பரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை முதலில் வரவேற்பதாக அறிவித்த காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தற்போது தீர்ப்புக்கு எதிராக போராடி வருகிறார்கள். பந்தள அரச குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று தீர்ப்பை எதிர்த்து பெண்கள் கலந்துகொண்ட பேரணி கேரளாவில் நடத்தப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற பேரணி.

தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். போராட்டத்தைத் தூண்டி வருகிறது. நாங்கள் சபரிமலைக்கு போகமாட்டோம் என பெண்கள் சத்திய பிரமாணம் எடுப்பதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன. தீர்ப்பு குறித்து பேட்டி கொடுத்துள்ள அரச குடும்பத்தின் வாரிசு ஒருவர் பெண்களை அனுமதித்தால் தீங்கு நிகழும் என்ற தனது அச்சத்தை தெரிவித்துள்ளார். இது போன்று பய பீதி ஊட்டப்பட்டு தான் பெண்கள் போராட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். கேரள வெள்ளத்திற்கு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு தான் காரணம் என துக்ளக் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். பல ஆண்டுகளாக பிற்போக்கு தனத்தில் ஊறிய பெண்களும் இது போன்ற கருத்துக்களை நம்பி போராட்டத்திற்கு அப்பாவியாக வருகிறார்கள். அச்சத்தின் மூலம் மக்களை அடிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறார்கள் பந்தள அரச குடும்பமும், சங்க பரிவாரமும்.

ஒரு வேளை மக்களிடம் அப்படியாக கருத்துக்கள் இருந்தால் அதை மாற்றுவது தான் அனைத்து இந்துக்களுக்குமான அமைப்பின் கடமையாக இருக்க முடியும். ஆனால் ஒரு புறம் சக்தி என்று பேசிக்கொண்டே பெண்களை அடிமைகளாக கருதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இதை எதிர்பார்க்க முடியாது.

மக்களிடம் பீதியூட்டும் இவர்கள் அறிவுத்தளத்தில் மத விவகாரத்தில் அரசு தலையிடக்கூடாது என்று வாதிடுகிறார்கள். ஒரு பக்கம், மக்களுக்கு பயபீதீயூட்டி கலவரத்தை தூண்டுகிறார்கள்; போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

வரலாற்றில் இது புதிது அல்ல. மதத்தில் அரசு தலையிடலாமா? என்ற கேள்வி வில்லியம் பெண்டிங் உடன்கட்டை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த காலத்திலிருந்து பேசப்படுகிறது. குழந்தை திருமண தடுப்பு சட்டம், பொட்டுகட்டுதல் என்ற பெயரில் நடந்த தேவதாசி ஒழிப்பு சட்டம், கோவில் நுழைவுப் போராட்டங்கள் அதற்கு சட்டம், சமீபத்தில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் சட்டம் என எல்லா சீர்திருத்தங்களிலும் எழுப்பபட்டவைதான் இக்கேள்விகள். இன்று நாம் அனுபவிக்கும் பெரும்பாலான உரிமைகள் அனைத்தும் இக்கும்பல்களை எதிர்த்து நடந்த போராட்டத்தின் விளைவுகள் தான். எதுவும் தாமாக கிடைத்துவிடவில்லை.

தற்போது சபரிமலைக்கு எதிராக பேசுபவர்களின் முன்னோர்கள் குழந்தை திருமணம் மற்றும் கோவில் நுழைவு விசயங்களில் என்ன பேசினார்கள். வரலாற்றில் யார் வென்றார்கள் என்பதை பற்றி சிறு அறிமுகம்.

1 உதாரணமாக Age of Consent Act, 1891 என்று ஒரு சட்டத்தை ஆங்கில அரசு கொண்டு வந்தது. இது எதற்கு தெரியுமா? 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் கணவர்கள் உடலுறவு கொள்வதை தடை செய்யும் சட்டம். சட்டம் திருமணத்தை தடை செய்யவில்லை குறைந்தபட்சமாக உடலுறவைத் தடை செய்கிறது.

