“நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாமிய – கிறிஸ்தவ சமூகத்தினருடனும், பட்டியல் இன விளிம்பு நிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் எண்ணவோட்டத்தில், இந்து வலதுசாரி சிந்தனை மிகுதியாக இருப்பதை சமீப காலமாக உணர முடிகிறது. இந்நிலையில் இருநூறு ஆண்டு கால வரலாற்றை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது” என்கிறார் லஜபதிராய். இந்த மேற்கோள் அவர் எழுதிய நாடார் வரலாறு கறுப்பா? காவியா? எனும் நூலின் முதல் அத்தியாயத்தில் இருக்கிறது.

மேலும் “ஈயென இரத்தல் இழிந்தன்று என்பதைத் தவிர உழைத்து வாழும் எந்தத் தொழிலும் உயர்வானதே என்ற நிலையில் நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும் தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்துவிட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன எண்ணவோட்டமே!” என்கிறார் லஜபதிராய்.

நாடார் சமூகம், பார்ப்பனிய அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடிய தமது வரலாற்றை பெருமையுடன் நினைவுகூர்வதற்குப் பதிலாக அதை சிறுமையாக நினைப்பதை மேற்கண்ட வரிகள் உணர்த்துகின்றன. கருப்பின வரலாறோ, யூதர்களின் வரலாறோ, இல்லை ஹிட்லரால் வேட்டையாடப்பட்ட கம்யூனிஸ்டுகளின் வரலாறோ அனைத்தும் இத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்த்து போரிட்டதை, போராடியதை பெருமையுடன் நினைவு கூர்கின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கருப்பின இளைஞர் தான் வெள்ளை நிறவெறியால் துன்புறுத்தப்பட்ட வரலாற்றைச் சொந்தமாக கொண்டவன்/ள் – அதை எதிர்த்துப் போராடிய வரலாற்றில் உருவானவன்/ள் என்பதைப் பெருமையாக கருதுவார். ஆனால், இங்கே பார்ப்பனியமயமாக்கப்பட்ட ஆதிக்கச் சாதிகள் பலவும் தம்மை ஆண்ட பரம்பரை, ஆத்திக சடங்குகளை தவறாமல் பின்பற்றும் புனித பரம்பரை என்று அடிமைத்தனத்தையே கொண்டாடுகின்றன.

யூடியூபில் இந்த நூலின் அறிமுக விழாவிற்கான எமது வீடியோக்களில் சங்கிகள் சிலர் லஜபதிராயை கிறித்தவ – இஸ்லாமிய கைக்கூலி என்று திட்டுகின்றனர். எங்கே நாடார்கள் தமது வரலாற்றை அறிந்து தெளிந்து இந்துத்துவ எதிர்ப்பை கையில் எடுத்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு. இன்னொருபுறம் ஆய்வு என்ற பெயரில், சில அரைவேக்காடுகள்  இந்த நூல் நாடார் சாதி பெருமிதத்தை பேசுவதாக உளறுகின்றனர். அதன் ஊடாக சாதிப் பெருமிதத்தின் மூலம் இந்துத்துவத்தை கட்டியமைக்க விரும்பும் சங்கிகளை மறைமுகமாக ஆதரிக்கின்றனர். உண்மையில் இந்த நூல், சாதி பெருமிதத்திற்கு எதிராகவும் அந்த சாதிப் பெருமிதம் ஒரு பார்ப்பனிய அடிமைத்தனம் என்றும் இடித்துரைக்கிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள நாடார் மக்களின் கமுதி ஆலய நுழைவு முயற்சியை எடுத்துக் கொள்வோம். இந்தப் பகுதியில் இந்துமதவெறியர்கள் மட்டுமல்ல, பொதுவில் இந்துக்கள் கொண்டாடும் விவேகானந்தரைப் பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. விவேகானந்தர் அவரது ‘அதிரடியான’ மேற்கோள்களுக்கு பெயர் பெற்றவர். மேலும், சிகாகோ நகரின் சர்வ மத மாநாட்டில் அவர் பேசிய பேச்சை கூடியிருந்தோர் அனைவரும் மெய்மறந்து வரவேற்றதாகவும் சங்கிகள் அவ்வப்போது பேசுவதுண்டு. அதுவும் கூடியிருந்த சர்வ மத மக்களை “சகோதரர்களே, சகோதரிகளே” என்று அவர் விளித்ததைப் பார்த்து நாங்கள் எல்லாம் லேடிஸ் அண்ட் ஜென்டில்மென் என்று விளிக்கும் போது நீங்கள் உடன்பிறந்த சகோதரத்துவத்தை முன்னிறுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது என்று மேற்கத்திய அறிஞர்கள் கூறினர்களாம். இந்த சகோதரத்துவத்தின் இலட்சணத்தைத்தான் கமுதி ஆலய நுழைவுப் போராட்ட வரலாறு போட்டு உடைக்கிறது.

நூலிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம் :

“இராமநாதபுரம் மாவட்டத்தின் கிட்டத்தட்ட 6483 மக்கள் தொகை கொண்ட சிறு நகரமான கமுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நாடார் சமூகத்தினர் வாழ்ந்து வந்தனர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் அவர்கள் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள் நுழையவோ வழிபாடு செய்யவோ அனுமதிக்கப்படவில்லை. 1855-ம் ஆண்டு நவம்பர் மாதம் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் பரம்பரை அறங்காவலரான திரு. பாஸ்கர சேதுபதியிடம் ஆலய வழிபாட்டு உரிமையைக் கேட்ட நாடார்களின் முறையீடு நிராகரிக்கப்பட்டது.”

“1897-ம் ஆண்டு மே மாதம் பதினான்காம் நாள் மாலை ஆறு மணிக்கு மேல் இரவு ஒன்பது மணிவரை காவடி பால்குடம் எடுத்து தீவட்டி ஏந்தி மேளதாள ஆரவாரத்துடன் கமுதி கோயிலுக்குள் கோயில் ஊழியர்கள் எதிர்ப்பையும் மீறி மேற்கு வாசல் வழியாக வல்லடியாக நுழைந்த நாடார்கள் தேங்காய் உடைத்து முதலில் முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்து பின்னர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்குள் நுழைந்து சிலையை வழிபட்டனர். சட்டம் ஒழுங்கு மீறல்கள் மிகக் கடுமையான தண்டனைக்குள்ளான ஆங்கிலேயர் ஆட்சியின் போது, ஜமீன்கள் அதிகாரம் மிக்க நிறுவனங்களாக இருந்த காலகட்டத்தில் நடந்த அந்நிகழ்வை ஒரு சுயமரியாதை புரட்சியாகக் கருதலாம். இவ்வாறு நுழைந்ததற்காக குற்றவியல் வழக்கொன்றும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அது குற்றம் என்பது நிரூபணமாக வில்லை. எனவே, கமுதி ஆலயத்திற்குள் நாடார்கள் நுழைவதை நிரந்தரமாக தடை செய்யக்கோரி மதுரை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த திரு. பாஸ்கர சேதுபதி, நாடார்களின் ஆலய நுழைவால் தீட்டுப்பட்ட கோயிலை பார்ப்பன புரோகிதர்களை வைத்து செய்யும் மகா சம்ப்ரோக்ஷணம் என்ற தீட்டுக் கழிக்கும் சடங்கின் செலவுக்காக இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்கவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.”

“20-07-1899 அன்று நாடார்கள் கோயிலுக்குள் நுழைவதை உரிமையியல் நீதிமன்றமான மதுரை கிழக்கு சார்பு நீதிமன்றம் தடை செய்ததுடன் கோயிலை தூய்மைப்படுத்தும் செலவுக்காக நாடார்களுக்கு விதித்த ஐந்நூறு ரூபாய் அபராதத் தொகை திரு. பாஸ்கர சேதுபதிக்கு வழங்கப்பட்டது. மதுரை சார்பு நீதி மன்றத்தில் இருதரப்பினரும் ஒத்திசைவுடன் செல்ல முடிவெடுத்து நாடார்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க முப்பதாயிரம் ரூபாய் பெற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்ட திரு. பாஸ்கர சேதுபதி, ஐயாயிரம் ரூபாயை முன்பணமாக பெற்றுக்கொண்டு, ஒத்திசைவு பத்திரத்திலும் கையெழுத்திட்டார்.”

“மேல்முறையீட்டில் தீர்ப்பு நாடார்களுக்கு சாதகமாக வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய மதுரை மாவட்ட ஆட்சியாளர், பாஸ்கர் சேதுபதிக்குக் கடிதமெழுதி ஒத்திசைவு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டினார். நாடார்கள் தங்களுக்கென்று தனிக்கோயில்களைக் கட்டிக்கொள்ளவோ அல்லது கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றவோ செய்யட்டும் என்று தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் விளைவாக திரு. பாஸ்கர சேதுபதி ஒப்பந்தத்தை இரத்து செய்தார்.”

