பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்துமென்று நம்புகிறோம். படியுங்கள், பகிருங்கள்.
– வினவு
ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்று வரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரிஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப் படும் நாபகலிபார் என்ற திரு விழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.
இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993 -ல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசி மணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்தும் விலகி வாழ்கின்றனர்.
இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய கோவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட் டியது. 1988 -ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட் டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.
செப்டம்பர் 11 நேர்காணலுக்கு வந்த பெண்களும், கோவில் நிர்வாகமும் அங்கு குவிந்திருந்த பத்திரிகையாளர்களை எதிர்பார்க்கவில்லை. அவர்களது கேள்விகளுக்கும் பதிலளிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு வார காலமாக பல்வேறு பெண்கள் அமைப்புகள், பத்திரிக்கைகள், சில அரசியல் கட்சிகள் என வெளி உலகின் கண்டனங்களை சந்திக்க நேர்ந்த பூரி கோவில் நிர்வாகம் வேறு வழியின்றி முடிவெதுவும் எடுக்காமல் அமைதி காத்து வருகின்றது.
***
இந்த நூற்றாண்டின் (20-ம் நூற்றாண்டு) தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரியவருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட் டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது ஏன்?
“ஏனென்றால் தமிழ்நாட்டி லும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது போல் பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது” என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
எது உண்மை? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்து விட்டனர். மேலும் 1954 , 55 -ல் பூரி கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் போது 30 -க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லா உண்மை.
ஒடிஸி நடனத்தைப் பயிலுவதற்காக பூரிக்கு வந்த பிரடரிக் ஏ. மார்க்லின் என்ற பெண் (மனிதவியல் ஆய்வாளர்) அறிஞர், “கடவுளரின் மனைவியர்” என்ற தமது புத்தகத்தில் தேவதாசிகளது வாழ்க்கையை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். பெற்றோர் தமது பெண்களை தேவதாசிகளாக அனுப்புவதற்குக் காரணம் அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்க இயலாத வறுமையே என்கிறார் மார்க்லின்.
“தேவதாசி சேவைக்காக பெண்களை நாங்கள் அழைத்ததாகக் கூறப்படுவது தவறு. இந்தப் பெண்கள் தாங்களாகவே சேவை செய்ய முன் வந்ததினால்தான் அதைப்பற்றி விவாதிக்க அவர்களை அழைத்தோம். தேவதாசிமுறை தலைமுறை தலைமுறையாக பூரி கோவிலில் இருந்து வரும் முறைதான்” என்கிறார் பூரியின் மாவட்டஆட்சித் தலைவரும், கோவில் நிர்வாக கமிட்டியின் உதவித் தலைவருமான கே.கே. பட்நாயக்.
“இந்து தர்மம்” காக்க பெண்களை ‘சமர்ப்பணம்’ செய்வது அல்லது பலியிடுவது என்பது புதிதல்ல. 1987 -ல் இராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற பெண்ணை உடன் கட்டை ஏற்றிக் கொன்ற இந்துத்துவ வெறியர்களின் செயலைக் கண்டு நாடே அதிர்ந்த போது, “சதி”யைப் நியாயப்படுத்தினார் பாரதீய ஜனதாவின் அகில இந்திய துணைத் தலைவர் விஜயராஜே சிந்தியா. பூரியின் ராஜகுடும்ப புரோகிதர் ரமேஷ் சந்ர ராஜகுரு, “நேர்காணலுக்கு வந்த பெண்களிடம் முன்பு ஆடச் சொன்னதாகக் கூறப்படுவது சிலரின் வளமான கற்பனை. 50 ஆண் டுகளுக்கு முன்பே நடனத்தை நிறுத்தி விட்டோம். எவ்வித காரண மும் இல்லாமல் தேவதாசி முறை என்றாலே உடனே விபச்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று குமுறுகிறார்.
