும் அளித்து, ஏராளமான உயிர்களை காப்பாற்றினார். இந்திய வளத்தை இந்தியர்களை காப்பாற்றுவதற்காகப் பயன்படுத்தியதற்காக பிரிட்டீஷ் அரசு டெம்புளிடம் கடுமையாக நடந்துகொண்டது.

1943-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பஞ்சத்துக்கு மற்றொரு காரணம், அப்போது ஜப்பானின் பிடியில் பர்மா சிக்கியிருந்ததும் ஆகும்.

1981-ல், நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென், 1943-ம் ஆண்டு வங்காளத்துக்கு போதுமான அளவிற்கு உணவுப் பொருட்களை வழங்கியிருக்க வேண்டும் என வாதிட்டார்.

2010-ம் ஆண்டும் மதுஸ்ரீ முகர்ஜி எழுதி வெளியான ‘சர்ச்சிலின் ரகசிய போர்’ என்ற நூலில் இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவில் நடந்த ஏற்றுமதியே பஞ்சத்தை ஏற்படுத்தியது என சொல்லப்பட்டிருந்தது.

இந்த நூலில் சர்ச்சில் பஞ்சம் குறித்து சொன்ன முக்கியமான கருத்து எடுத்தாளப்பட்டிருந்தது. ‘இந்தியர்கள் எலிகளைப் போல குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவுப் பற்றாக்குறை இருப்பது உண்மையானால், மகாத்மா காந்தி எப்படி உயிரோடிருக்க முடிகிறது” என பேசியிருந்தார் சர்ச்சில்.

படிக்க:
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

1943 ஜனவரி முதல் ஜூலை வரை 70 ஆயிரம் டன் அரிசி இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி ஆனது. தேவைக்கு மீறி இங்கிருந்து உணவு பொருட்கள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி ஆகின எனவும் மதுஸ்ரீ தனது நூலில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்தியர்களை எலிகளோடு ஒப்பிட்ட சர்ச்சில், ஏகாதிபத்திய சுரண்டலை குற்றவுணர்வின்றி செய்திருக்கிறார்.  முப்பது இலட்சம் உயிர்களை பலிவாங்கிய கொலையாளியை வரலாறு போர்க் காலத்தின் சிறந்த தலைவன் என கொண்டாடுகிறது.


கலைமதி
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க