“உயர்நீதிமன்ற மேல்முறையீடு நாடார்களுக்கு எதிராக முடிந்தது. நாடார்களின் கோயில் நுழைவுக்கு எதிராகவே தீர்ப்பளித்தது, நாடார்களின் கோயில் நுழைவு முயற்சி கனவாகவே நீடித்தது. நாடார்கள் நுழைந்த மேற்கு வாசல் அழிக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட்டது. அந்த சுவடுகளை இன்றும் காண முடியும்.”

“நாடார்களுக்கு தீண்டாமை காரணமாக ஆலய நுழைவு மறுக்கப்பட்ட அதே காலகட்டத்தில் திரு. பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் அருமைப் பெருமைகளை அயல்நாடுகளில் வியந்துரைக்க விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்குப் பொருளுதவி செய்தார். 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக சமய மாநாட்டில் விவேகானந்தர், சகோதரர்களே, சகோதரிகளே, எனத் தனது உரையைத் தொடங்கி இந்து மதத்தின் மேன்மைகள் குறித்து பேசிய அதே காலகட்டத்தில் இந்து சனாதன தர்மங்களின் அடிப்படைத் தேவையான தீண்டாமையின் பொருட்டு, இந்துக் கோயில்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தங்களை இந்துக்களாக கருதிய உள்ளூர் நாடார் சகோதர சகோதரிகள் இந்துக் கோயிலுக்குள் தங்களை அனுமதிக்கும்படி திரு. பாஸ்கர் சேதுபதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.”

“பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கோவில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நாடார்களுக்கு எதிராக பாஸ்கர சேதுபதி 1898-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு ஒரு வருடத்திற்கு மேலாக மதுரை கிழக்கு சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. 20.07.1899-ம் ஆண்டு நீதிபதி டி. வரதராவ் தீர்ப்பளித்த அவ்வழக்கில் பாஸ்கர சேதுபதி தரப்பில் 38 பார்ப்பன சாட்சிகளும், நாடார்கள் தரப்பில் 23 பார்ப்பன சாட்சிகளும் சான்றளித்துள்ளனர். அச்சான்றுகளின் அடிப்படையில் நீதிபதி அளித்த தீர்ப்பு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்து மதத்தின் சாரம்சம் பற்றி பத்தி 114-ல் நீதிபதி இவ்வாறு குறிப்பிடுகிறார். “இந்துக்கள் மத்தியில் சாதி வெறுமனே ஒரு சமூக நிறுவனமன்று; அது ஒரு மதக்கோட்பாடு; கடவுள் மனிதர்களை சமமற்றவர்களாக கருதுகிறார்; பறவைகள் அல்லது விலங்குகளின் வகைகளைப் படைத்துள்ளதைப் போல தனித்தனி வகை மனிதர்களை அவர் படைத்துள்ளார்; பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் எனப் பிறந்துள்ள அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடமிருந்து பிரிந்தே இருக்க வேண்டுமென இந்துக்கள் நம்புகின்றனர்”.

“மேற்சொன்ன கருத்துக்கள் மட்டுமன்றி அனைத்து இந்துமத அடிப்படை நூல்களின் ஆதாரத்தோடு நாடார்கள் மது தயாரித்தல் தொடர்புடைய சாதியாதலால் தீண்டத்தகாத சாதியெனவும், அவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததால் ஏற்படும் தீட்டைக் கழிக்க சாந்தி ஹோமம், திசை ஹோமம், மூர்த்தி ஹோமம், வாஸ்து சாந்தி, சப்த சாந்தி, சகஸ்கர கலச ஸ்தாபனம் என்ற சடங்குகளை உள்ளடக்கிய மகாசம்ப்ரோக்ஷணம் என்ற தீட்டுக்கழிப்பு செய்யாவிட்டால் விசயமறிந்தவர்களும், பிராமணர்களும் அக்கோயிலுக்குள் நுழைய மாட்டார்கள் எனவும் அத்தகைய கோயிலுக்குச் செல்வதால் ஆன்மீக பலன் ஒன்றும் இல்லை எனச் சான்றுரைத்த இந்து சாஸ்திர வல்லுநர்களின் கருத்தை ஏற்று தீட்டுக்கழிக்கும் சடங்குகளுக்காக ரூ. 500/- ஐ பாஸ்கர சேதுபதிக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதி வரதராவ் தனது தீர்ப்பின் 125-வது பத்தியில் நாடார்களை கமுதி கோயிலுக்குள் அல்லது அதன் எந்தவொரு பகுதியிலும் நுழைய தடை செய்து உத்தரவிட்டார்.”

“பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பாட்டனாரான வெள்ளச்சாமித் தேவரால் நாடார்களுக்கு எதிராக சான்றளிக்க கட்டாயப்படுத்தப்பட்ட சாட்சிகள், விலைக்கு வாங்கப்பட்ட சாட்சிகள், திருத்தப்பட்ட இந்து சாஸ்திரங்கள் இவற்றைப் புறந்தள்ளி நீதிபதி வரதராவ் பெருமளவுக்கு நம்புவது வாதி தரப்பின் 50-வது சாட்சியாவார். அவர் தமிழகம் தமிழ் தாத்தா எனக் கொண்டாடும் உ.வே. சாமிநாத அய்யர், இந்து மத சாஸ்திரங்களை அன்னார் தவறாக புரிந்து கொண்டிருப்பார் என யாரும் கூற இயலாது.”

“கமுதி கோயில் வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகு நாடார் சமூகத்தினர் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கங்களில் பங்கெடுத்தமை தற்செயலான நிகழ்வல்ல; மாறாக, விடுதலைத் தாகமே அதற்குக் காரணம் எனக் கூறலாம்.”

o0o0o0o

மேற்கண்ட பகுதிகளில் பல வரலாற்று மாந்தர்கள் வருகிறார்கள். அவர்களில் விவேகானந்தருக்கு புரவலராக திகழ்ந்த பாஸ்கர சேதுபதி முக்கியமானவர். மறவர் சாதி சங்கத்தைச் சேர்ந்த அபிமானிகள் பலரும் சேதுபதி பரம்பரையை சக்கரவர்த்தி, மன்னர் பரம்பரை என்ற ரேஞ்சுக்கு வருணிக்கிறார்கள். ஆண்ட பரம்பரை மேனியாவில் இத்தகைய பில்டப்புகளெல்லாம் சாதாரணம். உண்மையில் வெள்ளையர்கள் ஆட்சியில் திருவாளர் பாஸ்கர சேதுபதி ஒரு ஜமீன்தாராகத்தான் அதுவும் ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்ட அடிமை நிலச்சுவான்தாராகத்தான் வாழ்ந்தார்.

நாடார்கள் கோவில் நுழைவுக்கு எதிராக அவர் ஆற்றிய வரலாற்றுப் பாத்திரத்தை மேலே இடம்பெற்றுள்ள நூலின் பகுதிகளில் படித்தறியலாம். நாடார்களுக்கு அபராதம் போடுவதோ, இல்லை சுத்திகரிப்பு சடங்கு செய்வதோ, நிரந்தரமாக அவர்கள் கோவிலில் நுழையத் தடை கோருவதோ அத்தனை முயற்சிகளையும் பாஸ்கர சேதுபதி செய்திருக்கிறார். இன்றைக்கும் சேதுபதி பரம்பரையினர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் புரவலர்களாகவே இருந்து வருகின்றனர்.

இவரைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளை அடித்துவிடும் மறவர் சாதி சங்க அறிஞர்கள் அன்னாரை ஒரு மெத்தப்படித்த ஆன்மீகவாதி என்றும் சொற்பொழிவில் வல்லுநர் என்றும் கூறுகிறார்கள். இவையெல்லாம் உண்மை என்றே வைப்போம். அத்தகைய சேதுபதிக்கு அமெரிக்காவில் நடக்கும் சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்ததாம். அதற்குப் போவதாக இருந்தவர் பின்னர் தன் சார்பில் விவேகானந்தரை பொருளுதவி செய்து அனுப்புகிறாராம். அமெரிக்கா சென்று வந்த விவேகானந்தர் இலங்கை வழியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கால் பதிக்கும் போது “லோகத்தில் இந்துதர்மத்தை நிலைநாட்டிய தலைவனது பாதம் என் தலையில் பட்டே மண்ணில் பதிய வேண்டும்” எனத் தலையை நீட்டினாராம் சேதுபதி.