ராஜகுருவின் கோபத்தை பரிசீலிப்பதற்கு நாம் மன்னர்கள் காலத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாக, முன்னாள் தேவதாசியான பரஸ்மணியிடம் ஒரு கேள்வி – ஆண்டவன் முன் நடனம் ஆடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்? “நான் ஜகன்னாதருக்கு மணமுடிக்கப்பட்டவள். தன் கணவனுடன் இரவு என்ன செய்தாள் என்பதை மணமான பெண் ஒருத்தி உலகத்திற்கு எப்படிக் கூற முடியும்?” என்று புன் சிரிப்புடன் மறுக்கிறார். இப்படி நடனம் ஆடுவது தொடருவது மட்டுமல்ல, ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது திறந்த புத்தகமல்ல.
தேவதாசிகளாவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் வேறெந்த ஆடவருடனும் உறவு வைத்திராத தூய்மை வாய்ந்தவளாக இருத்தல் வேண்டும். பின்னர் அவளுக்கு ஆடல், பாடல், அலங்காரம் உட்பட பல்வேறு கலைகளில் வளர்ப்புத் தாயாரால் (தேவதாசி) பயிற்சி அளிக்கப்படுகிறது. தக்க காலம் வந்த பிறகு அவள் ஜெகன்னாதருக்கு மணமுடிக்கப்படுகிறாள். மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு “பொட்டுக் கட்டுதல்” என்றழைக்கப் படும் இந்நிகழ்ச்சி தேவதாசியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. அவள் இறக்கும் போதும் மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டே எரியூட்டப்படுகிறாள். இப்படி ஏனைய இந்துப் பெண்களுக்குள்ள ‘விதவை அபாயம்’ தேவதாசிகளுக்கு இல்லையென்றாலும், ஏனைய இந்துப் பெண்களின் மண வாழ்க்கை தேவதாசிகளுக்குக் கிடையாது.
சனாதனிகளின் பார்வையில் மன்னன் என்பவன் யார்? விஷ்ணுவின் அவதாரம், உயிருள்ள ஜெகன்னாதர்களான மன்னர்களுக்கு செய்யும் அந்தப்புரச் சேவை தேவதாசிகளின் கடமையாகும். ராசராச சோழன் காலத்து தேவதாசிகள் “அரசனின் திருமேனிப் பணியாளராக” அந்தப்புரத்தில் சேவை செய்து வந்தனர் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
தேவதாசிகளுக்கு பொட்டுக் கட்டும் சடங்கு முதல் அவளது கோவில் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்ற பண்டா என்றழைக்கப்படும் பார்ப்பன புரோகிதனுக்கு செய்யும் சேவை ஜெகன்னாதருக்குச் செய்யும் சேவையைப் போலவே முக்கியத்துவம் உடையது. இதையெல்லாம் சகித்துக் கொள்ளும் தேவதாசி, இவர்களுக்கு அப்பாற்பட்டு வெளி ஆடவருடன் தொடர்பு கொண் டால், மன்னனும், பண்டாவும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
மன்னர்கள், பார்ப்பனர்கள், பின்னாளில் ஜமீன்தார்கள் என்று உயர்ரக மேட்டுக் குடியினரோடு உறவு கொண்டாக வேண்டிய தேவதாசி அவர்களுடன் பகிரங்கமாக வாழ முடியாது. தேவதாசியின் வாழ்க்கை பட்டு சரிகையைப் போல மின்னினாலும் அதன் பின்னே உள்ள அவலமும், துயரமும், அழுகுரலும் – ஜெகன்னாதர் கோவிலில் நெடிதுயர்ந்து நிற்கும் கருங்கற்களுக்கு மட்டும் தான் தெரியும்.
“அரசாங்கம்; சாராயம், கள் இவைகளை எப்படி வருவாயாகக் கருதி நடத்த வேண்டுமோ அது போலவே பெரும் கோவில்களையும் உண்டாக்கி அரசு வருவாய்க்கு வழி தேட வேண்டும்.” என்று சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் வலியுறுத்துகின்றார்.
பெருமளவு மக்களின் வாழ்க்கையும், அரசின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற நிறுவனங்களாகவே கோவில்கள் இருந்தன. இன்றைய ஐந்து நட்சத்திர விடுதிகளின் சகல வசதிகளும் அன்றைய கோவில்களில் இருந்தன. இதில் ஆடல், பாடல் மூலம் மன்னனை மகிழ்விக்க பார்ப்பனர்களால் நியமிக்கப்பட்டவர்களே தேவதாசிகள்.