12 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடலுறவு கொள்வதை தடுக்க சட்டம் போட வேண்டிய நிலைமை இருந்ததா? நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது அல்லவா. அதைவிட முக்கியமானது இச்சட்டத்தை லோகமானிய பாலகங்காதர திலகர் கடுமையாக எதிர்த்தார். இன்று நீதிபதி இந்து மல்ஹோத்திராவும், பிற இந்துத்துவ அறிவுஜீவிகளும் சொல்லும் அதே வாதத்தை வைத்தார் திலகர். இந்து மத விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்றார். இவ்விவகாரம் குறித்து மேலும் படிக்க: குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்

பின்னர் 1929-ல் திருமணத்திற்கு வயது வரம்பு நிர்ணயித்த போது 10 வயதுக்குள் பெண்களுக்கு திருமணம் செய்யாவிட்டால் பாவம் நேரும் என சத்தியமூர்த்தி உள்ளிட்ட இந்துமதவாதிகள் பிரச்சாரம் செய்தார்கள்.

இப்போது பெண்கள் நுழைவுக்கு பிரச்சாரம் செய்யப்படுவது போலவே பாவம் வரும், வெள்ளம் வரும், அழிவு நேரும் என மக்களிடத்தில் பீதியூட்டுவதும்; அறிவுஜீவி தளத்தில் இந்துமத விவகாரத்தில் தலையிடக் கூடாது என பேசுவதும் அந்த காலத்திலிருந்தே செய்திருக்கிறார்கள்.

அதைக் கண்டித்து பெரியாரும் சுயமரியாதை இயக்கத்தினரும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அறிவுஜீவிவாதத்திற்கு பதிலடி கொடுத்ததோடு மக்கள் மத்தியில் பீதி உண்டாக்குவதையும் தடுத்துள்ளார். “எவ்வளவு குற்றம் செய்தாலும் தலைமுடியை வெட்டுவது, நான்கு பார்ப்பனர்களுக்கு உணவளிப்பது மூலம் அதைத் தீர்த்துக்கொள்ளலாம் என்கிறீர்கள் அல்லவா? உங்கள் பிள்ளைகளுக்கு பதினாறு வயதிற்கு பிறகு திருமணம் செய்வதற்கு மட்டும் பரிகாரம் இல்லாமலா போகும். கண்டிப்பாக பாலும், பழமும் மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதாகத்தான் அந்தப் பரிகாரம் இருக்கும். அதனால் சீர்திருத்தத்திற்கு கவலைப்படாதீர்கள்” என்பதாக பெரியார் எழுதியிருப்பதை குடியரசு வாயிலாக அறிய முடிகிறது.

படிக்க:
மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ! – தீர்ப்பின் சமூக விளைவுகள்
பெண் விடுதலை கானல் நீரல்ல !

2 இப்பொழுது எப்படி பெண்கள் சபரிமலையில் நுழைந்தால் தீட்டு என்கிறார்களோ அது போல நாடார்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் கோவிலில் நுழைந்தால் தீட்டு என்பதாக நம்ப வைக்கப்பட்டிருந்தார்கள். இதற்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தினரும், பாதிக்கப்பட்ட சமூகங்களில் இருந்த முற்போக்கு சக்திகளும் போராடினர். சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என தடை சொல்லும் இந்து மத ஆண்களுக்கு தாங்கள் எப்படி கோவிலுக்குள் நுழைந்தோம் என்பதை நினைவுபடுத்த தமிழகத்தில் கோவில் நுழைவு போராட்டத்தின் சுருக்கம்.

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18. 01.1926 இல் கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.

• முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தைத் தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர். இவர் 07.02.1927 இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. (‘குடிஅரசு’ 6. 5. 1928)

• 1927 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே. என். இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர் மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப் படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள். (கேசரி)

• அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில்1927 இல் சுமார் 1000 பேர் அனைத்துச் சாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழைவாயிலையும் கருவறையையும் கோவில் நிர்வாகிகள் பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’ என்ற திருநாவுக்கரசர் பாடலை பாடினார்.

• 25.06.1928 இல் திருச்சி மலைக்கோயிலிலும், 12. 08. 1928 இல் திருவானைக்கோவிலிலும் அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.

• தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு – பொது உரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தார்.

• 1929 மார்ச் 12-ந் தேதி “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர தேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை குத்தூசிகுருசாமி நடைமுறைப்படுத்தத் துணிந்தார்.