படிக்க:
அருந்ததி ராய் உரை : காவி அடிப்படைவாதமும் சந்தை அடிப்படைவாதமும் ஒன்றுதான் !
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

ஆக, சேதுபதி மெச்சும் இந்து தர்மத்தின் இலட்சணம் என்ன என்பது கமுதி ஆலய நுழைவு போராட்டமே காட்டிக் கொடுத்து விடுகிறது. இதில் சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் விளித்த சகோதரத்துவத்தின் உண்மையான இலட்சணமும் இந்த வரலாற்றில் இருக்கிறது. இந்த வரலாறு தெரிந்திருந்தால் அந்த மாநாட்டிற்கு வந்திருக்கும் மேற்கத்திய மனிதர்கள் “மிஸ்டர் விவேகானந்தர், எங்களை சகோதர சகோதரிகளாக விளிப்பது இருக்கட்டும். உங்கள் ஊரில் நாடார்களை விலங்குகள் போல நடத்துகிறீர்களே, அவர்களை அப்படி நடத்தும் ஜமீன்தாரின் காசில் இங்கே வந்து பேசுகிறீர்களே ! வெட்கமே இல்லையா? ” என்று கேட்டிருப்பார்கள்.

இத்தகைய வரலாற்று செய்திகளைக் கொண்ட இந்த நூலை ஒவ்வொருவரும் வாங்கிப் படிப்பது அவசியம். அச்சு நூலை வினவு தளத்தின் அங்காடியில் வாங்கலாம். வாங்கிப் படியுங்கள், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்! காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்த வரலாற்று நூல் பயன்படும்.

மதன்

வினவு தளத்தின் அங்காடியில் இந்நூலை வாங்க :

Payumoney மூலம் உள்நாடு: 100 + 20 (தபால் கட்டணம்)

100.00Read more

Paypal மூலம்- உள்நாடு: 2$ (தபால் கட்டணம் சேர்த்து)


Paypal மூலம்-வெளிநாடு: 5$ (தபால் கட்டணம் சேர்த்து)


தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பதிவு நூலஞ்சல் (Registered printed post) முறையில் அனுப்பப்படும். பணம் அனுப்பிய நாளிலிருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாட்களில் நூல் உங்களுக்கு கிடைக்கும். உள்நாட்டில் வாங்கப்படும் பிரதிகள் எத்தனையாக இருந்தாலும் தபால் செலவு ரூ. 20 மட்டுமே. மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.

வெளிநாட்டிற்கு Registered Airmail – பதிவு வான் அஞ்சல் மூலம் நூல் அனுப்பப்படும். நீங்கள் பணம் அனுப்பிய நாளிலிருந்து ஐந்து நாள் முதல் பத்து நாட்களில் நூல் கிடைக்கும். மேலும் தபால் மூலம் வரும் புத்தகத்தின் டிராக்கிங் நிலையை நீங்கள் அறிய முடியும்.


இதையும் பாருங்க …

1 மறுமொழி

  1. 1.சுவாமி விவேகானந்தரை ராமநாதபுரம் சேதுபதி மன்னர்தான் வெளிநாடு அனுப்பினார் என்ற தகவல் தவறு. சென்னையை சேர்ந்த இளைஞர்கள் வீடுவீடாக சென்று பிச்சையெடுத்த பணத்தில் அனுப்பி வைத்தார்கள்.ராமநாதபுரம் மன்னள் 500 ரூபாய் மட்டுமே வழங்கினார்
    .
    2.சேதுபதி மன்னர் வெளிநாடு செல்ல இருந்தார் என்பதும் தவறு.அந்த காலத்தில் வெளிநாடு செல்பவர்கள் ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் என்பதால் யாரும் சிகாகோ செல்ல தயாராக இல்லை.சுவாமி விவேகானந்தர் துறவி.துறவிக்கு ஜாதி கிடையாது என்பதால் அவரை வெளிநாடு செல்ல அனுமதித்தார்கள்
    ..
    3.சுவாமி விவேகானந்தர் ஜாதி கொடுமைகளை நீக்க வேண்டும் என்பதற்காக கடும் முயற்சி எடுத்துக்கொண்டார். தென்னிந்தியாவில் அந்த காலத்தில் இருந்த ஜாதிக்கொடுமைகளை குறித்து பலரிடம் பேசிய உரையாடல்கள் உள்ளன.
    ..
    4.ஜாதி வேறுபாடுகளை சட்டங்கள் மூலம் களைய ஆங்கிலேயர்கள் முயற்சிக்கவில்லை.மாறாக அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். தாழ்த்தப்பட்டவர்களை மதம் மாற்றுவதற்கு ஜாதி கொடுமைகளைப்பற்றி ஊர்ஊராக பேசினார்கள். ஆனால் அந்த காலத்தில் ஆட்சியல் இருந்த வெள்ளையர்கள் அதை நீக்க உரிய சட்டம் இயற்றவில்லை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க