பண்டைய கதைகளை இங்கு கிசுகிசுக்க வேண்டாம், தேவதாசி சேவைக்கு நாங்கள் விண்ணப்பத்திருக்கும் காரணங்களை சற்றுக் கவனியுங்கள் எனும் கஜால் ஜெனா என்ன கூறுகின்றார்? “ஐந்து வயதிலேயே கண்ணன் என்னுள் வியாபித் திருப்பதை உணர்ந்தேன். 19 வயதில் தீட்சை பெற்றுக் கொண்டேன். நின்று போன தேவதாசி சேவையை உயிர்ப்பிப்பது கடமை என்று கருதி என் சிஷ்யைகளுடன் விவாதித்தேன். ஏதோ ஒரு வகையில் ஜெகன்னாதருக்கு சேவை செய்ய விரும்பும் எங்கள் பக்தி தனிப்பட்ட விசயம். இவ்வளவு இருந்தும் கடவுளின் முன்பு அநீதியான செய்கைகளைச் செய்வது போல எங்களை ஏன் கோரமாக மதிப்பிடுகிறீர்கள்?”
இல்லை புனிதமாகவே மதிப் பிட முயலுவோம். காலையில் திருப்பள்ளி எழுச்சி, இரவிலே பள்ளியறைப்பாட்டு, மாலையில் கால் வலிக்க நடனம் எதுவானாலும், திரைச்சீலையிட்ட ஜெகன்னாதரின் கருவறைக்கு வெளியே, வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் தான் நடத்த முடியும், தேவதாசி ‘அபவித்ரா’ (தூய்மை இல்லாதவள்) வாகக் கரு தப்படுவதால், பூஜைகள் செய்யும் போது ‘பண்டா’ (பார்ப்பனப் புரோகிதன்) அவள் கையால் குடிநீர் கூடக் குடிக்க மாட்டான், தன்னைத் தொடவும் அனுமதிக்க மாட்டான். உள்ளம் உருக, பக்தி பெருக கீத கோவிந்தம் பாடும் தேவதாசிகளுடைய புனிதத்தின் கதி இதுதான்.
முன்னாள் ராஜாக்கள், ராணிகள், பாரதீய ஜனதாவில் உலாவரும் இந்நாளில் ஜெகன்னாதபூரியின் ராஜா திவ்ய சிங் தேவ் இந்து முன்னணிக் குரலில் ஒரு கேள்வி கேட்கிறார். “கடவுளின் சேவைக்காக வாழ்க்கையைத் துறந்து, தங்களது சொந்த முடிவில் பொருளியல் உலகை மறந்து, பெண்கள் துறவிகளாகவும், சகோதரிகளாகவும் மாறுவது அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தேவதாசி முறையும் அத்தகையதுதான்”.
உண்மையில தேவதாசி முறை அத்தகையதல்ல. தேவதாசிகளாவதற்கு நீங்கள் வைத்திருக்கும் தகுதி என்ன? ஆடல், பாடல், அழகுக் கலை, அலங்காரம் இவைதானே? பிறமதத்துப் பெண்கள் துறவறத்தின் மூலம் சமூகத்தின் பாதுகாப்பையும், மதிப்பையும் பெறும்போது, தேவதாசியாக மாறும் பெண்ணோ – பாதுகாப்பின்மையையும், அவமதிப்பையும் பெறுகிறாளே அது ஏன்?
ஆக மன்னர்கள், பார்ப்பனர்கள், அதிகாரிகள் என அனைவரும் தேவதாசிகளுக்காக பேச முற்படும் போது “கலைஞர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா?
இன்று தமிழ்நாட்டு பார்ப்பனப் பெண்களால் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கும் பரதக் கலை தேவதாசிகளால் தான் வளர்த்து உருவாக்கப்பட் டது என்பதில் உவகை அடைகிறார் இந்தியா டுடே வாஸந்தி. ஒடிசி நட னக் கலைஞர் சன்ஜூக்தா பாணிக்கிரஹியும் இக்கருத்தை ஆதரித்து, தேவதாசி முறையில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தானே பகுதி நேர தாசி சேவை செய்ய விரும்புவதாகவும் கூறுகிறார்.