கோயில் நுழைவுப் போராட்டத்தில் அம்பேத்கர்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன், மஞ்சமேட்டான் மகன் பசுபதி, கிருஷ்ணம் பாளையம் கருப்பன் ஆகிய 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துக் கொண்டுச்சென்று தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். குத்தூசிகுருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள் இருக்கும்போதே வெளிக்கதவை இழுத்து மூடிவிட்டனர். இரண்டு நாள்கள் பூட்டிய கதவைத் திறக்க மறுத்து விட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21. 4. 1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி,கருப்பன் ஆகியோருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை ஏகினார். ‘குடிஅரசு’ இதைப்பாராட்டி, ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர் ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம் பெறும் என்று பாராட்டி எழுதியது.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வீதியில் இறங்கு ! தோழர் மருதையன் உரை

ஈரோடு கோவில் நுழைவு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் சுசீந்திரத்தில் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்து சென்றதற்காக திருவாங்கூர் நீதிமன்றத்தால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த 12 பேர் தண்டிக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வழக்குகளிலும் தண்டனையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களைச் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும், காரைக்குடியில் சொ.முருகப்பாவும் தலைச்சேரியில் டபிள்யூ. பி. ஏ. சவுந்தரபாண்டியனும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலீசுவரர் கோவில்களில் ‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன், பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும், ஆதி திராவிடர்கள்‘ஆலயப் பிரவேசம்’ செய்து கைதானார்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் பண்டிதர் அயோத்திதாசர் மகன் பட்டாபிராமன் தலைமையில் ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திவிட்டு வந்தனர்.

சென்னைச் சட்டமன்றத்தில் 01. 11. 1932 இல் டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவு மசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30. 10. 1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். “

– ( நன்றி தலித் முரசு மற்றும் பெரியார் முழக்கம்)

பின்னர் 1939-ல் வைத்தியநாதய்யர் நாடார்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் அழைத்து சென்ற மதுரை மீனாட்சியம்மன் ஆலய பிரவேசம்.

இந்த போராட்டங்கள் எதுவும் தமிழகமே கொந்தளித்து எழுந்த போராட்டங்கள் அல்ல. சுயமரியாதை இயக்கத்தினர் முன்னின்று நடத்தியவை. கோவிலில் நுழைந்தால் தீட்டு என்பதை இன்று சபரிமலைக்கு போகமாட்டோம் என்று சொல்லும் பெண்களைப் போல அன்றும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று கோயில் கருவறைக்குள் எப்படி செல்வதில்லையோ அது போல தங்கள் இழிவை தாங்களே அன்று ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வேளை மீறிப்போனால் என்ன நடக்கும். கோவில் நுழைவுப் போராட்டத்தில் சுயமரியாதை இயக்க தோழர்களுக்கு நேர்ந்தது தான் நடக்கும். மேலும் கேரள சி.பி.எம். அரசு இத்தீர்ப்பு குறித்து மேல்முறையீடு இல்லை என்று முடிவு எடுத்து உறுதியாக இருப்பது வரவேற்கதக்கது.

படிக்க:
லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு
இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்

பக்தியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கடைவிரிக்கப்படும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் வரலாறு நெடிகிலும் முற்போக்கு சக்திகள் போராடி தான் வெற்றி கண்டிருக்கின்றன. சபரிமலை சமரிலும் பெண்கள் வெற்றி பெறுவார்கள்.

2 மறுமொழிகள்

  1. ஓரினை சேர்க்கை மற்றும் கள்ள உறவு கிரிமினல் குற்றம் இல்லை என்பதற்கு போராடாமல் இதற்க்கு போராடுவதேன்?

  2. ஆசாக் இங்கு எல்லாமே செலக்டிவ் புரட்சி பகுத்தறிவு புலனாய்வு தான், இன்று உலகளவில் படங்கள் ,ஆபாச படங்கள், கார்டூன்கள் சமூக வலைத்தளங்கள் என ஓரின சேர்க்கை, பெண்ணுரிமை என்ற பெயரில் பெண்களை ரவுடிகளாக்குவது என இந்த சோசியல் ஜஸ்டிஸ் அஜெண்டாவை பரப்பி தமது நலனுக்காக மனித குலத்தை சீரழிக்கும் மூல கர்த்தாக்கள் யாரென உங்களுக்கும் புரியும், ஆனால் இங்கு மறந்தும் குறிப்பிட்டு விடாதீர், மொத்த பின்னூட்டங்களும் அடித்து தூக்க படும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க