அமெரிக்காவை பூலோக சொர்க்கமாக மாற்றியமைப்பதற்கு ஆப்ரிக்க கருப்பர்களைக் கடத்தி வந்த அடிமை முறை உதவி செய்திருக்கிறது என்பதாக நாகரீக உலகின் எந்த ஒரு மனிதனும் கொண்டாட மாட்டான். தேவதாசிகள் காற்சலங்கை கட்டிக் கொண்டு நடனம் ஆடும் போது பாதம்படுகின்ற இடங்களில் உறைந்திருக்கும் ரத்தம் நம்மை உலுக்குகிறது. அதே சமயம் பாதத்தின் பதத்தையும், ஆட்டத்தின் அபிநயத்தையும் மெய்சிலிர்த்து ரசிக்கிறார்கள் வாஸந்தியும், பாணிகிரஹியும்.
***
1930 -களில் தேவதாசி முறையை எதிர்த்துக் கிளம்பிய இயக்கத்தை அறியும்போது வாழையடி வாழையாக சனாதனிகளின் குரல் இன்றைக்கிருப்பது போல் ஒலிப்பதைக் கேட்க முடியும். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், காங்கிரசாரும் – இந்தியப் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை ஒழிக்க போராடி வந்தார்கள்.
1930 -ல் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டுவந்தபோது, இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார் என்பதை முத்துலட்சமி கூறுகிறார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், “இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்” என்று வாதிட்டார்.
“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள் ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?” என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.
இந்துத்துவ முகங்களில் மிதவாதத்தை காங்கிரசும், தீவிரவாதத்தை பாரதீய ஜனதாவும் இன்றைக்கு பிரதிநித்துவம் செய்வது போன்று அன்றைக்கு ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் விளங்கினார்கள்.
இச்சூழலில்தான் 1883-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலி யுறுத்தி “தாசிகள் மோசவலை” எனும் நாவலை மிகுந்த சிரமத்துக்கிடையில் 1936 -இல் வெளியிட்டார்.
***
20 -ம் நூற்றாண்டிலும் இந்துத்துவம் தனது வருணாசிரம நெறியை இருத்திக் கொள்ள மூர்க்கமாக முயலுகிறது. பாபர் மசூதி இடிப்பு, பிள்ளையார் பால் குடித்த புரளி, என ஒவ்வொன்றிலும் “ஹிந்து எழுச்சி ஆரம்பித்து விட்டது” எனக் கும்மாளமிடும் இந்தக் கும்பல்தான் தேவதாசி முறையை நியாயப்படுத்தும் நபர்களின்-கருத்துக்களின் அடித்தளம்.
அந்த அடித்தளத்தை தகர்க்க 60 ஆண்டுகளுக்கு முன்பு “தாசிகள் மோசவலை” என்ற தனது நாவல் மூலம் வழி காட்டுகிறார் இராமமிர்தம் அம்மையார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு சுரணையூட்டும்.
நாவலில் இருந்து, “ஒரு குறிப்பிட்ட பெண் சமூகத்தை விபசாரத்துக்குத் தயார் செய்துவைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குதக்க சான்றாக இருக்கிறது. பகுத்தறிவும் நாகரீகமும் வளர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தேவதாசி முறையை ஒழிப்பது சாஸ்திர விரோதம், சட்ட விரோதம், கலை விரோதம் என்று கூக்குரல் கிளப்பும் சாஸ்திரிகளும், தலைவர்களும் இருப்பது மானக்கேடாகும். தேவதாசி முறைக்கு அடிப்படையாக இருக்கும் கடவுள், மதம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் ஆகியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழித்து விட்டால் தேவதாசிக் கூட்டம் இருப்பதற்கே நியாயமிருக்காது.”
-இளநம்பி
( புதிய கலாச்சாரம், பிப்ரவரி – 1996 )